கூடல்நாதனின் தாலாட்டு

https://youtu.be/nyBZL1TxnPs

சபரிமலையில் இரவில் ஐயப்பனுக்கு பூசை முடிந்து நடைசாத்துவதற்கு முன்னர் பாடப்படும் புகழ்பெற்ற பாடல் “ஹரிவாராசனம் விஸ்வமோகனம்“. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்னும் படத்திற்காக இதற்கு மத்யமாவதி ராகத்தில் ஜி.தேவராஜன் இசை அமைத்தார். யேசுதாஸ் பாடினார். அதற்கு முன்னரும் பல இசைவடிவங்கள் இதற்கு இருந்தாலும் அன்றுமுதல் இப்பாடலே சபரிமலையில் பாடப்படுகிறது. இன்றும் கேரளத்தில் முதன்மையாக கேட்கப்படும் சில பாடல்களில் ஒன்று.

இந்தப்பாடலின் ஆசிரியர் யார் என்று ஒரு விவாதம் ஐம்பதாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பாடலின் மூலவடிவம் ஹரிஹராஷ்டகம் என அழைக்கப்படுகிறது. எட்டு பத்திகள் கொண்ட்து. கம்பங்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் இதை 1950களில் எழுதினார் எனப்படுகிறது. ஒருசாரார் 1920களில் கொந்நங்காட்டு ஜானகி அம்மா இதை எழுதினார் என்கிறார்கள். சுவாமி விமோசனானந்தா இதை 1955 இதை சபரிமலையில் முதன்முறையாகப் பாடினார் எனப்படுகிறது

இப்பாடலைப்பற்றிய பல தொன்மக்கதைகள் இன்று உருவாகியிருக்கின்றன. மதத்தொன்மங்களின் உருவாக்கம் பற்றி ஆய்வுசெய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவன இக்கதைகள். ஆலப்புழையைச் சேர்ந்த வி.ஆர்.கோபாலமேனன் என்பவர் ஐயப்ப பக்தர். சபரிமலை 1950களில் அடர்காட்டுக்குள் இருந்தது. ஆண்டில் ஒருமாதம் மட்டுமே அங்கே பக்தர்கள் செல்லும் வழக்கம் இருந்தது. செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. சபரிமலை மேல்சாந்தியாகிய ஈஸ்வரன் நம்பூதிரியுடன் கோபாலமேனனும் செல்வதுண்டு

கோயிலில் இரவு தங்கி பூசை செய்யும் நம்பூதிரியுடன் கோபாலமேனனும் தங்குவார். அவர் ஒவ்வொருநாளும் இரவில் ஹரிவராசனத்தைப் பாடுவார். பின்னர் ஆலயம் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆலயத்திற்குச் செல்ல கோபாலமேனனால் முடியாமலாகியது. அவர் வண்டிப்பெரியார் அருகே ஒரு தேயிலைத் தோட்டத்தில் மறைந்தார். அந்த பெரிய பக்தரின் நினைவாக ஹரிவராசனத்தை தெய்வத்தின் “உறக்குபாட்டு” ஆக பாட நம்பூதிரி முடிவெடுத்தார். அவருடைய கனவில் வந்து ஐயப்பனே அந்தப்பாடலை பாடும்படிக் கோரியதாக கதை.

இன்றைக்கு ஹரிவராசனம் பாடப்படும்போது பூசகர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள். இறுதியாக தலைமைப்பூசாரி இறுதி விளக்குத்திரியை இழுத்துவிட்டு வெளியே செல்வார். ஹரிவராசனம் அய்யப்பனுக்கான தாலாட்டு. அதன் இறுதிப்பகுதிகள் மட்டுமே அன்றாடம் பாடப்படுகின்றன

https://youtu.be/cz-C7OJFlxA

சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக ஒரு செய்தி பரவியது. இப்போது சபரிமலையில் அந்திப்பூசைக்குப்பின் ஹரிவராசனத்திற்குப் பதிலாக இன்னொரு பாடல் பாடப்படுவதாக. விஸ்வவிஸ்மயம் என்னும் அப்பாடல் புகழ்பெறத்தொடங்கியது. அதை ஏசுதாஸ் பாடியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. பாடல் ஓரிரு மாதங்களில் கேரளமெங்கும் பெரும்புகழ் பெற்றது. ஹரிவராசனத்தின் அதே மெட்டில் அதைப்போலவே ஒலிக்கும் பாடல் அது

அந்த செய்தியில் பல பிழைகள். முதலில் அந்தப்பாடல் ஐயப்பனைப்பற்றியது அல்ல. கேரளத்தின் புகழ்பெற்ற கூடல்மாணிக்க தேவர் ஆலயத்தின் கூடல்நாதரைப் போற்றுவது. அதற்கும் சபரி மலைக்கும் தொடர்பில்லை. அதை எழுதியவர் இரிஞ்ஞாலக்குடையைச் சேர்ந்த கே.வி.கிருஷ்ணதாஸ் வாரியர். இசையமைத்தவரும் அவரே.

கடைசியாக ஒன்று, அந்தக்குரல் யேசுதாஸுடையது அல்ல. யேசுதாஸின் பெரும் பக்தர்கள்கூட அவருடைய குரல் என்றே நினைக்கும் அக்குரல் மறைந்த இளம்பாடகரான சங்ஙனாச்சேரி சதீஷ் சந்திரனுடையது. பக்திப்பாடல்களில் புகழ்பெறத்தொடங்கியிருந்த அவர் ஒரு பைக் விபத்தில் மறைந்தார்

கூடல்மாணிக்கம் கோயில் திரிச்சூர் மாவட்டத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே மணவாளச்சேரி என்னும் ஊரில் உள்ள தொன்மையான வழிபாட்டிடம். இந்த ஆலயத்தின் மூலத்தெய்வம் ராமாயணத்தின் பரதன் என்பது ஒரு நம்பிக்கை. பரதனுக்கு இந்தியாவிலிருக்கும் ஒரே கோயில் இது எனப்படுகிறது. ஆனால் உள்ளிருக்கும் தெய்வம் விஷ்ணு. கூடல்மாணிக்கம் என மலையாளத்திலும் சங்கமேஸ்வரர் என்று சம்ஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறது

தச்சுடைய கைமள் என்னும் தொன்மையான சிற்றரசர்குடியின் குலதெய்வமாக இந்த ஆலயம் இருந்திருக்கிறது. அவர் மாணிக்கம்கேரளர் என அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் சோழர்காலத்திற்கு முந்தைய சேரர்குடிக் குறுநில மன்னர்களில் ஒருவர். திருவிதாங்கூரின் சிற்றரசர்களில் தொன்மை காரணமாக தனித்தன்மை கொண்டவர். கூடல்மாணிக்கம் கோயில் கிபி 854ல் சேரநாட்டு மன்னர் ஸ்தாணுரவிவர்மனின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

கூடல்மாணிக்கம் கோயில் அழகான சூழலில் அமைந்திருக்கிறது. தூயநீர் நிறைந்த குளங்கள் கொண்டது. கேரளபாணி கட்டிட அமைப்பு. அரிதாகவே சுற்றுலாப்பயணிகளை காணமுடியும். அமைதியான விரிந்த ஆலய வளாகம். மழைக்காலத்தில் சென்றிருந்தபோது ஒர் இசையனுபவமாகவே தோன்றியது அந்த ஆலயத்தைச் சுற்றிவந்தது

[கூடல்மாணிக்கம் கோயில்]

கே.வி.கிருஷ்ணதாஸ் வாரியர் ஐயப்பனைப்போல கூடல்மாணிக்கநாதனுக்கும் ஒரு உறக்குபாட்டு வேண்டும் என எண்ணி அதை எழுதினார். ஏசுதாஸ் அதைப்பாடவேண்டும் என விரும்பி முயன்றாலும் நிதிச்சிக்கலால் அது நிறைவேறவில்லை. தற்செயலாக யேசுதாஸின் இளமைக்காலக் குரலில் பாடிய சதீஷ்சந்திரனைக் கண்டடைந்தார். அவர் பாடி வெளிவந்த பாடல் கூடல்மாணிக்க ஆலய வளாகத்தைவிட்டு வெளியே செல்லவில்லை

ஆனால் எவரோ அது சபரிமலையில் ஐயப்பனுக்குப் பாடப்படும் பாடல் என சமூகவலைத்தளங்களில் பரப்பினார்கள். ஓரிரு மாதங்களில் ஹரிவராசனத்திற்கு நிகராக அது புகழ் அடைந்தது. கே.வி.கிருஷ்ணதாஸ் வாரியர் அந்தப்புகழ் சதீஷ்சந்திரனுக்குச் செல்லவேண்டியது என பல நாளிதழ்களில் பேட்டி கொடுத்தார். ஆனால் வாட்ஸப்புகளுக்கு எவர் கட்டுப்பாடு விதிப்பது

அறிதுயிலில் அமைந்தவனுக்கு தாலாட்டு என்பது அவ்வளவு சரியில்லையோ?.எப்படியோ ஒரே ஒரு பாடல் வழியாக சதீஷ்சந்திரன் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவருடைய அகால மரணமும் அதன்பின் வந்த பெரும்புகழும் கூடல்மாணிக்கத்தின் லீலை என்று சொல்லி கடந்துசெல்லவேண்டியதுதான். வாழ்க்கையை எடுத்துக்கொண்டு நீடுபுகழை அளித்தார் கூடலார் என்று புராணக்கதை உருவாக இன்னும் சிலநாட்கள்தான்.

https://www.mathrubhumi.com/movies-music/columns/paatuvazhiyorathu/harivarasanam-song-viswavismayam-singer-satheesh-chandran-yesudas-ravimenon-pattuvazhiyorath-1.4142650

***

முந்தைய கட்டுரைகுருதி- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-41