‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 8

குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால் தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து அழுத அர்ஜுனனை இளைய யாதவர் தோள்தழுவி அணைத்து அழைத்துவந்தார். அவன் விம்மிக்கொண்டே இருந்தான். அவர் ஆறுதாக ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் ஓய்ந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் “உன் அழுகை நன்று… சில எல்லைகளை கடந்துவிட்டாய் என்பதற்கான சான்று அது” என்றார்.

அர்ஜுனன் சீறி எழுந்து “வாயை மூடுங்கள்… இனி ஒரு சொல்லும் கேட்கவேண்டியதில்லை… உங்கள் சொற்களால் என் ஆத்மா அழிந்தது. தீராப் பழி கொண்டவன் ஆனேன். போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். “இன்னும் பேசி என்னை கொல்லவேண்டாம், யாதவரே. அளிகூர்க, என்னை விட்டுவிடுக… நான் எளியவன். உங்கள் புதிய வேதமும், அதிலிருந்து எழும் யுகமும் என் எண்ணம் சென்று எட்டாதவை. கண்ணும் காதும் சொல்லும் சித்தமும் தொட்டறியும் மெய்மையை மட்டுமே என்னால் உணரமுடியும். இதில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறேன்… இதிலிருந்து உங்கள் சொற்கள் என்னை மீட்காதென்று அறிந்தேன்…” என அவன் அழுகையுடன் சொன்னான்.

“நானும் அவற்றில்தான் சிக்கியிருக்கிறேன். நானும் விழிநீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை நீ காணமுடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழவில்லை, அங்கே நான் இருளூழ்கத்தில் அமர்ந்திருக்கும் குகைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” அர்ஜுனன் திகைப்புடன் அவரை நோக்கினான். இளைய யாதவர் புன்னகைத்து “எண்ணி நோக்காதே, வந்தடையமாட்டாய். விடு. இன்றிரவு நீ துயிலவேண்டும்” என்றார். “என்னால் துயில்கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா?” என்றான் அர்ஜுனன்.

“எவரும் துயில்வதில்லை. ஏனென்றால் நீத்தார் அனைவருமே இன்னும் இங்குதான் இருக்கிறார்கள். நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். நீர் பெற்று அவர்கள் மூச்சுலகை அடைந்த பின்னரே எவருக்காயினும் துயில் அமையும்” என்றார் இளைய யாதவர். “என்னை துயிலவையுங்கள், யாதவரே. என்னை ஒரு இரவேனும் துயிலச்செய்யுங்கள்…” என்று அவன் இறைஞ்சினான். “நேற்றிரவும் அவர்களை கண்டேன். அருகே வந்து நின்றிருந்தனர். மூச்சொலியுடன், உடல்வெம்மையுடன், விழிநோக்கின் ஒளியுடன்… அவர்களை அகன்றுபோகச் செய்யுங்கள்.”

இளைய யாதவர் எழுந்து வந்து அர்ஜுனனின் நெற்றிப்பொட்டின்மேல் தன் கையை வைத்தார். “துயில்க!” என்றார். “அவர்கள் அகலமாட்டார்கள். ஆனால் அவர்கள் இனியவர்களாக முடியும்.” அவன் முகம் துயரில் நெளிந்துகொண்டே இருந்தது. விழிநீர் வழிந்து காதுகளை அடைந்தது. “துயில்க! துயில்க!” என அன்னைக்குரிய மென்குரலில் இளைய யாதவர் சொன்னார். “ஒவ்வொன்றாக பொருளிழந்து மறைக! கொண்டவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! விழைபவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! ஏற்றவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! மறுப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! வெறுப்பவையும் சினப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக! துறந்தவையும் கடந்தவையும் பொருளிழக்கட்டும். பொருளின்மையே திகழ்க! பொருளின்மையின் இனிமை நிறைக! ஆம், அவ்வாறே ஆகுக!”

அர்ஜுனன் துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை தெரிந்தது. அவன் முன் இனிய எவரோ நின்றிருந்தனர் என்று தோன்றியது. யுயுத்ஸு தானும் படுத்துக்கொள்வதற்காக மஞ்சத்தில் அமர்ந்தான். இளைய யாதவர் தன் மஞ்சத்தில் கால்மடித்து அமர்வதை கண்டான். அவர் ஊழ்கம் செய்யப்போகிறாரா? “துயிலவில்லையா தாங்கள்?” என்றான். “இல்லை, அவன் கொள்வது என் துயிலை” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு அவரை புரியாமல் நோக்க அவர் புன்னகைத்து “துயில்க!” என்றார். அவன் படுத்துக்கொண்டான்.

அவனுக்கு அருகே காண்டீபம் நின்றிருந்தது. அது உயிருடன் நெளிகிறதா? அவன் ஆழ்துயிலில் மூழ்கியபோது அர்ஜுனன் சிரிப்பதை கேட்டான். கையூன்றி எழுந்து அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் சிறுவன்போல சிரித்துக்கொண்டு புரண்டு படுத்தான். அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவர் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான். அது கடுந்துயரில் நெளிந்துகொண்டிருந்தது. வலியில் இறுகிய உதடுகள், புடைத்த தசைகள். அவர் விரல்கள் தவித்துத் தவித்து ஒன்றை ஒன்று தொட்டு அலைந்தன.

அவன் கண்களை மூடிக்கொண்டான். நீத்தார் எங்கிருக்கிறார்கள்? துரியோதனனும் கர்ணனும் இளைய அரசர்களும் மைந்தர்களும்தான் அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் அவன் கனவில் ஒருமுறைகூட வந்ததில்லை. அவன் அவர்களை மறக்கவில்லை. நாளில் பலமுறை நினைவுகூர்ந்தான். அவன் முகமறிந்த எவரையும் போரில் கொல்லவில்லை. கொன்றவர்களுக்குத்தான் நீத்தார் தென்படுவார்களா என்ன? அர்ஜுனனின் சிரிப்பொலி கேட்டது.

அந்தியில் பரசுராமரின் மாணவர்கள் வேதம் ஓதும் ஒலி கேட்டது. வேள்விப்புகையின் மணத்தை அவன் உணர்ந்தான். எனில் இன்னமும் அந்திகூட ஆகவில்லை. பறவையோசை அவியவில்லை. அவன் மேலும் மேலுமென துயிலில் ஆழ்ந்தான். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றிருந்தான். எரியெழுந்து களத்தை மூடியிருந்தது. புகையின் மூச்சடைக்கச்செய்யும் கெடுமணம். அதில் ஊன்நெய் உருகி அனல்கொண்டெழுவதன் குமட்டும் மணம். அலறல்கள், ஓலங்கள். அவன் விழித்துக்கொண்டபோது வேள்வியின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.

மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். குருக்ஷேத்ரத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். அவனைச்சுற்றி நூற்றுவரும் இறந்துகிடந்தனர். இதை நீ முன்னரே அறிவாய் என்று துரியோதனன் சொன்னான். நீ என்னிடம் சொல்லவில்லை. ஏன்? அவன் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றான். பலமுறை சொல்லியிருக்கிறேன், மூத்தவரே. ஆனால் அதை அவன் சொல்லவில்லை. அவன் மேல் இருள் மூடி அழுத்தி ஆழத்திற்கு கொண்டுசென்றது.

விழித்துக்கொண்டபோது அர்ஜுனன் எழுந்து நின்றிருந்தான். “யாதவரே” என அவன் அழைக்க இளைய யாதவர் விழிதிறந்தார். “இன்று பிறந்தெழுந்ததுபோல் உணர்கிறேன். உள்ளம் இத்தனை தெளிந்து நான் அறிந்ததே இல்லை…” என்று அவன் சொன்னான். சிறுவன்போல கூச்சலிடும் குரலில் “விடுதலை எனில் இதுவே. அனைத்தையும் கடந்துவிட்டேன். அவர்கள் என் கனவில் வந்தனர். என் மைந்தர்கள் அனைவருமே வந்தனர். அரவானும் அபிமன்யுவும் திரௌபதி மைந்தரும் பிற மூவரும்… என்னைச் சூழ்ந்து விளையாடினர். இரவு முழுக்க அவர்களுடன் கொண்டாடினேன்” என்றான்.

“ஆனால் அவர்கள் எல்லோருமே சிறுமதலைகளாக இருந்தனர். சொல் திருந்தாத குழவியர். நடைகூட அமையவில்லை. ஒற்றைப் பாற்பல் சிரிப்புகள். கண்களில் துள்ளிய ஒளி. அள்ளிக்கொள் அள்ளிக்கொள் என நீட்டிய கைகள்…” அவன் பேருவகையுடன் கைகளை விரித்தான். “அள்ளி அள்ளி என் மேல் சந்தனம்போல் பூசிக்கொண்டேன். முத்தமிட்டு முத்தமிட்டு சலிக்கவே இல்லை… ஒரு முழுப் பிறவியையும் வாழ்ந்துவிட்டேன், யாதவரே.” அவன் நிலைகொள்ளாமல் அறைக்குள் சுற்றிவந்தான். “தழுவி முத்தமிடுகையில் அவர்களின் இதழ் ஈரம் படும் மெய்ப்பு… மானுடன் பிறந்ததே அப்பேரின்பத்திற்காகத்தான்.”

“அதுவும் காமமே” என்று இளைய யாதவர் சொன்னார். “காமத்தின் மிகமிக உயர்ந்த நிலை. காமமெனும் பாற்கடலின் அமுது என்பார்கள் கவிஞர்.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “இன்று நீ முடிவெடுக்கலாம். என்னுடன் சுனைக்கரைக்கு உன்னை அழைத்துச்செல்வதாக இருந்தேன். அங்கே உனக்கு ஊழ்கநிறைவை அளிக்க எண்ணியிருந்தேன். அதன்பின் உன் குண்டலினியிலிருந்து விழைவு முற்றொழியும். அதன்பின் இவ்வின்பத்தை நீ அடையவே இயலாது. இப்பிறவியில் அல்ல, இனி எப்பிறவியிலும். உன் நினைவிலிருக்கும் இன்பங்கள்கூட தடமில்லாது அழியும்.”

அர்ஜுனன் கைகள் தளர்ந்து தொங்க நோக்கியபடி நின்றான். “காமத்தின் உச்ச இன்பத்தை அறிந்துவிட்டாய். பருகும்தோறும் விடாய் மிகுவதே காமத்தின் இயல்பு. உன்னுள் பெருகுவது அலையும் அதன் நுரையும். சொல்க, ஊழ்கநிறைவுக்கு நீ சித்தமாக இருக்கிறாயா?” என்றார் இளைய யாதவர். “அதை அடையாமல் நீ உன் தந்தை அளித்த அம்பை பயன்படுத்த இயலாது. அந்த அம்பு இல்லாமல் நீ அஸ்வத்தாமனை எதிர்கொள்வதும் முடியாதது.”

அர்ஜுனனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் தொடர்ந்தார். “காமத்தை ஒழியலாகாது என்றால் உன்முன் வழி ஒன்றே உள்ளது. பழிகொள்ளும் வஞ்சினத்தை கைவிடுக! உன்னால் இயலாதென்று கூறி மீள்க! காமத்தை அறியாத உயிர் இல்லை. காமத்தின் மெய்யுருவை அறிந்தோர் சிலரே. ஒருமுறை அதை அறிந்தவன் நல்லூழ் கொண்டவன். அவன் மேலும் மேலும் பெருகும் ஒரு அமுதத்துளியை பெற்றுக்கொண்டிருக்கிறான். நீ அடையக்கூடும் இன்பம் இங்கிருந்து தொடங்குகிறது.”

அர்ஜுனன் ஒருகணம் தன்னை இறுக்கிக்கொண்டான். பின்னர் “யாதவரே, அது மெய்மையும் மீட்பும் அளிக்கும் பேரின்பமே ஆயினும் நான் கொண்ட கடமையிலிருந்தும் கூறிய சொல்லிலிருந்தும் விலகமாட்டேன் என நீங்கள் அறிவீர்கள். இப்போதும் மற்றொன்றில்லை” என்றான். “நீ சற்று எண்ணிச்சூழலாம். நீ துறக்கவிருப்பது அன்பென்றும் காதலென்றும் பற்றென்றும் ஆகி உயிர்க்குலங்களைச் சூழும் அரிய இன்பத்தை. மெய்மையென்றாகும் பேரின்பத்தை. முழுமையைச் சென்றடையும் இன்பத்துக்கு அப்பாற்பட்ட நிலையைக்கூட கவிஞரும் முனிவரும் அதைக்கொண்டே விளக்கினர்” என்றார்.

“மானுடர் அவ்வின்பத்தை முழுதடையாமல் தடுக்கும் விசைகள் பல அவர்களுக்குள்ளேயே உறைகின்றன. காமத்தை ஆணவத்துடன் கலந்துகொள்கின்றனர் மானுடர். காமத்தையே ஆணவம் என்றும் ஆணவத்தையே காமம் என்றும் சமைத்துக்கொள்கின்றனர். ஆணவம் சென்று தொடும் அனைத்தையும் காமத்துடன் இணைத்துக்கொள்கின்றனர். பொருள்விழைவு, அடையாள நாட்டம், வெற்றித்துடிப்பு அனைத்தும் காமம் என்று உருமாறுகின்றன. காமம் என்னும் இனிமைப்பெருவெளி திரிபடைகிறது. காமத்தில் கோன்மை குடியேறுகிறது. கோன்மை கரவுக்கு வழிகோலுகிறது. கரவு தன்னிரக்கத்தை, கசப்பை, சினத்தை வஞ்சத்தை கொண்டுவருகிறது. ஆகவே இப்புவியில் மானுடர் காமம் என அடைவதெல்லாம் துன்பத்தை மட்டுமே.”

“நீ அவை அனைத்தையும் அடைந்து கடந்துவிட்டாய். குருக்ஷேத்ரத்திற்குப் பின் இனி இப்புவியில் நீ அறியவேண்டிய இருள் என ஏதுமில்லை. இருளை அறிந்தமையால் ஒளியின் பொருளையும் உணர்ந்துவிட்டாய். இனி நீ அடையும் காமம் தடைகள் அற்றது. தேவர்களும் விழைவது. அதை இழக்கவேண்டாம் என்பதே உன் உலகியல்தோழனாக நான் அளிக்கும் சொல்” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு பரபரப்புடன் அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் முகம் கூரிய உணர்வை மட்டுமே காட்டியது. “எண்ணிச்சொல்ல சற்றே பொழுதளிக்கிறேன். இக்குடிலில் நீ சற்றுபொழுது தனித்திருக்கலாம்” என்றார் இளைய யாதவர்.

“தேவையில்லை” என்றான் அர்ஜுனன். “தனிமையை அஞ்சாதே. எழுந்து வரும் எண்ணம் என நீயே நோக்கு” என்றபின் இளைய யாதவர் வெளியே சென்றார். யுயுத்ஸு அவரைத் தொடர்ந்து வெளியேறினான். இளைய யாதவர் முற்றத்தில் நின்றார். யுயுத்ஸு அவர் அருகே செல்லாமல் அகன்று நின்றான். அவரை நோக்க அவன் அஞ்சினான். புலரிமுன் இருள் சூழ்ந்திருந்தது முற்றத்தில். காடு இருள்வடிவில் ஓசையிட்டுக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு நரியின் ஊளை எழுந்தது.

இளைய யாதவர் அசைந்தபோது யுயுத்ஸு விழிப்பு கொண்டான். இளைய யாதவர் குடிலுக்குள் நுழைந்தார். அங்கே மஞ்சத்தில் அர்ஜுனன் காண்டீபத்துடன் அமர்ந்திருந்ந்தான். வீணையை மடியிலிட்டு மீட்டும் பாணனைப்போல என யுயுத்ஸு எண்ணினான். முகத்திலும் அந்த பாவனையே தெரிந்தது. இளைய யாதவர் அவனிடம் “என்ன முடிவெடுத்தாய்?” என்றார். அவன் புன்னகையுடன் “தனிமை நன்று. முழுதுற உளம்நோக்க முடிகிறது. பிறிதொரு சொல்கூட அகத்தே எழவில்லை. நான் கூறியதேதான். யாதவரே, என் கடமையையே தலைக்கொள்கிறேன்” என்றான்.

இளைய யாதவரும் அர்ஜுனனும் சென்றபின் யுயுத்ஸு குடிலில் தனித்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் நுழையும் எல்லைவரை சென்றபின் அவன் தயங்கி நின்றான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவன் திரும்பிவந்தான். குடிலின் முகப்பில் மூங்கில் பீடத்தில் அமர்ந்தபடி இருளை நோக்கிக்கொண்டிருந்தான். மிருகண்டன் அவனை அணுகி “போருக்கான அனைத்தும் ஒருங்கிவிட்டன. அக்களத்தை தூய்மை செய்ய ஆசிரியர் ஆணையிட்டார். சற்றுமுன்னர்தான் அப்பணி முடிந்தது. ஆசிரியர் லிகிதருடன் நீராடச் சென்றிருக்கிறார்” என்றான்.

யுயுத்ஸு தலையசைத்தான். “காலை வேள்வி முதற்கதிருக்கு முன்னரே முடிவது இங்கே வழக்கம். இன்று அதை முதல் பறவைக்கு முன்னரே முடிக்க ஆணை” என்று மிருகண்டன் சொன்னான். “குருநிலையில் மாணவர் அனைவருமே போர் காண அங்கே வருகிறார்கள். இப்போர் நெடுங்காலம் நூல்களில் யாக்கப்படுவதாக அமையும் என்கிறார்கள்.” அவன் “ஆம்” என்றான். “பார்த்தனும் யாதவரும் நீராடச்சென்றார்கள் போலும்… அவர்களை அழைக்க நான் வருகிறேன்” என்றான். “தேவையில்லை, நாங்களே அங்கே வருகிறோம்” என்றான் யுயுத்ஸு.

மிருகண்டன் சென்றபின் அவன் பதற்றத்துடன் கண்மூடினான். மூடிய கண்களுக்கு அப்பால் எவரோ வருவதுபோலத் தெரிந்தது. விழிதிறந்தபோது புரவியை நிறுத்திவிட்டு பீமன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். அவனுடன் வந்த மிருகண்டன் “மூத்த பாண்டவர் வருகை முன்னரே அறிவிக்கப்படவில்லை. ஆசிரியரிடம் சொல்லி ஆணை பெறவும் இப்போது பொழுதில்லை. அவர் போரில் சான்று நின்றிருக்க வந்திருக்கிறார் போலும்” என்றான். ஆம் என யுயுத்ஸு தலையசைத்தான். பீமன் பொறுமையிழந்து அசைந்தான். மிருகண்டன் அவனை வியப்புடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான்.

பீமன் உரத்த குரலில் “எங்கே அவர்கள்? நிகழ்ந்தவற்றை அந்த மாணவன் சொன்னான். எங்கே இளையவன்?” என்றான். யுயுத்ஸு “அவர்கள் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை பார்த்தாகவேண்டும்… உடனே” என்றபடி பீமன் திரும்ப யுயுத்ஸு “நில்லுங்கள், மூத்தவரே. வேண்டாம். அவர்கள் சென்றிருப்பது நீராடுவதற்காக அல்ல” என்றான். “பிறகு?” என்று அவன் கேட்டான். “யாதவர் இளையவருக்கு சொல் அளிக்கவிருக்கிறார். இந்திரனின் அம்பை கையாளும் முறையை” என்றான். “அதை இப்போதுதானா அறியப்போகிறான் அவன்? தந்தையின் அம்பைக் கையாள பிறிதொருவர் சொல் தேவையா அவனுக்கு?”

யுயுத்ஸு அழுத்தமான குரலில் “இதற்கு அப்பால் தங்களுக்கு அதை உரைக்க இயலாது, மூத்தவரே” என்றான். “ஆனால் அவர்களின் தனியுலகுக்குள் நீங்கள் நுழையவேண்டியதில்லை.” பீமன் சீற்றத்துடன் “நீயா என்னை தடுப்பது?” என்றான். “ஆம், நானேதான்” என்றான் யுயுத்ஸு. பீமன் “நான் அவனை அறைகூவிவிட்டே கிளம்பினேன். இளையவனுக்கு முன்னரே அவனை நான் அறைகூவிவிட்டேன்” என்று கூவினான். “அவர் நேரில் அறைகூவிவிட்டார். பரசுராமரின் முன் நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுவிட்டது” என்றான் யுயுத்ஸு. “அதை நான் ஏற்கவியலாது. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்று பீமன் கைகளை ஓங்கி அறைந்தான்.

“மூத்தவரே, அஸ்வத்தாமன் ஏற்றுக்கொண்டது இளையவரின் அறைகூவலை” என்று யுயுத்ஸு சொன்னான். “அதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அப்போர் முடியட்டும். நீங்கள் உங்கள் அறைகூவலை முன்வைக்கலாம். அவர் ஏற்றாரென்றால் போரிடலாம்.” பீமன் சலிப்புடன் அமர்ந்தான். “அவன் கைதளர்ந்திருந்தான். காண்டீபத்தையே மறந்துவிட்டிருந்தான். ஐவரில் போருக்கான ஊக்கம்கொண்டு எஞ்சுபவன் நான் மட்டுமே…” என்று தனக்குத்தானே சொன்னான். “அவனால் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளமுடியாது. அவன் அம்புக்கு இரையாகக்கூடும்.”

“அவருடன் இளைய யாதவர் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “இப்போர் நீங்கள் எண்ணுவதுபோன்றது அல்ல…” பீமன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். “நீங்கள் நீராடி ஒருங்கலாம், மூத்தவரே. பொழுதில்லை” என்றான் யுயுத்ஸு. சற்றுநேரம் வெறுமனே நோக்கியபின் “ஆம்” என பீமன் எழுந்துகொண்டான். எடையுடன் அவனுக்கு நிகராக நடந்தபடி “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவன் எப்படி களம்நிற்க இயலும்? போரில் அங்கன் வீழ்ந்ததுமே அவனும் வீழ்ந்துவிட்டான்” என்றான்.

“மூத்தவரே, இது அவர்களுக்குள் மட்டுமே நிகழ்ந்தாகவேண்டிய போர்” என்று யுயுத்ஸு சொன்னான். “இப்படி ஒரு போர் எஞ்சியிருந்தது. அவர்கள் பிறந்த கணம் முதல் இது ஒருங்கிக்கொண்டிருந்தது.” பீமன் “ஆம்” என்றான். பின்னர் பெருமூச்சுவிட்டு “ஊழின் கடன்களை முற்றாக முடித்துவிட்டே செல்வோம் போலும்” என்றான். “பொன்னின் உலையென்றாகவேண்டும் வாழ்க்கை என ஒரு சொல் உண்டு, வாசிஷ்டசூத்ரத்தில்” என்றான் யுயுத்ஸு. “அனைத்து மாசுகளையும் அகற்றி தூய்மை செய்யவேண்டும். பொன் அனலென்றாகும்போதே அதிலுள்ள மாசுகள் மறைகின்றன.”

பீமன் சலிப்புடன் தலையை அசைத்தான். சுனையில் நீராடும்போது அவன் எண்ணி எண்ணி தலையை ஆட்டி முனகிக்கொண்டிருந்தான். குடிலுக்கு மீண்டு மரவுரி அணிந்துகொண்டிருக்கையில் மிருகண்டன் அவர்களை தேடிவந்தான். முற்றத்தில் நின்று “பாண்டவரே!” என்றான். யுயுத்ஸு வெளியே சென்றான். “களம் ஒருங்கிவிட்டிருக்கிறது. ஆசிரியர் சென்றுவிட்டார். இங்குள்ள மாணாக்கர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள்.” யுயுத்ஸு “கிளம்புவோம்” என்றான். “அவர்கள் எங்கே?” என்று மிருகண்டன் கேட்டான். “அவர்கள் அங்கேயே வந்துவிடுவார்கள்” என்றான் யுயுத்ஸு.

உரத்த குரலில் “பொழுதுக்கு முன் அவர்கள் அணையவில்லை என்றால் நான் பொருதுகிறேன். நானும் அவனை அறைகூவியிருக்கிறேன்” என்றான் பீமன். மிருகண்டன் “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆசிரியரே” என்றான். அவர்கள் முற்றத்தில் இறங்கினர். பீமன் கருக்கிருட்டை அண்ணாந்து நோக்கிவிட்டு கைகளை வீசியபடி நடந்தான். அவனுக்குப் பின்னால் மிருகண்டனும் யுயுத்ஸுவும் நடந்தார்கள்.

அக்களம் காட்டுக்குள் சற்று தள்ளி இருந்தது. அங்கே மண்ணுக்கு அடியில் மாபெரும் பாறை ஒன்று இருக்கக்கூடும். ஆகவே மரங்கள் ஏதும் முளைக்காமல் புல்வெளி உருவாகியிருந்தது. அங்கே பரசுராமரின் குருநிலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக விற்பயிற்சி கொள்வார்கள் என தெரிந்தது. குறிப்பலகைகளும் படைக்கலப்பெட்டிகளும் அமர்வதற்கான மூங்கில் பீடங்களும் அப்பகுதியெங்கும் பரவிக்கிடந்தன. பரசுராமரின் மாணவர்கள் அங்கே குழுமி வளைந்திருந்தனர். அவர்கள் அணுகியபோது அங்கே எழுந்துகொண்டிருந்த பேச்சுக்குரல் முழக்கம் அடங்கி மேலெழுந்தது.

களத்தின் தென்மேற்குமூலையில் கொற்றவையின் சிறு சிலை பீடத்தில் நிறுவப்பட்டிருந்தது. செம்பட்டு அணிந்து செங்காந்தள் மாலைசூடி செஞ்சுடர்கள் ஏழு எரிந்த இரு அடுக்குவிளக்குகளுக்கு நடுவே அன்னையின் சிறிய கருஞ்சிலை அமர்ந்திருந்தது. வெள்ளியாலான விழிகள் பதிக்கப்பட்ட முகம் அனலாட்டத்தில் உயிர்கொண்டிருந்தது. எதிரே பலிபீடத்தில் குருதிபலி கொடுக்கப்பட்ட வெள்ளாட்டின் தலை விழிகள் வெறித்திருக்க, நாக்கு நீண்டு சரிந்துதொங்க வைக்கப்பட்டிருந்தது. குருதியின் மணம் அப்பகுதியை சூழ்ந்திருந்தது.

கொற்றவைச் சிலைக்கு நேர் எதிராக வடகிழக்கு மூலையில் மரப்பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். அவர் அருகே லிகிதர் நின்றார். மாணவர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பீமன் அவரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் அவனை தலை தொட்டு வாழ்த்தினார். பீமன் ஏதேனும் சொல்வான் என யுயுத்ஸு எதிர்பார்த்தான். ஆனால் அவன் அக்களத்தை நோக்கியதுமே உளம்குழம்பிவிட்டவன் போலிருந்தான். பரசுராமரின் அருகிலேயே பீமன் நின்றுகொண்டான். யுயுத்ஸு அருகே சென்று நின்றான்.

கொம்பொலி எழுந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். தனியாக கையில் வில்லுடன் அஸ்வத்தாமன் வந்தான். அவன் அணுகுந்தோறும் கூட்டத்தில் பேச்சொலி எழுந்து அவன் களத்திற்குள் புகுந்ததும் ஆழ்ந்த அமைதி உருவாகியது. அஸ்வத்தாமன் பரசுராமரை வணங்கிவிட்டு தன் வில்லை கொற்றவையின் முன் குருதிபீடத்தின்மேல் வைத்தான். தலைவணங்கிவிட்டு அன்னைசிலையின் வலப்பக்கமாக நின்றான். பீமனின் விழிகள் அஸ்வத்தாமனிலேயே பதிந்திருந்தன.

அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்தச் செந்நிற அருமணியை அப்போதுதான் யுயுத்ஸு கண்டான். முந்தைய நாள் அதைக் கண்டது நினைவுக்கு வரவில்லை. அப்போது அவனுடைய சடைக்கற்றைகள் முகத்தில் சரிந்து அதை மறைத்திருக்கலாம். அப்போது அவன் சடைகளை அள்ளி பின்னுக்குத்தள்ளி தோல்பட்டை ஒன்றை கட்டியிருந்தான். அந்த அருமணி ஒரு துளி அனல் என மின்னியது. நுதல்விழி. அவனுடைய குழல் எப்படி சடையாகியது என யுயுத்ஸு உணர்ந்தான். குருதிக்கூழ் முடியுடன் கலந்து அதை சடையென்று ஆக்கும் தன்மை கொண்டது. செஞ்சடையன்.

முந்தைய கட்டுரைசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்
அடுத்த கட்டுரைவாசல்பூதம் – கடிதங்கள்