‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 7

அன்று பகல் முழுக்க தேரில் அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். அந்த திசையை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என அவன் வியந்தான். கங்கைக்கு இணையாகவே அது சென்றது. நெடுந்தொலைவில் எங்கோ ஆறு இருந்தது. வழியிலோடிய ஓடைகள் அனைத்தும் அதை நோக்கியே சரிந்தன. பலகைகளைக்கொண்டு ஓடைகள்மேல் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுட்ட செங்கற்களால் காட்டாற்றின்மேல் பாலம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாலத்தின் அருகிலும் மரத்தின்மேல் ஒரு காவல்மாடத்தில் சில காவலர் இருந்தார்கள்.

யுயுத்ஸு தேரை செலுத்திக்கொண்டிருக்கையிலேயே சூழ முழங்கிய முரசொலிகளை கேட்டான். அவை அர்ஜுனனின் போரெழுகையை அறிவித்தன. இளைய யாதவர் அவற்றை அறிவிக்கும்படி வழியிலேயே காவலரண்களில் இருந்த பாண்டவப் படையினருக்கு ஆணையிட்டிருந்தார். காட்டுக்குள் எத்தனை பாண்டவ ஒற்றர்களும் காவல்படையினரும் இருக்கிறார்கள் என்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். காடு மொத்தமாகவே முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பெரும் போர்முரசென அதன் பசுமைப்பரப்பு மாறிவிட்டிருந்ததுபோல. அஸ்வத்தாமன் எங்கிருந்தாலும் அதை கேட்டிருப்பார். ஒலிபோல் விரைந்து பரவுவது பிறிதில்லை.

அஸ்வத்தாமன் நெடுந்தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் இருக்கும் நிலையில் தேரிலேறிச் செல்லமுடியாது. புரவியில் ஊர்வதற்குரிய உளநிலையும் அவரிடமிருக்காது. புரவியூர்பவர்களுக்கு சென்றடைய இலக்கு இருக்கவேண்டும். எங்கென்றில்லாமல் செல்பவர்கள் கால்களையே ஏவுகிறார்கள். அவன் அவர் காட்டுக்குள் நடந்துசெல்வதை கற்பனையால் கண்டான். புதர்களை ஊடுருவிச்செல்லும் வேங்கைபோல. ஏன் காடு? அவர் ஏன் ஊர்கள் வழியாக செல்லக்கூடாது? கங்கைப்படகுகளில் ஏறியிருக்கலாகாது? காட்டிலேயே அவர் செல்வார். அவரால் மானுடரை எதிர்கொள்ள முடியாது. மானுடரின் திகைக்கும் விழிகள் அவரை கொந்தளிக்கச் செய்யும். அவர் மானுடரைவிட மேலெழுந்துவிட்டவர். மானுடரைவிட மேலெழுந்தவர்கள் மானுடரை முடிவில்லாது பொறுத்தருளவேண்டும். அவர்கள்மேல் தீராத பேரளி கொண்டிருக்கவேண்டும்.

அவர்கள் அன்று மாலையில் காட்டின் நடுவே சாலையோரமாக எழுந்து தெரிந்த பாறை ஒன்றைக் கண்டடைந்து அதன்மேல் தங்கினார்கள். யுயுத்ஸு புரவிகளையும் பாறைக்குமேல் ஏற்றிக்கொண்டான். அவை குளம்புகள் பாறையில் பட்டு உரசி ஒலிக்க மூச்சிளைத்தபடி ஏறின. பாறைமேல் நெருப்பிட்டு அதைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டு ஒரு சொல்லும் உரைக்காமல் கொழுந்தாடலை நோக்கிக்கொண்டிருந்தார்கள். யுயுத்ஸு காட்டுக்குள் சென்று சேர்த்துவந்த கிழங்குகளையும் காய்களையும் சுட்டு அனலுடன் எடுத்து வைக்க இளைய யாதவர் அவற்றை எடுத்து உடைத்து உண்டார். ஓரிமுறை வாங்கி உண்டபின் அர்ஜுனன் வேண்டாம் என்றான். அவன் அவர்களுடன் இருப்பதாகவே தெரியவில்லை. முற்றிலும் சொல்லடங்கிவிட்டிருந்தான்.

அவன் மடியில் காண்டீபம் அமைந்திருந்தது. அவன் அதை காட்டுக்குள் ஒரு மரத்தின்மேல் வைத்திருந்தான். அந்த மரத்தின் அடியில் சென்று நின்றதும் அவன் தயங்கினான். பின் யுயுத்ஸுவிடம் “இளையோனே, அந்த வில்லைச் சென்று எடு” என ஆணையிட்டான். யுயுத்ஸு மரத்தில் ஏறி அதை எடுத்தான். எடையற்றது. இரும்பாலானது என்றாலும் மூங்கிலென்றே கைக்கு காட்டியது. மிகச் சிறியது. அதை சுருக்கவும் விரிக்கவும் இயலுமென அறிந்திருந்தாலும் அது அத்தனை சிறிதாக இருப்பது அவனுக்கு வியப்பை அளித்துக்கொண்டே இருந்தது. “கொண்டு வா” என்றபின் அதை கையில் வாங்காமல் அர்ஜுனன் தேரிலேறிக்கொண்டான்.

அன்று அப்பயணம் முழுக்க அவன் அருகில்தான் காண்டீபம் இருந்தது. அர்ஜுனன் அதை கையால் தொடவே இல்லை. இளைய யாதவர் அதைப்பற்றி எதையும் சொல்லவுமில்லை. அது அருகிருக்கும் உணர்வு யுயுத்ஸுவை அலைக்கழித்தது. பாரதவர்ஷத்தை வெற்றிகொண்ட வில். அது ஒரு தெய்வம். அது நெடுநாட்கள் ஆலயத்தில்தான் மையத்தெய்வமென கோயில்கொண்டிருந்தது. அவன் அதை திரும்பி நோக்கவோ தொடவோ அஞ்சினான். ஆனால் அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இருந்தான். மெல்லமெல்ல வியப்பு விலகி அச்சம் ஏற்பட்டது. அது குருதிகொள்ளும் கொலைத்தெய்வம். குருதிநீராடி சலிப்புறாதது. தெய்வங்கள் சலிப்புறுவதே இல்லை. ஏனென்றால் அவற்றுக்கு காலம் இல்லை.

அவன் அதை அருகே வைத்திருக்க அஞ்சினான். அதிலிருந்து கூடுமானவரை உடலை விலக்கிக்கொண்டான். ஆனால் உடலை பெருமளவுக்கு அசைக்க இயலவில்லை. உள்ளத்தால் மட்டுமே இடைவெளி விட முடிந்தது. தேர் நின்றதும் அவன் இயல்பாக என இறங்கி புரவிகளை அவிழ்த்தான். அவற்றை மேலே கொண்டுசென்று கட்டிவிட்டு கிழங்குகள் சேர்க்கச் சென்றான். அவன் மீண்டுவந்தபோது மடியில் காண்டீபத்துடன் அர்ஜுனன் தலைகுனிந்து அமர்ந்திருக்கக் கண்டான். அவன் மடியில் பாம்புபோல் அது கிடந்தது. அவன் கை அதை தொடவில்லை. அதுவே ஊர்ந்து அவன் மடிமேல் ஏறிக்கொண்டிருக்கவேண்டும் எனத் தோன்றியது.

புரவிகள் அப்பால் நின்று செருக்கடித்தன. அவற்றுக்கு தழைகளை வெட்டிப்போட்டிருந்தார்கள். அவ்வுணவு அவற்றுக்கு உகக்கவில்லை. இரவில் காட்டில் சென்று மேய விரும்பின. அவற்றின் ஓசை கேட்டு திரும்பி நோக்கிய இளைய யாதவர் “அவை காட்டுக்குள் செல்லட்டும்” என்றார். அவை அவரை நோக்கியே கனைத்தன. யுயுத்ஸு “இங்கே புலி இருக்கக் கூடும்” என்றான். “இருக்க வாய்ப்பில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “தொடர்ந்த போரொலியால் அவை நிலையழிந்திருக்கும். ஆகவே விட்டுச்சென்றிருக்கும்.” அவன் “நரிகளும் ஓநாய்களும்…” என சொல்லத் தொடங்க இளைய யாதவர் மறித்து “அவை எளிய மானுட ஊனை உண்டு பழகிவிட்டிருக்கும்” என்றார்.

அவன் துணுக்குற்றான். மேற்கொண்டு சொல்லெடுக்க இயலவில்லை. புரவிகளை காட்டுக்குள் செலுத்திவிட்டு பாறைமேல் படுத்துக்கொண்டான். அர்ஜுனன் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்தான். எரிகுழியில் கனலடங்கி புகைமணம் எழுந்தது. பின்னர் காற்று கனலை முற்றாக அணைத்தது. கனல்மணம் இருந்தாலே போதும், விலங்குகள் அணுகா. இளைய யாதவர் படுத்துக்கொண்டார். அப்பால் அர்ஜுனனும் படுத்தான். அவனருகே இணையாக காண்டீபம் கிடந்தது. அவன் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். இளைய யாதவரின் துயிலோசை கேட்டது. அர்ஜுனன் துயில்வதுபோல் தெரியவில்லை. அவன் திரும்பி நோக்கினான். அர்ஜுனனின் இரு கண்களும் வானோக்கி விரிந்து நீர்த்துளிபோல் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.

அவன் துயில்வதே இல்லை என்பதை அவன் கேட்டிருந்தான். அது ஓர் அணிச்சொல் என்றே எண்ணியிருந்தான். மெய்யாகவே துயில்வதில்லையா? எனில் உள்ளம் எங்ஙனம் அடங்குகிறது? துயிலாதவனுக்கு பகலிரவு உண்டா? அவனுடைய காலம் பிறிதொன்றா? அவன் காணும் விண்ணிலிருப்பவை எவை? அவன் அர்ஜுனன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அசைவற்ற இரு பளிங்கு மணிகள். விண்மீன்களின் மறைந்து மறைந்து எழும் ஒளிகொண்டவை. அவன் காண்டீபத்தை நோக்கினான். அது உயிருள்ளதுபோல் தோன்றியது. மெல்ல நெளிவதுபோல். செவியறியாமல் ரீங்கரிப்பதுபோல்.

அவன் துயிலில் ஆழ்ந்தபோதுகூட உள்ளம் அஞ்சிக்கொண்டிருந்தது. துயிலில் அவன் உருண்டு சென்றான். அவனை சம்வகை பிடித்துக்கொண்டாள். “இங்கே பாறையின் விளிம்பு… ஆழம்” என்றாள். “அந்த நாகம், அது அவர் அருகே கிடக்கிறது” என்றான். “அது உங்களை அறியாது” என்று அவள் சொன்னாள். அவன் அதை நோக்கிவிட்டு “ஆம்” என்றான். “துயில்க!” அவள் புன்னகை இனிதாக இருந்தது. “நீ எப்படி இங்கே வந்தாய்?” அவள் புன்னகைத்துவிட்டு பின்னால் சென்றாள்.

அவன் விழித்துக்கொண்டபோது காற்று வீசிக்கொண்டிருந்தது. இளைய யாதவரின் மூச்சின் ஒலி கேட்டது. அர்ஜுனன் அவ்வண்ணமே விழித்த கண்களுடன் படுத்திருந்தான். யுயுத்ஸு எழுந்து அமர்ந்து விண்ணை நோக்கினான். விடிவெள்ளி எழுந்து இளஞ்செந்நிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். காகங்களின் குழறலோசைகள். காடு விழித்தெழுந்து கொண்டிருந்தது. அவன் தலைக்குமேல் சிறகோசையுடன் வௌவால்கள் கடந்துசென்றன. அவன் எழுந்துசென்று பாறை விளிம்பில் நின்று கைகளை வாயில் சேர்த்து கூரிய ஒலியை எழுப்பினான். மீண்டும் மீண்டும் அவ்வோசையை எழுப்பிக்கொண்டிருந்தபோது புரவியின் செருக்கடிப்போசை அப்பால் கேட்டது. அவை இரண்டும் இணைந்தே புதர்களுக்குள் இருந்து வந்தன. அவை நன்கு உண்டு துயில்கொண்டிருப்பது தெரிந்தது.

அவன் நீராடி மீண்டான். இளைய யாதவரும் அர்ஜுனனும் நீராடச் சென்றிருந்தார்கள். அவன் புரவிகளை தேரில் பூட்டியபோது அவர்கள் நீராடிவிட்டு அணுகினார்கள். தேருக்குள் ஏறியமர்ந்தபோது அர்ஜுனன் காண்டீபத்தின் நாணை வீணை என விரல்களால் வருடி மீட்டிக்கொண்டிருப்பதை யுயுத்ஸு கண்டான். அர்ஜுனனின் முகம் மாறியிருந்தது. நெடுநாட்களுக்கு முன்பு கண்ட முகம். சில நாட்களாக முற்றாகவே மறந்துவிட்டிருந்த முகம்.

மாலையில்தான் ஒற்றன் ஒருவன் அவர்களை வந்து சந்தித்தான். சாலையின் ஓரமாக நின்றவன் கைச்செய்கை காட்டி அவனை அறிவித்தான். யுயுத்ஸு தேரை நிறுத்தி அவனை அருகே அழைத்தான். அருகணைந்து வணங்கி “அவர் இங்கேதான் இருக்கிறார். பரசுராமரின் தவக்குடிலில்” என்றான். யுயுத்ஸு வியப்புடன் “பரசுராமர் இங்கே இருக்கிறாரா?” என்றான். “ஆம், இது அவர்களின் நூற்றெட்டு தவக்குடில்களில் ஒன்று. இப்போதைய பரசுராமர் இங்கு வந்து தங்கியிருக்கிறார்.” யுயுத்ஸு “அவர் இங்கிருப்பதை உறுதிசெய்துகொண்டாயா?” என்றான். “ஆம், நானே நேரில் பார்த்தேன்” என்றான் ஒற்றன். “சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் இங்கே வந்திருக்கிறார். வந்த நாள் முதல் ஒரு மரக்குடிலில் தன்னந்தனிமையில் இருக்கிறார். அவருக்கும் பிறருக்கும் நடுவே ஒரு சொல்கூட பரிமாறப்படவில்லை. சொல்லப்போனால் அவர் பகலில் வெளியே வருவதே இல்லை. இரவில் மட்டும் ஒருமுறை காட்டுக்குச் சென்று மீள்கிறார்…”

“பரசுராமருக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தவை என்ன?” என்று யுயுத்ஸு கேட்டான். “நானறிந்தவரை ஒன்றுமே இல்லை” என்றான் ஒற்றன். உள்ளிருந்து அர்ஜுனன் “மூத்தவர் அறிவாரா அஸ்வத்தாமன் இங்கிருப்பதை? அவர் இங்கே வந்தாரா?” என்றான். “இல்லை, இதுவரை அவர் இங்கே வந்துசேரவில்லை” என்றான் ஒற்றன். “நன்று… இனி அவர் வந்தால்கூட அவரிடம் பரசுராமருடன் அஸ்வத்தாமன் இருக்கும் செய்தியை தெரிவிக்க வேண்டியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவரிடம் “இப்போரை நான் நிகழ்த்துவேன், யாதவரே. நான் அதை பலமுறை உள்ளே நிகழ்த்திவிட்டேன். என் காண்டீபம் இப்போது எழுந்துவிட்டிருக்கிறது” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார்.

யுயுத்ஸு தேரை காட்டுக்குள் பிரிந்துசென்ற சிறுபாதையில் செலுத்தினான். தேர் வேர்ப்புடைப்புகளிலும் கற்களிலும் ஏறியமைந்து ஊர்ந்துசென்றது. அவன் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. ஒருவேளை அர்ஜுனனின் இறப்பு இங்கே நிகழுமோ? அனைத்தும் இங்கே வந்து முடியும்பொருட்டுத்தான் இதுவரை கோக்கப்பட்டுள்ளனவா? அந்தப் போர் நிகழாமல் எதுவும் முடியாது என அவனுக்குத் தோன்றியது. முன்னால், மேலும் முன்னால் என சென்று நோக்கினால் அப்போர் தொடங்கியது அவர்களிடையே இருந்துதான். துருபதனை அர்ஜுனன் சிறுமைசெய்த இடத்திலிருந்து தொடங்குகிறது குருக்ஷேத்ரம் என ஒரு சூதன் பாடக் கேட்டான். அவரை அர்ஜுனன் சிறுமைசெய்தது அஸ்வத்தாமன் பொருட்டுத்தான். அவன் தலையை உலுக்கி அவ்வெண்ணங்களை அகற்றினான். அவ்வாறு எண்ணப் புகுந்தால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. அனைத்துமே தொடக்கங்கள்தான்.

தேர் மேலும் செல்லாமல் நின்றுவிட்டது. அவர்கள் இறங்கிக்கொண்டார்கள். அவன் தேரை அருகே அவிழ்த்து புரவிகளை காட்டுக்குள் செலுத்தினான். காண்டீபத்துடன் அர்ஜுனன் நடக்க இளைய யாதவர் உடன் சென்றார். அவன் அவர்களுக்குப் பின்னால் நடந்தான். அவர்களைச் சூழ்ந்திருந்த காடு வெயில் படாத தழைச்செறிவு கொண்டிருந்தது. இலைநுனிகளிலிருந்து தவளைகள் துள்ளித்தெறித்தன. அருவிகள் பொழிந்து நிலைத்ததுபோல கொடிகள் தொங்கிய பெருமரங்கள் அடிவேர்களால் நிலத்தை அள்ளிப்பற்றி புடைத்த கைகளை விரித்து பசுங்கூரையை தாங்கி நின்றிருந்தன. மேலே பறவையோசை முழக்கமாக கேட்டுக்கொண்டிருந்தது. மிக அருகிலெங்கோ அருவி ஒன்று இருக்கக்கூடும் என ஓசை காட்டியது.

காட்டின் ஓரமாக பாறையொன்றின்மேல் அமர்ந்திருந்த ஒருவன் சருகு உதிர்வதுபோல ஓசையில்லாமல் இறங்கி “வருக பாண்டவரே, வருக யாதவரே, உங்களை அழைத்துவரும்படி ஆணை” என்றான். “என் பெயர் மிருகண்டன். பரசுராமரின் மாணவர்களில் ஒருவன். நீங்கள் வருவதாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து அவனை வணங்கி “மிருகண்டரே, எங்களை எதிர்பார்த்திருப்பீர்கள் என அறிவேன். நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது” என்றார். மிருகண்டன் முனிவன்போல் சடைத்திரிகள் தொங்கும் தோள்களும் அடர்ந்த தாடியும் கொண்டிருந்தான். மெலிந்த வெண்ணிற உடலில் நீல நரம்புகள் புடைத்திருந்தன.

“ஆசிரியர் இங்குதான் இருக்கிறாரா?” என்றான் யுயுத்ஸு. “இக்காட்டில் எங்கள் குருநிலை ஆயிரமாண்டுகளாக உள்ளது. முதலாசிரியர் இங்கே வருவது அரிது. சென்ற ஒரு மாதமாக இங்குதான் இருக்கிறார்” என்றான் மிருகண்டன். “சொல்லப்போனால் குருக்ஷேத்ரப் போர் தொடங்குவதற்கு முந்தையநாள் அவர் இங்கே வந்தார்.” யுயுத்ஸு அதை எதிர்பார்த்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். மிருகண்டன் அவர்களை பெரிதாக பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. புதர்களுக்கு அப்பால் பசுங்கொடிகள் படர்ந்து மண்மேடுகள் என்றே தோன்றிய குடில்கள் தெரியத் தொடங்கின. அவற்றிலிருந்து அடுமனைப்புகை எழுந்துகொண்டிருந்தது.

“தவக்குடிலின் மாணவர்கள் தேன் எடுக்கவும் உணவு சேர்க்கவும் ஊன் கொள்ளவும் காட்டுக்குள் சென்றுள்ளனர். கன்றுமேய்ப்பவர்களும் இனிமேல்தான் திரும்புவார்கள். இப்பொழுதில் குடில்வளாகம் அமைதியாகவே இருக்கும்” என்றான் மிருகண்டன். “இங்கே எத்தனை பேர் உள்ளனர்?” என்றான் யுயுத்ஸு. “எழுபது பேர்…” என்றான் மிருகண்டன். “இங்கே பொழுது மிக முன்னரே இருட்டிவிடும். ஆகவே அந்திப்பொழுதுக்கான வேள்விகளை தலைக்குமேல் பறவையோசைகள் அடங்குவதற்குள்ளேயே முடித்துவிடுவோம்” என்றான் மிருகண்டன். அவர்கள் குடில்வாயிலை நெருங்கியபோது உள்ளிருந்து கொம்போசை எழுந்தது. குடில்வாயிலுக்கு வந்த மாணவர்கள் மூவர் தலைவணங்கினர். அவர்களில் மூத்தவர் “பாண்டவருக்கும் யாதவருக்கும் நல்வரவு. என் பெயர் லிகிதன். உங்களை ஆசிரியரிடம் அழைத்துச்செல்ல அமர்த்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அந்தக் குடில்வளாகம் செங்குத்தாக எழுந்து செறிந்து நின்றிருந்த மூங்கில்மரங்களால் வேலியிடப்பட்டிருந்தது. குடில்வாயிலை கடந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த பலகைக்கு அடியில் நீரோடை ஒன்று ஒலித்து ஒளிர்ந்து சென்றது. லிகிதர் அவர்களுக்குரிய குடிலை காட்டினார். “நீராடி ஆடைமாற்றி ஆசிரியரைக் காண தாங்கள் வரலாம்” என்றார். யுயுத்ஸு “நாங்கள் இங்கே துரோணரின் மைந்தர் அஸ்வத்தாமனை சந்திக்கும்பொருட்டு வந்திருக்கிறோம். அவரை போருக்கு அறைகூவ இளைய பாண்டவர் அர்ஜுனன் விழைகிறார்” என்றான். “அவருடைய விழைவின்பேரிலேயே நீங்கள் வந்துள்ளீர்கள். அவரை நீங்கள் ஆசிரியர் முன்னிலையில் சந்திக்கலாம்” என்றார் லிகிதர். “அவர் எந்நிலையில் இருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. “போரிடும் நிலையில்தான்” என்றபின் லிகிதர் புன்னகைத்து தலைவணங்கினார்.

அவர்களை மிருகண்டன் அழைத்துச்சென்றான். குடில்கள் நடுவே ஓடிய ஓடையில் நீராடி குடிலுக்கு மீண்டு புதிய மரவுரிகளை அணிந்துகொண்டார்கள். அவர்களுக்கு மரக்குடுவைகளில் பழங்கள் இட்டு தேனும் பாலும் சேர்த்து சமைக்கப்பட்ட இன்கஞ்சி அளிக்கப்பட்டது. இளைய யாதவர் ஒரு சொல்லும் பேசவில்லை. அர்ஜுனன் தன் உள்ளே மிகவும் சென்றுவிட்டவன் போலிருந்தான். ஆனால் அவன் உடலென்றே மாறிவிட்டிருந்த காண்டீபத்தில் விரல்கள் ஓடிக்கொண்டே இருந்தன. யுயுத்ஸு ஒருவகையான திணறலை உணர்ந்தான். அங்கே எங்கோதான் அஸ்வத்தாமன் இருந்துகொண்டிருக்கிறார். ஏதோ இருண்ட குடிலுக்குள். தன்னந்தனிமையில். தனிமையில் அவர் பெருகியிருக்கக்கூடுமா அன்றி சிறுத்திருப்பாரா?

பரசுராமரின் குடில் அந்த வளாகத்தின் மையத்தில் இருந்தது. அது வட்டமாக கூம்பு என எழுந்த கூரையுடன் பெரிய கூடை எனத் தோன்றியது. பிருகுகுலத்தின் மழு முத்திரைகொண்ட கொடி மேலே பறந்துகொண்டிருந்தது. அவர்களை அழைத்துச்சென்ற மிருகண்டன் லிகிதரிடம் ஒப்படைத்துவிட்டு அகன்றான். லிகிதர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அந்தக் குடில் வட்ட வடிவிலிருந்தமையால் உள்ளே அத்தனை இடமிருக்கக்கூடும் என உணரமுடியவில்லை. உட்பகுதி வட்டமான பெரிய முற்றம் என்றே தோன்றியது. அதன் சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்ட பாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிலின் நடுவே கூரைக்கூம்பு முனையிலிருந்து தொங்கிய கொத்துவிளக்கு நூறு சுடர்கள் ஏற்றத்தக்கதாக இருந்தது. குடிலுக்குள் ஏழு சாளரங்களில் மூன்றினூடாக சாயும் ஒளி உள்ளே வந்து மென்மையாகப் பரவியிருந்தது.

அதன் மறு எல்லையில் மரத்தாலான மேடைமேல் புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். தூய வெண்ணிறமான குழல் தோளில் பரவியிருந்தது. வெண்ணிறத் தாடி மார்பில் விழுந்திருக்க முதுமையால் வளைந்த மூக்கு சிவந்து தெரிந்தது. ஆயினும் அவரை முதியவர் என எண்ண முடியவில்லை. சிறுவர்களுக்குரிய தெளிந்த விழிகளும் இளைஞர்களுக்குரிய முறுகிய தோள்களும் நரம்புகள் புடைத்த உறுதியான கைகளும் விரிந்த மார்பும் செறிந்தமைந்த வயிறும்தான் அப்படி எண்ணச்செய்கின்றன என யுயுத்ஸு உணர்ந்தான். அவர் மூவரில் எவரையும் பார்க்கவில்லை. மடியிலிருந்த ஏட்டுச்சுவடியை அப்பாலிருந்த சிறிய பீடத்தில் வைத்தார்.

லிகிதர் நின்று அவர்களை முறைப்படி அறிமுகம் செய்ய அர்ஜுனனும் யுயுத்ஸுவும் தலைவணங்கினர். அவர் அதை ஏற்றுக்கொண்டு இளைய யாதவரை நோக்கினார். இளைய யாதவர் தலைவணங்கவில்லை. அவர்களின் நோக்குகள் தொட்டுக்கொண்டன. மிக மெல்லிய ஒரு தலையசைப்பு பரசுராமரில் நிகழ்ந்தது. அல்ல, அவ்வாறு தோன்றும் ஓர் அசைவு விழிகளில் எழுந்தது. அல்ல, அவ்வாறு தோன்றும் முகநிகழ்வு. அதுகூட அல்ல, அது நிகழவே இல்லை. அது தன் உள்ளம் கொண்ட பதிவு. பிறிதொன்று நிகழ்ந்தது அவர்களுக்குள். அவன் இளைய யாதவரின் முகத்தை பார்த்தான். அங்கே எவ்வுணர்ச்சியும் இல்லை. மாறாப் புன்னகையுடன் என்றுமெனச் சமைந்திருந்தது அது. என்ன நிகழ்ந்தது? அவனால் அறியக்கூடாத ஒன்று. அறிந்தாலும் அறிந்த பிறிதொன்றாக அவன் எண்ணிக்கொள்வது.

பரசுராமர் “அமர்க!” என்றார். அர்ஜுனனும் இளைய யாதவரும் அமர்ந்துகொள்ள யுயுத்ஸு கைகட்டி அப்பால் நின்றான். பரசுராமர் “இங்கேதான் இருக்கிறார் துரோணரின் மைந்தர். அவர் விழைந்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம். உங்கள் வருகை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். யுயுத்ஸு “ஆசிரியரே, பாண்டவ மைந்தர்களை அவர் நெறிமீறி குடில்புகுந்து கொன்றார் என அறிந்திருப்பீர்கள். அரசநெறிப்படி அவரிடம் பழிநிகர் கொள்ள இளைய பாண்டவருக்கு உரிமை உள்ளது. அந்த அறைகூவலை அவருக்கு விடுக்கவே வந்துள்ளோம்” என்றான். பரசுராமர் புன்னகைத்து “இக்குருநிலை அறப்போருக்கு எப்போதும் எதிரானது அல்ல என அறிந்திருப்பீர்கள். வேதம் நிலைகொள்வதன் பொருட்டென்றால் அறம் கடந்து போரிடவும் இது தயங்கியதில்லை” என்றார்.

லிகிதர் உள்ளே வந்து தலைவணங்க அவரைக் கடந்து அஸ்வத்தாமன் உள்ளே வந்தான். லிகிதர் திகைத்து விலகினார். யுயுத்ஸு கைகளைக் கூப்பியபடி நகர்ந்தான். “யார் என்னை தேடி வந்தது?” என்றான் அஸ்வத்தாமன். அவன் காட்டாளன் போலிருந்தான். அழுக்கடைந்து கிழிந்த தோலாடை அவன் உடலில் நார்களாகத் தொங்கியது. உடலெங்கும் மண்ணும், சேறும், காட்டில் உதிர்ந்த மலர்ப்பொடிகளும், இலைத்துகள்களும், சிற்றுயிர்களின் இறகுகளும் படிந்திருந்தன. தலைமயிர் அதற்குள்ளாகவே சடைபோலாகி விழுதுகளாகத் தொங்கியது. தாடிமயிர்களும் நார்களாக ஆகிவிட்டிருந்தன. வலக்கையில் வில் வைத்திருந்தான். விழிகள் கலங்கி அலைபாய்ந்தன. “என்னை அறைகூவியவன் எவன்?” என்று அவன் கேட்டான். காட்டுவிலங்கொன்றின் உறுமல் போலிருந்தது அக்குரல்.

யுயுத்ஸு பேசமுற்படுவதற்குள் அர்ஜுனன் எழுந்து காண்டீபத்தை கையிலேந்தியபடி “நான், பாண்டவனாகிய பார்த்தன், உங்களை போருக்கு அறைகூவும்பொருட்டு வந்துள்ளேன். என் மைந்தரை நெறிமீறி குடில்புகுந்து துயிலில் கொன்ற பெரும்பழிக்கு நீங்கள் நிகர்செய்தாகவேண்டும், ஆசிரியர்மைந்தரே” என்றான். “நெறியா?” என்றபின் அவன் உரக்க நகைத்து “இவர்கள் இருவருக்கும் முன்னால் நின்று நெறியைப் பற்றியா பேசுகிறாய்? எவருடைய நெறி?” என்றான். “என் நெறி. என் அரசியின் சொல். அதையே நான் தலைக்கொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் என்னுடன் தனிப்போருக்கு வந்தாகவேண்டும். இறப்புவரை அப்போர் நிகழட்டும். இது என் அறைகூவல்.”

“அவர் சாவிலி என அறிவாயா?” என்றார் பரசுராமர். “ஆம், நான் பேசுவது என் சாவைப்பற்றி… இப்போரில் வென்றாலொழிய நான் மீளப் போவதில்லை” என்றான் அர்ஜுனன். “எனில் வருக, இப்போதே போரை நிகழ்த்துவோம். வருக!” என்றான் அஸ்வத்தாமன். பரசுராமர் “இல்லை, இந்தக் காட்டில் என்றால் எங்கள் நெறிகளின்படிதான் போர் நிகழமுடியும்… பொழுது எழுந்து பொழுது அணைவதற்கு நடுவேதான் போர் நிகழவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆசிரியரே, நீங்கள் வகுத்தளியுங்கள் பொழுதை” என்றான். “நாளை முதற்கதிர் எழும்போது” என்றார் பரசுராமர். “இக்காட்டிலுள்ள சுமஹரிதம் என்னும் புல்வெளியில்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். “ஆசிரியரே, நீங்களே நடுவராக அமைந்து போரை நிகழ்த்துக!” என்றார் இளைய யாதவர். புன்னகையுடன் “அவ்வாறே” என்றார் பரசுராமர்.

தலைவணங்கி அஸ்வத்தாமன் திரும்பிச் சென்றான். இளைய யாதவர் எழுந்துகொள்ள அர்ஜுனனும் உடன் எழுந்தான். அவர்கள் பரசுராமருக்கு தலைவணங்கி வெளியே நடந்தனர். அர்ஜுனன் மீண்டும் அத்தனிமையை சென்றடைந்தான். யுயுத்ஸு தலைகுனிந்து உடன் சென்றான். அவர்கள் முற்றத்தை அடைந்ததும் எதிர்பாராத தருணத்தில் அர்ஜுனன் “நில்… கீழ்மகனே நில்!” என்று கூவியபடி அஸ்வத்தாமனை நோக்கி ஓடினான். “நில்! நில்! இழிபிறவியே நில்!” அவன் மூச்சுவாங்க ஓடி அஸ்வத்தாமன் முன் சென்று நின்றான். “நீ அன்னை வயிற்றில் பிறந்தவன் என்றால் சொல், நீ என் மைந்தரை எண்ணி வருந்தவில்லையா? உன் கைகளால் அவர்களைக் கொன்றதைப்பற்றி ஒரு கணமேனும் துயர்கொள்ளவில்லையா? சொல்!” அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. காண்டீபத்தை கைகள் இறுகப் பற்றியிருந்தன.

யுயுத்ஸு அருகே செல்ல விழைந்தான். ஆனால் உடலை அசைக்க முடியவில்லை. இளைய யாதவர் புன்னகையுடன் வெறுமேனே நோக்கி நின்றார். “நீ கொன்ற மைந்தரின்பொருட்டு வருந்துகிறாயா?” என்றான் அஸ்வத்தாமன். அர்ஜுனன் தளர்ந்து “ஆம், ஒவ்வொரு கணமும் அனலில் என எரிகிறேன். வாழ்வதென்பது இத்தனை பெரிய துயராக ஆகிவிடுமென ஒருபோதும் எண்ணியதில்லை. நான் வாழ்ந்துகொண்டிருப்பதே மானுடருக்கு அமையும் கொடுநரகம்!” என்றான். “ஏனென்றால் நீ கொன்ற பின்னரே இத்துயரை அடைந்தாய்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நான் இத்துயர் அனைத்தையும் அடைந்து அதனூடாகக் கடந்துவந்து அவர்களைக் கொன்றேன்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்?” என்றான்.

“ஒவ்வொரு கணமும் அறிந்திருந்தேன். அதோ அவன் அறிந்திருப்பதுபோல் அறிந்திருந்தேன். அவன் முயன்றதுபோலவே நானும் முயன்றேன். ஆகவே அவனைப்போலவே நானும் பெருந்துயருடன் எஞ்சுகிறேன்” என்றான் அஸ்வத்தாமன். அவன் விழிகள் பித்தனின் விழிகளைப்போல அலைபாய்ந்தன. அர்ஜுனன் பெருஞ்சீற்றத்துடன் “இழிமகனே, என் மைந்தர்களின்பொருட்டு உன்னை வெல்வேன். உன்னை தீராப் பெருநரகிற்கு தள்ளுவேன். இது என் வஞ்சம்! என் மைந்தருக்காக! என் மூதாதையருக்காக! என் தெய்வங்களின்மேல் ஆணை!” என்று கூவினான். அஸ்வத்தாமன் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. ஒருமுறை இளைய யாதவரை நோக்கிவிட்டு அவன் திரும்பி நடந்தான். அர்ஜுனன் சீறலோசையுடன் அழுதபடி தலைகுனிந்து நின்றான்.

முந்தைய கட்டுரைவெக்கை, அசுரன், வன்முறை
அடுத்த கட்டுரைகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்