அமெரிக்கா- கடிதம்

புகைப்படங்கள்

ஜெமோ அவர்களுக்கு,

 

அதற்குள் ஒரு வாரம் கடந்து விட்டது. இருமை மனநிலை.. ஒவ்வொரு கணமும் நினைவில் இருப்பதாகவும், இல்லாததாகவும்.. ஊழ்கத்தில் ஒரு நொடியில் விரிந்துக்கொள்ளும் சொல்லை போல், அன்றாடம் உங்களை கைக்கருகில் வைத்திருந்த  எனக்கு, ராஜன் உதவியால் பட்டென்று திறந்துக்கொண்டது பல வருடங்களாய் ஆசைப்பட்ட உங்களோடு ஒரு பயணம். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிளம்பும் சிறுவனாய் புறப்பட்டிருந்தேன்.

நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியை தவற விட்ட முள் குத்திக்கொண்டிருந்தாலும், இன்னும் சில மணித்துளிகளில் உங்களை காணும் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தேன். வரும் வழியில் குறளினிது உரை சிந்தனை ஏனோ குறுக்கிட்டு கொண்டே இருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில்  இறங்கும் நிலையம்,அப்போது  ராலே தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் பேச போகும்  தலைப்பை ராஜன் அனுப்பிய போது விழிகளில் மெலிதான புன்னகை.  வெண்முரசின் குரலை நேரில் கேட்டதும், சில நிமிடம் என்னுள் மௌனம். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  குறளின் விளக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குறளை, குறள் போன்ற சூத்திர நூல்களை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற உரை புதிய சாளரத்தை பலருக்கு கண்டிப்பாக திறந்து வைத்திருக்கும். அலையென இழுத்து ஆழத்தில் செலுத்திக்கொண்டே இருந்தது கடல். ஜெயமோகன் மையத்தை சூழுந்த நான்கு திசைகள் நான்கு வருடங்கள் கடந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம். ஒரு நல்ல எழுத்து நல்ல நண்பனாய் மாறும் , சில நல்ல நண்பர்களையும்  அறிமுகம் செய்யவும் கூடும்.

அடுத்த நாள் காலை பயணம் என்ற எண்ணமே இரவென்று மாறியது. செல்லும் வழியில் விவேக் ஏறிக்கொள்ள, எண்ணற்ற  இந்திய பயணங்களை தவறவிட்ட ஏக்கங்கள்  நுரைத்த கனவு மெய்ப்பட களித்து  கொண்டிருந்தேன்.  தீவிர இலக்கிய படைக்கும் உங்களின் இன்னொரு முகமாக இருக்கும் நகைச்சுவை கட்டுரைகள் ஒரு உச்சம். அந்த உச்சத்தில் இருந்து ஒரு நொடி கூட இறங்கவில்லை இந்த பயணம் முழுதும்.  மதியம் வேல்முருகன் இல்லம், அடுக்கி வைத்த புத்தகங்கள் நடுவே ஒளிந்திருந்தது அவர்களின் வாசிப்பு. மாலை வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தில் வாசகரோடு கலந்துரையாடல். எல்லா பந்துகளும் பௌண்டரி லைன் க்கு வெளியே. கேள்வி கேட்பதில் இருக்க வேண்டிய முறைமையை

1. முழு கவனம்

2. எது எது சொல்லப் பட்டது, அதுவும் எவ்வாறாக சொல்லப்பட்டது

3. உதாரணங்களை மறுக்காது, கருத்தை மறுத்தல்

4, விவாத எல்லைகளை வரையறுத்து அதற்குள் நின்று பேசுவது

மதியம் வீட்டில் நடந்த உரையாடலில் சொன்னதை அப்படியே செய்முறை விளக்கமாய் மாலையில் அங்கே..

 

நல்லக் கூட்டம்,  பல  செறிவான கேள்விகள் என்று சிறப்பான பொழுது. அடுத்த நாள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அருங்காட்சியகம். உடன் வேல்முருகன், நிர்மல், விஜய் சத்யா என்று மேலும் சில தீவிர வாசகர்கள். வரலாற்று நுண்ணுணர்வு ஓரளவு என்னுள் விழ தொடங்கியதெல்லாம் உங்கள் எழுத்துளிகள் தொட்டதால் தான். ஆண்டான் அடிமையாக, அரைப்பிணமாக, கடல் தாண்டி, குடும்பம் சிதறி, ஆத்மாவில் அனல் அணையாது வாழ்ந்த சமூகத்தின் வலி ஓங்கி அறைந்தப்படி இருக்க..   உணவு இடைவெளியில் கூட உக்கிரமான உரையாடல்கள். வெயில் தாழ்ந்த வேளை, வாஷிங்டன் நினைவுத்தூண் சுற்றி ஒரு நடை.. புல்தரை மீதமர்ந்து இரவின் கால் நுனி படும் வரை இளகிய பேச்சுகள்… ஒரு பறவை பறப்பதை மற்றொரு  பறவை நோக்கிக் கொண்டிருந்தது

 

புதிதாய் ஒன்றைப்  பார்க்கும் போது  அதை நமக்கு அறிமுகமான ஒன்றோடு பொருத்திக் கொள்ளுவது மிக பிழையான ஒன்று என்ற உங்கள் வரி  “அறிவே அறிதலுக்கு தடை” என்ற   சொல்வளர்க்காடு ஆரண்யங்களை ஞாபகப்படுத்தியது. இவ்வாறு பல உரையாடல்களை உள் வாங்கிக்கொண்டபடி இருந்தேன்., பிறகு ஒரு நாள் அது தானே வெளிப்படும் வழியையும், தோற்றத்தையும் கண்டறியும்.

 

உங்களுடான என் பயணம் முடியும் வேளை நெருங்க நெருங்க சற்றே கலவரம். இருப்பினும், நிகழ்ந்தவைக்காக நன்றியும் மகிழ்ச்சியுமே மேலோங்கிருந்தது. சூரியனுக்கு பூமியோ, பூமிக்கு சூரியனோ புதியது இல்லை ஆனால் யாரோ சிலருக்கு அவை இரண்டுமே புதியது. மேலும் சில பயணங்களை  எதிர்நோக்கியப்படி இளைப்பாறுகிறேன் இந்த பயண நிழலில். .

 

வி.பி (வெங்கட பிரசாத்)

 

ப்ரிய ஜெமோ சார் அவர்களுக்கு

பார்வதிபுரமும் நீங்களும் ஒருவருக்கொருவர்  அன்போடு எதிர்நோக்கியப்படிருப்பீர்கள். சுமார் மூன்று வார பயணம் சட்டென்று முடிந்தது போலவே இருக்கிறது. திருமாலை வெளியே இருந்து தரிசிக்கும் அடியவர்களுக்கு சில சமயம் குலசேகரப்படிக்கு பக்கத்தில் வரை சென்று சேவிக்கும்  வாய்ப்பு கிடைத்தது போலத்தான் எங்களுக்கு. இன்னும் நிறைய பேசியிருக்கலாம், பல கேள்விகள் முன் தயாரிப்பு செய்திருக்கலாம், என் படைப்புகளை(?!) உங்களிடத்தில் காண்பித்து மோதிரக் கையால் குட்டு வாங்கியிருக்கலாம் :-) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  ஆனால் பட்டாம்பூச்சியின் சிறகுகள் படபடப்பு  காணும் போது ஊமையாகுதல் இயல்பே

 

இன்றைய காந்தி படித்துக் கொண்டிருக்கிறேன் – வெறுப்பு அரசியல் உடன் அவர் உரையாடல், வல்லபாய் படேல் தவிர்த்து நேருவை முன்னிறுத்தியது, பாகிஸ்தானுக்கு தார்மீக அடிப்படையில் கருவூலத்தில் பங்கீடு கொடுக்க செய்தது மிக முக்கியமாக மக்களை அரசியலில் பங்குபெற வைத்தது – காந்தியத்தின் சாசுவதமும், நடைமுறையில் அதுவே பலனை (குறைந்த இழப்புகள் இருந்தாலும்)தருவது என்ற சிந்தனையை, காந்தியின் நிறை குறைகளை கலப்படமில்லால் சொல்லி செல்வது. படித்து முடித்ததும், என் ஏழு வயது பெண்ணிற்கு காந்தியைப் பற்றி ஒரு மிக சிறந்த அறிமுகம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

அருகர்களின் பாதையும் உடன் படித்து வருகிறேன். பயணம் முடிந்த மனநிலையில் தொடங்கினேன். இந்திய பயயணங்கள், இமயமலை சாரல், குகைகளின் வழியே என்று ஒரு மெய்நிகர் உண்மை வரிசை இருக்கிறது.. பார்ப்போம்  தங்கள் இந்திய பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.. ஞானக்கூத்தன் அவர்களின் இந்த கவிதையோடு முடிக்கிறேன்

 

யாத்ரீகனுக்கு எதற்குக் காணிநிலம்?
என்றாலும் எனக்கும் ஒரு வீடுண்டு
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாமல்
தானே எழும்பியுள்ளது அந்த வீடு
எங்கும் இறக்கிவைக்காது
என் முதுகின்மேலே சுமந்து செல்வேன்
அந்த வீட்டை

 

எளியவன் நான்
என்றாலும்
வானம் என் தலைமீது
ஒரு பதாகை போல்
காற்று அப்பதாகை மீது
ஒரு மரக்கிளைபோல்
காலம் அம்மரக்கிளை மீது
ஒரு பறவைபோல்
வாழ்வு அப்பறவை மீது
ஒரு பாடல்போல்
மரணம் அப்பாடல் மீது
ஒரு வீடுபோல்

 

அப்பாடலும்
பூமியில் அஸ்திவாரம் கொள்ளாத தன் வீட்டை
எங்கும் இறக்கிவைப்பதில்லை
வெளியெங்கும் வியாபிக்கும் அப்பாடல்
பூமியின் சகலத்திலும் படியத் துடிக்கும்
பூமியில் அஸ்திவாரம்கொண்ட
சாத்தான் மற்றும் கடவுளின் வீடுகள் மீதும்!

 

 

– வி.பி (வி. வெங்கடபிரசாத்

 

முந்தைய கட்டுரைகீதை கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெக்கை, அசுரன், வன்முறை