அட்லாண்டாவிலிருந்து..

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

அட்லாண்டாவிலிருந்து நீங்கள் விடை பெற்றுச் சென்ற பின் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து வழக்கமான (சோம்பல், தயக்கம், வேலைப் பளு.. இன்ன பிற) காரணங்களால் தள்ளிப் போய் கடைசியாய் சமீபத்தில் ஆஸ்டின் சௌந்தர் ஆரம்பித்த ’விஷ்ணுபுரம் USA’ வாட்ஸாப் குழுமம் கொடுத்த உற்சாகத்தில் இரவு 11 மணிக்கு எழுத அமர்ந்து விட்டேன்!

 

 

நீங்கள் அட்லாண்டாவில் இருந்த மூன்று நாட்களும் ஒரு சில மணித்துளிகளேனும் உங்கள் அண்மையில் இருக்கவும் உங்கள் பேச்சைக் கேட்கவும் முடிந்ததில் அளவிலா மகிழ்ச்சி.. அந்த நினைவுகளை பல முறை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.. கூடவே உங்களுடன் அட்லாண்டா சுற்றிப் பார்க்க வர முடியாமல் போனதை நினைத்து வருத்தமும் வருவதைத் தடுக்க முடியவில்லை, அதிலும் குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தை உங்களுடன் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற முடியாமல் போனது தான் மிகப் பெரிய வருத்தம்.. ஆனால் எல்லாவற்றிற்கும் அதற்குரிய காலம் உண்டு என்ற நம்பிக்கை உள்ளதனால், அந்த மனவருத்தம் நீங்குமளவு உங்களுடன் இருக்கும் காலம் வரும் என்று ஆற்றுப் படுத்திக் கொள்கிறேன்.

 

உங்களைச் சந்தித்தில் எவ்வளவு மகிழ்ச்சியோ கிட்டத்தட்ட அதே அளவு மகிழ்ச்சி சகவாசகர்களைச் சந்தித்ததிலும் ஏற்பட்டது. அதிலும், ராலே ராஜன், ஆஸ்டின் சௌந்தர் போன்றோர் எவ்வளவோ சாதித்திருந்தும் உங்கள் வாசகர்கள் எனபதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டாமல் இருந்ததைப் பார்க்கும் போது, ’நிறை குடம் தளும்பாது’ என்று நம் முன்னோர் சும்மா சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன்! ஓரெகன் மதன், ராலே விவேக் போன்றோரின் வாசிப்பின் வீச்சு நான் இன்னும் இலக்கிய வாசிப்பில் தொடக்கப் புள்ளியிலேயே இருப்பதை எனக்கு உணர்த்தியது. அட்லாண்டா தாமோ அதிகம் பேசாமல், ஆனால் கண்களாலேயே அன்பையும் நட்பையும் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாய் எனக்குக் கிடைத்த நண்பர்! இன்னும் சில புதிய நண்பர்கள் சௌந்தர் அவர்களின் வாட்ஸாப் குழுமம் மூலம் அறிமுகமாகி வருகிறார்கள். கூடிய விரைவில் அமெரிக்காவில் ஒரு விஷ்ணுபுரம் இலக்கியக் கூட்டம் நடக்க ஒரு தொடக்கப் புள்ளியாக இந்தக் குழுமம் அமையும் என்று நம்புவோம்.

 

அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், அப்போது சற்றேனும் கூடுதல் வாசக அனுபவம் உள்ளவனாக உங்களைச் சந்திக்கவும் பிரபஞ்ச சக்திகளை வேண்டிக் கொண்டு இக்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

 

 

அன்புடன்,

சிஜோ

அட்லாண்டா.

புகைப்படங்கள் 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35
அடுத்த கட்டுரைவெக்கை,அசுரன்,பூமணி- கடிதம்