பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 6
தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு செல்வதற்குரியது. அரசகுடியினர் பிறரறியாது ஊர்வதற்குரிய மூடுதிரைகள் அமைக்கப்பட்டது. அதன் நுகம் தோல்பட்டையால் தளர்வுற தேருடன் இணைக்கப்பட்டிருந்தது. சகடங்கள் மையக்கூடத்துடன் நெகிழ்வாக பொருத்தப்பட்டிருந்தன. அடியில் வளைந்த ஏந்துவிற்களுக்கு நடுவே இழுத்துக் கட்டப்பட்ட தோல்பட்டைகளின் மேல் அதன் மேற்கூண்டு அமைந்திருந்தது. அதை தொட்டில் என்றே ஏவலர்கள் கூறினார்கள். வேர்களிலும் முழைக்கற்களிலும் ஏறி அமர்ந்து செல்கையில் அது படகென ஊசலாடியது. ஆனால் அதிர்வு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு செல்லாமல் தோல்பட்டை தடுத்தது.
காட்டுக்குள்ளிருந்து சிறிய சேற்றுப்பாதை வழியாக மையச்சாலைக்கு வந்து கங்கையிலிருந்து விலகிச்செல்லத் தொடங்கியதும் யுயுத்ஸு அத்தேரின் ஆட்டம் நுகத்தையே உலைப்பதாக இருப்பதை உணர்ந்தான். தொட்டில் இரு தூண்களிலும் முட்டியபடி ஊசலாட நுகம் அசைந்து புரவிகளின் ஒத்திசைந்த ஓட்டம் தடைபட்டது. புரவியின் விசையை குறைக்கலாமா என்றெண்ணி அவன் பின்னிருந்து ஆணை வரவேண்டுமென்று எதிர்பார்த்தான். இளைய யாதவரோ அர்ஜுனனோ எதுவும் சொல்லவில்லை என்று கண்டு சீரான விசையில் புரவியை செலுத்தியபடி திரும்பிப்பார்த்தான். தொட்டிலின் ஆட்டத்திற்கு தன் உடலை நிலைப்படுத்தும்பொருட்டு அர்ஜுனன் தூணைப் பற்றியிருந்தான். இளைய யாதவர் இரு கைகளையும் மார்பில் கட்டி அந்த ஆட்டத்தையே விளையாட்டென மாற்றி மகிழ்பவர் போலிருந்தார்.
யுயுத்ஸு “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கேட்டான். “முதலில் கிளம்பிச்செல்வோம். நாம் செல்வதை அனைவரும் அறியட்டும். உரிய முறையில் நாம் அவனை சந்திக்க முடியும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “மூத்தவரை தடுக்க வேண்டும். அவர் சென்று அஸ்வத்தாமன் முன் நின்றிருக்கக்கூடாது. அது ஒன்றே என் இலக்கு” என்றான். இளைய யாதவர் “அவர் தனிப் புரவியில் சென்றிருக்கிறார். அவரால் ஓடைகளை தாவ முடியும். ஒற்றை மரங்களின்மீதுகூட ஊர்ந்து செல்ல முடியும்” என்றார். “அவருக்குத் தெரியுமா அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்று?” அர்ஜுனன் கேட்டான். “நாம் எண்ணுவதையே பீமசேனனும் எண்ணுவார். நாம் கிளம்பியிருக்கும் செய்தி அஸ்வத்தாமனுக்கு தெரியும். தன்னை எவரும் தேடி வருவதை அறிந்த பின்பு அவன் மறைந்திருக்கமாட்டான். அது அவனுடைய இயல்புக்கு மாறானது. அவனே நம்மைத் தேடி வருவான்” என்றார் இளைய யாதவர்.
“அவன் மூத்தவரை எதிர்கொள்ளக்கூடாது. மூத்தவரால் அவனை எதிர்த்துப் போரிட இயலாது” என்று அர்ஜுனன் மேலும் சொன்னான். “இன்றைய நிலையில் அவனை எவரும் எதிர்த்துப் போரிட இயலாது. குருக்ஷேத்ரத்தின் போர்க்களத்தில் அவனை நாம் வென்றோமெனில் தெய்வத்துக்குரிய படைக்கலங்கள் எதையும் மானுடருக்கெதிராக எடுக்கக்கூடாது என்று அவன் நன்கு எண்ணியிருந்தான் என்பதனால்தான். இன்று அவ்வாறல்ல, அனைத்து நெறிகளையும் மீறி அமர்ந்திருக்கிறான். இன்றைய அஸ்வத்தாமனை எதிர்கொள்வதற்கு முக்கண் முதல்வனே மண்ணிறங்கி வந்தாகவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார்.
“என்ன சொல்கிறீர்கள்? வெல்ல இயலாதெனில் இப்போருக்கு நாம் ஏன் எழுகிறோம்?” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் இப்போருக்கு நாம் எழாமலிருக்க இயலாது” என்றார் இளைய யாதவர். “போருக்கெழ வேண்டாம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பீமசேனன் எழுந்தபிறகு ஒன்றும் செய்வதற்கில்லை. நமது இலக்கு இப்போது பீமசேனனை மறிப்பது மட்டுமே” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்ற அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “ஆனால் என் அகம் நிலையழிந்துள்ளது” என்றான். “நாம் பீமசேனனை மறிப்பதற்குள் அஸ்வத்தாமன் அவரை மறிக்கக்கூடாது. அதற்கு ஒரே வழி நம்மை நோக்கி அஸ்வத்தாமனை இழுப்பது” என்றார் இளைய யாதவர்.
“ஆம்” என்ற பின் அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஒருவேளை அவனுடைய அம்பால் நான் கொல்லப்படுவேன் போலும். எனில் அதுவும் நன்று. பெருமைக்குரிய இறப்பு அது. இத்துயரிலிருந்தும் நிலையழிவிலிருந்தும் அவ்வண்ணம் விடுதலை அமையும் எனில் அதுவும் நன்றே” என்றான். யுயுத்ஸு மீண்டும் திரும்பிப்பார்த்தான். இளைய யாதவர் அவனை நோக்கி மீண்டும் புன்னகைத்தார். யுயுத்ஸு விழிகளை திருப்பிக்கொண்டான். அவன் உள்ளம் ஒரு கணம் சற்றே விலகி அச்செயலை விந்தையாக்கிக் காட்டியது. பாரதவர்ஷத்தின் மாவீரனுக்கு அவன் தேராளியாகச் செல்கிறான். அவனை வெல்லும் மாவீரனுடன் போரிட. பெருந்தேராளி தேரில் அமர்ந்திருக்கிறான். சூதர்கள் பாடவேண்டிய தருணம். ஆனால் சூதர்கள் பாடிப்பாடி சலித்துவிட்டார்கள். சொல் தீர்ந்து உளம் அமைந்துவிட்டார்கள்.
“நமது தேர் விரைவதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “இன்னமும் காடுகளில் அவர்களின் ஒற்றர்கள் இருக்கக்கூடும். அவர்கள் உறுதியாக அஸ்வத்தாமனிடம் அனைத்தையும் கூறுவார்கள். ஐயமே தேவையில்லை” என்றார். சலிப்பு தெரிந்த குரலில் “அவர்கள் மூத்தவர் செல்வதையும் சொல்லக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவன் நம்மை தெரிவு செய்தாகவேண்டுமென்பதில்லை. இன்றைய நிலையில் அவனுக்கு அந்த நெறியே இருக்க வாய்ப்பில்லை. மூத்தவரைக் கொன்றுவிட்டு நம்மை எதிர்கொள்ளலாம் என்று எண்ணினானென்றால்…” இளைய யாதவர் “நன்று எதிர்பார்ப்போம், அதுவன்றி ஒன்றும் நாம் செய்வதற்கில்லை” என்றார்.
பின்னர் நெடும்பொழுது அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தேர்ச்சகட ஓசையே கேட்டுக்கொண்டிருந்தது. அர்ஜுனன் “யாதவரே, அவனிடம் இருக்கும் மிகப் பெரிய அம்பு எது?” என்றான். “அதை பிரம்மசிரஸ் என்கிறார்கள். அழிக்கும் ஆற்றலில் அதுவே முதன்மையான அம்பு. படைப்பிறைவனின் தலை என்று அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். சில கணங்களுக்கு பின் உரக்க நகைத்து “அப்பெயரிட்டவன் கவிஞன். பெரும்பாலான தருணங்களில் போர்க்கலையிலேயே மெய்யான கவிதை திகழ்கிறது” என்றார்.
“நகைக்கும் தருணமல்ல இது!” என்று உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான். தேரின் ஆட்டத்தில் அவன் குரல் அசைந்து முதுமை கொண்டதுபோல் தோன்றியது. இளைய யாதவரின் குரலோ அதே அசைவினால் துள்ளிவிளையாடும் குழந்தையின் குரலென்றாகியது. “அம்புகள் களிப்பாவைகள். பாவைகள் குழந்தைகளுக்குரியவை. சிரித்து மகிழ்வதற்குத் தகுந்தவை” என்றார் இளைய யாதவர். “ஊழித்தொடக்கத்தில் பிரம்மனின் தலைகள் ஐந்து என்பதை அறிந்திருப்பாய்.” “ஆம், நான்கு திசைகளுக்கும் ஒன்று. விண்ணோக்கியது ஐந்தாவது தலை” என்றான் அர்ஜுனன். “இது பராசர சம்ஹிதையிலுள்ள தொல்கதை” என இளைய யாதவர் சொன்னார். “முன்பு பிரம்மனுக்கு முகமோ வடிவோ இருக்கவில்லை. ஓங்காரமெனும் ஒலியாக அவன் விண்பொருளில் இருந்து எழுந்தான். ஓங்காரத்தை தன் சித்தத்தால் ஒளியென்று ஆக்கிக்கொண்டான். அவ்வொளியாலான உடல்கொண்டிருந்தான்.”
ஓங்காரம் அவனில் உறைந்தமையால் அவனில் ஆணவம் குடியேறியது. ஆணவம் தன்னை தான் பெருக்க விழைவது. தன்னைப் பெருக்கவேண்டுமென்றால் தனக்கொரு வடிவம் வேண்டும். ஆகவே அவன் விண்விரிந்த நீரில் தன் முகத்தை தானே நோக்கினான். ஒளியை விழிகளாகவும் ஓங்காரத்தை நாவாகவும் கொண்டு அவனுக்கு முகம் அமைந்தது. தன் ஆணவத்தை விரித்து விரித்து முடிவில்லா வண்ண வேறுபாடுகளாக ஆக்கி அவன் படைப்பை பெருக்கலானான். தன் அழகின் ஆயிரம்கோடி வடிவங்களை சமைத்தான். தன்னை தான் காமுறும்பொருட்டு தனக்கு எதிர்த்தன்மை கொண்ட தன்னை படைத்துப் பெருக்கினான். அவை பெண்ணென்று ஆயின. முடிவிலா அழகுகொண்ட அவ்வுருவை சதரூபி என்னும் பெண் என வகுத்தான்.
சதரூபியின் அழகைக் காண அவன் நான்கு திசைகளுக்கும் முகம் கொண்டான். விழிபெருக்கினான். நோக்கும்தோறும் பெண் அழகு கொள்கிறாள். அழகு கொள்ளும்தோறும் மாயம் கொள்கிறாள். அவள் அவனுடன் விளையாடினாள். அவன் தலைக்குமேல் சென்று மறைந்தாள். அவளை நோக்கும்பொருட்டு அவன் விண்நோக்கி ஒரு விழியை அடைந்தான். அவ்விழியால் அவன் கண்டது முடிவிலா வெறுமையை. திசைதிசையென பெருகும் பொருள்வெளியின் மையத்தில் அவ்வெறுமை இருப்பதைக் கண்டு அவன் திகைத்தான். இப்பொருட்கள் அனைத்தையும் ஆள்பவன் நான். வடிவங்களையும் வண்ணங்களையும் நிலைகளையும் செயல்களையும் இயல்புகளையும் வகுப்பவன். இவை என்றும், இவையல்ல என்றும், இவையென்று ஆகாத ஒன்று என்றும் அங்கு நின்றிருக்கும் அவ்வெறுமைதான் என்ன? அதை நிகழ்த்துபவன் எவன்? அந்த வினாவே அவனை ஆட்கொண்டது.
தன் நான்கு திசைமுகங்களையும் செயலற்றதாக்கி ஐந்தாவதையும் விழி மூடி ஊழ்கத்திலமிழ்த்து அவன் அப்பேராற்றலைக் கண்டான். ஒருகணம் ஆக்கத்தின் பேரெழிலும் மறுகணம் அழிவின் கொடுந்தோற்றமுமென அது மாறி மாறி திகழ்ந்துகொண்டிருக்க அதை நோக்கி அறைகூவினான். “இவையனைத்தையும் படைத்தவன் நானென்பதால் இவற்றுக்கு மேல் முழுதாளுமை எனக்கே உரியது. அவள் எனக்குரியவள். என்னிடம் அவளை அளியுங்கள்” என்றான். “அவள் உன்னிலெழுந்தவள். எனவே உன் மகள். அவள்மேல் நீ காமம் கொள்ளலாகாது” என்றது விண்விரிவு. “படைப்பவன் எவனும் தன் படைப்பின்மேல் முதல் பெருவிழைவு கொண்டவன். அவ்விழைவு அவன் தன்மேல் கொள்ளும் விழைவின் பெருந்தோற்றம். அதிலிருந்து எவரும் ஒழிய இயலாது” என்று பிரம்மன் சொன்னான்.
“எனில் உனக்கு நிகரான ஒன்றைப் படைத்து இங்கு விடுக! அது அவளை அடையட்டும். அவர்கள் முயங்கி பெருகி முடிவிலிவரை செல்லட்டும். நீ அவளை அடைய இயலாது. அது இந்நெறியின் அடிப்படைக்கு எதிரானது” என்றது வெறுமை. “அவளை இங்கே விடுக… அன்றி என்னிடம் போர்புரிக!” என்று பிரம்மன் அறைகூவினான். வெறுமை அவனை நோக்கி புன்னகைத்தது. அங்கிருந்து குரல் எழுந்தது “மைந்தா, நாங்கள் இருக்கும் முடிவிலா காலத்தின் ஒரு கணமே நீ. ஏனெனில் பொருட்கள் அமைந்திருப்பது முப்பட்டை என பிரியும் பிளவுண்ட காலத்தில் என்று அறிக! முடிவிலியோ வெறுமையிலேயே அமைய இயலும்.”
“எனில் இவையனைத்தும் வெறுமையிலிருந்து பிறந்தவையா? இவையனைத்தும் வெறுமையை சென்றடைகின்றனவா? வெறுமையிலிருந்து வெறுமைக்கு செல்லும் ஒரு பழியிலிருக்கும் இச்சிற்றலைதானா இப்படைப்புலகம்? இதன் பொருட்டுதான் நான் இங்கு நான்முகம் கொண்டெழுந்து கலையென்றும் சொல்லென்றும் திகழ்ந்துகொண்டிருக்கிறேனா?” என்று பிரம்மன் சீறினான். “ஆம், ஆனால் அதன் முழுப்பொருளென்ன என்று நீ அறியமாட்டாய். படைப்பதொன்றே உன் தொழில். படைப்பு நோக்கத்தை அறியும் உரிமை உனக்கில்லை. எப்படைப்பாளிக்கும் அந்நோக்கு இருக்கலாகாது” என்று அக்குரல் கூறியது. “நீ படைத்த ஒன்று எவ்வண்ணம் வெறுமையை அடைந்து உன்னுடன் விளையாடுகிறது என நீ உணரவில்லையா? உன்னை அது எவ்வண்ணம் வெல்லமுடியும் என நீ எண்ணியதே இல்லையா? உன்னிடமிருந்து பிறந்தவை உன்னை வெல்கின்றன. ஏனென்றால் அவை மாயை. மாயை மெய்யிருப்பை விட பெரியது” என்றது விண்முழுமை.
“என்னிலிருந்து எழுந்தவை என்னை ஆளவியலாது. நான் அவற்றை முழுமையாக வெல்வேன். அவற்றை என் மறுபகுதி என்றே கொள்வேன். இதோ நான் என் படைப்பியக்கத்தை நிறுத்துகிறேன். அதை வெல்லாமல் நான் இனி படைக்கப்போவதில்லை!” என்று கூறி தன் நான்கு விழிகளையும் மூடி ஐந்தாவது விழி திறந்து அமைந்திருந்தான் பிரம்மன். “என் முன் எழுக அவ்வெறுமை! அதன் பின்னரே இங்கு படைப்பு எழும். இது உறுதி” என்றான். படைப்பு நின்றுவிட்டமையால் புடவிநெறி பிறழ்ந்தது. ஆயிரம் பல்லாயிரம் யுகங்களுக்குப் பின் விண்ணகம் கனிவுகொண்டது.
கடுவெளி வெறுமையிலிருந்து நீலச்சுடரென திரண்டெழுந்து, வெண்பிறை சூடி, மூவிழிகொண்டு, அனலாடை அணிந்து, உடுக்கும் மழுவும் மானும் சூலமும் ஏந்தி பேருரு ஒன்றெழுந்தது. “வணங்குக என்னை! முடிவிலியை வணங்குக!” என்று அப்பெருங்குரல் ஒலித்தது. “நான் அறைகூவுகிறேன்! என்னிடம் போர்புரிக! அன்றி என் படைப்பை என்னிடமே அளித்துவிடுக!” என்று பிரம்மன் சொன்னான். “நீ இருக்கும் காலத்திற்கு வந்து உன்னுடன் போர்புரிய என்னால் இயலாது. நான் பெருவெளி” என்றது அவ்வுரு. “எனில் என்னை பெருவெளியாக்குக! அன்றி நீ இக்காலத்திற்குள் வந்து நின்று என்னிடம் போர்புரிக!” என்று பிரம்மன் அறைகூவினான்.
அப்பெருவெளி அவன் முன் ஒரு மலைவேடன் வடிவில் தோன்றியது. நெற்றியில் எழுந்த அனல்விழி. கைகளில் முப்புரிவேல். அவன் அவ்வேடனுடன் போரிட்டான். திசைகள் இடிபட, விண்ணகம் எதிரொலிக்க அப்போர் நிகழ்ந்தது. போரின் முடிவில் தன் கையால் பிரம்மனின் ஐந்தாம் தலையை திருகிப் பறித்து எடுத்தான் வேடன். ஐந்தாம் தலை அகன்றதும் திகைத்து நான்கு தலைகளும் விழி திறந்தன. இறைவனைக் கண்டு பணிந்தன. மீண்டும் படைப்பியக்கம் தொடங்கியது.
பிரம்மசிரஸ் இப்படைப்பியக்கத்தின் மறுபக்கம் என்று உணர்க! நான்கு திசைகளும் இத்துலாவில் ஒரு தட்டில் அமையுமெனில் மறுதட்டில் அமைவது அது. நான்கிலும் கலந்திருக்கும் வெறுமை தனித்தெழுந்தது. இங்கிருக்கும் அனைத்து ஆக்கங்களுக்கும் உள்ளே அழிவென அமைந்திருப்பது. அன்று தன் தலையை இழந்த பின்னர் பிரம்மன் தன் படைப்பில் உறைந்திருக்கும் அழிவை காண முடியாதவனானான். தன் படைப்பை என்றென்றும் வாழ்வதென்று எண்ணிக்கொண்டான். அழிவின்மை நோக்கி செல்லும் முடிவின்மைகளாகவே ஒவ்வொன்றையும் தன்னுள்ளிலிருந்து எடுத்தான்.
பார்த்தா, இப்புவியில் கலையென, காவியமென, உலகியல் பொருள் என ஒவ்வொன்றையும் படைப்பவர்கள் அனைவருமே அந்த மாயையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்றென்றுமாக! எக்காலத்திற்குமாக!’ என்று அவர்கள் வெறிகொள்கிறார்கள். ‘நிலைகொள்க! நிலைகொள்க!’ என உச்சரித்துக்கொள்கிறார்கள். அந்த மாயை இல்லையேல் இங்கு படைப்பில்லை. படைப்பில் முழுமையை வேண்டி தவம் செய்யவைப்பது அதுதான். முழுமையென ஒன்றை கற்பனை செய்துகொள்ள வைப்பது அதுவே. என்றுமிருக்கும் கலை எனும் சொல் அளிக்கும் ஊக்கமே இங்கு நீ காணும் அனைத்தையும் படைத்தது என்று உணர்க! என்றுமிருப்பது என்று ஒன்றில்லை என்ற அறிவின் துளி எழுகையில் கலைஞனின் கை தழைகிறது. பிரம்மன் இன்று வரை சலிக்கவில்லை. பிரம்மனின் ஆணவம் பிறிதொரு விசையாக எழுந்தது. அதுவே ஆண் என அமைந்து சதரூபியை வென்றது. அவள் ஆக்க அவன் அழித்தான். அவனிடமிருந்து துளி எடுத்து அவள் மீண்டும் ஆக்கினாள். முடிவிலாத அந்த ஆடல் நிகழ புடவி பெருகியது.
“அந்த ஐந்தாம் தலை கிராதனென அமர்ந்த மூவிழியனின் கையில் ஒட்டிக்கொண்டது என்பார்கள். அதை திருவோடென ஆக்கி அவன் இல்லந்தோறும் இரந்தான். ஒருபோதும் நிறையாத பிச்சைக்கலமென அவன் கையில் அமைந்திருக்கிறது அது. ஏனெனில் அது வெறுமை. இப்புவியனைத்தையும் செலுத்தினாலும் சென்றடையாத அடியிலியின் திறப்பு. இப்புடவிகள் அனைத்தும் சென்று மறையும் கரும்பெரும் சுழி” என்றார் இளைய யாதவர். “பழியும் பெருமையும், நன்மையும் தீமையும், கீழ்மையும் தவமும், இருளும் ஒளியும் அதனுள் சென்று மறைந்துகொண்டிருக்கின்றன. உலகுக்கு அளிக்க விரிந்த அருட்கை கொண்டவனின் மறுகையில் கொடு கொடு என நீண்டிருக்கிறது அந்தக் கலம்.”
அர்ஜுனன் “அந்த அம்புக்கு அப்பேரிட்டவர் எவர்?” என்றான். “அது இங்கிருக்கும் அனைத்துப் பொருளிலும் உறையும் அழிவை மட்டுமே தான் எடுத்துக்கொண்டது. எப்பொருளையும் அது உடைத்து அழிப்பதில்லை. அப்பொருளிலேயே உறையும் அழிவை தூண்டி விடுவதே அதன் வழி. ஒவ்வொரு சதுரத்தையும் அது சென்று தொட்டதுமே வடிவிழந்து வட்டமென்றாகும் என்பார்கள். வட்டம் மையம் என்றாகும். மையம் இன்மையென்றாகும். இங்குள்ள ஒவ்வொன்றுக்குள்ளும் அதன் அழிவு என்ன என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வழிவின் தாழ்விசையை ஆக்கத்தின் எழுவிசையொன்று அழுத்தி ஆள்கிறது. அந்த அம்பு அந்த அழிவின் விசையை மேலெழச் செய்கிறது. ஆகவே ஒவ்வொன்றும் அழிவை நோக்கி செல்கின்றன. கருவிலேயே மானுடரில் சாவுக்கான விழைவு உறைகிறது. அது சென்று தொட்டால் கருக்குழவி தன்னை குருதிக்குழம்பல் என தானே கலைத்துக்கொள்ளும். ஆகவேதான் அதற்கு பிரம்மசிரஸ் என்று முனிவர்கள் பெயரிட்டனர்” என்றார் இளைய யாதவர்.
நெடுங்காலம் முன்னர் பரசுராமரிடமிருந்தது அந்த அம்பு. அவர் அதை எவர் மேலும் தொடுக்கவில்லை. ஏனெனில் படைப்புக்கு எதிரானது அச்செயல். அதை தொடங்கிவிட்டவன் பிரம்மனுக்கு நிகர் நின்று உலகை அழிப்பவன். அதன்பின் முடிச்சுகள் விழும்போதே அவிழும் ஒரு வீண்செயலென்றாகும் இப்புடவி. அவ்வண்ணம் ஒன்று உண்டு என முனிவர் எவரோ சொல்லக் கேட்டு அஸ்வத்தாமன் அறிந்தான். அதை பெற்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்து முக்கண்ணனை இறைஞ்சி தவம் செய்தான். ஏழாண்டுகள் பாஞ்சாலத்திற்கு அப்பால் இமையமலை அடிவாரத்திலிருந்த சூரியதாபம் எனும் மலைமுடி மேல் அமர்ந்து அவன் செய்த தவத்தால் கனிந்து முக்கண் இறைவன் இறங்கிவந்தான்.
அனலில் தோன்றி “நீ கோருவதென்ன, பாஞ்சாலனே?” என்றான். “உன் கையிலமைந்த அந்தத் திருவோடு எனக்கு அம்பென வரவேண்டும்” என்று அஸ்வத்தாமன் இறைஞ்சினான். “இது முற்றழிப்பது. வெறுமையின் வடிவான ஐந்தாவது முகம் இது. நாற்திசை மையம். இதை மானுடர் ஏந்தலாகாது” என்றான் மூவிழியன். “இதை ஏந்தும் பொருட்டு நான் விண்ணவனாகிறேன். எந்நிலையிலும் என் புகழுக்காகவோ வெற்றிக்காகவோ இதை எதிராக செலுத்தமாட்டேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எனில் இது உனக்கு எதற்கு?” என்றான் சிவன். “இதை நான் பெற்றேன் எனும் தருக்குக்காக. இங்குள அனைத்தையும் என்னால் அழிக்க இயலுமென்றாலும் என் அளியால் இவற்றை அழிக்கமாட்டேன் எனும் நிறைவுக்காக.”
“வென்றவனின் இரக்கமே தேவர்களுக்குரியது என்பார்கள். அது என்னை விண்ணேற்றட்டும்” என்று அஸ்வத்தாமன் கேட்டான். புன்னகைத்து “ஆகுக!” என்றுரைத்து அந்த அம்பை அவனுக்களித்து மீண்டான் கைலாயன். தொல்சூதர் கதையில் இருந்து பராசர சம்ஹிதைக்குச் சென்றது இது. தொல்நூல்கள் எதிலிருந்தேனும் அவன் அந்த அம்பை எடுத்திருக்கக்கூடும். அல்லது அவன் தந்தை அவனுக்கு அளித்திருக்கலாம். அவர் அதை தன் தந்தையிடமிருந்து பெற்றிருக்கலாம். பரத்வாஜரின் குருநிலை தொன்மையானது. ஆக்கத்தின் வழியறிந்த அவர்கள் அழிவின் நெறியும் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.”
“யாதவரே, அந்த அம்பு தன் உறையிலிருந்து ஒரு போதும் எழலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்த அம்பு எழலாம். அதற்கு நிகராக நின்றிருக்கும் அம்பொன்று உன்னிடம் உள்ளது. இந்திரனின் வஜ்ரரேதஸ் என்னும் அம்பு” என்று இளைய யாதவர் சொன்னார். “உன் தந்தையால் உனக்கு அருளப்பட்டது அது.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “அது பாலையில் மழைபெருகச் செய்யும். பட்டமரம் தளிர்க்கவைக்கும். மலைகளை பூக்குவைகளாக ஆக்கும். அது சென்று தொட்ட இடமெங்கும் வசந்தம் எழும்…” என்றார் இளைய யாதவர். “இங்குள அனைத்திலும் காமமென்று திகழ்வது அது. சிறு புழுவை பிறிதொரு புழு நோக்கி இழுப்பது. மதயானைகளை மத்தகம் முட்டிக்கொள்ளச் செய்வது. குன்றாப் பெருவிசை. பார்த்தா, இங்கு ஒவ்வொரு கணமும் இறப்பை வென்றுகொண்டிருப்பது காமமே. அழிவனைத்திற்கும் நிகர் அது ஒன்றே. வலிகள் அனைத்தையும் கடந்துபோகும் பேரின்பம் பிறிதொன்றல்ல. அதை முன்வைத்து நீ போரிடுக!” என்றார்.
“களத்தில் ஒருமுறைகூட அதை எடுக்கும்படி நீங்கள் சொல்லவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அந்த அம்பை உன்னிடமிருந்து எடுத்துச் செலுத்தும் அக்கணம் நீ காமமற்றவனாவாய்.” அர்ஜுனன் உள எழுச்சியுடன் “நான் விழைவது அது ஒன்றே. இதுநாள் வரை என்னை ஆட்டிப் படைக்கும் இந்த மூலவிசையிலிருந்து வெளிவர விரும்புகிறேன். போதும். செயல்விசை என்றும் விழைவென்றும் வெற்றிவிடாய் என்றும் என்னை இது தூக்கிச் சுழற்றியது” என்றான். “ஒன்று உணர்க! மூலாதாரத்தில் சிறு சுருள்நாகம் என உறையும் அது எழுந்து பிற தாமரைகளுக்குச் சென்றுவிட்டாலொழிய காமத்தை துறப்பது எவராலும் இயல்வதல்ல. உன் குண்டலினி இன்னமும் முற்றெழுந்து தன்விசை அழியவில்லை. நான் உன்னிலிருந்து அதை எழுப்ப இயலும். உன் மூலக்கனல் எழுந்து நாபியில் நெஞ்சில் நாவில் விழிகளில் திகழ்கையில் முற்றிலும் காமமற்றவனாவாய்.”
“அறிக, அது மீளமுடியா பயணம்! அதன் பின்பு இப்புவியில் உனக்கு ஐம்புலன்களின் இன்பங்களும் இல்லை. காவியத்தில் இனிமையில்லை. கலைகளில் அழகில்லை. மலர்களும் மழலைகளும் பெண்டிரும்கூட உன் கண்களுக்குமுன் அழகு கொள்ளமாட்டார்கள். இங்கிருக்கும் எதனுடனும் உனக்கு தொடர்பிருக்காது. சூழ்ந்திருக்கும் அனைத்தும் விலகி மாபெரும் ஓவியத்திரைச்சீலை என்றாகும். நீ அப்பால் நின்று வெறுமனே அதை பார்த்திருக்கவே இயலும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் அவரை நோக்கி கைகூப்பி “ஆசிரியனே, என்னை எழுப்புக! என் வில்லுடன் சென்று நான் நிற்கிறேன். அவனை எதிர்கொள்கிறேன்!” என்று சொன்னான்.