‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 5

யுயுத்ஸு துயில்கொண்டுவிட்டான். என்ன, துயில்கிறோமே, அரசர் ஆணையிட்ட பணி எஞ்சியிருக்கிறதே என அவன் அத்துயில் மயக்கத்திற்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தான். அவன் பிடியிலிருந்து சித்தம் நழுவி நழுவிச் சென்றுகொண்டிருந்தது. மெல்ல அவனை நோக்கும் விழிகள் பிறருடையவை ஆயின. அவன் உடல்மேல் அந்நோக்குகள் பதிந்திருந்தன. விழிகளே தன்னை அலைக்கழிக்கின்றன. நோக்கும் விழிகள், விலகிக்கொள்ளும் விழிகள். ஒரு விழி மின்னி மறைந்தது. அருகணைந்து அகன்ற பின்னரும் அது எவருடையதென்று அறிய முடியவில்லை. அவ்வினாவே கரைந்தழிய அவன் தான் துயில்வதை தானே உணர்ந்துகொண்டிருந்தான்.

அஸ்தினபுரியில் என்றும் அவன் ஒரு தத்தளிப்பையே பிறருக்கு அளித்தான். சூதன், ஆனால் பேரரசரின் அன்புக்குரிய மைந்தன். அரசரால் தம்பியரில் ஒருவனாகவே எண்ணப்பட்டவன். ஆகவே இளவரசன். அவனிடம் எப்படி நடந்துகொள்வது என அந்தணரும் ஷத்ரியரும் வைசியரும் குழம்பினர். அவனுக்கு அவர்கள் மதிப்பளித்துப் பணிகையில் உடனிருப்போர் உள்ளங்களை எண்ணி அடையும் தவிப்பு அவர்களின் விழிகளில் வந்து மறைந்தது. இன்னொருவர் வணங்குகையில் அவர்கள் விழிகளில் இளிவரல் துளியிலும் துளியாக மின்னியது. அந்த முதற்கணக் குழப்பத்தை இறுதிவரை அவர்கள் கடக்கவே இல்லை. விழிகளில் அதை முதற்கணமே பார்த்துவிடும் வழக்கத்திலிருந்து அவன் மீளவும் இல்லை.

அஸ்தினபுரியின் அத்தனை விழிகளிலும் அது இருந்தது, அதை பொறாமை என்றோ, ஏளனம் என்றோ, அச்சம் என்றோ சொல்லமுடியும். விழிகளினூடாக அவன் சென்றுகொண்டிருந்தான். இயல்பாக அஸ்தினபுரியின் புதிய கோட்டைக்காவல்பெண்ணின் விழிகளை நினைவுகூர்ந்தான். போருக்குப் பின் அவன் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவள் அவனை எதிர்கொண்டாள். புரவியை தொலைவிலேயே காவல்பெண்டுகள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்களுக்கு அவன் எவர் என முதலில் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய குதிரையிலிருந்த இலச்சினையைக் கண்டமையால் அரசகுடியினன் என எண்ணினர். ஆகவே அவளுக்கு செய்தி தெரிவித்தனர்.

அவள் குறுகிய கோட்டைப்படிகளில் சிறிய வரையாட்டுக்குட்டி என இயல்பாக நடந்து இறங்கினாள். அந்தப் படிகளில் அன்றாடம் நூறுமுறை ஏறியிறங்கினாலொழிய அந்த நிலைக்கோள் அமைவதில்லை. சிறிய உடல் மேலும் மெலிந்து சிறுமியைப் போலவே இருந்தாள். கூரிய முகம், கூரிய மூக்கு. சற்றே பொன்மின்னும் கூந்தல். “வணங்குகிறேன், இளவரசே” என்றாள். அவன் அவள் விழிகளில் இருந்த அச்சமின்மையை நோக்கியபடி “நான் யுயுத்ஸு” என்றான்.

அவள் விழிகளில் எந்த மாறுதலும் உருவாகவில்லை. “பொறுத்தருள்க இளவரசே, நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்” என்றாள். அவன் அவள் விழிகளையே நோக்கியபடி “நான் போருக்குப் பின் இப்போதுதான் உள்ளே நுழைகிறேன்” என்றான். “அஸ்தினபுரிக்கு இப்போது இந்திரப்பிரஸ்தத்தின் தூதனாக வந்திருக்கிறேன்.” அவள் விழிகளில் ஏதேனும் மாறுதலை அவன் எதிர்பார்த்தான். அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொருவர் விழிகளிலும் எழும் ஒன்று. அதன் முதல் தீண்டல். அவன் அந்நகரைவிட்டுச் செல்கையில் அவனுக்குப் பின் அவை நச்சுமுள்காடு என செறிந்திருந்தன. அவள் விழிகள் சிறுமியின் விழிகள்போல் மாறாத கள்ளமின்மையுடன் இருந்தன. அவன் புன்னகையுடன் “என்னை சூதர்கள் விபீஷணன் என்கிறார்கள்” என சேர்த்துக்கொண்டான்.

அவள் “ஆம்” என்றாள். அது அவனை திடுக்கிடச் செய்தது. எனில் அவளுக்கு அனைத்தும் தெரியும். அது அறியாமையின் கள்ளமின்மை அல்ல. “ஆனால் இன்று இங்கே எவரும் அதையெல்லாம் எண்ணவில்லை. போர் அனைவரையும் நெடுந்தொலைவு கொண்டுவந்துவிட்டிருக்கிறது. போருக்குப் பின் நகர்க்குடிகள் பெரும்பாலானவர்கள் விட்டுச்சென்றுவிட்டனர். இங்கிருப்போருக்கு இன்று கடந்தகாலமே இல்லை என தோன்றுகிறது.” அவன் அச்சொற்களால் ஆறுதல் அடைந்தான். அவளிடம் அவன் எதிர்பார்த்ததே அச்சொல்தான். அதை அவள் அறிந்திருக்கிறாளா? அறிந்தே அதை சொன்னாள் என்றால் அவள் பிறர் உளம்புகும் ஆற்றல்கொண்டவள். அதைவிட பிறரை ஆற்றுப்படுத்தும் அளிகொண்டவள்.

“நீ என்ன நினைக்கிறாய்?” என்று அவன் நேரடியாகவே அவளிடம் கேட்டான். அவளைப்போன்ற ஒருத்தியிடம் ஏன் அதை கேட்கிறோம், துணுக்குறப்போகிறாள் என அவன் எண்ணினான். அவளை மேலும் அணுகி நோக்க விழைந்தானா? அல்லது அனலையும் ஆழத்தையும் எல்லைவிளிம்புவரை சென்று நோக்கும் விலங்கின் ஆர்வமா அது? அவன் அவ்வினாவை மீட்டு எடுத்துவிடமுடியுமா என ஏங்கினான். ஆனால் அவள் மறுமொழியை எதிர்பார்த்தான். முந்தைய ஆறுதல்மொழி வெறும் தற்செயலாக இருக்கலாம். நஞ்சுகொண்ட கூர் இம்முறை எழலாம். ஆனால் அவள் மிக இயல்பாக “நீங்கள் உங்கள் உள்ளத்தில் எழுந்த அறத்தின்பொருட்டு எடுத்த முடிவு அது. அதுவே உங்களுக்கு உகந்தது” என்றாள்.

அவன் அகத்தில் முடிச்சுகள் அவிழலாயின. அஸ்தினபுரிக்குக் கிளம்பிய கணம் முதல் அவனுள் பெருகி இறுகிக்கொண்டிருந்தவை அவை. மெய்யாகவே இவள் என்னை ஆற்றுகிறாள். இவள் அதை எண்ணாமலிருக்கலாம். இயல்பிலேயே பிறரை ஆற்றுபவளாக இவள் இருக்கலாம். அவ்வண்ணமும் பெண்கள் உண்டு. அரசி பானுமதியைப் போன்றவர்கள். “நான் எடுத்த முடிவில் ஐயமில்லாதவன் எனில் ஏன் இதை உன்னிடம் கேட்கிறேன்?” என்று அவன் கேட்டான். மீண்டும் ஓர் அடிவைத்து அணுகுகிறேன். எனக்கு உறுதிப்பாடு தேவையாக இருக்கிறது. இவளை உறுதிசெய்துகொண்டு எதை அடையவிருக்கிறேன்?

அவள் புன்னகைத்து “உங்கள் முடிவில் உங்களுக்கு ஐயமில்லை. அது உங்கள் விழிகளில் தயக்கமேதும் இல்லை என்பதனால் தெரிகிறது. நீங்கள் உள்ளூர வேறேதோ ஒன்றை எண்ணி குழம்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் என்னிடம் கேட்கிறீர்கள்” என்றாள். அப்போதுதான் அதை அவனே உணர்ந்து திடுக்கிட்டான். அஸ்தினபுரிக்கு வருவதற்காகக் கிளம்பிய பின் ஒரு கணம்கூட அவன் அன்னையைப்பற்றி எண்ணியிருக்கவில்லை. அஸ்தினபுரியை உதறிவிட்டு யுதிஷ்டிரனிடம் செல்லும் முடிவை அவன் அன்னையிடம் தெரிவித்தபோது அவள் சொல்லளிக்கவில்லை. அன்னை அவனிடமிருந்து அனைத்து வகையிலும் விலகி நெடுநாட்களாகிவிட்டிருந்தது. பின்னர் அதை எடுத்து நேராகச் சென்று துரியோதனனிடம் சொன்னான். அரண்மனையிலிருந்தே நகர்நீங்கினான்.

“நான் பேரரசி காந்தாரியை சந்திக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “உங்கள் பணி சிறக்கட்டும்…” என அவள் தலைவணங்கினாள். “நீங்கள் அரண்மனைக்குச் செல்வதற்குள் உரியவற்றை நான் ஆணையிட்டிருப்பேன். நீங்கள் நீராடி ஆடைமாற்றிக்கொண்டு பேரரசியை சந்திக்கலாம். நீங்கள் இங்கே விட்டுச்சென்ற அறை அவ்வண்ணமே நீடிக்கிறது.” அவன் அவளை மீண்டும் உள அதிர்வுடன் நோக்கினான். “நீங்கள் விட்டுச்சென்ற எதுவும் அங்கே மாறியிருக்காது” என அவள் புன்னகையுடன் சொன்னாள். அவன் “ஆம், அது நன்று” என்றான். அவள் “இங்கே பெரும்பாலும் ஏவற்பெண்டுகள்தான். அவர்களில் பலருக்கு முறைமை அறியாத சிக்கல் உள்ளது” என்றாள்.

அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவளைப்பற்றி ஒற்றர்கள் சொல்லி அவன் அறிந்திருந்தான். அவளை நேரில் பார்ப்பதற்கு ஒரு கணத்திற்கு முன்னர்கூட அவள் பெயர் நினைவிலிருந்தது. அவளைக் கண்டபின் அவளைப்பற்றிய எண்ணங்களில் அப்பெயர் மறைந்தது. அவன் அகத்தின் ஒரு பகுதி அவள் பெயரை எண்ணி துழாவிக்கொண்டே இருந்தது. “உன் பெயர் என்ன?” என்றான். “சம்வகை” என்று அவள் சொன்னாள். “ஆம், சம்வகை. காற்றின் பெயர். நன்று” என்றபின் “நீ மச்சர்குலத்தவள் என்றார்கள்?” என்றான். “ஆம், அன்னைவழியில்” என்றாள். மேலும் என்ன பேசுவதெனத் தெரியாமல் குழம்பி “நன்று…” என அவன் திரும்பினான். மீண்டும் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி “நான் குழம்பியிருப்பதற்கு விடை கிடைத்தது” என்றான். அவள் புன்னகைக்க அவன் புரவியைச் செலுத்தினான்.

ஆழ்ந்த துயிலில் அவன் படுத்திருக்க அறைக்கதவைத் திறந்து திரௌபதி உள்ளே வந்ததை உணர்ந்தான். அவன் எழமுயன்றாலும் உடல் எடைகொண்டு படுக்கையோடு அழுந்தியிருந்தது. திரௌபதி அறைநடுவே ஓங்கி நின்று அவனை குனிந்து நோக்கினாள். விழிகள் நீர்மைகொண்டு சிவந்திருந்தன. சீற்றத்துடன் ஏதோ சொல்வதுபோன்ற முகம். அச்சத்தில் அவன் நடுங்கினான். உடலை அசைக்க முயன்றபோது அது கல்லென்று ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவள் திரும்பி நோக்கினாள். அறைவாயிலில் வேறொரு அசைவு. அவள் பின்வாங்கி பிறிதொரு வாயிலினூடாக மறைந்தாள். அங்கே ஒரு வாயில் இருக்கிறதா என்ன? இது அஸ்தினபுரியின் அரண்மனையில் அவன் அறை. பிறர் நுழையமுடியாத அறை. இத்தனிமையில் பிறர் கனவுகளாகவே நுழைய முடியும். அவ்வாயிலில் நிற்பவர் எவர்?

அவள் அவனருகே வந்தாள். அது சம்வகை என அவன் அடையாளம் கண்டான். அவள் எப்படி உள்ளே வந்தாள்? அவன் பேரரசி காந்தாரியை சந்திக்கச் செல்லவேண்டும். நீராடி ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். பேரரசி எவ்வண்ணம் இருக்கிறார் என எவரிடமேனும் கேட்க விழைந்தான். ஆனால் அரண்மனையில் அனைத்து ஏவல்முகங்களும் அவனறியாதவையாக இருந்தன. அவனையே பெரும்பாலும் எவருக்கும் தெரியவில்லை. பேரரசியை சந்திப்பதற்கு முன் அரசி பானுமதியை சந்திக்கலாம். ஆனால் அவள் விழிகளை நினைவுகூர்ந்ததுமே அவன் உள்ளம் பின்னடைந்தது. ஆனால் வேறுவழியில்லை, அவரை சந்தித்தேயாகவேண்டும். ஒன்றும் நிகழாது, நகுலன் அவரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அவர்களின் குருதி. களம்நின்று எதிர்த்த ஷத்ரியன். அவன் வேறு.

அவள் அவனருகே குனிந்து “செல்க!” என்றாள். அவன் “நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றான். “செல்க!” என்று அவள் சொன்னாள். “நான் அஞ்சுகிறேன்” என்று அவன் அவள் விழிகளை நோக்கியபடி சொன்னான். அவள் விழிகள் அளிநிறைந்திருந்தன. முலையூட்டும் அன்னையின் விழிகள் என. “நாம் கருவிகள்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் ஏந்தியிருப்பது ஒரு கொடியை.” அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நாம் என்னவென்று அறியாதவற்றை செய்கிறோம். ஆகவே எதையும் அஞ்சவேண்டியதில்லை.” அவன் “ஆம்” என்றான். புன்னகைத்து “நான் நன்கறிந்தவையே. ஆனால் நீ சொல்லவேண்டியிருக்கிறது” என்றான்.

 

விழித்துக்கொண்டபோது அவன் உள்ளம் எளிதாகிவிட்டிருந்தது. நீண்ட இரவில் மெய்மறந்து துயின்று இளங்குளிர் நிறைந்த புலரியில் எழுந்துகொண்டதைப்போல. அவன் முகம் புன்னகை கொண்டிருந்தது. குடிலை விட்டு வெளிவந்து ஒரு கணம் நின்றான். உள்ளத்தால் பயணம் செய்து அர்ஜுனனின் குடிலை அடைந்து அங்கிருந்த ஏவலனிடம் அவர் இருக்கிறாரா என்று வினவினான். இல்லை என்று அறிந்து திரும்பி வந்தான். மீண்டும் ஒரு உளப்பயணம் வழியாக இளைய யாதவரின் குடிலை அடைந்து அங்கு அவர்கள் இருக்கிறார்களா என்று உசாவினான். அவர்கள் அங்கில்லை என்பதை அறிந்தபின் திரும்பி வந்தான்.

மீண்டுமொரு உளப்பயணம் தொடங்குவதற்குள்ளாகவே அவன் கிளம்பிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான். புரவியைச் செலுத்தி குடில்களைக் கடந்து குறுங்காட்டுக்குள் நுழைந்து ஊடே ஓடிய காலடிவழியில் குறும்புதர்களை ஊடுருவிச் சென்றான். கங்கை நோக்கி இறங்கும் சிற்றோடைகள் பரவியிருந்த அக்காட்டுக்குள் முயல்களும் கீரிகளும் நிரம்பியிருந்தன. குதிரைகளின் குளம்படியோசை கேட்டு அவை புதர்களை ஊடுருவிக் கலைந்தோடின. தலைக்கு மேல் பறவைகள் எழுந்தெழுந்து அமர்ந்தன. காட்டிற்குள் மாலை ஏற்கெனவே வந்துவிட்டிருந்தது. இலைத்தழைப்புகளுக்குள் இருந்து வந்த ஒளிக்குழாய்கள் சரிந்து நிலம் தொட்டிருந்தன. நீராவி நிறைந்திருந்த நிழலிருளுக்குள் அவ்வப்போது ஒளி பட்டு சுடர்ந்தும் அணைந்தும் அவன் சென்று கொண்டிருந்தான்.

பின்னர் காட்டிற்குள் சிற்றோடையொன்று சுழித்து சுனையாகப் பொங்கி எழுந்து விழுந்த சிறிய சரிவில் இளைய யாதவரும் அர்ஜுனனும் அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஒருவர் இருப்பதை பிறர் அறியாதவர்போல் இருந்தனர். இளைய யாதவர் கண்களை மூடி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அர்ஜுனனின் கண்கள் விழித்திருந்தன. ஆனால் அவன் எதையும் பார்ப்பதுபோல் தெரியவில்லை. அவர்களைச் சூழ்ந்து நீரின் ஒலி நிறைந்திருந்தது. நீரின் ஒலி கொந்தளிப்பும் கொப்பளிப்பும் என கணந்தோறும் மாறுவது. ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கையில் மாறாச் சுதி கொண்ட ஒழுக்கு என எண்ணச்செய்வது.

மேலும் அணுகியபோது அவர்கள் இருவரின் உடல்களையும் அவன் கூர்ந்து பார்த்தான். அர்ஜுனனின் கையில் விரல்கள் அசைந்துகொண்டிருந்தன. காற்றில் எதையோ எடுப்பதுபோல. அறியாத எதையோ துழாவுவதுபோல. ஒன்றையொன்று தொட்டறிந்து கசந்து மீண்டும் தொடுவதுபோல. இளைய யாதவர் உடலில் விரல்கள் தளர்ந்து ஒன்றையொன்று தழுவிக்கோத்து மடியில் அமைந்திருந்தன. அவர் நெற்றியிலணிந்திருந்த பீலிவிழி மட்டும் காற்றில் நலுங்கிக்கொண்டிருந்தது. காற்றில் வரைந்துவைக்கப்பட்ட அழகிய ஓவியம்போல் தெரிந்தது அவருடைய தோற்றம்.

அவன் அந்த முகத்திலிருந்த அழகிய புன்னகையை பார்த்தான். விழி மூடி இருக்கையில் புன்னகைக்கும் முகங்கள் மிக அரிது. முற்றிலும் தன்னுள் ஆழ்ந்து இருக்கையிலும் புன்னகைப்பவர்கள் தங்களை வென்றவர்கள், துயரற்றவர்கள். மிக அரிதாக முனிவர்களிடம் மட்டுமே அப்புன்னகையை அவன் கண்டிருக்கிறான். இவ்வுலகனைத்தையும் கடந்தவர்கள், ஊழ்கத்தால் அறிவை அறிந்து அறிவைக் கடந்து அமைந்தவர்கள் அடைந்து முகம்சூடும் அந்தப் புன்னகையை இங்குள்ள அனைத்திலும் படர்ந்து அனைத்தையும் உணர்ந்து அனைத்தையும் கையாள்பவன் அணிந்திருக்கிறான். அறியாது ஒரு மெய்ப்பு வந்து அவன் உடலைக் கடந்து சென்றது, குளிர்ந்த நீர்த்துளி ஒன்று உடலில் விழுந்ததுபோல.

அவன் அணுக புரவியின் குளம்படிகளை அர்ஜுனன் கேட்டுவிட்டிருந்தான். ஆயினும் அவன் பார்வை வெறுமனே அவன் மேல் நிலைத்திருந்தது. புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிச் சென்று அவன் தலைவணங்கினான். அப்போதும்கூட அர்ஜுனன் அவனைப் பார்த்ததுபோல் தெரியவில்லை. மாறாக இளைய யாதவர் விழி திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்து “கூறுக இளவரசே, அஸ்தினபுரியில் அனைத்தும் சீராக அமைந்துள்ளன அல்லவா?” என்றார். அவனுக்கு அந்தத் தொடக்கம் உவப்பாக இருந்தது. “ஆம், சுரேசர் அனைத்துச் சரடுகளையும் ஒன்றோடொன்று பின்னி மீண்டும் அந்த அமைப்பை உருவாக்கிவிட்டார். அது தன் விசையால் தான் இயங்கத்தொடங்கிவிட்டது. இனி அதை மெல்ல விரிவுபடுத்தி தொலைநாடுகளுக்கும் அவர் கொண்டு செல்வார்” என்று யுயுத்ஸு சொன்னான்.

இளைய யாதவர் “ஷத்ரியர் அடங்காது குலைக்க அந்தணர் சலிக்காது கட்ட இது இவ்வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று புன்னகைத்தார். யுயுத்ஸுவும் புன்னகைத்து அர்ஜுனனை நோக்கினான். அவர் தன் சொற்களை கேட்கிறாரா? “நான் இன்று காலைதான் அஸ்தினபுரியிலிருந்து வந்தேன். அருகிலிருக்கும் கோட்டைகளுக்குச் சென்றுவிட்டு அஸ்தினாபுரிக்கு சென்றேன்” என்றான். “பேரரசியும் பேரரசரும் இங்கே வந்துவிட்டிருக்கிறார்கள். அங்கே அவர்களின் இன்மை எவ்வகையிலும் உணரப்படவில்லை. ஏனென்றால் நாள்தோறும் மக்கள் விலகிச்செல்ல அஸ்தினபுரி வற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தினர் அகல்கையிலும் மொத்த நகருமே நுட்பமாக உருமாறிக்கொண்டிருக்கிறது.”

“ஆம், அதன் அமைப்பும் உடனே உருமாறும்… சுரேசர் தொடர்ந்து அதை சீரமைத்தபடியே இருக்கவேண்டும்” என்ற இளைய யாதவர் இயல்பாக “பேரரசியை பார்த்தாயா?” என்றார். “இல்லை, இனிமேல்தான் பார்க்கவேண்டும்” என்றான் யுயுத்ஸு. “வந்ததுமே அரசரை பார்த்தேன். அவருடன் சென்று பாஞ்சாலத்து அரசியையும் பார்த்தேன்.” இளைய யாதவர் “அரசியிடமிருந்து செய்தியுடன் வந்திருக்கிறாயா?” என்று இயல்பாக கேட்டார். “ஆம், அரசி அரசருக்கு ஆணையிட்டார். அரசரின் ஆணையுடன் நான் இளையவரை பார்க்க வந்தேன்” என்றான். அர்ஜுனன் “கூறுக!” என்றான். அவன் கேட்டுக்கொண்டிருப்பதை அப்போதுதான் யுயுத்ஸு உணர்ந்தான். அவன் தயங்க இளைய யாதவர் “சொல்க!” என்றார்.

“அரசி போர் இன்னும் முடியவில்லை என்கிறார். வஞ்சம் ஒழியாமல் நீர்க்கடன் முடிக்க அவர் ஒப்பப்போவதில்லை என அறிவித்தார்.” அர்ஜுனன் முனகினான். “அஸ்வத்தாமனின் நெற்றிமணியுடன் வரவேண்டும் என்று அரசி ஆணையிட்டார். அதை இளையவருக்கு அரசர் ஆணையிடுகிறார்.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “இவர்களுக்கு விழைவும் வஞ்சமும் ஒருபோதும் ஓயப்போவதில்லை” என்றான். “விழைவு செல்லாத இடத்தில் வஞ்சத்தை ஊர்தியாக்கிக் கொள்கிறார்கள்.” இளைய யாதவர் சிரித்து “மானுடர் இரு வகை. குவிபவர்களுக்கு தாங்களே போதும். விரிபவர்களுக்கு உலகே வேண்டும்” என்றார். “இல்லை, அரசரிடம் சொல்க! நான் போருக்கு எழும்நிலையில் இல்லை. இனி எப்போதும் காண்டீபத்தை கையில் எடுக்கப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“அது மூத்தவரின் ஆணை” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், அதை அறிந்தே இதை சொல்கிறேன். இனி எவருடைய ஆணையையும் நான் தலைக்கொள்ளப் போவதில்லை” என்றான் அர்ஜுனன். “அரசி சொல் அளிக்கவில்லை என்றால் மைந்தருக்கு தந்தையர் என நீங்கள் ஐவரும் நீரளிக்க முடியாது” என்றான் யுயுத்ஸு. “எனில் அவர்கள் விண்ணுலகு அடையவேண்டியதில்லை. அவர்கள் இங்கேயே அலையட்டும். அது அவர்களின் அன்னையின் ஆணை என்றால் அவ்வண்னமே ஆகுக!” என்றான் அர்ஜுனன். கசப்புடன் “தன் வஞ்சத்தின்பொருட்டு உயிர்நீத்தவர்களையும் அவள் கருவியாக்குவாள் என்றால் அதை தெய்வங்களே கையாளட்டும். அவளை இனி மானுடர் நடத்த இயலாது” என்றான்.

யுயுத்ஸு “இது அரசியின்…” என சொல்லத் தொடங்க அர்ஜுனன் “அவளுடைய வஞ்சத்தால் அழிந்தது குருகுலம். பாரதவர்ஷமே குருதியால் மூடியது. இன்னும் வஞ்சம் கொண்டிருக்கிறாளா? இனி விண்ணுலகை அழிக்கவேண்டுமா அவளுக்கு? மூன்று தேவர்களும் போரிட்டு மறையவேண்டுமா?” என்று கூவினான். கசப்பும் துயரும் கலந்த உரத்த குரலில் “பெண்சொல் கேட்ட குலம் வாழ்ந்ததில்லை என்பது மெய்யே. ஏனென்றால் ஒன்றில் அமைந்தபின் அதிலிருந்து விலகாமலிருப்பது பெண்களின் இயல்பு. தங்கள் அடையாளங்களையும் முழுமையையும் வெளியே தேடுபவர்கள் அவர்கள். போதும், இனி என்னால் இயலாது. வீழ்த்திய குருதியைக் கழுவவே நான் இன்னும் செய்யவேண்டிய தவங்கள் பெரிது” என்றான்.

“நான் செல்கிறேன், இளையோனே” என்று பீமனின் குரல் கேட்ட பின்னரே யுயுத்ஸு அவனை கண்டான். மரத்திற்கு சற்று பின்னால் கையில் ஒரு மானுடன் பீமன் நின்றிருந்தான். “நான் பெண்சொல் கேட்டவன், அதன்பொருட்டு எவ்வகையிலும் துயரோ வருத்தமோ கொள்ளவில்லை. இது அன்னையர் நிலம். இங்கே பெண்சொல்லே என்றும் திகழ்க!” மானை கீழே விட்டபடி “நன்று, நான் இப்போதே இங்கிருந்தே கிளம்புகிறேன்” என்றான். “மூத்தவரே, என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் செல்வது அஸ்வத்தாமனை எதிர்த்து… அவனை வெல்ல இன்று மூவிழி அண்ணலால் மட்டுமே இயலும்” என்றான் அர்ஜுனன். “நீ அஞ்சுகிறாயா என்ன? நான் அஞ்சவில்லை. இனி எனக்கு அஞ்சுவதற்கென ஏதுமில்லை” என்றான் பீமன்.

“ஆம், நான் அஞ்சுகிறேன், எனக்காக அல்ல. உங்களுக்காக. வேண்டாம்… சொல்வதை கேளுங்கள்” என்று அர்ஜுனன் கூவியபடி எழுந்தான். “அது அவள் எனக்கிட்ட ஆணை” என்றபின் பீமன் திரும்பி காட்டுக்குள் சென்றான். “யாதவரே, அவரை தடுத்து நிறுத்துக!” என்று அர்ஜுனன் கூவினான். இளைய யாதவர் “அவர் எப்போதுமே அவ்வாறுதான்” என்று புன்னகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் நறுமணம்… அது எளிதில் மறைவதில்லை” என்றார். “அவரை செல்லவிடக்கூடாது. அவர் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளலாகாது” என அர்ஜுனன் பதறினான். “அதற்கு ஒரே வழி, நீ செல்வதுதான்… இது உன் போர்” என்று இளைய யாதவர் சொன்னார். “யாதவரே, என்னால் போரிட முடியாது. என் தோள் தளர்ந்திருக்கிறது. காண்டீபத்தை கைகள் மறந்தேவிட்டன!” என்றான் அர்ஜுனன். “எனில் அவரே அஸ்வத்தாமனை எதிர்கொள்ளட்டும்” என்றான் யுயுத்ஸு.

ஒரு கணம் தவித்தபின் “நான் கிளம்புகிறேன்… அஸ்வத்தாமனை நான் எதிர்கொள்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “மூத்தவரை தடுத்தாகவேண்டும்… அவரை முந்தவேண்டும்.” பீமன் தன் புரவியில் ஏறிக்கொண்டு காட்டுப்புதர்களை ஊடுருவிச்செல்லும் ஓசை கேட்டது. “என் தேர் ஒருங்குக… உடனே” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்தா?” என்று யுயுத்ஸு கேட்டான். அவன் உள்ளத்தில் எழுந்ததை உணர்ந்து “இக்காட்டுக்குள்தான் காண்டீபம் உள்ளது. இங்கிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். யுயுத்ஸு தேர் நின்றிருக்கும் இடைவழி நோக்கி ஓடினான். இளைய யாதவரும் அர்ஜுனனும் அவனுக்குப் பின்னால் வந்தனர். “நீயே தேரை ஓட்டுக, இளவரசே” என்றார் இளைய யாதவர். “ஆணை” என்றான் யுயுத்ஸு.

முந்தைய கட்டுரைஇரு நடிகர்கள்
அடுத்த கட்டுரைஅட்லாண்டாவிலிருந்து..