யாழ்நிலத்துப்பாணன் -2

இயல்புவாத அழகியலின் முக்கியமான சிறப்பே அது அளிக்கும் நுண்தகவல்கள்தான். தகவல்கள் மட்டுமே பாரபட்சமில்லாத, புறவயமான உண்மைகள் என்ற நிரூபணவாத அறிவியலில் இருந்து உருவான இலக்கிய முறை என்றே இயல்புவாதத்தைச் சொல்லிவிடலாம். ஆசிரியரின் உணர்ச்சிகள் மட்டுமல்லாமல் கதைமாந்தரின் உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாத ‘புறவய’ மான எழுத்துமுறை இது. உணர்ச்சிகளைப்பற்றிச் சொல்வதானால்கூட அவற்றையும் ஒருவகை தகவல்களாகவே முன்வைக்கக் கூடியது.

இயல்புவாதத்தின் தனித்தன்மை என்னவென்றால் ‘பெரிய’ தகவல்களை மட்டும் முன்வைக்கும் பொதுவான யதார்த்தவாத முறையில் இருந்து அது வேறுபடும்விதம்தான். ஒருதகவலை முக்கியமானதாகவோ அழுத்தமானதாகவோ ஆக்குவது அதற்கு ஆசிரியர் கொடுக்கும் நோக்கம்தான். அந்த நோக்கம் கோட்பாடு சார்ந்தது, இலட்சியவாத இலக்கு கொண்டது. இயல்புவாதம் எல்லா தகவல்களையும் தகவல்களாகவே சொல்ல முயல்கிறது. அதன் புனைவின் குறிப்பிட்ட வட்டத்திற்குள் வரக்கூடிய எல்லாத்தகவல்களையும் சொல்லிவிடுவதான புனைவுப்பாவனையை அது கொண்டுள்ளது[ எல்லா தகவல்களையும் எவருமே சொல்ல முடியாதல்லவா?] சமீபத்திய உதாரணம் என்றால் சு.வேணுகோபாலின் படைப்புகளைச் சொல்லலாம். வேளாண்மைவாழ்வு குறித்த நுண்ணிய தகவல்கள் மிகச்செறிவாக வரிக்குவரி நெருக்கிக் கொண்டிருக்கும் எழுத்துமுறை அவருடையது. உளுந்துவயல் என்று சொல்லமாட்டார். எந்தவகை மண்ணுள்ள நிலம், எந்த காலம், நீர் வசதி எப்படி, எந்தவகை உளுந்து,எந்த நிலையில் இருக்கிறது எல்லாமே ஒரே சொற்றொடருக்குள் இருக்கும், அந்தக் கதாபாத்திரத்தின் புறச்சூழலைச் சொல்ல இத்தனை தகவல்கள் தேவையா என்ற வினாவுக்கே அந்த புனைவுத்தளத்தில் இடமிருப்பதில்லை.

இத்தகைய இயல்புமூலம் இயல்புவாதமானது செவ்வியலுக்கு ஒருவகையில் நெருக்கமாக வருகிறது. செவ்வியல் படைப்புகளின் அழகியலில் இரு முக்கியமான அம்சங்கள் எப்போதும் சுட்டப்படுகின்றன. ஒன்று, சமநிலை. இரண்டு, நுண்செறிவு. இலையெல்லாம் பூவாக மாறிய மரம்போன்றது செவ்வியல். அணிகள்,சொல்லழகுகள், தரிசனங்கள் என அதன் பரப்பு நுண்மைகளால் செறிந்துள்ளது. நமது கோயில் தூண்களைப்போல. ‘Art is in details’ என்று செவ்வியல் சொல்கிறது ஏனென்றால் ‘God is in details’ என்று அது கண்டறிந்துள்ளது. மேலும் தன் கலைவெளிப்பாட்டுக்கு நுண்மையின்செறிவை அது வழிமுறையாகக் கொண்டிருப்பதனால் நேரடியான உணர்ச்சிப்பெருக்குகளையும் ஆசிரியர் குரலையும் அது நம்புவதில்லை. அதன் அனைத்து வெளிப்பாடுகளிலும் சமநிலை உருவாகி வருகிறது. இதேபோல புறவயமான தகவல்களை செறிவாக அளிப்பதன் வழியாக இயல்புவாதமும் சமநிலை நுண்செறிவு இரண்டையும் அடைகிறது.

எஸ்.பொன்னுதுரையின் படைப்புகளில் உள்ள இயல்புவாத ஆக்கங்களின் முக்கியத்துவம் யாழ்ப்பாண வாழ்க்கையைப்பற்றிய அதன் நுண்சித்தரிப்பில்தான் உள்ளது என்றால் மிகையல்ல. பொதுவாக தமிழக வாசகன் ஈழப்படைப்புகளைப் படிக்கும்போது அடையும் சோர்வு என்னவென்றால் எத்தனை பக்கங்கள் படித்தபின்னரும் அங்குள்ள நிலமோ, சூழலோ, இயல்பான வாழ்க்கையோ கண்ணுக்குத்தெரிவதில்லை என்பதே. குறிப்பாக செங்கை ஆழியான், தேவகாந்தன் போன்றவர்களின் நீண்ட நாவல்களைப் படிக்கும்போது அவை ஒரு நிலமில்லாத ஓர் அந்தர வெளியில் நின்றுகொண்டிருப்பதான எண்ணமே எழுகிறது. ஈழச்சூழலில் வெகுசில படைப்பாளிகளிடம் மட்டுமே ஈழ மண்ணை நம்மால் காண முடிகிறது. என் நோக்கில் மு.தளையசிங்கத்தின் ‘ஒருதனிவீடு’ எஸ்.பொன்னுதுரையின் ‘சடங்கு’ ஆகிய இரண்டு படைப்புகளுமே அவற்றில் தலைசிறந்தவை.

நுண்தகவல்கள் என்றால் என்ன என்று சொல்வது எளிதல்ல. மக்களின் வாழ்க்கையின், பண்பாட்டின், உளப்போக்கின் பல நுண்ணிய அடித்தளங்களைத் தொட்டுக்காட்டும் தகவல்கள் சாதாரணமாக படைப்பில் பதிவாகியிருப்பது என்று அதைச் சொல்ல்லலாம். உதாரணமாக சடங்கு நாவலில் செந்திநாதன் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது கொழும்பில் ஓட்டலில் சாப்பிட்டு நாக்கு செத்த மருமகனுக்கு வகையாகச் சமைத்துப்போடும் பொருட்டு மீன் வாங்கச் செல்லும் அவரது மாமியார் கொல்லையில் மரத்தடியில் ஒதுக்கி போடப்பட்டிருந்த ‘கவிச்சிக்’ கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறாள். இது குமரிமாவட்டத்திலும் பல வேளாள,நாடார் இல்லங்களில் உள்ள வழக்கம். புலால் உண்பவர்களானாலும் அதன் மீது மானசீகமான ஒர் ஒதுக்கம். பல வீடுகளில் கொல்லையில் ஒரு மரக்கிளையில் அக்கூடை தொங்கிக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் வந்தபின் இப்போது இத்தகைய ஒரு கூடையே இனி எவர் கண்ணுக்கும் படாமலிருக்கக் கூடும். இலக்கியத்தில் பதிவாகவில்லை என்றால் அது ‘வரலாற்றில்’ இல்லாமலேயே போயிருக்கக் கூடும். அந்தக் கூடை பல மனநிலைகளுக்கான முக்கியமான சுட்டித் தகவல்.

சடங்கு குறுநாவலில் இத்த¨கைய நூற்றுக்கணக்கான தகவல்களினால் ஆன ஒரு நடை புழங்குகிறது. மாமியார்கிழவியின் செட்டையும் சிக்கனத்தையும் சொல்லும் தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன. மருமகனுக்கு அசைவ ‘விருந்து’ படைக்க ஒரே ஒரு முட்டையை உடைத்து பொரியல் செய்கிறார்கள். பிராய்லர் வருவதற்கு முன்னர் கோழிமுட்டை அத்தகைய ஓர் சிறப்பு உணவாக இருந்திருக்கிறது. சில தகவல்கள் உளம் சார்ந்த ஆழமான நோக்குக்கு இடமளிபப்வை. புதுமனைவியுடன் கடற்கரைக்குச் செல்கிறார் செந்திநாதன் . பின்னால் அமர்ந்திருக்கும் சில ஆசாமிகள் அவர் முதுகில் மணலை வீசுகிறார்கள். பின்பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் மனைவியை திரும்பக் கூட்டிவந்து விடுகிறார். அவரது குணச்சித்திரத்தை மட்டும் காட்டுவதல்ல இது. அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையின் ஒரு கணம் இதில் உள்ளது. மணலை வீசும் மனநிலை. அதற்கு சிறு எதிர்ப்புகூட காட்டாமல் திரும்பிவரும் மத்தியவற்க ‘உத்தியோகஸ்த’ மனநிலை. [ எனக்கு இது ப.சிங்காரத்தை நினைவூட்டும் ஒரு இடம்] புன்னகையுடன் நாம் கடந்துசெல்லும் இத்தகைய தகவல்களே புனைவை இலக்கியமாக ஆக்குகின்றன.

‘சடங்கு’ நாவலை இப்போது படிக்கும்போது பலவகையான வினாக்களும் மனக்குழப்பங்களும் எழுகின்றன. இந்நாவல் உருவானபோது யாழ்ப்பாண வாழ்க்கையின் ஒரு கீற்றை உண்மையாகச் சொல்லும் ஆக்கமாகவும் மெல்லிய அங்கதம் கொண்டதாகவும் வாசகர்களுக்குத் தோன்றியது. அதன் இலக்கியகுணமாக இதுவே சொல்லப்பட்டது. அத்துடன் அதன் பாலியல் வர்ணனைகள் அந்தக் காலகட்டத்து அளவுகோலுக்கு துணிச்சலானவையாக இருந்தன. ஆனால் இன்று வாசிக்கும்போது இன்றைய போர்சூழ்ந்த யாழ்ப்பாணத்துக்கு முந்திய யாழ்ப்பாணத்தை கண்ணுக்குக் காட்டும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.

இன்று சடங்கு வழியாக நோக்கும்போது மிகுந்த வியப்புதான் உருவாகிறது. அது காட்டும் யாழ்ப்பாணம் பொதுவாக எந்த வன்முறையும் இல்லாத நடுத்தர வற்கத்து மனிதர்கள் நெருக்கமான உறவுகளுடன் ஒருவரை ஒருவர் அள்ளிப்பற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் உறிஞ்சிக் கொண்டு லௌகீகத்தில் முற்றிலும் ஆழ்ந்து வாழும் காட்சியையே காண்கிறோம். குறிப்பாக சடங்கு நாவலில் அன்றைய யாழ்ப்பாணத்தை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அந்த மாமியார்தான் என்று படுகிறது. ஒவ்வொரு கணமும் அவர் சேமித்துக் கொண்டே இருக்கிறார். புத்தி, ஆத்மா எல்லாமே நாளைய வாழ்க்கைக்கான சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அப்பால் அன்றாட வாழ்க்கை என்று ஏதும் இல்லை. இன்பங்கள் இல்லை. ஆன்மீகம் இல்லை. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலமாக கேரளத்தில் இருந்துவந்த வாழ்க்கை. இன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ள வாழ்க்கை. சில வருடங்களுக்குள் இம்மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள் என்று எவரும் அந்நாவலை முன்வைத்துச் சொல்லிவிட முடியாது. அதுவே வாழ்க்கையின் தீராத விந்தை!

நுண்தகவல்கள் மூலம் உருவாகும் கலைக்குச் சிறந்த உதாரணமாக அமையும் பல கதைகளை எஸ்.பொன்னுதுரையின் புனைவுலகுக்குள் காணலாம். அவரது பெருந்தொகையான எஸ்.பொ.கதைகளின் [மித்ர வெளியீடு] முதல்கதை ‘தேர்’ இதற்குச் சிறந்த உதாரணம்.யாழ்ப்பாணத்துச் சாதிசமயச் சமூகக் கட்டுமானத்திற்குள் ஊறி வளர்ந்த முகத்தாரின் ஒருநாள். அவரது ஒரு மகன் மட்டும் சிங்களத்துப் பெண்ணை மணம் செய்து மீறிச் சென்றவன். தொலைந்துபோன ஆடு. மற்றவர்கள் அனைவருமே ‘நன்றாக’ இருக்கிறார்கள். முகத்தாரின் உள்ளம் நுட்பமாக அந்த மகன் மீது சாய்வதை எந்தவிதமான வண்ணங்களும் இல்லாமல் சொல்லும் கதை இது. அதற்குக் காரணம் அம்மகன் மீதான தனிப்பட்ட பாசம் மட்டுமல்ல. அவன் தொலைந்து போனவன் என்பது மட்டுமல்ல. முகத்தாரின் உள்ளூர ஓடும் ஒரு சாரமான அறவுணர்வும் கூடத்தான். அவரே அறிந்திராதது அது.

முகத்தாரின் ஒருநாளை எஸ்.பொன்னுதுரை சின்னஞ்சிறிய தகவல்கள் மூலம் சித்தரித்துக் காட்டும் முறையெ அவரது கலையின் சிறந்த உதாரணமாக அக்கதையை ஆக்குகிறது. சரளமான யாழ்ப்பாணத்தமிழ் வழக்கு. ”என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும் வீட்டிலை சின்னப்பிள்ளைதானே? சரியா? இவள் பார்வதிப்பிள்ளையை உரிச்சு வைச்ச மாதிரி இருக்குறள். இவளை ஒப்பேத்திப்பொட்டேனெண்டால் பேந்தென்ன?”

தமிழில் இயல்புவாதமும் வட்டார வழக்கும் பிரிக்க முடியாத படி உறவுள்ளவை. யதார்த்தவாதத்தின் தொடக்கப்புள்ளிகளான புதுமைப்பித்தன் போன்றவர்களே இங்கே வட்டார வழக்கின் முதல் இலக்கியப்பதிவுகளைச் செய்தார்கள். ஆனால் வட்டார வழக்கு ஓர் இலக்கிய அலையாக எழுந்தது தமிழில் இயல்புவாதம் எழுந்தபோதுதான். ஆர்வமூட்டும் பல சமநிலைகள் கொண்டது இந்த விஷயம். தமிழில் வட்டாரவழக்குக்காக ஆவேசமாக வாதிட்ட விமரிசகர் க.நா.சுப்ரமணியம்தான். இலக்கிய அழகியல் சார்ந்து க.நா.சுவை நவீனத்துவத்தின் பிரதிநிதி என்று வகுக்கலாம். நவீனத்துவத்தின் ஆசிரியர்மைய நோக்கு, தத்துவார்த்தநோக்கு போன்றவற்றை அவர் வலியுறுத்தினார். அவர் வாதாடிய நவீனக்கவிதை இவ்வியல்புகள் அனைத்தையுமே கொண்ட ஒன்று. ஆனால் உரைநடையில் அவர் நவீனத்துவத்தின் இவ்வியல்புகளுக்கு இடமே இல்லாத இயல்புவாதத்துக்காக வாதாடியதாகப் படுகிறது.

உலகப்படைப்புகளை எடுத்து நோக்கினால் இயல்புவாதத்தின் முற்றிய நிலையே நவீனத்துவ அழகியலுக்கு வழிவகுத்தது என்று காணலாம். யதார்த்தவாதமானது இயல்புவாதம் வழியாகவே நவீனத்துவமாக முதிர முடியும். நவீனத்துவத்தின் விளைநிலமான பிரெஞ்சு இலக்கியத்திலேயே மாப்பசான் முதலிய யதார்த்தவாதப் படைப்பாளிகளில் இருந்து இயல்புவாதத்தின் முன்னோடிகளான எமிலி ஜோலா போன்றவர்கள் உருவாகி அவர்களின் நீட்சியாகவே காம்யூ உருவானார். காம்யூவில் எமிலி ஜோலாவின் பல அம்சங்களை நாம் வெளியே இருந்து வாசிக்கும்போது காண முடிகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தோமென்றால் யதார்த்தவாதம் மானுட இயல்புகளை ‘அப்படியே’ சொல்ல முயல்கிறது. அதில் உள்ள இலட்சியவாத அம்சத்தை விலக்கி, வாழ்க்கையின் புறவய உண்மைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் இயல்புவாதம் மானுடனில் உள்ள அடிப்படை இச்சைகளையும் அச்சங்களையும் மட்டுமே அவனுடைய இயல்பாக காண்கிறது. ஆகவே இயல்புவாதம் இன்றியமையாத ஒரு இருண்மைநோக்கு கொண்டுள்ளது. அவ்விருண்மைநோக்கின், மனிதனைப்பற்றிய அவநம்பிக்கையின், முதிர்ச்சியே நவீனத்துவத்தின் சாரமாக அமைந்தது.

நவீனத்துவம் நவீன காலகட்டத்தில் மறுபிறப்பு பெற்ற செவ்வியல் என்று சொல்லலாம். செவ்வியலுக்குரிய தத்துவமைய நோக்கு, உணர்ச்சிச் சமநிலை, வடிவநுட்பம் , புறவயத்தன்மை ஆகியவற்றை அது தன் இலக்கியக்கோட்பாடாக முன்வைத்தது. இக்கூறுகள் பெருமளவுக்கு இயல்புவாதத்திலும் உள்ளன என்று காணலாம். புறவயமான தகவல்களை மட்டுமே நம்பி இயங்கும் இயல்புவாதம் உணர்ச்சிச் சமநிலை, வடிவ ஒருமை ஆகியவற்றை இயல்பாகவே அடைந்துவிடுகிறது. ஆகவேதான் நவீனத்துவத்திற்குரிய அழகியலாக பெரும்பாலும் இயல்புவாதம் அமைந்தது. எஸ்.பொன்னுத்துரை ஆ.மாதவன், பூமணி போன்ற நம் இயல்புவாதப் படைப்பாளிகளை நவீனத்துவர்கள் என்றும் சொல்ல முடிகிறது. எஸ்.பொன்னுதுரையின் ‘சடங்கு’ ஒரு நவீனத்துவ ஆக்கம் என்று வகுப்பது பொருத்தமானதேயாகும்.

இப்புலத்தில்வைத்து நோக்கும்போதுதான் இயல்புவாத அழகியலுக்காக வாதிட்ட க.நா.சுவின் நோக்கை நாம் புரிந்துகொள்ள முடியும். இயல்புவாதம் இந்தியச் சூழலில் எடுத்துக் கொண்ட பணி என்பது பலநூறு வாழ்க்கைத்தளங்களில் சிதறிப் பரந்து கிடக்கும் இந்திய யதார்த்தத்தைச் சொல்ல முற்படுவதேயாகும். அதுவரை எழுத்தில் சொல்லப்படாத வாழ்க்கைகள். சொல் தீண்டாத மனிதர்கள். அம்மக்களை அவர்களின் மொழியில் இருந்து பிரித்தறிய இயலாது என்பதே இயல்புவாதம் முதலில் கண்டடைந்த விஷயம். மலையாளம், கன்னடம்,வங்கம் போன்ற ஒப்புநோக்கப் புதிய மொழிகளில் வட்டாரவழக்குக் கொச்சை என்பது மைய மொழியில் இருந்து அத்தனைதூரம் விலகியதல்ல. தமிழில் அவ்வேறுபாடு மிகப்பிரம்மாண்டமான ஒன்று. இப்படி ஒரு மாபெரும் ‘மொழி அகழி’ வேற்றுப் பண்பாடுகளில் உண்டா என தெரியவில்லை. வட்டார வழக்கு என்பது எல்லா பண்பாட்டிலும் இருக்கக் கூடியதுதான் என்றாலும் தமிழ்ச் சூழலில் அது ஒரு சிறப்பான பண்பாட்டுக் கூறு.

அப்பண்பாட்டுக்கூறை இயல்புவாதம் வெளிப்படுத்தவேண்டும் என்று க.நா.சுப்ரமணியம் வாதாடினார். அவரது எதிர்பார்ப்புக்கு நிறைவூட்டும் விதமாக ஐம்பத்தெட்டில் நீல பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ வெளிவந்தது. பல வருடங்கள் அப்படைப்பை க.நா.சு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக முன்வைத்திருக்கிறார். தலைமுறைகள் பேச்சுவழக்கில் மட்டுமல்ல ஆசிரியர்நடையிலும் வட்டார வழக்கில் இயங்கும் நாவல். அதாவது அங்குள்ள மக்கள் மட்டுமல்ல அங்குள்ள பொருட்களும்கூட வட்டார வழக்கு வழியாகவே வடிவம் கொள்கிறார்கள். தமிழ் இயல்புவாதம் என்பது உண்மையில் வட்டாரவழக்கு அழகியலாகவே உள்ளது. இதை தமிழுக்குரிய ஒரு சிறப்பியல்பாக நாம் எண்ணலாம். இன்று சொ.தருமன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் வரை இவ்வியல்பு வளர்ச்சிகொண்டு வந்துள்ளது.

எஸ்.பொன்னுதுரையின் இயல்புவாதமும் வட்டார வழக்கில் ஆழ வேரூன்றியது என்பது இந்தப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். அவரது கதைமாந்தர் மட்டுமல்லாமல் பலசமயம் அவரேகூட கதைகளுக்குள் யாழ்ப்பாண வட்டார வழக்கில்தான் உரையாடுகிறார். அடித்தள மக்களின் நேரடி வாய்மொழியிலேயே பல கதைகள் அமைந்துள்ளன.”பக்கூஸ¤க்கதவு ஒள்ளம் கொழிஞ்சிருந்துது. கோழி கீழி வீட்டுக்குள்ள போய் எடுத்துவச்ச கூப்பன் அரிசிய குடுக்கெண்டு ஆன் நெனைச்சன். சூ என்டு விரசிக்கொண்டு உள்ளுக்க பாஞ்சு போனா எனக்கு நெஞ்சுக்க உலக்கையாலை இடிச்சதுபோலான் இருந்தது ” என்று கதைசொல்லியாலேயே மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது [விலை] எஸ்.பொன்னுதுரை இக்கதைகளை எழுதி கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் கழித்து வெளிவந்துள்ள விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவல் இதே நடையில் இதே வாழ்வின் எச்சங்களை இதேபோலப் பேசுவது என்பதைக் கவனிக்கும்போது இவ்வழகியலின் பணி இன்றும் தொடர்வதை உணர முடிகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் சுப்ரபாரதி மனியனின் மாறுதடம் என்ற சிறுகதைத்தொகுப்புக்கு முன்னுரை வழங்கிய வாசகர் செழியன் [இப்போது திரைப்பட விமர்சகர். ஒளிப்பதிவாளர்-கல்லூரி] அக்கதைகள் புகைப்படத்தின் சட்டகம் போன்றவை என்றார். ஒரு சரியான சட்டகத்தை தெரிவுசெய்வதே அவற்றின் கலையாகும். அச்சட்டகத்திற்குள் அகப்படும் அனைத்துமே பதிவாகிவிடுகின்றன. அவற்றின் பொருளோ அவசியமோ அக்கலைஞனால் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சுப்ரபாரதி மணியனின் கதைகளில் மிக நுட்பமான காட்சித் தகவல்கள் வந்தபடியே இருக்கும். ஒரு தெரு என்றால் தெருவின் சகல குப்பைகளும் பதிவாகியிருக்கும். இவ்வழகியலை ‘புகைபப்டக் காட்சி’ என்று சரியாகவே பதிவுசெய்கிறார் செழியன். எஸ்.பொன்னுதுரை போன்ற படைப்பாளிகளின் இயல்புவாத அழகியலின் சிறப்பம்சமே இதுதான். அவர்களின் படைப்புநிலத்தில் உள்ள பொருட்கள் எவையுமே கதை மாந்தரின் உணர்ச்சிகளையும் கலைஞனின் உட்கருத்தையும் சுமந்து படிமங்களாக ஆவதில்லை. மிக எளிமையான ஒரு நேரடித்தன்மையுடன் அவை வாழ்க்கையையும் நிலத்தையும் ‘அப்படியே’ அள்ளிவிடுகின்றன. எஸ்.பொன்னுதுரையின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் பல அத்தகையவை. மு.தளையசிங்கத்தின் மிகக்குறுகிய இலக்கிய எழுத்துக்களைத் தவிர்த்தால் முந்தைய தலைமுறை ஈழ இலக்கியத்தில் சாதனை என்பது இது மட்டுமே என்பது என் எண்ணமாகும்

அவ்வகையில் ஈழ மண்ணை– இன்று பொய்யாய் பழங்கதையாய் மறைந்து போய்விட்ட ஒரு பண்பாட்டை- நமக்குக் காட்டும் ஒரே இலக்கிய ஆவணம் எஸ்.பொன்னுதுரையின் எழுத்துக்களே. ஆனால் இலக்கியத்தில் உள்ள வாழ்க்கை என்பது காட்டை விதைகளாக கையில் கருதுவது போல. நீர் கொண்ட இடத்தில் எல்லாம் காடுகளை நம்மால் உருவாக்கிக் கொள்ள இயலும்.

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது
அடுத்த கட்டுரையாழ்நிலத்துப்பாணன் -3