‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 4

யுயுத்ஸு யுதிஷ்டிரனின் குடிலில் இருந்து வெளிவந்தபோது அதை உணரவில்லை. ஆனால் சில அடிகள் முன்னெடுத்து வைத்த பின்னரே பெருங்களைப்பை உணர்ந்தான். உடலில் பெரிய எடை ஏறி அமர்ந்திருப்பதுபோல. கால்களை முன்னெடுத்துவைக்க இயலவில்லை. கண்களை மூடியபடி முற்றத்திலேயே சில கணங்கள் நின்றான். நோக்குணர்வு ஒன்று வந்து தொட திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். அருகே எவருமில்லை என்று கண்டான். உடனடியாகச் சென்று அர்ஜுனனை பார்க்கவேண்டும் என்று யுதிஷ்டிரனால் பணிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் உள்ளம் அதை மறுத்தது. சுவரில் முட்டிக்கொண்டதுபோல முழுமையாக திசைகள் மூடியிருந்தன.

தன் குடிலுக்குச் சென்று மீண்டுமொருமுறை ஆடைமாற்றிக்கொண்டு கிளம்பலாம் என்னும் எண்ணம் வந்தது. அது அவன் வழக்கம். ஒருநாளில் நாலைந்துமுறை அவன் ஆடையையும் தலைப்பாகையையும் மாற்றிக்கொள்வதுண்டு. அஸ்தினபுரியில் அவனுக்கு எப்போதுமே பணிச்சுமை மிகுதி. அரசமகன் என்றும் சூதனென்றும் ஒரே தருணத்தில் இருக்கையில் அனைவருக்குமே எதிர்பார்ப்பளிப்பவனாக ஆகிவிட்டிருந்தான். இடைசென்றால் பொழுதே நசுங்கிவிடும் என்பதுபோன்ற நாள்விரைவு என அவனே ஒருமுறை சொன்னான். பணிச்சுமை மிகும்போதோ ஒவ்வாப் பணி எதிர்நிற்கும்போதோ கால்நாழிகை ஓய்வெடுத்து நீராடி அல்லது முகம் கழுவி மற்றொரு ஆடை அணிந்து புதியவனாக எழுந்து வருவது அவன் வழக்கம். அதுவரை அவன் செய்துகொண்டிருந்த செயல்களிலிருந்து அவ்வாறு தன்னை முற்றாக துண்டித்துக்கொள்வான். அவை அளித்த களைப்பு அனைத்தையும் உதிர்த்துக்கொள்ளவும் முடியும்.

அவன் தன் குடிலை அடைந்து உள்ளே சென்று கதவுப்படலை மூடிக்கொண்டதும் தனியறைகளில் மட்டுமே அவன் அடையும் தற்தொகுப்புணர்வை அடைந்தான். அங்கே அவனை அவனே வெவ்வேறு கோணங்களில் கண்கள் எழுந்து நோக்கிக்கொண்டிருந்தான். அந்நோக்குகளுக்கு முன் தன்னை அமைத்துக்கொண்டான். அவன் அந்தக் குடிலில் ஓரிரு நாட்கள்தான் அந்தியுறங்கியிருந்தான். அதற்குள்ளேயே அதை அவனுடையதாக எண்ணத் தலைப்பட்டான். அதற்குள் வந்ததுமே அதை இன்னொருவர் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்ற அறையை கூர்ந்து நோக்கினான். எந்த அடையாளமும் தென்படவில்லை. ஆனாலும் அந்த உணர்வு இருந்தது. அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

அவன் தன் அறைக்குள் பிறர் நுழைய விடுவதில்லை. அவனுடைய துணைவியர் சாந்தையும் சுகிர்தையும் அஸ்தினபுரியில் அவனுடைய தனியறைக்குள் நுழைவதில்லை. அவர்களை அவன் மணமுடித்த நாளில் அதை தெளிவுறச் சொல்லிவிட்டிருந்தான். அவர்கள் அவனை அஞ்சினர். அவன் அவர்கள் இருவரையும் நினைவுகூர்ந்தான். அன்னையை உடனே நினைவிலிருந்து எடுத்தான். அன்னையை எண்ணாமல் அவர்களைப்பற்றி எண்ணமுடிவதில்லை. அன்னையுடன் இணைந்தே அவர்களை அவன் பெரும்பாலும் பார்த்திருக்கிறான். அவர்களை தனியறைகளில் சந்திக்கும்போதுகூட மிக அருகிலெங்கோ அன்னை இருப்பதாகவே உணர்ந்திருக்கிறான்.

அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து அகன்று அப்பாலுள்ள சித்ரபீடம் என்னும் சிற்றூருக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். அவன் அஸ்தினபுரியிலிருந்து அகன்றபின் அவர்கள் அங்கே தங்க முடியவில்லை. அஸ்தினபுரியில் அவர்கள்மேல் கடும் சினம் எழுந்துவிட்டிருந்தது. அவர்களை மூடுதேரில் காவலுடன் வெளியே அனுப்பவேண்டியிருந்தது. அன்னை செல்வதில் பேரரசருக்கு விருப்பமில்லை. ஆனால் அன்னை அவர்களுடன் செல்லவே விரும்பினாள். அவர்கள் அங்கே சென்றுவிட்டதை அவன் அறிந்தான். அவர்களைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வப்போது அவர்களின் நினைவெழுந்தாலும் உடனே மறைந்தது. அன்று யுதிஷ்டிரன் அன்னையைப்பற்றி கேட்டமையால் இந்நினைவுகள் எழுந்து நின்றுள்ளன போலும்.

சாந்தை எளிய சூதர்குலத்துப் பெண். அஸ்தினபுரியின் தொல்சூதர் குடியில் பிறந்தவள். அவள் தந்தை புஷ்பகோஷ்டத்தில் அடுமனையாளராக இருந்தார். அவள் அன்னை காந்தாரியின் ஏவல்பெண்டு. சாந்தை அரண்மனைக்கு ஒரு நோன்புநிகழ்வுக்காகச் சென்றபோது சத்யசேனை அவளைக் கண்டு “அழகிய பெண்” என வியந்தாள். சாந்தை வெண்ணிறமான பருத்த உடலும் சிவந்த பருக்கள் கொண்ட வட்ட முகமும் கொண்டவள். நீல விழிகள் அவளை காந்தாரத்தின் குருதி கொண்டவள் என்று காட்டின. காந்தாரி அவளை அருகணையச்செய்து கைகளால் வருடிநோக்கினாள். “இவள் என் மைந்தனுக்கு மணமகள் ஆகுக!” என்று உரைத்தாள்.

அது ஆணை என்றே கொள்ளப்பட்டது. சத்யசேனை அவனை அரண்மனைக்கு அழைத்து பேரரசியின் ஆணையை சொன்னாள். அவனுக்கு மாற்றுச்சொல் இருக்கவில்லை. சாந்தையின் தந்தை அஞ்சினார். அவன் எளிய சூதன் அல்ல என்று அவர் அறிந்திருந்தார். “நமக்குரிய இடமல்ல. சுட்டுப்பழுத்த அடுமனைக்கலம் அது. நாம் அறிந்தது எனத் தோன்றும், தொட இயலாது” என்றார். ஆனால் அவள் அன்னைக்கு அந்த உறவு பேருவகையை அளித்தது. ஒரே நாளில் அவள் அரண்மனையில் தனித்தன்மை கொண்டவளாக ஆனாள். பிற சேடியர் அவளை அஞ்சவும் பணியவும் முற்பட்டனர். “செல்லுமிடத்திற்கு உரியவள் ஆவது பெண்ணின் இயல்பு. அடுமனைக்கலத்தை கையாளத் தெரியாதவள் பெண்ணே அல்ல” என்றாள்.

அச்செய்தியை அவன் அன்னை அறிந்தபோது அவள் முகம் சுருங்கியது. நெடுநேரம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. “அப்பெண்ணில் உங்களுக்கு நிறைவில்லையா, அன்னையே?” என்று யுயுத்ஸு கேட்டான். “என் கருத்திற்கு இங்கே என்ன இடம் உள்ளது?” என்று அன்னை சொன்னாள். “உங்கள் கருத்தை கேட்க விழைகிறேன்” என்றான் யுயுத்ஸு. “சரி, நான் வேண்டாம் என்கிறேன். பேரரசியின் ஆணையை மீறுவாயா நீ?” என்று அன்னை கேட்டாள். யுயுத்ஸு “மீற இயலாது, அது நன்றும் அல்ல” என்றான். “பிறகென்ன?” என்றாள் அன்னை. அவன் மேலும் ஏதும் கேட்கவில்லை. அவள் மேலும் சொல்ல விழைந்தாள், அவன் கடந்துசென்றான்.

அரண்மனையிலேயே அவனுடைய மணவிழவு நிகழ்ந்தது. பேரரசரும் விதுரரும் விழவுக்கு வந்திருந்தார்கள். அரசரும் உடன்பிறந்தார் அனைவரும் தங்கள் துணைவியருடன் பங்குகொண்டனர். அவன் அன்னைக்கு முறைமையும் வரிசையும் செய்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால் அவன் சாந்தையை மணந்தபோது அன்னையின் இடத்தில் அமைந்து சாந்தையின் கைபற்றி முறைச்சடங்குகளைச் செய்தவள் காந்தாரிதான். அவன் பேரரசியின் காலிலும் பின்னர் பேரரசரின் காலிலும் விழுந்து வாழ்த்துபெற்ற பின்னரே அன்னையின் அடிபணிந்தான். அந்த விழவு நகரெங்கும் நிகழ்ந்தது. ஏழு ஊட்டுபுரைகளில் விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் பொறாமையும் கூடவே மெல்லிய கசப்பும் அதன் விளைவான இளிவரலும் இருந்தன. சூதர்களில் மிகச் சிலர் பெருமைகொள்ள பெரும்பான்மையினர் உளம்சுருங்கினர்.

அன்னை அரண்மனையில் எந்த முகமாறுதலையும் காட்டவில்லை. ஆனால் அவள் தன் மாளிகைக்கு மீண்டதும் “நான் உனக்காக ஒரு பெண்ணை பார்த்துள்ளேன். நீ அவளையும் மணந்தாகவேண்டும். அவள் அன்னையையும் தந்தையையும் இங்கே வரச்சொல்லியிருக்கிறேன். நாளை வருவார்கள்” என்றாள். “எப்போது அவளைப் பார்த்து முடிவெடுத்தீர்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அவள் மறுமொழி சொல்லவில்லை. “சொல்க அன்னையே, எப்போது?” என்றான். அன்னை “எப்போதாக இருந்தாலென்ன?” என்று சீற்றம்கொண்டாள். “சொல்க, அவள் பெயர் என்ன?” என்றான். “அவள் பெயர் சுகிர்தை. இசைச்சூதர் குடியை சேர்ந்தவள்” என்றாள். “இசைச்சூதர் என்றால்?” என்றான். “அவள் அன்னை விறலி. அவள் தன் அன்னையுடன் இங்கே வந்தாள். அவள் அன்னையின் துணைவர் வேறு” என்றாள்.

அவன் வெறுமனே அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “அதனாலென்ன? நீ சூதகுடியினன் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “நான் அவளை மணக்க அவள் அன்னை ஒப்புக்கொண்டாளா?” அன்னை அவனை நோக்கி “ஆம், ஒப்புக்கொண்டாள். இன்று அவளிடம் பேசினேன்” என்றாள். “இன்றா?” என்றான் யுயுத்ஸு. “ஆம், இன்று அரண்மனையில் அவள் ஆடினாள், அவள் அன்னை பாடினாள்.” அவளை உடனே யுயுத்ஸு நினைவுகூர்ந்தான். மெலிந்த கரிய இளம்பெண். பெரிய விழிகள் கொண்டவள். வெண்கற்களாலான மாலை அணிந்திருந்தாள். ஆடும்போது அவள் பற்களின் ஒளியுடன் அவை இணைந்துகொண்டன.

அவன் உள்ளம் மெல்லிய கிளர்ச்சியை அடைந்தது. ஆனால் அவன் அதை கடந்தான். “அவளை அவள் அன்னை எளிதில் கைவிடமாட்டாள்” என்றான். “நான் அவளுக்குரியதை அளித்தேன்” என்றாள் அன்னை. “அன்னையே, இதன் வழியாக நீங்கள் அடைவதென்ன?” என்றான். அவள் “நான் அடைவதென்ன? என் மைந்தனுக்குரிய பெண்ணை தேடினேன்” என்றாள். “எனக்குரிய பெண்ணா?” என்றான் யுயுத்ஸு. “அறிவிலி, அந்தப் பெண் சாந்தை என்ன கல்வி அடைந்திருப்பாள்? நீ நூல்நவின்றவன். நெறியும் காவியமும் தேர்ந்தவன். அவள் அடுமனைக்கலைக்கு அப்பால் எதை அறிந்திருப்பாள்? அவளிடம் நீ நான்கு சொல் சேர்ந்து பேச முடியுமா?”

அவன் விழிகளைத் தாழ்த்தி “ஆம்” என்றான். “வேண்டுமென்றே உன்னை இந்த மணத்தில் கட்டினார்கள். நீ அடுமனையாட்டியின் கணவன் என்று ஆக்கிவிட்டார்கள்” என்று அவள் சொன்னாள். “அங்கர் மணந்ததும் அடுமனையாட்டியைத்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். அவள் சொல்லிழந்தாள். அந்தச் சீற்றத்தில் குரல் உயர “ஆகவேதான் உனக்கு இவளைத் தேடினேன். இவள் விறலி. காவியம் கற்றவள். உன்னுடன் சொல்லாட இயல்பவள்” என்றாள். யுயுத்ஸு “விறலியை மணந்தவன் என்று பெயர் அமையும்” என்றான். “ஆம், சூதர்களுக்கு அது பிழையல்ல என்கிறேன்” என்றாள்.

அந்த மணவிழவு அவன் அன்னையின் மாளிகையிலேயே நிகழ்ந்தது. விறலி தன் மகளுடன் வந்திருந்தாள். அவளுக்கு அங்கே என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை என்று தோன்றியது. அவளிடம் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. நாணமும் அச்சமும் தயக்கமும் வெளிப்படவில்லை. தன் பெரிய கருவிழிகளைச் சுழற்றி சுற்றிலும் நோக்கி அந்த மாளிகையை வியந்துகொண்டிருந்தாள். அவளை சேடியர் அழைத்துச்சென்று ஆடைகளும் அணிகளும் பூட்டியபோது மகிழ்ந்து சிரித்தாள். அதை ஒரு கூத்து என்றே எண்ணுகிறாள்போலும் என அவன் நினைத்துக்கொண்டான். அவனை நேருக்குநேர் நோக்கி பெரிய வெண்பற்களைக் காட்டி சிரித்தாள். அவன் அதனால் சிறுமைகொள்ளவில்லை, மகிழ்ச்சியே ஏற்பட்டது. ஆனால் அன்னை முகம் சிவந்தாள். விறலியிடம் “அவளுக்கு மணமகளாக நடிப்பது எப்படி என்று கூடவா தெரியவில்லை?” என்றாள்.

பேரரசர் வந்தபோதுதான் அங்கே அவர் வரவிருப்பதை யுயுத்ஸு அறிந்தான். “பேரரசரா? அன்னையே, நீங்கள் இதை சொல்லியிருக்கவேண்டும்” என்றான். “சொன்னால் நீ பதற்றம் கொள்வாய்” என்றாள் அன்னை. “பேரரசர் அறிவாரா, இங்கே என்ன நிகழவிருக்கிறது என்று?” என்று அவன் கேட்டான். “அறியமாட்டார். ஆனால் அவரும் நானும் நின்று உனது இந்த மணநிகழ்வை நடத்தவேண்டும் என விழைந்தேன்” என்றாள் அன்னை. பேரரசர் சீற்றம் கொள்ளக்கூடும் என அவன் நினைத்தான். ஆனால் அன்னைக்கு அதை எப்படி முன்வைப்பது என்று தெரிந்திருந்தது. “அரசே, நேற்று புஷ்பகோஷ்டத்தில் ஆடிய இளம்பெண்ணை நினைவுகூர்கிறீர்களா?” என்றாள். “ஆம், அன்னைக்கு இனிய குரல். துள்ளும் சொற்கள்” என்று அவர் முகம் மலர்ந்தார். “அவளையும் மைந்தன் மணப்பது நன்று என எண்ணினேன்… இங்கே அவர்கள் இருக்கிறார்கள். மணநிகழ்வை நீங்களே நின்று நடத்தியளிக்கவேண்டும்” என்றாள்.

அவன் சாந்தையிடம் பெரிய ஈடுபாட்டை காட்டவில்லை. அவள் தன் அன்னையின் இல்லத்திலிருந்து அரசி அளித்த சீர்வரிசைச் செல்வங்களுடன் அவன் இல்லத்திற்கு வருவதற்குள்ளேயே அவன் சுகிர்தையை மணந்த செய்தியை அறிந்துவிட்டிருந்தாள். அவள் தன் வலக்காலை எடுத்துவைத்து நுழையும்போது விழிப்பீலிகளில் நீர்த்துளிகள் இருப்பதை அவன் கண்டான். அவன் உள்ளம் நிலையின்மை கொண்டு புரண்டபடியே இருந்தது. அன்னையிடம் “இன்னொரு துணைவியென முடிவெடுப்பதற்கு முன் அவளிடம் பேசியிருக்கவேண்டும், அன்னையே” என்றான். “இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது? அரசகுடியினரும் சூதரும் பல மகளிரை மணப்பது இயல்பு. வைசியருக்கு மட்டுமே ஒரு மணம் கொள்ளும் வழக்கம் உள்ளது” என்று அன்னை சொன்னாள்.

முதல்நாளிலேயே அவனுக்கு அவள் வெறும் அடுமனைப்பெண் மட்டுமே எனத் தெரிந்துவிட்டது. அவளுக்கு அவன் தனக்குரியவன் அல்ல என்னும் எண்ணம் முன்னரே இருந்தது. அவன் எண்ணியதுபோல அரசமாளிகையும், அரசமைந்தனின் மனைவி என்னும் இடமும் அவளை மகிழ்விக்கவில்லை. அனைத்துமே அவளுக்கு அறியாதவையாக, திகைக்கவைப்பவையாக, ஆகவே எந்த உவகையையும் அளிக்காதவையாக இருந்தன. அவளால் ஏவலர்களிடம் குரலெழுப்பி பேச முடியவில்லை. பணிந்த குரலில் மன்றாட்டென்றே அவர்களிடம் தன் தேவைகளை சொன்னாள். அவர்கள் அவளை இளிவரல் தெரியும் விழிகளுடன் நோக்கி மிகையான பணிவை காட்டினர். ஆனால் அவள் கோரிய எதையுமே செய்யவில்லை.

அவளை ஒவ்வொரு செயலாலும் சிறுமைசெய்தனர். அவளை சிறுமைசெய்வது எது என்பதை அவர்கள் நுட்பமாக உணர்ந்திருந்தனர். அவள் உண்ண அமர்ந்தால் இன்னுணவை அள்ளி அள்ளி அவளுக்கு வைத்து “உண்ணுக… உண்ணுக!” என்றாள் விறலி. அவள் உணவை கையால் அளைந்தபின் விழிதாழ்த்தி பசியுடன் எழுந்துசென்றாள். அவள் வெளியே செல்ல விழைந்தால் மிகப் பெரிய பல்லக்கை அவளுக்காக ஒருக்கினர். அவள் அவர்களை நோக்காமல் அதை ஒழிந்தாள். அவர்கள் அவளுடன் விளையாடுவதை ஒருவரோடொருவர் சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டார்கள். அவளை அஞ்சுவதுபோல நடித்தனர். அவள் அகன்று அப்பால் சென்றதும் ஒரு மெல்லிய சிரிப்பொலித்துணுக்கை அவள் செவிகளுக்கென போட்டனர். அவள் கேட்க ஒரு சொல் உரையாடலில் இருந்து எழுந்து ஒலிக்கும். அது அவளுக்கு கூரிய பொருள் அளிப்பதாக இருக்கும்.

அவர்கள் அவளை வாய்தவறி “அரசி” என அழைத்தனர். அவள் அஸ்தினபுரியின் அரசியருடன் நின்றிருக்கையில் வேண்டுமென்றே அருகணைந்து தலைவணங்கி “ஆணை, அரசி” என்றனர். அவர்களில் எவரிடமிருந்தோ எழும் மெல்லிய நகைப்பு நச்சுக்கத்தி என அவளை கிழிக்கும் என அறிந்திருந்தனர். அவள் பதறி முகம் சிவந்து மூச்சிரைப்பாள். ஆனால் அவர்களை அழைத்துக் கண்டிக்க அவளால் இயல்வதில்லை. தன் தனியறையில் அமர்ந்து விம்மி அழுதாள். நாட்கணக்கில் தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தாள். அணிகொள்வதும் ஆடைமாற்றுவதும் ஒழிந்தாள். அதை பிரகதி கண்டித்தாள். “நீ அரசமைந்தனின் துணைவி. இங்கே உனக்கு ஆடையும் அணியும் குவிந்துள்ளன… நீ அவற்றுக்கு உரியவள்” என்றாள். அவள் விழிதழைத்து விம்மினாள்.

“அவளால் இங்கே இசைய முடியவில்லை” என்று அவன் சொன்னான். “அதெல்லாம் சின்னாட்களுக்கே. விரைவிலேயே அவள் கற்றுக்கொள்வாள்… நோக்குக! பெண்ணுக்கு பிறர்மேல் சொல்செலுத்துவதில் பெரும் ஈடுபாடு இருக்கும்” என்றாள் அன்னை. ஆனால் அவ்வண்ணம் நிகழவே இல்லை. அவள் எப்போதும் மாளிகையில் சிறைப்பட்டவளாகவே இருந்தாள். அவன் அவளை மகிழ்விக்க முயன்றான். அவன் அளித்த பரிசுகள் அவளுக்கு பயனற்றவை எனத் தோன்றின. அவன் உரைத்த இன்சொற்கள் வேறு எவரிடமோ என அவளுக்குக் கேட்டன. அவன் தன்னிலையில் இருந்தபோது அவளிடமிருந்து அயலானான். அவளுக்காக இறங்கிச்சென்றபோது அவள் அவன் இறங்குவதை உணர்ந்து ஒவ்வாமைகொண்டாள்.

ஒருநாள்கூட அவள் அவனுடன் உளம் கரைந்து இருக்கவில்லை. குளிர்ந்த செயலற்ற உடலையே அவன் எப்போதும் அடைந்தான். எவ்வகையிலும் உள்நுழைய வாயில் அற்ற மாளிகை. அவளை இயல்பாக்க முயன்றான். அவள் உள்ளத்தை மலர்விக்கவும் அவளிடமிருந்து புன்னகையும் சொல்லும் எழச்செய்யவும் பலவற்றை இயற்றினான். அத்தோல்வி அவனை சீற்றம்கொள்ளச் செய்தது. அது தன் மீதான புறக்கணிப்பு என எடுத்துக்கொண்டான். அவள் அச்சமென நடிக்கிறாள், ஆழத்திலுள்ளது வெறுப்பு என எண்ணிக்கொண்டான். அவளை வெறுக்கவும் அகலவும் அந்நம்பிக்கை தேவைப்பட்டது. அவள் அவனுடைய குழவி ஒன்றை பெற்றாள். அவன் அவளை அதன்பின் அக்குழவியின் அன்னை என்று மட்டுமே அறிந்தான்.

சுகிர்தை முதற்சில நாட்கள் அவனை அலைக்கழிக்கும் சுழலாக இருந்தாள். அவளுடைய உடல்வலிமையும் துள்ளலும் கட்டற்ற காட்டுக்குதிரை போலிருந்தன. எவர் மேலும் அவளுக்கு அச்சமோ தனிமதிப்போ இருக்கவில்லை. அவன் அன்னையை “முரசு” என்று சொன்னாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஓசையிடுகிறார்கள்!” என்று சொல்லி வாழைப்பூ நிறமான ஈறுகள் தெரிய சிரித்தாள். “ஏன்? உன்னை அவர் கண்டிக்கிறாரா?” என்றான். “ஓசையிட்டு நகைக்கக் கூடாது என்கிறார். அதைச் சொல்ல அவர் ஓசையிடுகிறார். கிழவி பழைய முரசுபோலிருக்கிறார். தோல்கிழிந்த முரசு.” அவள் உரக்க நகைக்க அவன் திகைத்தான். “மெல்ல” என்றான். “மெல்லவா?” என்றபின் அவள் பேரோசையிட்டு நகைத்தாள்.

அவள் பேசும் காவியம் அவனுக்குப் புரியவில்லை. அவளுக்கு காவியம் என்றாலே சொல்லழகுதான். அதை இசையுடன் இணைத்துக்கொண்டாள். இன்சொற்கள் என்றே அவள் காவியத்தை சொன்னாள். அவன் காவியம் கற்றதெல்லாம் அதிலுள்ள நெறிகளுக்காகத்தான். காவியத்தில் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன என்பதே அவளுக்குத் தெரியவில்லை. “காவியத்தில் சொல்லப்பட்ட நெறிகளின்படி வாழ்ந்த காவியநாயகர்கள் எவர்?” என்று அவள் அவனிடம் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.

அவளுடனான காமம் அவனுக்கு பெருங்கொண்டாட்டமாக இருந்தது. குதிரையை அவனால் வெல்லவே முடியவில்லை. அது அவனை வைத்து விளையாடியது. பின்னர் தூக்கி வீசிவிட்டு அப்பால் சென்றது. அவள் மிகச் சிலநாட்களிலேயே அவனிடமிருந்து விலகினாள். அதன்பின் மாளிகையிலிருந்தும் அகன்றாள். மாளிகைக்கு வெளியே ஒரு சிறு கொட்டகை அவள் இடமாகியது. அங்கே அவளை நாடி விறலியரும் பாணரும் வந்தனர். அவர்களுடன் அவள் சொல்லாடினாள். இல்லம் அதிர வெடித்து நகைத்தாள். அங்கே அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டான். அன்னை “அது காட்டுவிலங்கு. இல்லத்தில் அடங்காது” என்றாள். “ஆம், அதை நான் முன்னரே உணர்ந்திருந்தேன். நீங்கள் எவரையோ பழிவாங்க எண்ணினீர்கள். பழிவாங்கிவிட்டீர்கள்” என்றான். அன்னை அவனை கூர்ந்து நோக்கினாள். சொல்லிழந்து நின்றுவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவளிடம் நெருங்க எண்ணினான். தன் கல்வியை, அரண்மனைப் பொறுப்பை கடந்து அவளிடம் சென்றுவிட விழைந்தான். ஆனால் அவனால் தன் எல்லையை கடக்கவே இயலாதென்று அறிந்திருந்தான். அவள் தன் ஆட்டர்களுடன் கொண்டாடுவதை நோக்கி நின்றிருந்தபோது ஒருமுறை ஓர் ஆட்டன் அவளை பின்னிருந்து அணைத்து ஆடுவதைக் கண்டான். அந்தத் தொடுகையின் பொருள் அவனுக்குப் புரிந்தது. அதன்பின் அவளை நோக்குவதையே அவன் தவிர்த்தான். புரவிக்கு இணை புரவியேதான் என அன்னையிடம் சொல்ல விழைந்தான்.

அன்னை அவன் உணர்ச்சிகள் அனைத்துக்கும் அப்பால் என திகழ்ந்தாள். இரு துணைவியர் அமைந்த பின்னரும் ஏன் அவன் மாளிகைக்கு வராமல் அரண்மனையிலேயே தங்கிவிடுகிறான் என அவள் கேட்டதில்லை. அவளுக்கு பேரரசர் திருதராஷ்டிரர் அளித்த அந்த மாளிகை அரண்மனையை ஒட்டியே இருந்தது. இளமையில் திருதராஷ்டிரர் அங்கே நாள்தோறும் வரும் வழக்கமிருந்தது. பெரும்பாலான நாட்களில் அன்னை தன் ஏவற்பெண்டுகளுடன், இசைக்கருவிகளுடன் புஷ்பகோஷ்டத்திற்கு செல்வாள். பேரரசரின் மாளிகையிலேயே தனியறை அவளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. பேரரசருக்கு முன் இசைமீட்டி பரிசில்கொள்ளும்பொருட்டு வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் சூதர்களையும் விறலியரையும் அவள்தான் முதலில் எதிர்கொள்வாள். அவர்களின் திறனை தான் மதிப்பிட்டு அறிந்து அவர்களை பேரரசர் முன் அமர்த்துவாள்.

அவர்களைப்பற்றி அவள் பேரரசரிடம் கூறும்போது அவர்களுக்குள் சுருக்கமான சொற்பரிமாற்றமே நிகழும். பெரும்பாலும் திருதராஷ்டிரர் முனகலாகவே மறுமொழி உரைப்பார். அன்னையின் முகமும் ஏவலர்களுக்குரிய பணிவையும் அச்சத்தையும் விலக்கத்தையுமே காட்டும். ஆனால் அவள் விழிகள் கனிந்திருக்கும். அவள் சொற்களில் தனியான ஒரு மென்மை அமைந்திருக்கும். அவர் அவளிடம் சொல்லும் சொற்களில் வேறெவரிடமும் இல்லாத கனிதல் இருக்கும். அது தன் உளமயக்கா என அவன் எண்ணியதுண்டு. பலமுறை அவன் அதை உற்றுநோக்கினான். பின்னர் அந்தக் கனிவு அதேபோல சங்குலனிடம் அவர் பேசும்போது வெளிப்படுவதை கண்டான்.

அதை உணர்ந்தபோது தன்னுள் பொறாமைக்கு மாற்றாக ஓர் உவகைதான் எழுந்தது என்பதை அவனே விந்தையாக எண்ணிக்கொண்டான். அன்னையை அவன் நோக்கும் கோணமே மாறுபட்டது. ‘வைசியர்குலத்து அரசி’ என்னும் சொல் முன்னர் அவனுக்கு சற்றே ஒவ்வாததாக இருந்தது. அச்சொல் அதன்பின் ஒரு அழகு கொண்டுவிட்டதாகப் பட்டது. அவள் ஷத்ரியப்பெண் அல்ல. அரசகுடிப் பெண்கள் சூடிக்கொள்ளவேண்டிய அனைத்தையும் கழற்றிவிட்டு அவரை மேலும் அணுக்கமாகச் சென்று அறிய வாய்ப்பு கொண்டவள். அவள் ஷத்ரியக் குருதிகொண்டமையால் அவன் சூதன். அவள் அவன் அன்னையென்பதால் சூதப்பெண். சூதர்களுக்கு இசையும் கவிதையுமே மொழி.

அவர்கள் இசைகேட்கும்போதும் அவன் உடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பான். இசை நிகழ்ச்சி தொடங்கும்போது அன்னை பேரரசரையும் இசைக்கலைஞர்களையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்களின் இசையை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டுமே என அஞ்சுபவள்போல. திருதராஷ்டிரர் எல்லா இசையையும் முகம்சுளித்து விருப்பமில்லாதவர் போலத்தான் கேட்பார். மூக்கினூடாக அவர் மணம் முகர்வதுபோலத் தோன்றும். இசையறிவோரிடம் வெளிப்படும் முகமலர்வும் தலையசைப்பும் விரல்தாளமும் அவரிடம் வருவதில்லை. ஐயம்கொண்டவர் போலவோ உளவிலக்கம் அடைந்தவர் போலவோ தோன்றுவார். ஒரு தருணத்தில் அவரிடமிருந்து மெல்லிய முனகல் ஒன்று வெளிப்படும். அது அச்சூழலை ஒரே கணத்தில் மாற்றிவிடும். அன்னை முகம் மலர்வாள். இசைஞர்களும் அவ்வோசையை உணர்ந்துகொள்வது விந்தைதான். அனைவரும் இயல்பாகி, உடல் குழைய, முகம் மலர தங்கள் தன்னுணர்வுகளை இழந்து இசையில் ஆழ்வார்கள். பின்னர் அங்கே இசை மட்டுமே திகழும், பிறர் அதன் உறுப்புகளென்றிருப்பார்கள்.

அரிதாக திருதராஷ்டிரர் முனகலோசை எழுப்புவார். அது சில தருணங்களில் மெல்லிய கேவலோசையாகத் தோன்றும். வலிகொண்டவர் போலவோ எதையோ நினைவுகூர்ந்தவர் போலவோ எழமுயல்பவர் போலவோ. அத்தருணம் இசையின் உச்சமென அனைவருமே உணர்ந்திருப்பார்கள். இசை முடிந்தபின் திருதராஷ்டிரர் அசையாது அமர்ந்திருப்பார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருக்கும். அன்னை அனைவரையும் எழுந்துசெல்லும்படி கைகாட்டுவாள். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு விலகிச்செல்வார்கள். அன்னை மட்டுமே அவருடன் அப்போது இருப்பாள். அப்பால் சங்குலன் நின்றிருப்பான். வேறெவரும் அப்போது உடனிருக்க இயலாது. பேரரசி காந்தாரியோ, துரியோதனனோ, நூற்றுவர் மைந்தரோ, துச்சளையோ, அவனோ கூட. அத்தனை தனிமையான ஓர் இடம்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ஹெரால்ட் ப்ளூம்
அடுத்த கட்டுரைஇன்றைய காந்திகள்