பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:

1950களிலேயே தனது குடும்ப வீட்டை இடித்து, ஒரு சிறுபள்ளிக்கூடத்தை துவக்கியவர் பொன்னுத்தாய் அம்மாள். ஒடுக்கப்பட்ட பெண்குலத்தில் பிறந்தபோதும், தனது தளராத நம்பிக்கையால் அக்காலத்திலேயே படித்துப் பட்டம் பெற்றவர். அதன்விளைவாக நிறைய துயருற்றவர். இருந்தும்கூட, வீதிவீதியாக அலைந்து, ஒடுக்கப்பட்ட சேரி மக்களிடமும், காடுமேடுகளில் ஆடுமாடுகள் மேய்ப்பவர்களிடம் பேசிப் புரியவைத்து அவர்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தவர். காந்தியின் அரிஜனசேவா சங்கத்தோடும், அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தோடும் இணைந்து பொன்னுத்தாய் அம்மாள் பள்ளிக்கூடம் பொட்டுலுப்பட்டி கிராமத்திலும் அதைச்சுற்றிய பகுதிகளிலும் கல்விப்புரட்சிகளை நிகழ்த்தியுள்ளது. தியாகி கக்கனால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட பள்ளி இது.

கட்டணத்தொகை ஏதும் பெறாத முற்றிலும் இலவசமான இப்பள்ளியை மிகுந்த நெருக்கடியில் நடத்தியவர் பொன்னுத்தாய் அம்மாள். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டங்களில், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வீடுவீடாகச் சென்று ‘படிக்க வாங்க கண்ணுகளா!” என்று பின்தங்கிய குழந்தைகளின் மனதில் கல்வியை விதைத்த முதலாளுமை. கல்வியறிவு ஒன்றுதான் சாதியத்தளையிலிருந்து நம்மை விடுவிக்கும் என முழுமூச்சாக நம்பியவர்.

1980-ல், சாமி ஊர்வலத்தில் உண்டான கலவரத்தில், ஆதிக்கச் சாதியினரால் இவருடைய பள்ளி முழுவதுமாய் அடித்துச் சிதைக்கப்பட்டது. இத்தோடு பொன்னுத்தாயின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைக்கையில், இடிந்துபோன பள்ளிக்குள் குழந்தைகளை உட்காரவைத்து பாடம் நடத்திய துணிவுள்ளம் அம்மாவுடையது. அதன்பின் பெருமரமென கிளைவிரித்து விழுதூன்றி வளர்ந்தெழுந்து இன்று, அப்பகுதியில் முக்கியமானதொரு கல்விச்சாலையாக நீடிக்கிறது அப்பள்ளி. தனது இறுதிமூச்சுவரை பள்ளியைப் புதுப்பிக்கப் போராடி 2002ல் பொன்னுத்தாய் அம்மா இயற்கையோடு கலந்தார். அவர் இறந்த அன்றைய தினம், உள்ளூர் கேபிள் சானல்கள் இறுதிஊர்வல நிகழ்வுகளை ஒளிபரப்பின.

வாடிப்பட்டியைச் சார்ந்த பொன்னுத்தாய் என்னும் தனிமனுஷி தனது கிராமத்தில், சமூகத்தில், கல்விப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தியாகத்துக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும், குக்கூ குழந்தைகள் வெளியின் ‘முகம் விருது’ இவ்வருடம் வழங்கப்படுகிறது. காலம் பிந்தைய கெளரவிப்புதான் என்றாலுங்கூட, முன்னுதாரணமான ஒரு வாழ்வு இச்சமகாலத்தில் ஒளிவெளிச்சம் அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் விதையாகிறது இவ்விருது.

வி.பி.குணசேகரன், நம்மாழ்வார், மரம்தாத்தா நாகராஜன், அறிவியலாளர் அரவிந்த் குப்தா, விதைக்காவலர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஜெயமோகன், காதுகேளாதோர் பள்ளி நிறுவனர் முருகசாமி உள்ளிட்ட, பெருந்தகைமை வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இச்சிறு அடையாளம், இம்முறை பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் திருக்கரங்களால் அமரர் ‘பொன்னுத்தாய் அம்மாவுக்கு’ வழங்கப்படுகிறது. அம்மாவின் சார்பாக, அப்பள்ளிக்கூடத்தை இயக்கிவரும் சமகாலத் தோழமைகள் இக்கெளரவிப்பை நேரில்வந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

அக்டோபர் 18, திண்டுக்கல் காந்திகிராம் ஊழியரகத்தில், காலை 10மணிக்கு இதற்கான நிகழ்வு அமைகிறது. அன்புத்தோழமைகள் அனைவரையும் வரவேற்கிறோம். நிறைநன்றிகள்!

இப்படிக்கு,
குக்கூ காட்டுப்பள்ளி

 

முந்தைய கட்டுரைஇன்றைய காந்திகள்
அடுத்த கட்டுரைஇரு நடிகர்கள்