வாசல்பூதம் – கடிதங்கள்

லக்‌ஷ்மி மணிவண்ணன்

வாசல்பூதம்

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

வாசல்பூதம் ஒரு நல்ல கட்டுரை. உங்கள் குறிப்பும் லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பும் சேர்ந்து ஒரு நல்ல கட்டுரையாக ஆகிவிட்டன. நான் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஆர்வத்துடன் கவனிக்கும் விஷயம் அதில் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது. அவர்களுக்கு இலக்கியத்தின் நுட்பங்களோ அழகோ முக்கியமே கிடையாது. அவர்கள் அதில் பார்ப்பதெல்லாம் தங்களுக்கு உடன்பாடான கருத்து இருக்கிறதா என்று மட்டும்தான். அதை அவர்கள் ஒரு நிபந்தனையாகவே வைக்கிறார்கள்

 

அவர்கள் அதை இளம்வாசகர்களுக்குப் பழக்கிவிட்டுவிடுகிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். அவர்கள் தங்களை வந்தடையும் இளைஞர்களை இதைப்படிக்காதே, இதைப்படி, இதை இப்படிப் படி என ஆரம்பத்திலேயே வழிகாட்டி விடுகிறார்கள். அந்த வழியிலே சென்று பிறகு மீள்வது மிக கடினம். ஆரம்பகால வருடங்களெல்லாம் பாழாகிவிடும். பெரும்பாலானவர்கள் அப்படியே இலக்கியத்தைவிட்டே வெளியே சென்றுவிடுவார்கல். உண்மையில் இங்கே இலக்கியவாசிப்பே ஒரு நாலைந்துவருட லக்சுவரிதான். அந்த ஆண்டுகள் இப்படி இவர்களால் வீணாக்கப்பட்டுவிடுகின்றன

 

இதில் என்ன சோகம் என்றால் இந்த அரசியல்வாதிகள் புதியவாசகர்களை தேடி அலைகிறார்கள். அவர்களை பிடிக்க பல்வேறு அமைப்புகளாக வலைவிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் பெருவாரியாக வாசகர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். மாறாக இலக்கியத்திற்குள் நுழைய வாசலை மூடியே வைத்திருக்கிறார்கள். நாமேதான் தட்டி உள்ளே நுழையவேண்டியிருக்கிறது.

 

ஜெயக்குமார் எஸ்

 

அன்புள்ள ஜெ

 

வாசல்பூதம் வாசித்தேன். நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் ஒரு கசப்பான உண்மை இது. இதை நான் சமீபத்தில் கண்ட ஒன்றுடன் இணைத்துப்பார்க்க விரும்புகிறேன். வாசகசாலை அமைப்புடன் தொடர்புடைய ஒரு இளைய வாசகர் உங்களை அவன் இவன் என்றெல்லாம் வசைபாடிக்கொண்டிருந்தார். எதையுமே வாசிக்க ஆரம்பிக்கவில்லை. அவர் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது இன்னொரு மூத்த வாசகசாலை முகநூல்பிரபலத்தை. அவருக்கும் வாசிப்பெல்லாம் கிடையாது. அரசியல்நிலைபாடு மட்டும்தான். அதனடிப்படையில் அவர் வசைபாட இவர் அதைக்கேட்டு வசைபாடுகிறார்

 

இப்படி இலக்கியத்திற்குள் நுழைவதற்குள்ளாகவே இலக்கியவாதிகளை வசைபாட ஆரம்பிப்பவர் எதை வாசிக்கமுடியும்? இவருக்கு எது கிடைக்கும்? இவர்களை இப்படி திரியச்செய்துவிட்டு அவர்கள் சென்றுவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் இலக்கியவாசகர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அநீதி இதுதான்

 

அருண்குமார்