தேவதேவனின் புதிய கவிதைத் தொகுதி. ஒவ்வொருமுறை அவருடைய தொகுதி கைக்கு வந்துசேரும்போதும் மிகமிகப்பழகியதுபோலத் தோற்றமளிக்கிறது. பின்னர் ஒவ்வொரு கவிதையும் புதிது என்றும் படுகிறது. உலகின் மாகவிஞர்கள் அனைவருமே திரும்பத்திரும்ப எழுதியவர்கள். ஒரு மெல்லிய சுவரவேறுபாட்டை பிடித்துவிட ராகங்களை ஆண்டவர்கள். தேவதேவனின் ஒரு கவிதை இன்னொரு கவிதைபோல் இருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இருக்கும் நுண்ணிய வேறுபாட்டில் அவருடைய விண்தாவல் நிகழ்கிறது.
துயரற்றவை இக்கவிதைகள். இப்புவியில் கவிஞன் என அவர் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை. இழப்பதும் இல்லை. அவருடையது ஒரு பெரும் கொண்டாட்டம். விழிகளால் செவிகளால் இவ்வுலகைக் காண்பதன் களிப்பு. ஆனால் அனைத்து உலகியல் துயர்களையும் கடந்துவிடும்போது நம்மில் எஞ்சும் ஒரு துயர் இக்கவிதைகளில் உள்ளது. தித்திக்கும் துயர். ஆனால் மாற்று இல்லாதது. இருப்பின், தன்னுணர்வின், பேருணர்வின் துயர் அது
மீண்டும்மீண்டும் அதைப் பாடிக்கொண்டிருக்கின்றன இக்கவிதைகள்
நிகழ்ந்துள்ளது என்ன குற்றம்?
ஜன்னல்வழியே
கைநீட்டி அவனை எழுப்பியது
காலைக்கதிர்
பகலெல்லாம்
அவனோடிதான் கழித்திருந்தால்
அவன் விடைபெறும் அந்தியில்
துயில்போக மாட்டானா?
இருள்விழுங்கிவிட்ட பரிதியைத்தான்
இன்னும் எத்தனை நாட்கள்
அவன் பார்த்துக்கொண்டே இருப்பது?
துயில் அரவணைக்கும் பரிதியை
அவன் காண்பதெப்போ?
காதலும் கருணையும்
மனிதனைக் காத்துக்கொண்டிருக்கும்
இப்புமியில்
நிகழ்ந்துள்ளது என்ன குற்றம்
எவர் குற்றம்?
தேவதேவனின் கவிதைகளில் எப்போதுமுள்ள ஒரு பாவனை அது. ‘மேகம் திகழும் வான்விழியே உன் தனிப்பெரும் வியக்தியை துக்கம் தீண்டியது எங்கனம்? என்னும் வியப்பு. விண்ணின் மகத்தான ஒளிக்கு கீழே மானுடன் அடையும் துயர்களையும் சிறுமைகளையும் கண்ட தவிப்பு. ஆனால் அதுவும் அவரில் களிப்பென வெளிப்படும் அந்த உளநிலையின் ஒரு பகுதிதான்
தேவதேவனின் ஆளுமையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தும் கவிதைகளில் ஒன்று இது.
துண்டு
“சாலையிலே துணை விரிப்போம்
காலையிலே கண்ணு விழிப்போம்”
கட்டிலானாலும் சரி
மெத்தையானாலும் சரி
கட்டாந்தரையானாலும் சரி
அவன் தன் கைவசமிருக்கும்
துண்டை விரிக்கிறான்
பிறநேரங்களிலெல்லாம்
அதை அறுபத்துநான்கு துண்டுகளாக மடித்து
தன் தோள்பைக்குள் வைத்துக்கொள்கிறான்
”சொல்லாதே! அப்படிச் சொல்லாதே!” என்று
கண்ணீருடன் கதறுகிறது துண்டு அவனிடம்
“நன்றாகப்பார் என்னை
நான் துண்டு அல்ல
உன் நண்பன்
ஒருக்காலும் உன்னை மறக்க இயலா ஆருயிர்
நீ விரிக்கும்போதெல்லாம்
இப்பேருவகையையே அமர்த்தித் துயிலவைத்துவிடும்
புனித முழுமை
நாடோடி அவன் தோள்பைக்குள்
ஒரு வெற்றுக்கிண்ணமும் இருக்கிறது
அதன் ஆசையும் இவ்வுலகின்
ஒட்டுமொத்த உயிர்கள் அளவிற்குப் பெரியது
*
நாடோடி தேவதேவனின் கவிதைகளின் முதன்மையான படிமங்களில் ஒன்று. பாஷோவின் நாடோடி. அவன் பொக்கணத்தில் உள்ளவை இரண்டு. செல்லுமிடத்தை எல்லாம் வீடாக்கிக்கொள்ளும் ஒரு துண்டு. அனைத்து உலகையுமே இரந்துபெற விழையும் ஒரு திருவோடு. திருவோடு அதன் நிறைவின்மையுடன் எஞ்சுகிறது. துண்டு ஒன்றுபதினாறாக விரிந்து அவரை ஏந்திக்கொள்கிறது
அமுதநதி
தேவதேவன் கவிதைகள்
தமிழினி பதிப்பகம்