குற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்

குற்றவாளிக்கூண்டில் மனு வாங்க

எஸ்.செண்பகப்பெருமாள் என்பவர் எழுதிய குற்றவாளிக்கூண்டில் மநு எனும் நூல் மநுஸ்மிருதி குறித்த சிறு விளக்க நூல். தற்போது சாதி, தீண்டாமை குறித்த விவாதங்கள் வரும்போது மநுவும் உடன் வந்துவிடுகிறார். மநுஸ்மிருதியே தீண்டாமைக்கும் சாதிக்கொடுமைக்கும் மூலகாரணம்; மநுஸ்மிருதியே இந்தியாவின் மையமான சட்டவிதிகளாக இருந்துள்ளன என்பதுபோன்ற பல்வேறு வாதங்களை இந்த மநுவை எதிர்ப்பவர்கள் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் வர்ண முறை நடைமுறையில் இருந்தது, பின்னர் அது மாறாத சாதி சமூகமாக உருமாறியது, வேதங்களை பாதுகாக்கும் நோக்குடன் மநுஸ்மிருதி மாற்றம் கண்டது போன்ற விஷயங்களை ஆசிரியர் விளக்குகிறார். ஆசிரியர் தன் கருத்துகளுக்கு கீழ்க்கண்ட நூல்களை ஆதாரமாகக் கொள்கிறார்.

2) அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியம்மா உரைசெய்த  ‘மனு நீதி என்னும் மனுதர்மசாஸ்திரம்’

3) அம்பேத்கரின் ‘பார்ப்பனியத்தின் வெற்றி’ (Triumph of Brahmanism : regicide or the birth of counter-revolution)

4) Georg Buhler என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘The Laws of Manu’

இந்திய சமூகத்தில் சமூகத் தளம், சமய தளம் என இரு தளங்கள் அடிப்படையாய் உள்ளன. சமூகத்தளம் நடைமுறையில் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்வதற்கும், நிர்வாகம், குற்றங்கள் அதற்கான தண்டனைகள் போன்ற நடைமுறைகளை தொகுத்துக்கொள்ளுதல் போன்றவைகளை ஸ்மிருதி எனப்படும் சட்டநூல்கள் (சாஸ்திர நூல்கள்) செய்கின்றன.இந்த ஸ்மிருதி நூல்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுதல் அடையக்கூடியவை. இந்தியாவில் பொதுவாக சமயம் சார்ந்த விஷயங்கள் கூட சமூக அமைப்பிற்குள் வைத்துப் பார்க்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திர நூல்கள் சட்டதிட்டங்கள் மட்டுமின்றி சமூகங்களை மோட்சத்தை நோக்கி வழிகாட்டுபவையாகவும் உள்ளன. மநுஸ்மிருதி  ஆன்மிகம் சார்ந்த தகவல்கள் எதையும் தரவில்லை; ஆனால் அவற்றின் தேவை பற்றிய அறிவிப்புகளைத் தருகிறது.

மனுஸ்மிருதி உட்பட பதினெட்டு வகையான தர்ம சாஸ்திரங்கள் பற்றி பிங்கல நிகண்டு கூறுகிறது. மநுவின் பெயரால் வழங்கப்படும் தற்போதைய ஸ்மிருதி நூல் முதல் நூலன்று. முதலில் எழுதப்பட்ட மநுஸ்மிருதியில் இருந்து பல்வேறு திருத்தங்களுடன் அடுத்தடுத்து ஆறு ஸ்மிருதி நூல்கள் வந்தன. அவையாவன, ஸ்வயம்புவ மனு (Svayambhuva manu- முதலாவது மநு), ஸ்வோரோசிஷஸ் (Svarocishe Manu), உத்தமர் (Uttama Manu), தாமஸர் (Tapasa Manu), ரைவதர் (Raivata Manu), கக்ஷீஸ் (Kakshusha manu), விஸ்வாவசு  (அ)  விஸ்வேதேவர் (Visvasvat  Manu). ஆறாவது மநுவான கக்ஷீஸ் எழுதிய மநுஸ்மிருதி நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ‘ஆபத்துக் காலம்’ (Time of distress) ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. அக்காலத்திற்கென தற்காலிக மாற்றாக ஏழாவது மநுஸ்மிருதி (விஸ்வேதேவர் எழுதியது) உருவாக்கப்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார். நம்மிடம் இப்போது இருப்பது இந்த மநுஸ்மிருதிதான்.

வர்ண அமைப்பு– வர்ணம் என்பதற்கு இரண்டு பொருள் இருப்பதாக அம்பேத்கர் கூறுகிறார். ஒன்று அந்தஸ்து; இன்னொன்று தொழில். இரண்டும் பரம்பரையாக வருவதல்ல. திறமையாலும் விருப்பதாலும் வருவது. எனவே வர்ணம் மாற்றத்துக்கு உட்பட்டது. வர்ணமும் ஜாதியும் ஒன்றெனக் கருதும் குழப்ப நிலைக்கு மூலகாரணமாக அம்பேத்கர் கருதியது ‘பிராமணர்’ என்ற சொல்தான். வர்ணத்தில் இருந்த பிராமணர் என்ற தன்மை, பின்னர் அது ஜாதியாக மாறியபோது அப்படியே நீடித்தது. வர்ணம் ஜாதியாக மாறிய பரிணாமத்தில் மூன்று மாற்றங்கள் நிகழ்ந்ததாக அம்பேத்கர் கூறுகிறார்.

முதல்நிலை– அக்காலத்தில் பெரியோர்கள் (அ) அதிகாரிகள் குழு (அக்குழுவிற்கு மநு என்று பெயர்) மக்களை ஆய்வு செய்து தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வர்ணத்தை வழங்கியது. அதில் பெற்றோருக்கு எந்தப்பங்கும் இல்லை. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் என்ற மூன்று வர்ணத்துள் வைக்கப்படும் தகுதி இல்லாதவர்கள் (அ) அதற்கான தேர்வுகளில் பங்கேற்காதவர்கள் சூத்திரர்களாக இருந்தனர். இந்த ஏற்பாடு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே. பின் மீண்டும் அம்மக்கள் அந்த மநு குழுவிடம் சென்று தங்களது புதிய வர்ணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது நிலை–  இந்நிலையில் குருகுலம் என்கிற அமைப்பு நடைமுறைக்கு வந்தது. ஒரு மாணவன் ஒரு குருவிடம் தங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கல்விகற்க வேண்டும். பன்னிரண்டாண்டுகள் முடிந்தபின்னர் ‘ஸமாவர்த்தன ஸமயம்’ எனும் சடங்கின் மூலம் உபநயனம் செய்துவைக்கப் படுகிறது. அந்த குருவின் மூலம் அவன் எவ்வர்ணத்தைச் சார்ந்தவன் என்பதும் அறிவிக்கப்படுகிறது.

இவ்விரண்டு நடைமுறைகளில் உள்ள ஒற்றுமை, இரண்டுநிலையிலும் வர்ணதர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் செயல்படவில்லை. ஒருவனுக்கு உபநயனம் செய்வித்து வர்ணம் அறிவிக்கும் உரிமை அவன் பெற்றோருக்கு இல்லை. குருவுக்கே உண்டு. இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு, முதல் நிலையில் ஒரே மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே எல்லா வர்ணங்களுக்கும் மாறிவிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இரண்டாவது முறையில் உபநயனம் மூலம் பெற்றுக்கொண்ட வர்ணமானது அவன் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும்.

மூன்றாவது நிலை– இந்த மூன்றாவது நிலையில் மாறும் தன்மையுடைய வர்ணமானது மாறா தன்மையுடைய ஜாதியாக மாறிவிட்டது. இக்காலகட்டத்தை மநு ‘ஆபத்துக் காலம்’  (Time of Distress) என்கிறார். இங்கு ஒருவனுக்கு உபநயனம் செய்வித்து  வர்ணம் அறிவிக்கும் உரிமை குருவிடம் இருந்து தந்தைக்குச் சென்றது. இங்குதான் வர்ணமானது பிறப்பின் அடிப்படையிலான ஜாதியாக மாறியது என அம்பேத்கர் கருதுகிறார்.

ஆபத்துக் காலம்– வேதங்கள் தொடக்கத்தில் எழுத்துவடிவில் எழுதப்பட்டிருக்கவில்லை.  வாய்மொழியாக போதிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. குரு-சிஷ்ய பரம்பரை  அழிந்துபோனால் வேதங்கள் அழிந்துபோகும் என பெரியோர்கள் அஞ்சினர். தற்போதைய மநுஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி.மு. 170 காலகட்டம் என அம்பேதகர் கருதுகிறார்.  அது அசோகர் காலத்துக்கு பிந்தியது. அசோகர் காலத்தில் புத்தமதம் அரசாங்க ஆதரவு பெற்றது. வேதங்களுக்கு எதிராக புத்தமதம் தன் கருத்துகளை பரப்பி வந்தது. பௌத்தத்தால் வேதமரபு அழியும் ஆபத்து உள்ளதாக பெரியோர்கள் கருதினர். இதுவே ஆபத்துக் காலம் எனப்படுகிறது. அதாவது மநுஸ்மிருதி குறிப்பிடும் ‘ஆபத்துக் காலம்’ என்பது வேதங்களுக்கு எதிராய் பௌத்த மதம் வளர்ந்துவந்த காலகட்டமாகும் என்கிறார் ஆசிரியர்.

எனவே வேதங்களைக் காப்பாற்ற மாற்று ஏற்பாடுகளை செய்தனர். அதனால் விஸ்வேதேவர், ஸாத்யர், மாமுனிவர்களாகிய பிராமணர்கள் ஆகியோர் கூடி புதிய சட்டங்களுடன் கூடிய மநுஸ்மிருதி ஒன்றை (தற்காலிக மாற்றாக) உருவாக்கினார். இதுவே ஏழாவது மநுஸ்மிருதி (விஸ்வேதேவர் மநுஸ்மிருதி) எனப்படுகிறது. புதிய மதமான புத்தமதம் அழிந்த பின்னர் (ஆபத்துக் காலம் முடிந்த பின்னர்) மீண்டும் ஆறாவது மநுஸ்மிருதி (கக்ஷீஸ் எழுதியது) நடைமுறைக்கு வரும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜாதி அமைப்புகளும் தோன்றி விட்டன. அதாவது வர்ண பிராமணர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்களே உபநயனம் செய்வித்து பிராமணர்களாக (ஜாதி பிராமணர்களாக) தொடரச்செய்தனர். ‘வர்ண பிராமணர் ஜாதி பிராமணர் ஆன வரலாறு’ என்ற பகுதியில் ஆசிரியர் இதை விரிவாக விளக்குகிறார். ஏனைய வர்ணத்தாரும் அப்படியே ஜாதிகளாக நீடித்தனர்.

சூத்திரர்– கல்வி யாருக்கும் மறுக்கப்படவில்லை. குருவிடம் சென்று கல்வி கற்றவர்கள் ‘த்விஜர்கள்’ (Dvija- இரு பிறப்பாளர்கள்) எனப்பட்டனர். அவர்களுக்கே பிராமணர், க்ஷத்ரியர், வைசியர்  என்ற மூன்று வர்ணங்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்பட்டது. குருகுலம் செல்லாதவர்கள் (அ) கற்க விருப்பமில்லாதவர்கள் (அ) கற்கும் திறனில்லாதவர்கள் சூத்திரர்களாக அந்தஸ்து பெற்றனர். பின்பு வர்ணம் ஜாதியாக மாறியபோது வர்ண சூத்திரர் ஜாதி சூத்திரராகவே நீடித்தனர். உபநயனம் செய்யப்படுவதற்கு முன்பு அனைவரும் சூத்திரர்களே என்கிறது மநுஸ்மிருதி.

சண்டாளர், தீண்டத்தகாதவர், பஞ்சமர் (ஐந்தாமவர்)– கலப்பு ஜாதியில் பிறந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனப்படுகின்றனர். நான்கு ஜாதியில் உள்ள ஆண் பெண்களில் யார் யாருடன் கலந்து, பிறக்கும் பிள்ளைகளுக்கு உள்ள பெயர்களை ஆசிரியர் பட்டியலிடுகிறார். எந்த ஜாதியினரும் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதாவது ஜாதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் (Excluded) என்ற பொருளில் தீண்டத்தகாதவர்கள் எனப்படுகின்றனர். ஆயினும் கலப்பு ஜாதியினரை ஐந்தாமவர் (பஞ்சமர்) என்பதை மநு ஏற்கவில்லை. வர்ணங்கள் நான்கு மட்டுமே என்கிறார்.

” Brahmana, the Kshatriya, and the Vaisya castes (varna) are the twice-born ones, but the fourth, the Sudra, has one birth only; there is no fifth (caste) ”    (10:4)

மநுவில் இடைச்செருகல்– இப்போது இருக்கும் மநுவில் பல இடங்களில்- குறிப்பாக பத்தாவது அத்தியாயத்தில்- இடைச்செருகல் இருக்கலாம் என்று ஆசிரியர் கருதுகிறார். அம்பேத்கர் ‘சுமதி பார்கவ’ (Sumathi Bhargava) என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு இவரே இப்போதிருக்கும் மநுஸ்மிருதியை எழுதியிருக்கலாம் என்று கூறுகிறார். அவர் கி.மு 170 காலகட்டத்தில் மநுஸ்மிருதியை வெளியிட்டார் என்கிறார். இருப்பினும் ஆசிரியர் அதற்கு மாறாக சுமதி பார்கவ என்பவர் இடைச்செருகல் செய்தவராக இருக்கலாம் என கருதுகிறார். பத்தாவது அத்தியாயத்தில் பல பகுதிகள் நூலின் வேறு பகுதிகளோடு ஒட்டாமல் இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

எப்படியிருப்பினும் இப்போது உள்ள மநுஸ்மிருதி ‘ஆபத்துக் கால தர்மம்’ என்றே அழைக்கப்படுகிறது. இது (ஏழாவது) முக்கிய தர்மத்துக்குப் (ஆறாவது மநுஸ்மிருதி) பதிலாக வைக்கப்பட்ட ஒரு துணை நூல் என்று மநுஸ்மிருதி கூறுகிறது.

” By the Visve-devas, by the Sadhyas, and by the great sages (of the) Brahmana (caste), who were afraid of perishing in times of distress, a substitute was made for the (principal) rule ”    (11:29)

விவேக் ராஜ்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37
அடுத்த கட்டுரைஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி