கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
பக்தியும் அறிவும்
பக்தியும் அறிவும்
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?
வணக்கம் ஜெ,
தி.க வின் அருள்மொழி ஒரு விவாதத்தில் ‘உபநிடதங்களும், பகவத் கீதையும் தத்துவ நூல்கள் அல்ல; அவை இறையியல் நூல்கள்‘ என்றார். நீங்கள் கீதையை தத்துவ நூல் என்றே குறிப்பிட்டு வந்துள்ளீர்கள். இவையிரண்டையும் எப்படி பிரித்துப் புரிந்துகொள்வது ?
விவேக்ராஜ்
அன்புள்ள விவேக்ராஜ்,
கீதையை இறையியல் நூல்கள் என்று சொல்லும் தரப்பு இந்துமதத்திற்குள் வலுவாக உள்ளது. அதை மறுக்கும் வாதங்களும். ஆனால் அதையெல்லாம் விவாதிக்கத்தக்க தரப்பு அல்ல அருள்மொழி. அந்த அம்மையாருக்கு அறிவுத்தளத்தில் செயல்படுவதற்கான குறைந்தபட்ச வாசிப்போ புரிதலோ கிடையாது
ஜெ
அன்புள்ள ஜெ,
கீதையைப் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். என் கேள்வி இதுதான். கீதை மதநூல் அல்ல என்று நாம் சொல்லலாம். ஆனால் மதநூலே என்றுதானே அதை முன்வைப்பவர்கள் சொல்வார்கள். அதை எப்படி நாம் தத்துவநூலாகப் பயிலமுடியும்?
எஸ்.செந்தில்நாதன்
அன்புள்ள செந்தில்நாதன்
மிக எளிமையான் பதில்தான். இன்று கிரேக்கமதம் இருந்து அவர்கள் சாக்ரடீஸை தங்கள் மெய்ஞானி என்றும் பிளேட்டோவின் குடியரசை தங்கள் மதநூல் என்றும் சொல்லிக்கொண்டிருந்தால் அவ்வறிஞர்களும் நூல்களும் கல்விநிலையங்களில் கற்பதற்கு உகந்தவை அல்லாமல் ஆகிவிடுமா?
நான் கல்விநிலையங்களில் வேளுக்குடி கிருஷ்ணனின் கீதை உபன்யாசம் நிகழவேண்டும் என்று சொல்லவில்லை. அது கோயில்களில் நிகழட்டும். ஆகவேதான் வைணவ மடாதிபதிகள் ஐஐடி போன்றவற்றுக்கு சென்று உரையாற்றுவதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை
ஆனால் ஒருநிலத்திற்கு என ஒருவகை சிந்தனைமுறை இருக்கும். சிந்தனையில் புறவயத் தர்க்கம் ஒன்று உண்டு. அதற்கு இணையானது அகவயமான தர்க்கம். அது ஆழ்படிமங்களால் ஆனது. நிரூபணவாத அறிவியலில் அதற்கு இடமில்லை. ஆனால் கொள்கை உருவாக்க அறிவியலில் அதற்கு மிகமுக்கியமான இடம் உண்டு. ஆகவே அந்நிலத்தின் தத்துவ மூலநூல்கள் பயிலப்படவேண்டும்.
கீதை பிரஸ்தானத்ரயம் என்றே அழைக்கப்படுகிறது.முத்தத்துவம் என மொழியாக்கம் செய்யலாம். என்றும் அது அவ்வாறே இருந்துள்ளது. எப்போதுமே அது தோத்திர – வழிபாட்டு நூலாக இருந்ததில்லை
ஜெ