வெக்கை, அசுரன், வன்முறை

பூமணி- மண்ணும் மனிதர்களும்

 

அன்புள்ள ஜெ,

 

பூமணியின் வெக்கை பற்றிய ஆய்வுக்கட்டுரையில் நீங்கள் அந்நாவல் அன்பைப்பற்றிப் பேசுவது என்று வரையறை செய்கிறீர்கள். சிறுவன் கொலைசெய்துவிடுகிறான். அவனுடைய உறவும் சாதிசனமும் அவனுக்காகக் கொள்ளும் பரிவும், அவனை அவர்கள் பொத்திப்பொத்திப் பாதுகாப்பதும்தான் அந்நாவல். அந்த கரிசல் நிலமும் ஒரு தாய்க்கோழி போல அவனை பொத்திப் பாதுகாக்கிறது. அந்த உறவுகளும் அந்த நிலமும் ஒன்றுதான். அவ்வளவுதான் நாவலில் பேசப்படுகிறது

 

அசுரன் பேசுவது பழிவாங்குவதன் கதை. நிலத்திற்கான ரத்தம் தெறிக்கும் போராட்டத்தின் கதை. அசுரன் கதையில் பூமணி சொல்லும் மென்மையான உணர்ச்சிகள் எதுவும் இல்லை. அசுரன் சொல்வது ஒரு சூப்பர் ஹீரோவின் கதையை. அது வேறு சித்திரம். இப்படி மாற்றி எடுப்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

செல்வராஜ் மாணிக்கம்

 

அன்புள்ள செல்வராஜ் மாணிக்கம்,

 

நவீன இலக்கியம் வேறு சினிமா வேறு. சினிமா நிகழ்த்துகலையின் ஒரு வடிவம். அது அடிப்படையில் பொதுமக்கள் கலைவடிவம். எந்த பொதுமக்கள் கலைவடிவமும் பொதுமக்களின் விழைவுகள், கற்பனைகளையே வெளிப்படுத்தும். அவர்களின் ஆழ்மன வெளிப்பாடாகவே இருக்கும். அந்த ஆழ்மனம் தொன்மையான ஆழ்படிமங்களின் மறுவடிவாகவோ வெறும்கனவாகவோ வெளிப்படும். அதன் வெளிப்பாட்டில் பலவகையான தந்திரங்கள் உண்டு. உங்கள் பகற்கனவுகளை எப்படியெல்லாம் வகுத்துக்கொள்கிறீர்களோ அனைத்துத் தந்திரங்களும் அதில் உண்டு

சினிமா காட்டுவது பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை அல்ல. பிரச்சினைகளின் யதார்த்த முகத்தை அல்ல. அத்தகைய சினிமாக்கள் உண்டு. ஆனால் அவை பொதுமக்கள் பார்க்கும் சினிமாக்கள் அல்ல. அவற்றை பார்ப்பவர்கள் சினிமாவை கலை என காண்பவர்கள். அதற்கான உளப்பயிற்சி கொண்டவர்கள். மக்கள் சினிமாவை கூட்டுக்கேளிக்கையாகப் பார்க்கிறார்கள். திரையரங்கில் கூட்டாக ஓர் உணர்வு உருவாகி ஏறிக்கொண்டே செல்கிறதே, அதுதான் பொதுமக்கள் சினிமாவின் அனுபவம். ஒரு திருவிழாவில், விளையாட்டில் நிகழும் கூட்டான உணர்வெழுச்சிக்கு நிகரானது அது.

திருவிழா, விளையாட்டு அனைத்துக்கும் அடியில் போர் உள்ளது. போரை அவை அடையாளச்செயல்பாடாக ஆக்கி நடிக்கின்றன.ஏனென்றால் போர்தான் மானுடனின் தொன்மையான கொண்டாட்டம். திருவிழாக்கள், விளையாட்டுக்கள் போன்றவை போரில் வெளிப்படும் வன்முறையின் களியாட்டத்தை பல்வேறுவகையில் நுட்பமாக குறியீட்டுச் செயல்பாடாக ஆக்கிக்கொள்கின்றன கூட்டுக்கலைகளும் அவ்வாறுதான்.

கூட்டுக்கலைகள் ஒருவகை விழாக்கள். பெரும்பாலான கூட்டுக்கலைகள் திருவிழாக்களின் பகுதியாக இருந்தன. இன்றும் அவற்றுக்குள் ஏதோ ஒருவடிவில் திருவிழா உள்ளது. நம் சினிமாக்களில் கதைநாயகன் அறிமுகமாகும் குத்துப்பாட்டு போன்றவற்றைக் கவனியுங்கள் அவற்றிலுள்ளது திருவிழா. உச்சகட்டத்தின் சண்டை பெரும்பாலும் போர்திருவிழா. இந்த கூறுகளிலிருந்து பொதுமக்கள் சினிமா எளிதில் வெளியே செல்லமுடியாது.

திரையரங்குகளுக்குச் செல்பவர்களுக்கு இது தெரியும். அங்கே சினிமாவுக்குள் மட்டும் அல்ல வெளியேயும் கொண்டாட்டமே உள்ளது. கூச்சலிடுவது நடனமிடுவது எல்லாமே அதன் பகுதியாகத்தான். திருவிழாபோல ‘சுதி’ ஏறிக்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது சினிமாவிலும். அதுவே நிறைவளிக்கும் சினிமா. அரிதாக மாற்றுவகை சினிமாக்களும் கொண்டாடப்படும். ஆனால் மையப்பெருக்கு சினிமா இப்படித்தான்.

பொதுமக்களின் உள்ளம் எப்படிச் செயல்படுகிறது? அது வெறுமே சாதாரண மனிதர்களை, சாதாரண நிகழ்வுகளை பாடி நினைவில் நிறுத்தியதில்லை. நாட்டார் மரபில் எப்போதுமே ‘ஹீரோக்கள்’ தான் பாடப்படுகிறார்கள். சாதாரண மானுடரைப் பாடும்போதுகூட அவர்களை பாடியே வீரநாயகர்களாக ஆக்கிவிடுகிறார்கள். அதுவே நாட்டார் மரபின் இயல்பு. அதில் இதிஹாச புராணங்களின் நேரடிச் செல்வாக்கு எப்போதும் உண்டு.

எல்லா பண்பாடுகளிலும் அப்படித்தான். அநீதியை எதிர்க்கிற, உரிமைக்காகப் போரிடுகிற, வீரர்களையே அவை முதன்மையாகப் பேசுகின்றன. அவர்களையே போற்றிப்புகழ்ந்து மேலும் பெரிதாக்குகின்றன. தியாகமே பிற அனைத்து விழுமியங்களுக்கும் மேலாக சமூக உள்ளத்தால் கருதப்படுகிறது. வீரம் அதன் இன்னொரு முகம். நாம் நினைவில்கொண்டுள்ள அத்தனை கிராமியத்தெய்வங்களும், நாட்டார் கதைநாயகர்களும் அப்படித்தான்.

நடைமுறையில் இன்று அத்தகைய வீரநாயகர்களுக்கு பெரிய பங்களிப்பு இல்லை. அவர்கள் ஒரு தற்காலிகமான உளஎழுச்சியை உருவாக்கமுடியும். மிகவிரைவிலேயே அவர்கள் நடைமுறைப்பயன் அற்றவர்களாக மாறிவிடுவார்கள். உயிர்விட்டார்கள் என்றால் அவர்களுக்கு நல்லது. அவர்களால் குறியீடுகளாக, படிமங்களாக ஆகிவிடமுடியும்.  உயிரோடிருந்தால் நாம் என்ன தான் செய்யவேண்டும் என்று தெரியாத பழம்பொருட்களாக அடிக்கடி கைக்குத்தட்டுப்பட்டு நம் பொறுமையை சோதிப்பார்கள். நடைமுறைக்குப் பொருந்தாதவர்கள் என்பதனால் எரிச்சலையும் படிமங்கள் என்பதனால் மதிப்பையும் ஒரே சமயம் உருவாக்கும் மனிதர்களாக எஞ்சுவார்கள்.

உண்மையில் இன்று பயனுள்ளவர்கள் வன்முறை அற்றவர்கள். ஜனநாயகப் பண்புகள் கொண்ட போராட்டங்களை நிகழ்த்துபவர்கள். சிந்தனையிலும் பண்பாட்டிலும் தவிர்க்கவே முடியாத மாற்றங்களைக் கொண்டுவருபவர்கள். அத்தகையோரே இந்நூற்றாண்டின்  நாயகர்கள். அவர்களும் வீரநாயகர்களே. கடுமையான சூழல்களை துணிச்சலுடன் எதிர்த்து நிற்பதனால், எந்நிலையிலும் தாக்குப்பிடிப்பதனால், தளராத நம்பிக்கையினால், பொறுமையினால் அவர்கள் வழக்கமான வீரநாயகர்களைவிட பலபடிகள் மேலானவர்கள். அவர்களிடம் செயல்படும் வீரம் மேலும் விரிவானது.

ஆனால் அதில் நாடகத்தனம் குறைவு. அதில் மிகையுணர்ச்சிகளுக்கு இடமில்லை. இரு சாராருக்கு  பெரிய அளவில் வன்முறை அற்றவர்கள்மேல் ஈர்ப்பு இருப்பதில்லை. ஒன்று, முதிரா உணர்வுநிலை கொண்டவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள். வரலாறு நீண்டகால அளவில் செயல்படும் முறை குறித்தெல்லாம் இவர்களுக்கு ஏதும் தெரியாது. ஆகவே அவர்கள் வன்முறையை மட்டுமே வீரம் என நினைப்பார்கள். அவர்களையே கொண்டாடுவார்கள்.

இன்னொரு தரப்பினர் அன்றாடவாழ்க்கையில் எந்த விறுவிறுப்பும் இல்லாத சலிப்புற்ற வாழ்க்கையை வாழ்பவர்கள். அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அப்பாலுள்ள ஒரு காரசாரமான உலகம் தேவை. அரசியல், சினிமா எல்லாமே அதற்குத்தான். அதனால் அவர்கள் போர்களை, புரட்சிகளை ஆதரிப்பார்கள். ரத்தம் – அதாவது பிறரது ரத்தம் – சிந்தப்படவேண்டும் என கொதிப்பார்கள். வன்முறையை மேலும் மேலும் கொண்டா கொண்டா என்று கேட்பார்கள்.

துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் சினிமாவின் ரசிகர்கள் மேலே சொன்ன இரு தரப்பினரும்தான். இவர்கள் கொண்டாடி திரையரங்கை விழாவாக மாற்றினாலொழிய பெருவெற்றிப் படங்கள் உருவாகாது. ஆகவேதான் உலகமெங்கும் சினிமாக்களில் வன்முறையே வீரம் என்றபேரில் பரிமாறப்படுகிறது. அதை நிகழ்த்திக்காட்டுவதற்கான புதிய களங்களைத்தான் வணிகசினிமா நாடி நிற்கிறது. வரலாறு, புரட்சி எல்லாமே அதற்கான களங்களை அளிப்பவை மட்டுமே.

அத்தகைய சூழலில் ஒரு வழக்கமான வீரநாயகப் படத்தின் பின்புலமாக உண்மையான ஒரு வாழ்க்கைப்புலமாக அமைப்பதையே அசுரன் செய்திருக்கிறது. அதை பூமணியின் வெக்கை நாவலில் இருந்து எடுத்திருக்கிறது. வீரநாயகப் படத்திற்குப் பின்புலமாக அமையும் அந்த மெய்யான வாழ்க்கைச்சிக்கல் அந்தக் களியாட்டின் ஒருபகுதியாக இயல்பாக மக்களிடம் சென்று சேர்கிறது என்பது ஒரு பங்களிப்பே. அவ்வகையில் அசுரன் முக்கியமான படம்தான்.

வெக்கை நவீனநாவல். ஆகவே அது யதார்த்தத்துக்குள் நிற்கிறது. நுட்பமான சிலவற்றை மென்மையாக உணர்த்துகிறது. அதன் வழி வேறு.

 

ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்கா- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37