யக்ஷி உறையும் இடம்
அன்புள்ள ஜெ
யக்ஷி உறையும் இடம் ஒரு அதிர்ச்சியான கட்டுரை. ஒரு சமகாலச் செய்தியிலிருந்து வழக்கமான நீதிநெறி சார்ந்த பிரச்சினைக்குச் செல்லாமல் புதிய ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். முக்கியமான கேள்வி அது. ஏன் நாம் அழகானவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடத்தை அளிக்கிறோம்?
முன்பு என்னிடம் இந்தியாவில் இனவாதம் உள்ளதா என்று கேட்டார்கள். ஏனென்றால் இந்தியாவுக்கு வரும் ஆப்ரிக்கர்கள் இங்கே அவர்கள் மிகமோசமாக நடத்தப்பட்டதாகவே சொல்லியிருக்கிறார்கள். அது இனவாதம்தான். ஆனால் அதைவிட முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு. இனவாதத்தின் ஒரு பகுதிதான் அது. நமக்கு புற அழகு முக்கியமானது. புற அழகு என நாம் நினைப்பது வெள்ளைத்தோல். அதற்குரிய முகம். ஆப்ரிக்க முகம் அழகில்லாதது என்பது நம் எண்ணம். அதே தோற்றம்கொண்ட உள்ளுர் மனிதர்களையும் நாம் வெறுக்கிறோம். அந்த வெறுப்பையே நாம் அவர்கள்மேலும் காட்டுகிறோம்
செந்தில்நாதன்
அன்புள்ள ஜெ
யக்ஷி உறையும் இடம் ஆழமான ஒரு கேள்வியை எழுப்பும் கட்டுரை. டால்ஸ்டாய் இதே விஷயத்தை போரும் அமைதியும் நாவலில் அனடோல் மற்றும் ஹெலென் கேரக்டர்களைப்பற்றிப் பேசும்போது விவாதித்திருக்கிறார். அழகான முகம் அன்பானது, கண்ணியமானது என்று நமக்கு தோன்றுகிறது. அழகான முகம் கொண்டவர்கள் கெட்டவர்கள் என்றால் நம்மிடம் ரெஸிஸ்டென்ஸே இல்லை என்பதுதான் உண்மை
மகேஷ்
அன்புள்ள ஜெ
யக்ஷி உறையும் இடம் கூர்மையான கட்டுரை. நம் பார்வையில் அழகான முகம் என்பது எல்லாவற்றையும் மறைக்கக்கூடியது. பெருங்குற்றவாளிகள் என்றால் கூட அழகானவர்களை நாம் மன்னித்துவிடுகிறோம். சார்ல்ஸ் சோப்ராஜ் அழகானவன் என்பதனாலேயே எல்லா இடங்களிலும் அவனை பெண்கள் விரும்பினார்கள். இதேபோல ஒரு கிரிமினல் அமெரிக்காவில் உண்டு. அழகான சீரியல் கில்லர் அவன்.Theodore Robert Bundy அமெரிக்காவில் பல பெண்களைக் கொலைசெய்தவன். ஆனால் அவன் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டபோதுகூட பெண்கள் அவன்மேல் பித்தாக அலைந்தார்கள். அவன் நிரபராதி என வாதிட்டார்கள். அவனுக்காக கண்ணீர்விட்டார்கள்
கடவுள் மனிதனை இப்படிப் படைத்துவிட்டார்
“The Very Definition Of Heartless Evil”: The Story Of Ted Bundy
கேசவ்