வெக்கை,அசுரன்,பூமணி- கடிதம்

பூமணி- மண்ணும் மனிதர்களும்

அன்புள்ள ஜெ,

பூமணியின் பிறகு நாவலுக்கும் வெற்றிமாறனின் அசுரன் சினிமாவுக்கும் அடிப்படையில் என்னென்ன வேறுபாடு என்பதை சுட்டிக்காட்டிய ஆழமான கட்டுரை . இக்கட்டுரை வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. கட்டுரை மீண்டும் பிரசுரமாகிய பின்பும்கூட தலைகால் தெரியாமல் அசுரன் – வெக்கை ஒப்பீடு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசிக்கொண்டிருப்பவர்க்ள் இங்கே சினிமா அரசியல் எல்லாவற்றையும் பேசித்தள்ளுபவர்கள்.

வெக்கையில் பூமணி தெளிவாகவே அதை தலித் வாழ்க்கை என்று சொல்லவில்லை. தேவேந்திரர் வாழ்க்கை தலித் வாழ்க்கை அல்ல. அவர்களிடம் இருப்பது பஞ்சமி நிலம் அல்ல. அவர்கள் இழந்த நிலத்தின் ஒரு சிறுபகுதி. அதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் போராடுகிறார்கள். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றபேச்சு அடிக்கடி இருப்பது அதனால்தான்.

தேவேந்திரர்களின் நிலம் முந்நூறாண்டுகளாக பறிக்கப்பட்டது. 1776ல் பஞ்சத்தில் அவர்கள் அடித்தளமக்களாக ஆனார்கள். 1910 முதல் தலித்துக்களாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டார்கள். அவர்கள் தலித்துக்களாக குறிப்பிடப்பட்ட பிறகுதான் அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சமேனும் தலித்துக்களுக்குரிய வாழ்க்கைச்சூழல் அமைந்தது. கோயில்பட்டி தென்காசி பகுதிகளில் தீண்டாமைக்கு ஆளாகிறவர்கள் பறையர்களும் முக்கியமாக அருந்ததிய மக்களும்தான்.

அதோடு தேவேந்திரர்களுக்கும் நாயக்கர்களுக்கும்தான் நிலம் சார்ந்த முரண்பாடும் போராட்டமும் இருந்தன. அவர்களுக்கும் தேவர்களுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. இந்தப்பகுதியில் தேவர்களே இல்லை. இருந்தாலும் நிலம் அவர்களிடம் இல்லை. பிறகு வட்டிக்கு கொடுத்து வாங்குதல் சம்பந்தமாகத்தான் தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் பூசல்கள் வந்தன

அதாவது வெக்கை காட்டும் சித்திரம் நிலம் பறிக்கப்பட்ட சாதி, நிலம் பறிக்கும் சாதி இரண்டுக்கும் நடுவே உள்ள வரலாற்றுச்சண்டைதானே ஒழிய தலித் – ஆதிக்கசாதிச் சண்டை அல்ல. அது வெக்கையில் தெளிவாகவே உள்ளது. தேவேந்திரர்களாக காட்டப்படுபவர்கள் அனைவருமே நில உடைமையாளர்களாகவே இருக்கிறார்கள். இன்றைக்கு இந்தசூழல் மாறிவிட்டது. நாயக்கர்கள் நிலத்தை கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலத்தின் மதிப்பே குறைந்துவிட்டது. ஆகவே இந்தப்பிரச்சினை இன்று கிடையாது

ஆனால் அசுரன் படம் தலித் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாக கதையை மாற்றிவிட்டது. அது காட்டும் வாழ்க்கை பறையர்களின் வாழ்க்கை. அதாவது புதிதாக பஞ்சமிநிலத்தைப் பெற்றவர்களின் வாழ்க்கை. அதை தாங்கிக்கொள்ள முடியாத மேலே இருக்கும் நிலவுடைமையாளர்களுடன் நிகழும் மோதல். செருப்பை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு போகும் நிலை எல்லாம் வேறு ஒரு சூழலையே காட்டுகின்றன. இந்த வேறுபாட்டைத்தான் பூமணி தன் இந்து நாளிதழ் பேட்டியில் சொல்கிறார். அதைப்புரிந்துகொள்ளாமல் சகட்டுமேனிக்கு அவரை வசைபாடுகிறார்கள். ஒருவர் வெக்கைதான் தலித் வாழ்க்கையைக் காட்டுகிறது, பூமணிக்கு எழுதத்தெரியவில்லை என்றே தூற்றுகிறார்.

அசுரன் படம் இன்னொரு யதார்த்தத்தைச் சொல்கிறது. அது வெக்கையின் யதார்த்தத்தை மாற்றிவிட்டது. ஆனால் அது காட்டுவது தஞ்சாவூர், காஞ்சீபுரம் போன்ற ஊர்களில் இன்றைக்கும் உள்ள யதார்த்தம். அதிலுள்ள பிரச்சினைகள் எல்லாமே உண்மைதான்.உங்கள் கட்டுரை இந்த உண்மைமேல் மிகப்பெரிய வெளிச்சத்தை வீசுகிறது

மகேந்திரன் எஸ்.

வெக்கை பற்றி…

 

முந்தைய கட்டுரைஅட்லாண்டாவிலிருந்து..
அடுத்த கட்டுரைதேவதேவனின் அமுதநதி