சுப்பு ரெட்டியார் கடிதங்கள்

.

ந.சுப்புரெட்டியார்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

சுப்புரெட்டியார் போன்ற மறைந்துபோன எழுத்தாளர்களையும் நினைவுகூரும்படி அமைந்திருக்கும் உங்கள் தளம் என்னை மகிழ்ச்சி அடையச்செய்தது. சுப்புரெட்டியாரை நான் நேரில் அறிவேன். அவர் எனக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். கம்பீரமான மனிதர். எங்கும் தலைகுனியாதவர். அவரைப்போன்ற நிமிர்வான ஆசிரியர்கள் இன்றைக்கு அருகிவருகிறார்கள்.

சுப்புரெட்டியார் வைணவ ஆலயங்களைப் பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. அவற்றை அவர் பெரிய அளவிலான செயற்கைநெகிழ்ச்சிகள் ஏதுமில்லாமல் அறிமுகம் செய்வது முக்கியமானது. அவருடைய வைணவத்தல அறிமுகங்களை ஓர் இணையதளமாக எவரேனும் ஆக்கினால் நல்லது. உரிய புகைப்படங்களுடன் அது அமையவேண்டும். அவை நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் என்பதனால் அதற்கு தடை இருக்காது என நினைக்கிறேன்

அரங்க நாராயணன்

அன்புள்ள ஜெயமோகன்,

பிரபு மயிலாடுதுறை சுட்டிய சுப்பு ரெட்டியாரின் “நினைவுக் குமிழிகள்” நூலை வாசித்தேன்.தன் வரலாற்றை சொல்லும் பாவனையில் தொடங்கி அரை நூற்றாண்டு கால  கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு–மொத்தத்தில் தமிழகத்தின் முழுமையான வரலாற்றை விரிவான சித்திரமாகவே அளித்துள்ளார். அவர் ஒரு தமிழறிஞர் மட்டுமல்லாது கணிதம்,அறிவியல்,வேதியியல்போன்ற பாடங்களிலும் சாதனை புரிந்த மாணவர் என்பதால்சில ஆற்றல்களை பெற்றும், சில பலவீனங்களை விடுத்தும்தன்  நூலை தன்வரலாற்று செவ்வியல் என்று கருதக் கூடிய வகையில் படைத்துள்ளார்.சிறிய செய்திகளைக் கூடவிரிவாகவும், நுட்பத்துடனும் விளக்கியுள்ளார்.

ஒரு மிகச் சிறந்த மாணவனின் அனுபவங்களைப்படிக்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும்.இந்நூலில் கிடைத்திருக்கிறது. கிட்டத் தட்ட எல்லாத் தரப்பு மனிதர்களைப் பற்றியும் சமரசமின்றி விமர்சனம் செய்கிறார்.சிறந்தவர்களை பாராட்டத் தவறவுமில்லை. அரசியல் சரிநிலைகளைக் கண்டுகொள்ளவுமில்லை. இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை.

“நினைவுக் குமிழிகள்”நூலை சுப்பு ரெட்டியார் எழுதியிருக்கலாம். ஆனால் இந்த தன்வரலாறு என்னுடையது என்று பல இடங்களில் எனக்குத் தோன்றியது.

சாந்தமூர்த்தி,மன்னார்குடி.

 

 

முந்தைய கட்டுரைவெட்டீருவேன்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33