இரு நடிகர்கள்

[வினாயகன்]

2004 ல் நான்கடவுள் படத்தின் நடிகர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் அப்போது பார்த்த ஒரு மலையாளப்படத்தில் சுரேஷ்கோபி துப்பறிகையில் ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட குற்றவாளியை விசாரிக்கிறார். அந்த நடிகரின் தோற்றமும், மிகையற்ற நடிப்பும் என்னைக் கவர்ந்தன. சற்று மாறுபட்ட தோற்றம் கொண்டவர்களிடம் ஒரு சிக்கல் உண்டு, அவர்கள் என்ன நடித்தாலும் பொய்யாக மிகையாகத் தெரியும். அந்த எல்லையை அவர் இயல்பாகக் கடந்துவிட்டிருந்தார்

அவரை நான்கடவுள் படத்தின் குய்யன் கதாபாத்திரத்திற்கு நான் பரிந்துரை செய்தேன். பாலா அவரை வரவழைத்து பேசினார். அவர் அப்போது ஒரு மேடைநடனக்கலைஞர். குறிய உடலும் விசைகொண்ட அசைவுகளுமாக தெரிந்தார். பாலாவுக்கு அவரைப் பிடித்திருந்தது. ஆனால் பின்னர் அவர் தேவையில்லை என முடிவுசெய்தார். ஏனென்றால் அவர் நடிப்புக்கு ஊதியமாக ஒரு நல்ல தொகை கேட்டார். அன்று அவரை தமிழில் ஒரு புதுமுகமாகவே அறிமுகம் செய்யவிருந்தார் பாலா. அவர் அப்படி தொகை கேட்டது ஒவ்வாமையை உருவாக்கியது

எனக்கு ஆதங்கம், பெரிய ஒரு வாய்ப்பை தவறவிடுகிறாரே என்று. அதை லோகியிடம் சொன்னேன். அவர் அந்நடிகரை அதுவரை கவனிக்கவில்லை. “அவன் கலைஞன் என்றால் அவனுக்கான வாய்ப்பு தேடி வரும். கொஞ்சம் பிந்தலாம், ஆனால் அவன் மேலே வந்தே தீர்வான்” என்றார். “லோகி, எத்தனையோ திறமையானவர்கள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்களே” என்றேன். அது பொதுவாக உள்ள ஒரு நம்பிக்கை

லோகிக்கு அதில் உடன்பாடில்லை. “இயக்குநர் விஷயத்தில் மட்டும் ஒருவேளை தகுதியானவர்களில் சிலருக்கு வாய்ப்பு அமையாமல் போகலாம். ஏனென்றால் இயக்குநரின் திறமை என்பது ஒன்றைச் செய்துகாட்டியபின்னரே நிறுவப்படுகிறது. அந்த முதல்வாய்ப்பு பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது. தமிழில் இயக்குநர் நல்ல கதை வைத்திருந்தால் வாய்ப்பு அமைகிறது. தோற்றம் சரியாக அமையாமையால், பேசத்தெரியாமையால், கதைசொல்ல தேர்ச்சி இல்லாமையால் இயக்குநர் வாய்ப்பு அமையாதுபோன திறமையானவர்கள் சிலர் இருக்ககூடும். ஆனால் திரைத்துறை நல்ல நடிகர்களுக்காக, நல்ல புகைப்படக்கலைஞர்களுக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. அவர்களை தவறவிடுவதே இல்லை” என்றார்

எனக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. நல்ல நடிகர், ஆனால் சினிமாவின் யதார்த்தம் தெரியாமல் வாய்ப்பை இழக்கிறார், ஒருவேளை அவர் வராமலேயே போய்விடக்கூடும் என்றே எண்ணினேன்.

[மணிகண்டன்]

மேலும் சில ஆண்டுகள் கழித்து இன்னொரு நடிகரை சந்தித்தேன்.நான் எழுதி சுப்ரமணியசிவா இயக்கி முடிவடையாமல் நின்றுவிட்ட ’உலோகம்’ படத்தில் ஓர் ஈழத்தமிழரின் பாத்திரத்தைச் செய்திருந்தார். அபாரமான நடிகர் எனத் தோன்றியது.

அவர் திரிச்சூர் நாடகப்பள்ளி ஆசிரியர். தொழிலே நடிப்புதான். நாங்கள் சில நண்பர்கள் கூடி குறைவான செலவில் நூறுநாற்காலிகளை சினிமாவாக ஆக்க முயன்றோம். அவரைத்தான் கதைநாயகனாகத் தெரிவுசெய்தோம். இரண்டுநாள் நடித்தார். ஆனால் எங்களால் மேலே எடுக்கமுடியவில்லை. பணம் தருவதாகச் சொன்னவர்கள் விலகிக்கொண்டார்கள். அவர் தொடர்ந்து எங்களிடம் தொடர்பிலிருந்தார். அந்தக் கதாபாத்திரம் அவருக்கு அந்த அளவுக்கு பிடித்திருந்தது.

அவருக்கு வாய்ப்பு பெற்றுத்தர நான் முயன்றேன். வழக்கமான வணிகசினிமாக்களில் அவருக்கு இடமே இல்லை. அவரை ஒரு துணைநடிகராகவே அவர்கள் பார்த்தார்கள். துணைநடிகர்களை பொருட்படுத்தும் வழக்கம், அவர்களுக்கென ஒரு கதாபாத்திரத்தை அமைப்பது இங்கே இல்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவருடைய வழியை அவரே தெரிவுசெய்யவேண்டியதுதான் என எண்ணினேன். லோகியின் சொற்களில் அப்போதும் நம்பிக்கை வரவில்லை

இன்று, திருவனந்தபுரம் நகர்வழியாக செல்கையில் பார்த்தேன். சுவர்கள் முழுக்க அவர்கள் இருவரும்தான். கேரளம் கொண்டாடும் நடிகர்களாக அவர்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். முதல் நடிகர் வினாயகன். இரண்டாமவர் மணிகண்டன். இருவரும் இன்று கேரள சினிமாவின் அடித்தளவாழ்க்கைச் சித்தரிப்பின் முகங்கள். பெரிய நடிகர்கள் என அவர்களை விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். இயல்பான உடல்மொழி, மிகையற்ற முகபாவனைகள், கூரிய உச்சரிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி கொண்டவர்கள் என்றும் கூடவே மானுடவாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்து மனித இயல்பை நுணுக்கமாக அறிந்தவர்கள் என்றும் விமர்சகர்கள் அவர்களைக் கொண்டாடுகிறார்கள். வினாயகன் கதைநாயகனாக நடித்த படங்களே வந்துகொண்டிருக்கின்றன

லோகி சொல்வது உண்மை, மெய்யான கலைஞர்களை எப்படியும் வாய்ப்புகள் தேடிவரும். இன்று யோசிக்கையில் வினாயகனின் அந்த நிமிர்வு சரியானதே என்று படுகிறது. தனக்கென ஒரு விலையை அவர் முன்வைப்பதில் ஒரு சரியான தன்மதிப்பீடு உள்ளது. . நான் சினிமாவில் நுழைந்தபோது எங்கும் எனக்குரிய மதிப்பை நானே முடிவுசெய்தேன். ஆனால் அதற்குமுன்னரே நான் அடையாளம் பெற்றுவிட்டிருந்தேன். முகமில்லாதவராக இருந்த வினாயகன் அதைச்செய்தது வியப்புக்குரியதே. வாய்ப்பு வருகிறதே என எந்த எல்லைக்கும் குழைபவர் கலைஞர் அல்ல. அவர்கள்முன் சில வாயில்கள் மூடலாம், கலைஞர்களுக்கு திறக்கும் வாயில்கள் திறக்கும்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரச்சினை என்று நான் நினைப்பது சிறிய கதைபாத்திரங்களை நடிக்க நடிகர்கள் மிகக்குறைவு என்பது. உண்மையில் கதைநாயகர்கள் கொஞ்சம் செயற்கையானவர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ‘ஹீரோ’ என்பதே பொய்கலந்ததுதான். சிறிய கதைமாந்தர் உயிர்ப்புடன் இருக்கையிலேயே கதைக்களம் நம்பகமானதாக ஆகிறது. அதற்கு பலவகைப்பட்ட முகங்கள் தேவை. அந்த முகங்கள் இயல்பாக, நம்பகமாக இருக்கவேண்டும்.

தமிழ் சினிமாவில் என்ன நிகழ்கிறதென்றால் பல சிறு கதைமாந்தர்களை எழுதிச்சேர்த்தால்கூட அவற்றை நடிக்கும் நடிகர்களின் செயற்கையான நடிப்பு காரணமாக கடைசியில் வெட்டிவீசிவிடுகிறார்கள்.ஏனென்றால் பலவகைப்பட்ட நடிகர்களின் ஒரு தொகை இங்கே இல்லை. தெரிவுசெய்யவே ஆட்கள் இல்லை. எனக்குத் தோன்றும்

அவ்வாறு அவர்கள் உருவாகாமைக்கு முதன்மைக்காரணம், இயக்குநர்கள் இத்தகைய சிறிய நடிகர்களை போதுமான அளவுக்கு மதிப்பதில்லை என்பதே. படப்பிடிப்பில் சிறியநடிகர்களை எல்லைமீறி வசைபாடும் இயக்குநர்களைக் கண்டிருக்கிறேன் . அதன் வழியாக அவர்கள் தங்கள் ஆணவத்தை நிறுவிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்.மெய்யான கலைஞனுக்கு இன்னொரு கலைஞன்மேல் பிரியமும் வழிபாட்டுணர்வுமே இருக்கும். மிகச்சிறிய நடிகர் சிறப்பாக நடித்ததும் பாய்ந்துபோய் கட்டிப்பிடித்து முத்தமிடும் பரதனை நான் கண்டிருக்கிறேன்

தன்மானம் புண்படும் இடத்தில் மெய்யான கலைஞன் வரமாட்டான். அவ்வாறு ஆசைப்பட்டு வருபவர்களும்கூட தங்கள் கலையை கண்டடைந்து மேலும் மலரமாட்டார்கள். வெறும் ‘துணைநடிகர்கள்’ ஆகவே நீடிப்பார்கள். இதுவே இங்கே நிகழ்கிறது.

இங்கே அவர்களுக்குரிய கதாபாத்திரங்கள் எழுதப்படுவதில்லை, எழுதினாலும் அவர்களிடம் விளக்கப்படுவதில்லை, நடித்தாலும் கடைசியாக என்ன வரும் எனத் தெரியாது. படப்பிடிப்பில் அவர்கள் ஒருவகை பொம்மைகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஆகவே மெய்யான கலைஞர்கள் சிறியநடிகர்களாக நடிக்க முன்வருவதில்லை. வருபவர்கள் சொன்னதைச் செய்பவர்கள். கலையார்வத்தால் வருபவர்களும் சலிப்புற்று பொம்மைகள் ஆகிவிடுகிறார்கள்.

அத்துடன் அவர்களின் முக்கியத்துவம் தயாரிப்பாளர்களால் உணரப்படுவதில்லை. ஆகவே அவர்களுக்குரிய ஊதியமும் மிகக்குறைவு. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்கள்கூட அதை நம்பி வாழமுடிவதில்லை. தொடர்ச்சியாக வாய்ப்பு தேடிக்கொண்டே இருக்கவேண்டும். தொடர்பிலேயே இருக்கவேண்டும். கதாபாத்திரங்கள் தேடிவருவதே இல்லை. ரசிகர்களும் அவர்களை நினைவில் கொள்வதில்லை. ஆகவே இங்கே சிறுநடிகர்களில் நட்சத்திரங்களே இல்லை. ஓரளவு அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுபவர்களும்கூட மிகக்குறைவு.

இயக்குநர்கள் செய்யும் இன்னொரு பிழை ஒருமுறை பயன்படுத்திய சிறிய நடிகர்களை அப்படியே விட்டுவிடுவது. ராஜீவ் ரவி போன்றவர்கள் அத்தகைய முகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். புதிய எல்லைகளை நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். ஆகவே அந்த நடிகர்கள் ரசிகர்களின் நினைவில் நிலைபெறுகின்றனர். வெறும் முகங்களாக சினிமாவில் ஒழுகிச்சென்றுவிடுவதில்லை.

மலையாளத்தில் அத்தகைய சிறு கதாபாத்திர நடிகர்கள் நூறுபேராவது உள்ளனர். அவர்களும் கலைஞர்களுக்குரிய கெத்துடன், பொருளியல் வசதியுடன் இருக்கிறார்கள். ஒரே காட்சிக்காக வந்து ஒரே டேக்கில் நடித்து செக் பெற்றுச் செல்பவர்கள் பலர் உண்டு  இயக்குநர்களே ‘நீ உன்மேல் எவரைக்கொண்டுவருவாய் என தெரியாது, ஆனால் எனக்கு இந்தவகையான மனிதர் திரையில் தெரியவேண்டும்’ என்று சொல்லி நடிப்பைப் பெறுவதை கண்டிருக்கிறேன்.

ஒருமுறை சென்னை கிரீன் பார்க் விடுதியில் நான் தங்கியிருந்தபோது மணிகண்டன் என்னைப் பார்க்கவந்தார். அவருடைய தோற்றம் காரணமாக அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர். என்னை அவர் அழைத்தார்.நான் அவர் என் சினிமாவின் நடிகர் என்றதும் மதிப்புடன் உள்ளே அனுப்பினர். துரதிருஷ்டவசமாக தமிழ்சினிமாவிலும் இந்த விலக்கம், தடை அவரைப்போன்ற முகம் கொண்டவர்களுக்கு இருக்கிறது. அவருடைய முகமே தமிழ்க்குடிகளின் சராசரி முகம். அதில் எழுவதற்குச் சாத்தியமான எவ்வளவோ கதாபாத்திரங்கள் உள்ளன. அதை எவருக்கும் சொல்லிப்புரியவைக்க முடிவதில்லை.நாங்கள் எடுத்த படம் நின்றமைக்கு மணிகண்டனின் தோற்றத்தால் தயாரிப்பாளர் அவநம்பிக்கை அடைந்ததும் ஒரு காரணம். ஆனால் இன்னொரு நடிகரை போடலாமே என்னும் கோணத்தில்  நாங்கள் யோசிக்கவில்லை.

வினாயகனும் மணிகண்டனும்  இங்கே நம் சினிமாவில் ஒளிர்ந்திருக்கவேண்டும். சரி, அங்காவது அவர்களுக்கான நாற்காலிகள் அமைந்ததே.