வெட்டீருவேன்!

ரயில் பயணத்தில் நான் வெறும் செவிகள். இம்முறை செவிகளை அறைந்து ஈ பறக்கும் ஓசையெழ ஒரு கூச்சல் அருகே எழுந்த்து. “லே, தாளி, வெட்டீருவேன். வெட்டிப் பொலிபோட்டிருவேன்…என்னங்கியே? எனக்க கிட்ட சோலிய காட்டுதியா? ஏல சரக்கு வருமா? வராதா? ஏல வருமா வராதா? அதைச்சொல்லு. என்னது? பின்ன என்ன மசுத்துக்குலே செக்க பேங்கிலே போட்டே? ஏலே என்ன்ன்னுலே நெனைச்சே? வெட்டீருவேன்! வெட்டி சரிச்சிருவேன். ஆமா” மூச்சுவாங்க செல்பேசியை அமுக்கிவிட்டு “வெளையாடுதானுவ”

கருப்பான, குண்டான, முடியை ஒட்டவெட்டிய, மீசை இல்லாத அண்ணாச்சி தொப்பைமேல் சரிந்த வேட்டியைச் சீரமைத்துக்கொண்டார். எதிரில் ஆச்சிக்கு எந்த சலனமும் இல்ல. “சுருளுசப்பாத்திய எடுக்கட்டா? இல்ல ரயிலு எடுத்தபிறவு திங்குதியளா?” அவர் எரிச்சலுடன் “இருடி… இவ ஒருத்தி. அவன் நூறுமூட்டைய ஏத்திவிடுதேன்னு சொல்லிட்டு இப்பம் வெளையாடுதான். என்னை ஆளு யாருண்ணு தெரியல்ல அவனுக்கு..”

ஆச்சி நல்ல களையாக , இணைக்குண்டாக, பெரிய மூக்குத்தி ,எருமைவடச் சங்கிலி, காப்புகள் மற்றும் கைவளையல்களுடன் கம்பீரமாக இருந்தாள். வடகோடு வாழ்ந்தென்ன தென்கோடு சரிந்தென்ன என்னும் மட்டில் ஒரு வான்பிறை நிலை. ஏகப்பட்ட பைகள், பெட்டிகள் , பொட்டலங்கள். அவற்றைச் சீரமைத்தாள். வெள்ளித்தாளில் சுற்றப்பட்ட சப்பாத்திக் கோழிக்கறிகள். ஒவ்வொன்றையாக எடுத்து திரும்ப வைத்து நிமிர்ந்தபோது இளவியர்வையுடன் மூச்சு.

அண்ணாச்சி மீண்டும் செல்போனில் சீறினார். “எளவு என்னை தாலியறுக்கதுக்காகவே வந்திருக்கியளாலே? ஏலே சரக்கு இண்ணைக்கு வந்திரும்னு சொன்னேனே…. உனக்க அப்பனாலே வேர்ஹவுஸ தேடி தெறந்துவைப்பான்? லே, நாளைக்கு வாறேன். அந்தால ஒவ்வொருத்தனையா வெட்டி போட்டிருவேன். எனக்கு முன்னும் பின்னும் பாக்கிறதுக்கில்ல…வெறிவந்தா நான் மனுசனில்ல… லே வெட்டீருவேன்ல… வெட்டிப்போட்டுட்டு நான் போயி செயிலிலே இருந்துபோடுவேன்… வக்காளி, எனக்க சோத்த தின்னுட்டு எனக்கு ஆப்பு வைக்குதியளா?”

”இவனுகளை வெட்டாம தீராது… எளவெடுத்த தாயோளிய” என்றபடி மீண்டும் ஒரு அழைப்பு. “என்னண்ணாச்சி சொல்லுதியா? வருமா வராதா? வந்தாகணும். செக்கு குடுத்திருக்குல்லா? முளுச்செக்கு குடுக்கதுக்கு நான் என்ன சும்பக்கூதியானா? ஆமா, வருவேன். வந்து கேப்பேன். செக்கு வாங்கின கையை வெட்டுவேன்.. வெட்டுவேன்னாக்க வெட்டுவேன்.. என்னான்னு நினைச்சிய? எனக்கு முன்னும்பின்னும் இல்ல… எரிதீயிலேயாக்கும் நான் நின்னிட்டிருக்கது.. . நான் வேற ஆளு, பாத்துக்கிடுங்க… ஏறி வெட்டிருவேன்…ஆமா வெட்டிப்போட்டிருவேன்…வெளையாடாதீக”

மூச்சுவாங்கலுடன் ஆச்சியிடம் “நாய்கள வெட்டாம விடப்பிடாது. பைசா வேங்குறப்ப தெரியுதுல்லா” ஆச்சி “சுருளு எடுக்கட்டா?” அண்ணாச்சி வெடித்தார். “இவ ஆருட்டி, எப்ப பாத்தாலும் சுருளு எடுக்கட்டா? சுருளு உனக்க அம்மைக்க…” அடக்கிக்கொண்டு மூச்சுவாங்கி “செரி எடு…பசிக்குதுல்லா?” சுருள் சப்பாத்தியை கடித்தபடி மீண்டும் அழைப்பு. “ஏலே நாராயணா, பேங்கிலே இருந்து கூப்பிடாகளாலே? என்னது, ஆறுமட்டம் கூப்பிட்டாகளா? நீ ஏன் சொல்லல்ல? ஏலே நீ ஏம்லே என்னைய விளிக்கல்ல? அதைச்சொல்லுலே. நான் இந்தால போனை களுத்திலே கெட்டிப் போட்டுட்டு பின்ன மசுத்துகதுக்காலே இருக்கே? வெட்டிப்பொலி போட்டாத்தான்லே நீயெல்லாம் உருப்படுவே”

மூச்சுவாங்கல். தனக்குத்தானே வசைகள். “இந்த நாயிகளை வச்சு ஓரியாடுத என்னையச் சொல்லணும்… ஒண்ணு சொன்னா ஒம்போது செய்வான். சொன்னதைச் செய்யமாட்டான்… எளவெடுத்தவனுக” மீண்டும் செல்பேசி, “ஏலே மாரிமுத்து,குமாரசாமி வந்தானாலே? ஏலே குமாரசாமிலே… அந்த நாயி வந்தா சொல்லு. அவன தேடிவந்து வெட்டுவேன்னுட்டு… என்னாண்ணு நினைக்கான்? அவன் ஏம்லே வரல்லே? திங்கக்கெளம கணக்கு தீக்குததா சொன்ன நாயில்லாலே அவன்? அவனையெல்லாம் வெட்டாம விடுகது தப்பு…. சவத்தெளவுக்கு தலை கொளுத்து களுத்துலே நிக்கல்லியோ?”

நான் படுக்கையை விரித்து படுத்துக்கொள்ளும்போதும் “வெட்டிப்போடுவேன்!” கேட்டுக்கொண்டிருந்தது. “வெட்டீருவேன்! வெட்டீருவேன்!” என்னது என்னையா சொல்கிறார்? இல்லை, போனில்தான். நான் தான் கொஞ்சம் கண்ணயர்ந்திருக்கிறேன். மீண்டும் என் கனவுக்குள் வந்து “வெட்டி நாறடிச்சிருவேன். ஏலே பாக்கி எங்கேலே?” வெண்முரசா? அதன் பாக்கியைத்தான் எழுதி வலையேற்றிவிட்டேனே. அழிந்துவிட்டதா? இல்லை இது வேறு. அண்ணாச்சி எங்கே வெண்முரசு வாசிக்கப்போகிறார்? “கொன்னிருவேன்… சொன்னா செய்யுதவனாக்கும் நான்…. பொளந்திருவேன். வெட்டிப்பொளந்திருவேன்!”

காலையில் அண்ணாச்சி கத்திக்கொண்டிருக்க நான் விழிப்படைந்தேன். “ஏலே நாங்குனேரியிலே வண்டி அஞ்சுநிமிட் நிக்கும்…நீ ரெசீதும் வவுச்சரும் கொண்டாந்து குடுக்கே… இல்லேண்ணா பின்னே நீ இல்ல பாத்துக்கோ…. உன்னாணை வந்து வெட்டுவேன். வெட்டிச்சாய்ச்சுப் போடுவேன்…. அருவாள தூக்குத கையாக்கும்… ஆருட்டே வெளையாடுதே? நான்குநேரிலே நீ வராம இருந்து பாரு…ஆம்புளைன்னா வராம இருந்து பாருலே…. ஏலே ஆம்புளைன்னா வராம இருந்து பாருலே… ரெசீதும் வவுச்சருமா வந்து நிக்கலேண்ணா உன் தலை மண்ணிலே…. என்னாண்ணு நினைக்கே? இப்ப சொல்லுதேன், ஏலே இப்ப சொல்லுதேன், உனக்கு தைரியம் இருந்தாக்கா நீ நான்குநேரிக்கு வராம இருந்து பாரு. ஏலே நீ வரேல்லண்ணா உனக்க பிள்ளையளுக்கு நாளைமுதல் அப்பன்ன்னு ஒருத்தன் இல்லேலே”

நான் செல்பேசி சார்ஜ் போடும்போது சிரித்தபடி “என்னண்ணாச்சி, தெனம் பத்து முப்பது தலை உருளும்போல…” என்றேன். ஆச்சி பக் என்று சிரித்துவிட்டாள். அவளை திரும்பி முறைத்துவிட்டு “அதை என்னத்துக்கு கேக்குதியோ? ஒரு தொளிலு செய்ய முடியுதா? என்ன சொன்னாலும் கேக்கமாட்டான். இங்க நாலு ஆளை வச்சு வேலைசெய்யுகது மாதிரி சீண்டிரம்புடிச்ச பொளைப்பு வேற இல்ல. வருவேன்னு சொல்லுவான், வரமாட்டான். தாறேன்னு சத்தியம் செய்வான், நான் சொன்னேனா அண்ணாச்சீம்பான். குடுத்த காச திரும்பி வாங்குததுக்கு பெருமாள்கிட்ட மோட்சத்த வாங்கிப்புடலாம்….” ஆச்சி “தொளிலு நடக்குதுல்லா?” என்றாள். “உனக்கு என்னட்டி தெரியும்? புருசன் செத்து சுண்ணாம்பாகி பணம் கொண்டு வந்தா வச்சு திம்பே…. வாய நீட்டாதே. தெச்சுப்புடுவேன் தெச்சு”

ஆச்சி “எனக்க அய்யாவுக்க கடையாக்கும் இவுக பாக்குதது” என்றாள். “ஆமா, அந்த மகராசனாக்கும் நமக்கு வெளக்கேத்தினது. அவரு இருந்த காலம் வேறேல்லா? அப்பம் வாக்குக்கு வெலையிருந்தது. இப்பம் வாக்குண்ணா பளைய சாக்குல்லா? இங்க நான் கெடந்து சாவணும்…ஒருத்தனையும் விடப்பிடாது. பத்தாள வெட்டிச்சாய்ச்சாத்தான் உருப்படுவானுக… என்னங்கிறீக?”

நான் புன்னகைத்தேன். “இப்பம் பாத்தேளா? நான் குடுத்த சரக்கு, அதுக்கு ரசீது கேட்டா ஞமஞமங்கியான் நான்குநேரிக்காரன். கோர்ட்டுக்கு டாக்குமெண்டா கொண்டுபோகணும். அங்க வக்கீலு நாக்கூச நாறவர்த்தை சொல்லுதான்… அதான் கொண்டு வான்னு சொல்லுதேன். வரமாட்டான். கண்டீசனா வரமாட்டான்… பாருங்க.” நான் “அப்படியா?” என்றேன். “இவனுகளுக்க அப்பனை தெரியும்லா நமக்கு? நமக்கு நாலு தலைமுறையா கமீசன் ஏவாரமாக்கும்… ”

நான்குநேரி. அவர் வாசலில் கம்பியை பிடித்தபடி நின்றார். பின்னால் நான். அவர் கண்களால் ரயில்நிலையத்தை துழாவ நான் பதற்றமாக நகம் கடித்துக்கொண்டிருந்தேன். ரயில் ஊதிக்கிளம்ப, அண்ணாச்சி என்னிடம் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பி “சொன்னேம்லா? பாருங்க, ஆளு இல்ல. வரமாட்டானுக” என்றார்

***

முந்தைய கட்டுரைகன்னிநிலம் பற்றி…
அடுத்த கட்டுரைசுப்பு ரெட்டியார் கடிதங்கள்