நிலம்- கடிதம்

நிலம்

அன்புள்ள ஜெ வணக்கம்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ கௌரவ எதிரியோ இருக்கும்போது ஜமின்தாருக்கு கொலைகார எதிரி இருப்பது  எப்படி அதிசயமாகும்.

ஆறு கொலைகாரர்கள். நால்வர் வீட்டுக்கு வெளியில் காவல். இரண்டுபேர் வீட்டு ஓட்டைப்பிரித்து உள்ளே போய்விட்டார்கள். தூங்கும்போதே தலைவேறு உடம்புவேறு என்று ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் திட்டம்.

உள்ளே போனவர்கள் வெளியே வரவில்லை. ஜமின்தார்தான் வெளியே வந்தார். வெட்டப்போனவர்கள் ஜமின்தார் பின்னால் மெய்காப்பாளன்போல வந்தார்கள். வெளியில்  இருந்தவர்களும் வேலையாள் கையில் மாட்டிக்கொண்டார்கள்.

கொலை செய்ய வந்தவர்களை கட்டிவைத்து அடித்துக்கொல்லவேண்டும் என்றது ஊர்.

“திருந்துனவனுவள ஏன்டா கொல்லனும் திருந்தாதவனுவள” என்றார் ஜமின்தார்.  ஆட்டம்போட்டதலைகள் கவிழ்ந்து அடங்கின.

ஜமின்தாரை வெட்டுவதற்கு உள்ளே சென்றவர்கள் அவரின் தோற்றத்தையும்  அவர் படுத்திருக்கும் அழகையும் பார்த்து, “ஸ்ரீரங்கநாதர்போல இருக்காருடா” என்று ஓங்கிய கொடுவாளை இறக்கிவிட்டு அவர்காலில் விழுந்துவிட்டார்கள்.

கண்ணுக்கு தெரியும் மனித உருவம் கண்ணுக்கு தெரியாத மனதில் ரசவாதம் செய்து மனிதனிடம் மனிதன் கட்டுண்டு கிடக்க செய்கிறது.

இராவணன் அன்னை சீதையால் துரும்புக்கும்  அப்பால் உள்ள துரும்பாக பார்க்கப்படும்போதுகூட அவன் கோபத்தையும் காமத்தையும் தனிக்க அவனை பிரியமாக அனைக்கிறாள் அவன் மனைவி தான்யமாலினி. இடம் பொருள் இல்லாமல் என்ன ஒரு மோகம் ராவணன்மேனிமீது.

உடம்பின் வழியாகத்தான் மனிதர்கள் மனிதர்களின் மனங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். மனதின் வழியாக நெருக்கமாகும் மனிதர்களும் உடம்புக்குதான் மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். உடம்பு ஒரு மாயவலையை மற்றவர்கள்மீது வீசிக்கொண்டே இருக்கிறது.

காரைக்கால் அம்மையை பிரிந்துபோன கணவன், உண்மையில் யாரை பிரிந்துபோனான். அம்மையின் உடம்பையா? உள்ளத்தையா? உடம்புதான் அவனை வதைக்கிறது. உள்ளம் அவனைத்தானே எண்ணிக்கிடந்தது. உடம்பை பிரிந்ததால்தான் தான் பெற்ற பிள்ளைக்கு தன் மனைவியின் பெயர் வைக்கிறான். ஒரு உடலை பிரிந்து இன்னொரு உடல் பெற்று பயம் தெளிகிறான். அன்னையும் அந்த உடம்பைத்தான் உதறி வெளியேறுகிறார். தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளவறியா மனம் தரும் என்ற அபிராமி பட்டர் தெய்வ வடிவம் தரும் என்கிறார். தெய்வ வடிவம் பெறுதல் ஒரு கொடை.

உருவங்கள் எல்லாம் தெய்வ வடிவங்கள்தான். பலது அணுவாக இருக்கிறது அதனால் அதுகண்ணில் நிறைவதில்லை. சிலது கடலாக இருக்கிறது அதனால் அள்ளிக்கொள்ள கண்கள் போதவில்லை . ராமலட்சுமியின் கணவன் வடிவம் வெட்டுவேல் அய்யனார் உருவமாக இருக்கிறது. இருக்கிறது என்பதை விட அவளுக்கு அப்படி தெரிகிறது.  இருப்பதெல்லாம் தெரியும் என்பது இல்லை, தெரியவேண்டியவர்களுக்கு தெரியவேண்டிய நேரத்தில் தெரிகிறது. ராமலெட்சுமிக்கு தெரிகிறது. சிலநேரங்களில் சிலதுகள் தெரியாமல் இருந்துஇருக்லாம். தெரியவேண்டியது தெரிந்துவிடும்போது, நடக்கவேண்டியது நடக்காமல் போகிறது. நாடக்காது என்பதும் நடந்துவிடுகிறது.

ராமலெட்சுமி சேவுகப்பெருமாளுக்கு உடம்பால்தான் மனைவியாக இருக்கிறாள். மனதால் பக்தையாகிவிட்டாள். உயிருள்ள ஐயனார். இருபது வருடத்திற்கு முன்பு முதன் முதலில் ஐயனாரை வழிபட வந்தவளை ஏன் அந்த பொத்தைமுடி வெட்டுவேல் ஐயானார் கணவனுக்கு மனைவியை பக்தையாக்கினார்? அவள்தான் எல்லாம் என்று அவன் மனம் முழுவதும் நிறைவதற்காக.

குழந்தைகாக்க இல்லை, தனக்காக அவள் அவனுக்கு இன்னொரு கல்யாணம் கட்டிவைக்க நினைக்கிறாள், ஒரு பக்தையின் வழிபாட்டு மனம் அதை செய்கிறது. மனைவியாக அதை செய்ய முடியுமா? மண்ணுள்ளது, பிள்ளை இல்லை என்பது எல்லாம் இரண்டாம் பச்சம்.

அவன் தன்னை ஐயனாராக நினைக்கிவில்லை ஆனால் அவள் நினைக்கிறாள். அவளால் அவனும் ஐயனாராக சத்தியத்திற்கு கட்டுப்படுகிறான். அவன் அவளால் ராமனாக வாழ்கிறான்.

இந்த கதையில் ராவணனும் சுட்டப்படுகிறான். துரியோதனனும் சுட்டப்படுகிறார்கள். இருவமே அழிவின் சின்னம். அடங்கா ஆசையின் அடையாளம். ஆனால் இருவரின் மனைவிகளும் அவர்கள்மீது கொண்ட காதல் பெரியது. அவர்கள் மனைவிமீது அவர்கள் கொண்ட காதலும் பெரியது. துரியோதனன் மனைவிமீது கொண்ட அன்பில் மண்ணில் எந்த கணவனையும் அண்ணாந்துப் பார்க்க வைக்கிறான்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹைம்சர் பெண் ஆணின் முக்கால்பங்கு மனத்தை பிடித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வேறு பிறந்துவிட்டாள் அப்புறம் அதில் கடவுளுக்கு எங்கே இடம்? என்று கேட்கிறார். இத்தனை பெரிய சேனைகள் கொண்டு துரியோதனன் மண்ணைபிடிக்க மொத்த குலத்தையும் இழந்தது எல்லாம் அவன் பானுமதிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்த மனம்போக இருந்த தூசளவு மனத்தில் ஒட்டியிருந்த மண்ணாசையினால்தானா? அல்லது பானுமதி கணவன் பங்குபோட்டுக்கொள்ளாத மண்ணுக்கு சொந்தகாரன் என்று பானுமதி நினைக்கவேண்டும் என்பதற்காகவா?

மனித மனம் எத்தனை சிறிய புழுதிக்கு ஆசைப்பட்டு, தன்  இரத்தத்தையும், உடன் பிறந்தாரின் இரத்தத்தையம் புழுதியில்  சிந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறது.

சேவுகபெருமாள் அடங்காத மண்ணாசையை உடையவனாக இருப்பதுகூட அவன் மனதில் பெரும்பகுதியை தன் மனைவிக்கு கொடுத்ததால்தான் இருக்குமோ?. அவன் அரிவாள் தூக்கி மண் சேர்ப்பதெல்லாம் அவள் மகாராணியாக வாழத்தானா? எதன்மீது மனம் ஒட்டிக்கொள்கிறதோ அதை பெரிதாக்க மனம் எல்லாம் வழிகளையும் கடக்கிறது. பிரபஞ்சத்தில் எதுவுமே பெரிதில்லை. எல்லாம் சமம். ஒன்றை பெரிதாக்கினால் ஒன்றை சிறியதாக்குகிறோம். பெரியதாக்கியதின் பெருமைக்கு  பரிசு வாங்கினால் சிறியதாக்கியதின் சிறுமைக்கு விலைக்கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் பிரபஞ்சநீதி.

சேவுகபெருமாள்போல் பத்துமடங்கு நிலம் வைத்திருந்தவர்தான் இன்று பண்டாரமா கிடக்கிறார். அவர் பிரபஞ்சவிதிக்குள் வாழ்கிறார். சேவுகபெருமாள் பிரபஞ்சவிதிக்கோட்டுக்கு இப்பால் நின்று அப்படி ஒன்று இருந்தால் இருந்துவிட்டுபோகட்டுமே என்று நிற்கிறான்.

ராமலட்சுமி //‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’// என்று கேட்கும்போது //‘பிள்ளை இல்லாததனாலதான்…’ என்று சிரிக்கும்போது. சமன் செய்யப்படாத மனம் வீங்கிவிடுகின்றது என்பது தெரியாமல், அறியாத மனங்கள் அதை வளர்ச்சி என்று ஏமாறுகின்றன என்பதை உணர்த்துகிறார்.

நூறு ஏக்கர் வச்சிருக்கிற சேவுக பெருமாள் பண்டாரத்தை கூர்ந்து நோக்கிநின்றபோதே கண்டுகொண்டு இருப்பான். அவனைவிட பத்துமடங்கு நிலம்வைத்திருந்த ஒட்டபிடாரம் கிட்ணப்பநாயக்கருதான் பண்டாரமாக இருக்கிறார் என்பதை.  கண்கள் கவர்ச்சியை நம்பும் அளவு உண்மைகளை நம்புவது இல்லை. அவன் கண்கள் கண்ட உண்மையை நம்பி இருந்தால் தன்னைவிட பத்துமடங்கு வைத்திருந்தவன் பண்டாரமாகிவிட்டான் நாம் எம்மாத்திரம் என்று உணர்ந்துவிடுவான்.  உண்மையை பார்ப்பது உடற்கண்கள் இல்லையே. அறிவுக்கண். அறிவுக்கண்  அடிப்பட்டபின்புதான் விழிக்கும்.

சேவுகப்பெருமாள்போல் பத்துமடங்கு சொத்துவைத்திருந்த பண்டாரம் சேவுகப்பெருமாள் மனைவி பிச்சிபோடும் இரண்டு பழத்தை கேட்கும் இடத்தில் இருக்கிறார். சேவுகபெருமாள் இன்னும் பத்துமடங்கு சொத்து சேர்த்து கிட்ணப்பநாயக்கர் இடத்திற்கு செல்ல நினைக்கிறான். ராமலெட்சுமி இனி தாயாக முடியாது என்று என்ற இடத்திற்கு வந்து நின்று சாமிக்கு படைக்கும் தேங்காயை உடைத்துப்போட்டு குரங்குக்கும் தாயாகி நிற்கிறாள். மூவரும் ஒரு புள்ளியில் நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் வந்தபாதையும் போகும்பாதையும்   எத்தனை தூரமானது. எப்போதும் வாழ்க்கை மனிதர்கள் நிற்கு புள்ளிக்கு அப்பால் அப்பால் சென்று நின்று மனிதர்களை இழுத்துக்கொண்டே இருக்கிறது.

சௌதியில் கேம்புக்கு அருகில் ஒரு நாள் வாக்கிங் செல்கையில் ஒரு தாய்நாயையும் அதன் பத்திற்கும்மேல் பட்ட குட்டிகளையும் பார்த்தேன். “ஒரு நாய் இத்தனை குட்டிப்போடுமா!” அத்தனை குட்டிகளுடன் ஒரு தாய்நாயைப்பார்த்ததும் அந்த வீதியே மறைந்து ஒரு தேவதை உலகம் கண்முன் விரிந்து உணர்வலையில் ஆழ்த்தியது. எத்தனை குட்டிகள் என்று என்னத்தொடங்கியவன். சற்றென்று அந்த தாய்மையின் உச்சத்தை எண்ணிக்கையினால் அடக்கவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். கேம்பிற்கு அருகில் கடற்கரை மாங்க்ரோ குறுங்காடு. அது அங்கிருந்து வந்திருக்கலாம். அத்தனை குட்டிகளுடன் ஒரு தெருநாயைப்பார்ப்பது அதுதான் முதல்தடவை. அது அபூர்வமான தருணம்கூட. அருகில் இருந்த கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட்டைப்போட்டேன். அந்த தாய் அதே ராஜகம்பீரத்துடன் சலனமில்லா நோக்குடன் நோக்கிப்படுத்திருந்தது. குட்டிகள்தான் ஓடிவந்து தின்றன. மறுநாளும் அப்படிதான். அந்த தாயிடம் உணவுக்காக ஏங்கிஓடிவரும் வாளாட்டும் எந்த அறிகுறியும் இல்லை. “நான் தாயிடா” என்ற ராஜகம்பீரம். தெய்வங்கள் குழந்தையாகிவிடும் தருணம். தாயானால் அப்படி ஒரு கம்பீரம் வருமா?.

பெண் தாயாக நினைப்பது பிள்ளைகளை பெறுவதற்காக மட்டுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். அது மனிதகுலமாக இருந்தாலும், மற்ற உயிர் குலமாக இருந்தாலும்.   மண்ணை விண்ணை  அவள் அந்த அன்பின் கோபுரத்தால் இணைக்கிறாள். மண்ணை  உயிர்விப்பதற்கு அது அவள்வழி வரும் அமுதத்துளி.

பரமஹம்ச யோகனந்தர் துறவியாகிவிடக்கூடாது என்று காவல்காத்துக்கொண்டே இருக்கும் அவர் தந்தை, அவர் துறவியான பின்பு ஒரு நாள் ஆசிரமத்திற்கு வந்து  பார்க்கிறார், அவர் கல்விக்கொடுத்து காத்து வளர்க்கும் குழந்தைகள் அவரை சூழ்ந்து நின்று அவரை கருணைதந்தையாக்கி இருப்பதைக் கண்டு மகிழ்கின்றார்.

பண்டாரம் ராமலெட்சுமியை பார்த்துச்சொல்கிறார் ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’

வாழ்க்கையில் இல்லை என்பதே இல்லை. மனிதன் மட்டும்தான் இல்லாமையில் இருக்கிறான். இல்லாமையை தாண்ட தெரிந்தவர்கள் இடத்தில் உலகமே இருக்கிறது.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

குருதி [சிறுகதை]

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33
அடுத்த கட்டுரைசுதந்திரத்தின் நிறம்