திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா, நாளை-18-10-2019
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்களுடைய நற்சொல்லொன்று எண்ணத்தில் அதிர்வூட்ட, அதன்வழி எடுக்கப்பட்ட முயற்சியே, பேராளுமைகளான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (சுதந்திரத்தின் நிறம்). நிறைந்த தரத்தோடும் உழைப்போடும் இப்புத்தகம் வெளியிடப்பட வேண்டும் என்ற எங்களுடைய மனவிருப்பத்துக்கான முதல்நம்பிக்கையை, உங்களுடைய தளத்தில் நீங்கள் பதிந்த ‘ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு’ என்ற பகிர்வு கொடுத்தது. அதன்வழி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகத்துக்கான முன்பதிவினை முதற்கட்டமாகப் பெற்றோம்.
நீங்கள், திரு.வாசு தேவன், காந்தியச்சிந்தனை முகநூல்பக்கம், பாலா, லட்சுமி மணிவண்ணன், ரதன் சந்திரசேகர் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் புத்தகத்துக்கான பதிவெழுதி அதற்குத் தனிக்கவனம் கிடைக்கச்செய்தீர்கள். முகமறியா தோழமைகள் நிறையபேர் இம்முயற்சிக்கான தங்களுடைய மகிழ்ச்சியை அவர்களே அழைத்துத் தெரியப்படுத்தினார்கள். எல்லா மனங்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.
கடந்தவாரம், திண்டுக்கல் காந்திகிராமில் சமூகம்சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கான கூடுகையொன்று, அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னிலையில் நிகழ்ந்தது. குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களும் அக்கூடுகைக்கு அம்மாவால் அழைக்கப்பட்டிருந்தோம். அப்பொழுது, அடுத்தகட்டமாக எது குறித்து எல்லோரும் இயங்குவது என்பதற்கான உரையாடல் துவங்கியது. வந்திருந்தவர்களில் சிலர் அவரவர் சார்ந்திருக்கும் துறைகளில் செய்தாகவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப்பேசி விவாதம் முற்றும் நிலையில், அம்மா எழுந்து ‘நீர்நிலைகள் எல்லாம் செத்துகிட்டிருக்குய்யா, எல்லாரும் சேர்ந்து அதுக்காக ஏதாச்சும் உருப்படியா செய்வோம். உடனடியா ஏரி, குளங்கள சீரமைக்கத் துவங்குவோம். மத்தத அடுத்தடுத்து பாக்கலாம்’ என உரத்த குரலில் சொன்னார். அவருள்ளத்தில் சுமந்திருக்கும் அந்த தூயநெருப்பு இப்பவரை அணைந்துவிடவில்லை.
உங்களுடைய தளத்தில் வெளியான பதிவை அம்மாவுக்குத் தெரியப்படுத்தினோம். முகமலர்ந்த ஒரு மகிழ்ச்சியோடு சிரித்தார். ‘எல்லாம் செயல் கூடும்’ எனச்சொல்லி வள்ளாலாரின் ஆசிவரிகளைக்கூறி வாழ்த்தியனுப்பினார். நீங்கள் சுட்டிக்காட்டியது போன்றே, ஒப்பற்ற சாட்சிமனிதர்களின் ஒளிவாழ்வு புத்தகப்படுதலுக்குப் பின்னார்ந்த நெருக்கடியை உணர்கிறோம். எல்லா நண்பர்களின் உதவியாலும், கருணையின் துணையிருப்பாலும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை அச்சிடத் தேவையான அளவு புத்தகங்கள் முன்வெளியீட்டுத் திட்டத்தின் வழியாக பதியப்பட்டுவிட்டது. மனது அஞ்சிய ஒரு கடன்சுமையை, எல்லோரின் கரங்களும் பகிர்ந்துகொண்டு எளிதாக்கியுள்ளீர்கள். அனைவருக்கும் எங்கள் கைகூப்பிய நன்றிகள் சென்றடைக. இந்நன்றிக்கான நேர்மையை புத்தகம் தன்னகத்துள் கொண்டிருக்கிறோம் என நம்புகிறோம்.
காத்திருக்கும் கரங்களனைத்தையும், அக்டோபர் இருபதுக்குள் புத்தகம் அடையும். பொறுத்தருள்க.
அன்பின் நன்றிகளுடன்
தன்னறம் நூல்வெளி
ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…
சுதந்திரத்தின் நிறம் புத்தகம் அச்சடைந்து வந்திருக்கிறது. முதல் பிரதியை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனிடம் ஒப்படைத்து ஆசிபெறவும், சில புத்தகங்களில் கையெழுத்துப் பெறுவதற்காகவும் அம்மாவுடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மாவும், சத்யா அக்காவும் வீட்டிலிருந்தார்கள். புத்தகம், அம்மாவுக்கு மனநிறைவைத் தந்துள்ளது என்பதை அருகிருந்து உணரமுடிந்தது. நிறைய கடந்தகால ஞாபகங்களை மீட்டெடுத்து ஒவ்வொன்றாக அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார். புத்தகத்தைப் கையில்பெற்று அம்மா சொன்ன வார்த்தைகள் தான் இன்னும் உள்ளத்தை நனைத்துக்கொண்டே இருக்கிறது…
“எங்களோட வரலாறு புத்தகமாகியிருக்கு. அதுல சந்தோசம்தான். ஆனா, இந்தப் புத்தகத்துக்குள்ள நூத்துக்கணக்கான சின்னச்சின்ன வரலாறுகள் ஒளிஞ்சிருக்கு. அந்த வரலாறெல்லாம் புத்தகங்களா மாறனும். அதெல்லாத்தையும் பேசனும். அதுதான்யா முக்கியம். ஏதோவொரு விதத்தில நாங்கெல்லாம் செய்திதாள்கள்ல, தொலைக்காட்சில வந்ததால வெளிய தெரிஞ்சிட்டோம். ஆனா அப்டி வெளிய தெரியாம நிறைய பேர் இருக்காங்கய்யா. அவங்க எல்லாருமே வெளிய வரனும். அந்த வரலாறுக்காகவும் நான் காத்திருக்கேன்ய்யா…”
‘புத்தகத்துக்காக ஒரு வெளியீட்டு நிகழ்வு ஒன்றினை ஏற்படுத்தி நாமெல்லாம் சந்தித்துக்கொள்வோம்’ என தனது விருப்பத்தை அம்மா தெரிவித்திருக்கிறார். நமக்கான பாக்கியம் அது. இரண்டொரு தினங்களில் நிகழ்வினைத் திட்டமிட்டு நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
புத்தகங்களில் அம்மா கையெழுத்திடத் துவங்கியிருக்கிறார்கள். ஓரிரு தினங்களிலிருந்து, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே பதிந்த தோமைகளுக்கு புத்தகங்கள் அஞ்சல்வழி வந்தடையும். ஒரு சொல்கூட எழுப்பாமல் மனம்பொறுத்து காத்திருக்கும் அத்தனைபேருக்கும் கைகூப்பி நன்றியுரைக்கிறோம். பேசப்படவேண்டிய வரலாறு வெளியடைந்திருப்பதில் நிறைமகிழ்வு கொள்கிறோம்.
பெருநன்றிகள்!