கன்னிநிலம் பற்றி…

 

கன்னிநிலம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழில் நவீன இலக்கியத்தில் நான் வாசித்த முதல் காதல் கதை கன்னி நிலம்தான். நவீனம் கூரான கத்தியொன்றால் உறவை அறுத்து அறுத்து அதிலும் வலுவற்ற புண்ணாகிப்போன ஒரே இடத்தை அறுத்து அறுத்து ‘ஏதுமில்லை’ என கைவிரிக்கிறது. சோர்வின் பெருமழை பெய்துகொண்டே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு ஸ்ரீரங்க வின் முதலில்லாததும் முடிவில்லாததும் வாசித்தேன். மீண்டும் கூர் கத்திதான். காதலும் காமமும் திசையறியாது சுற்றி சுற்றி சோர்வதன் எழுவதன் காட்சி. எழுச்சியின் சித்திரத்தை மீறித் தொனிப்பது சோர்வின் சித்திரம்தான். கன்னிநிலத்தில் எழுச்சியின் சித்திரம்.

அந்த ஒரு கணத்தை யாரும் கண்டு சொல்ல முடியாது. ‘கவிதை சொல்லாக்கமுடியாத ஒன்றை சொல்ல முனைகையில் அது சொல்லின் நேரடி அர்த்தத்தைக் கடந்த நுன்மொழியொன்றை தனக்காக உருவாக்கிக்கொள்கிறது’ – ஊட்டியில் இதை நீங்கள் சொன்னபோது, சொல்லாக்க முடியாத உணர்வு என்றதுமே காதல் பித்தின் கணங்களைத்தான் சென்றடைந்தேன்.  தொடர்ந்து ஜென் பிரபஞ்ச விரிவைச் சொல்ல கவிதைக்குள்ளேயே வருவதாய் கூறிச்சென்றீர்கள். சொல்லாக்க முடியாத உணர்வின் வரிசையில் காதலுக்கு இடமுண்டு. இதையே நெல்லையப்பனும் பி த் து ப் பிடித்து கூப்பாடிட்டுச் சொல்வான். பூமியில் ஆன்மீகத்துக்கு நெருக்கமாய் வருவது காதலுணர்வுதான் என்பதாக.

காதலின் உச்சமான பொழுதுகள் காதலை சொல்லும்முன் அடுத்து பிரிந்தபின் அல்லது பிரிவின்போது. சொல்வதற்கு முன்னான பித்தெழும் காலம் (காடு நாவலில் உண்டு)

கன்னி நிலத்தில் இல்லை.

‘நீ வந்து சென்றதன் சுவடேயில்லை ஆனாலும் வந்துவிட்டிருக்கிறது ஒரு வெறுமை’ மனுஷின் வரிகள்.
எந்த சுவடுமுன்றி ஒரு இரவில் அவர்களுக்குள் வந்துவிடுகிறது காதல். அர்சுனன் சித்ராங்கதையின் நினைவாகக் கொண்டு சென்ற மதூகப் பூவும் அதன் மணமும் ஓயாத இருப்பாக நெல்லையப்பனை பின் தொடர்கிறது. மதூகப்பூவைத் தேடிசென்று காண்கையிலதான் அவர்களின் காதல் மலர்ந்துகொள்கிறது. அவ்வளவு எளிதல்ல!! ராணுவம் சூழ்ந்து கொள்கிறது. அடுத்து ஊஞ்சலின் மறு எல்லை.

தவித்துக்கொண்டு வாசித்தேன். ஆனால் உள்ளே ஒருவன் விழி த் து க் கொண்டான்… எங்கே கொண்டு செல்லப்போகிறார் கதையை… வழக்காமான பிரிவா? அதுதான் தெரியுமே.. ஒரே அங்கலாய்ப்பு. ராணுவம் சிதைக்கிறது நெல்லையப்பனை. நாயர் வந்து ‘அந்த ஒரு சாப்டர் முடிந்துவிட்டது. தாண்டிப் போயாகணும்’ என்பான். புயலிலே ஒரு தோனியின் கடைசி அத்யாயம் நினைவுக்கு வந்தது. அந்த வியாபாரி அவ்வளவு கராராய் காதல் கணக்கை முடித்து வைப்பார். அதேபோல் நாயர் பேச்சும்  மேஜரின் பேச்சும் ‘ப்ளட்டோனிக் லவ்…புல் ஷிட்’. ஆனால் நெல்லையப்பன் பாக்கெட்டில் மதூகப்பூ. நாயர் கடைசியாக ஜ்வாலமுகியை சந்திக்க வாய்ப்பளிப்பான் பேசவே கூடாது என்ற கட்டுப்பாடுடன். அந்த சந்திப்பும் நெல்லையப்பன் அவள் செல்வதை கண்களால் பார்க்க வேண்டும்

என்பதற்காக. நெல்லையப்பன் கண்ணாடிச்

சுவரின் ஒருபக்கமிருந்து பார் த் திரு ப் பா ன். சுடர் நீரில் மிதப்பது போல் இரங்கி காரை நோக்கிச் செல்லும் ஜ்வாலமுகி  கணத்தில் பித்துபோல் ஓடிவந்து கண்ணாடியில் மோதிக்கொள்வாள். நெற்றியில் இரத்தம் குங்குமம் போல் கசியும் ஏனோ ‘மலரினும் மெல்லிதே காமம்’ எனும் வரிகள் நினைவுக்கு வந்தது.

 

இந்தப்புள்ளியில் காதலின் உலகியல் சாத்தியங்களை கூறி முடித்துவிடுகிறது கதை. துவக்கம் சமூகம் மூக்கை நுழைத்தல் உக்கிரமான் பிரிவு. ஆனால் கதை நீள்கிறது உலகியல் தளமொன்றை கடந்த ஒன்றை நோக்கி. ராணுவம் துரத்தி வருகிறது காதலர்கள் இருவரும் உயிரை உந்திக்கொண்டு ஓடுகிறார்கள் இந்திய எல்லைக்கும் மியான்மர் எல்லைக்கும் நடுவிலிருக்கும் எந்த தேசத்துக்கும் சொந்தமில்லாத ஆதிநிலமான நோ மேன்ஸ் லேன்டிற்கு.
கனக்கசிதமான த்ரில்லரின் அம்சங்களோடு கடைசிப் பகுதியின் சேஸ் அமைந்துள்ளது. கடைசியில் அவர்கள் சென்றடைவது மனிதர்களின் குண்டுகள் நுழையமுடியாத மதூகவனத்திற்கு- நோ மேன்ஸ் லேன்ட். காதலர்கள் ஒட்டிக்கொண்டு வெகுதூரம் செல்கிறார்கள் மதூகவனத்தில். மதூகவனம் கவிதையின் நிலம் என்று தோன்றியது. கவிதை மட்டுமே நம்மை அங்கு இட்டுச் செல்ல முடியும் எனப்படுகிறது.

 

அவன் கேட்கிறான் ‘இன்று முழுநிலவு நாளா?’

”சரியான மக்கு இந்த நிலத்தில் என்றுமே பௌர்ணமிதான். இதுகூடத்தெரியாதா?”
என்கிறாள் அவள்.

நிலவு தேயாத மதூகப்பூக்கள் நிறைந்த ஒரு நிலம். அதை நோக்கியே அழைக்கிறது கவிதையும் கலையும் ஒரு சிறுகுருவியாய் மானுடத்தின் சங்கிலிகள் மீதமர்ந்து.மீண்டும் தேவதேவனின் இவ்வரிகளை சென்றடைகிறேன்.

 

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக்கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

 

அன்புடன்,

 

ஸ்ரீநிவாஸ்

திருவாரூர்

கன்னிநிலம் -கடிதம்

கன்னிநிலம் -கடிதம்
கன்னிநிலம் முடிவு – கடிதம்
கன்னிநிலம் கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்
அடுத்த கட்டுரைவெட்டீருவேன்!