ஹோமியோபதி:ஒருகடிதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

 
வணக்கம். நலம் தானே! மாற்று மருத்துவம் பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இந்தக் கட்டுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
Homeopathy — Still Crazy  After All These Years
by Harriet Hall, MD
அன்புடன்
கோபிநாத்.
சேலம்.

அன்புள்ள கோபிநாத் அவர்களுக்கு,
இத்தகைய கட்டுரைகளை நான் பல வருடங்களாகவே கவனித்துவருகிறேன். நான் மருத்துவனோ ஆய்வாளனோ அல்ல. ஆகவே என்னால் இந்த விவாதத்தில் எதையுமே சொல்ல முடிவதில்லை. இந்த விவாதத்தைக் கவனிக்கிறேன் என்று மட்டுமே சொல்ல முடியும்.

ஆனால் தத்துவார்த்தமாக எனக்கு ஒரு தரப்பு உள்ளது. அதைமடும் சொல்லிவிடுகிறேன். மருத்துவத்தில் இரு தளங்கள் உள்ளன. ஒன்று நோய் மற்றும் சிகிழ்ச்சையைப்பற்றிய அவதானிப்புகள். இன்னொன்று அந்நோய் வரும் முறை மற்றும் குணமாகும் முறை பற்றிய கருத்துருவகங்கள். ஒவ்வொரு சிகிழ்ச்சைமுறைக்கும் அதற்கேற்ற அவதானிப்புகளும் கருத்துருவகங்களும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இக்கருத்துருவகங்கள் நெடுங்கால பயன்பாட்டின் மூலம் மெல்ல கோட்பாடாக ஆகின்றன.

இத்தகைய கோட்பாடுகளுக்கு அவை உருவாகும் சமூகத்தின் பொதுவான உலகப்பார்வையுடன் நேரடியான உறவு உண்டு. அதாவது அந்தச்சமூகம் எந்தக்கோணத்தில் வாழ்க்கையைப்பார்க்கிறதோ அந்தக்கோணத்திலேயே நோயையும் சிகிழ்ச்சையையும் கண்டு அதற்கான விளக்கங்களை உருவாக்கிக் கொள்கிறது.

உதாரணமாக ஆயுவேதம்,சித்தமருத்துவம் போன்ற இந்திய மருத்துவமுறைகள் வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று கூறுகள் உடலில் சமநிலையில் இருக்கவேண்டும் என்றும் அந்தச்சமநிலை குலையும்போதுதான் நோய் வருகிறது என்றும் அச்சமநிலையை மீண்டும் உருவாக்குவதே சிகிழ்ச்சை என்றும் கூறுகின்றன. இந்தத் தரிசனம் புராதன இந்திய உலகியல்தத்துவசிந்தனையான சாங்கிய தரிசனத்தில் இருந்து பெறப்பட்டது.

இப்பிரபஞ்சம் சத்வ குணம், தமோகுணம், ரஜோகுணம் என்னும் மூன்று குணங்களின் சமநிலையால் ஆனது என்றும் அச்சமநிலை குலைந்தமையால்தான் பிரபஞ்ச இயக்கம் நடக்கிறது என்றும் சாங்கியதரிசனம் விளக்குகிறது. நம் மரபில் உள்ள பெரும்பாலான சிந்தனைகள் சமநிலை– சமநிலைகுலைவு — மீட்சி என்ற அளவில் பெரும்பாலான இயற்கைநிகழ்வுகளை விளக்குவதைக் காணலாம்.

இந்தச் சிந்தனை தவறா என்ற விவாதத்தில் பெரும்பாலும் பொருள் இல்லை. பிரபஞ்சத்தை– இயற்கையை– மனித உடலை இந்தக்கோணத்தில் பார்த்தால் இந்தக்கோணத்திலான விடைகளைப் பெறலாம் என்பதே உண்மை. இந்தக்கோணத்தில் மனித உடலை அணுகும் ஆயுர்வேதம் பலநூற்றாண்டுகளாகவே மனித ஆரோக்கியத்தைப்பேணும் மிகச்சிறந்த வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறது. மூலிகைகளை கண்டடைந்திருக்கிறது. இன்றும் நீடிக்கிறது.

நாம் நம் கல்விமுறை காரணமாக ஐரோப்பிய சிந்தனை மாதிரிகளை முழுமுற்றானவை என்று எண்ண பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே அலோபதியின் வழிமுறைகள் மட்டுமே அறிவியல்பூர்வமானவை என எண்ணுகிறோம். பிற மருத்துவக் கோட்பாடுகளைப்போலவே அலோபதியும் அது உருவான பண்பாட்டின் — காலகட்டத்தின் பொதுவான சிந்தனைத்தளத்தில் இருந்து முளைத்த ஒன்றுதான். அந்தக்கோணத்தில் உடலை நோக்கி அதற்குரிய விடைகளைப் பெறுவதுதான்.

இயந்திரவியல் உருவாகி வலுப்பெற்ற காலகட்டத்தின் சிருஷ்டிதான் அலோபதி. மேலைச்சிந்தனையில் எப்போதும் செல்வாக்குசெலுத்தும் இரட்டைமை [ Dychotomy ] அதன் அடிப்படைத் தரிசனமாக உள்ளது. உடலை அதிநுட்பமான ஓர் இயந்திரமாகக் காணும் நோக்கு அலோபதியின் அடிப்படை. ஓர் இயந்திரம் இயல்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்கக் கூடியது. அதன்செயல்பாட்டுக்கான தடை வெளியே இருந்து வரவேண்டும். அந்த தடையைக் களைந்தால் அது மீண்டும்செயல்பட ஆரம்பிக்கும். இவ்வாறு உடலுக்கு வெளியே இருந்து வரும் தடை என்பது கிருமிகள்.

ஒருநேர் நிலைச்சக்தி – ஓர் எதிர்நிலைச்சக்தி இரண்டும் மோதிக்கொள்வதன் முரணியக்கமே எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது ஐரோப்பிய சிந்தனையின் சாரமாக உறையும் உலக நோக்கு. இயற்கை Xமனிதன், ஆண்Xபெண், மனம்யுடல் என இரட்டைமைகளை தொடர்ச்சியாக ஐரோப்பிய சிந்தனை உருவாக்கியது. அவ்வாறுதான் கிருமிXஆரோக்கியம் என்ற இரட்டைமை உருவாக்கபப்ட்டது. சிகிழ்ச்சை என்பது கிருமிகளுடனான போர் என்று கூறப்பட்டது. இயற்கையுடனான போரே மானுட வரலாறு என்று சொல்லும் மார்க்ஸியத்துக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

இந்தக் கிருமிக்கோட்பாடை நாம் கிட்டத்தட்ட இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டிருக்கிறோம். வெறும் நூறு வருடங்கள் பழக்கம் கொண்ட கோபாடு இது. நமக்கு இது அரை நூற்றாண்டாகவே பழக்கம். இந்தக்கோட்பாடு வருங்காலங்களில் மறுக்கப்படும் என்றே நான் எண்ணுகிறேன். அப்படி மறுக்கப்படும்போது இதுவரை இந்த முறையால்செய்யப்பட்ட சிகிழ்ச்சைகள் அனைத்துமே பொய் என ஆகுமா? அந்தச் சிகிழ்ச்சைகள் முற்றிலும் காலாவதியாகுமா?

இந்தக்கோட்பாடு மூலம் இயற்கை மேல் பல அவதானிப்புகளை நிகழ்த்த முடிந்த்திருக்கிறது. பல பதில்கள் கிடைத்துள்ளன. அவை வெற்றிகரமாக பயன்படுத்தவும் படுகின்றன. அலோபதி மானுட ஞானத்தின் ஒரு மாபெரும் வெற்றி என்றே நான் எண்ணுகிறேன். அதன் குறைகளுடன்கூடவே அதை அப்படிச் சொல்லாமலிருக்க எவராலும் முடியாது. அந்த அடிப்படைகள் மாறினாலும் அந்த கண்டடைதல்கள் அப்படியேதான் இருக்கும்.

அதேபோலத்தான் ஹோமியோபதியும். அது மனித உடலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்து சில கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக்கோணம் அக்காலகட்டத்தின் ரசவாதத்தில் இருந்து உருவானது. இன்றைய தர்க்கமுறைப்படி அதன் விளக்கம் ஏற்க முடியாதஓன்றாக இருக்கக் கூடும். வாத-பித்த-கப கோட்பாடே அப்படி அலோபதியால் மறுக்கப்படுகிறது என நாம் அறிவோம்.

ஆனால் அந்த கோணத்தில் இயற்கையை அணுகி சில முக்கியமான திறப்புகளை ஹோமியோபதி உருவாக்கியிருக்கிறதென்றே நான் எண்ணுகிறேன். என் அனுபவத்தில் மூன்று முறை எனக்கு அது கைகொடுத்திருக்கிறது.

ஒன்று என் மகன் அஜிதனுக்கு அவனுடைய மூன்றுவயது வரை தொடர்ச்சியாக பீடித்த சளி-இருமல் தொந்தரவுக்கு அலோபதியால் தீர்வளிக்க முடியவில்லை. அலர்ஜி என்றே அவர்கள் சொன்னார்கள். தருமபுரியின் குளிரும் தூசியும் நீரில் உள்ள ·ப்ளோரைட் போன்ற சில மூலகங்களும் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றார்கள்.  ஹோமியோபதிதான் அவனைக் குணப்படுத்தியது.

அதேபோல அருண்மொழிக்கு பல மாதங்கள் நீண்ட வரட்டு இருமலுக்கும் அலோபதியால் அலர்ஜி என்ற பதிலையே அளிக்க முடிந்தது. பல்லாயிரம் ரூபாய் செலவிட்ட பின் ஹோமியோபதி அவளைக் குணப்படுத்தியது. என் தலையில் நான்குவருடங்களுக்கு முன்னர் வருடக்கணக்காக தொடர்ச்சியாக பொடுகுத்தொல்லை இருந்தது. கனநீரில் தினமும் தலைகுளிப்பதே காரணம் என்று அலோபதிமருத்துவர் சொன்னார்கள்.  ஒரேவாரத்தில் ஹோமியோ மருத்துவம் அதை குணப்படுத்தியது.

அலர்ஜி போன்ற நெடுநாள் சிக்கல்கள், உடல்நிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றுக்கு ஹோமியோபதி சிறந்த மருந்தை அளிக்கிறதென்றே என் அனுபவங்கள் காட்டுகின்றன. ஆகவே என் வரையில் நான் அதை முழுக்க நிராகரிப்பதை ஏற்கமுடியாது.
முந்தைய கட்டுரைகிருஷ்ணகிரி:ஒருகடிதம்
அடுத்த கட்டுரைதிருவையாறு :கடிதங்கள்