‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 11

இரும்புப் பாவை மடங்கி தன் மடியில் விழுந்ததும் திருதராஷ்டிரர் தோள் தளர்ந்தார். இரு கைகளும் உயிரிழந்தவை என பக்கவாட்டில் சரிய, பாவை அவர் மடியிலிருந்து நழுவி தரையில் கால் மடிந்து சரிந்து ஓசையுடன் விழுந்தது. என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் அனைவரும் விழி திறந்து நோக்கி நிற்க திருதராஷ்டிரர் இரு கைகளையும் தலைக்கு மேல் விரித்து விரல்களை அகற்றி விரித்து காற்றைப் பற்ற முனைவபர்போல அசைத்தார். குளிர்கண்டவர்போல உடல் நடுங்கினார். சில கணங்களுக்குப்பின் விந்தையானதோர் சீறல் ஒலி அவரிடமிருந்து எழுந்தது. பீடம் ஓசையிட உடலை உந்தி எழுந்து தலையை இருபுறமும் உருட்டி “என்ன? என்ன?” என்றார்.

பின்பு ஒரு மின் என அனைத்தும் தெளிய தன் நெஞ்சில் வெடிப்போசையுடன் இரு கைகளாலும் மாறிமாறி அறைந்தபடி கதறி அழுதுகொண்டு கால் மடிந்து மீண்டும் பீடத்திலேயே விழுந்தார். அவரது பேரெடை தாளாமல் பீடம் முறிய பின்பக்கம் மல்லாந்து விழுந்தார். அவரை தூக்கும்பொருட்டு அறியாது பீமனும் அர்ஜுனனும் முன்னகர அதுவரை அங்கிலாதிருந்தவன் போலிருந்த சங்குலன் கைநீட்டி ஓசையிலாது அவர்களைத் தடுத்து, அருகே வந்து, இரு கைகளாலும் அவரது தோள்களைப்பற்றி சிறுகுழந்தையை என தரையிலிருந்து தூக்கி நிறுத்தினான். அவர் அவன் கையில் துணிப்பாவை என தொய்ந்து கிடந்தார்.

சங்குலன் முறிந்த பீடத்தை காலால் உதைத்து அப்பால் தள்ளினான். திருதராஷ்டிரர் வீறிட்டலறியபடியே இருந்தார். அவர் உடல் நடுங்க, கைகள் பதைத்தன. அவரை தன் ஒரு தோளில் சாய்த்த பின் சங்குலன் பீமனை நோக்கி அவ்வறைக்குள் அப்பால் கிடந்த பிறிதொரு பீடத்தை எடுக்கும்படி விரல் சுட்டினான். பீமன் பாய்ந்து சென்று அதை தூக்கி வந்து அருகே இட அதை காலால் இழுத்து அருகிட்டு திருதராஷ்டிரரை அதில் அமர்த்தினான். அவர் கால் மடித்து அதில் அமர்ந்து முழங்கால்கள் மேல் தலை வைத்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டு அழுதார்.

அங்கு நிகழ்வதென்ன என்று அறியாதவள்போல உறைந்த முகத்துடன் காந்தாரி அமர்ந்திருந்தாள். திருதராஷ்டிரர் “மந்தா! மந்தா! என் மைந்தா! மந்தா! உன்னை கொன்றுவிட்டேன்! என் கைகளால் உன்னை கொன்றுவிட்டேன்! மகற்கொலை புரிந்த கீழ்மகனானேன்! கெடுநரகுக்குச் செல்லும் பழி கொண்டேன்! என் மைந்தா! என் மைந்தா!” என்று கதறினார். திரும்பி இரு கைகளையும் விரித்து இளைய யாதவரின் திசை நோக்கி “யாதவனே, என்ன நிகழ்கிறது இங்கு? என் மைந்தன்! என் இனிய மைந்தன்! என் மைந்தனை என் கைகளால் கொன்றுவிட்டேன்” என்றார்.

இளைய யாதவர் அருகணைந்து பீமனின் தோளைப்பற்றி “வணங்குக!” என்றார். பீமன் திகைத்து சிறுகுழந்தைபோல் மாறி மாறி பார்க்க “வணங்குக அவரை!” என்றார். பீமன் முன்னகர்ந்து முழந்தாளிட்டு அவரருகே சென்று “தந்தையே, நான் பீமன். உயிருடனிருக்கிறேன்” என்றான். “மைந்தா!” என்று கூவியபடி எழுந்து அவர் அவனை அள்ளி மார்போடணைத்து இறுக்கிக்கொண்டார். அவன் இரு கன்னங்களிலும் தோள்களிலும் வெறிகொண்டவர்போல் முத்தமிட்டார். அவன் முகத்தைப் பற்றி தன் மார்போடணைத்து அவன் குழல் மேல் முகத்தை வைத்து உரசினார். மானுடரிலிருந்து உள்ளுறை விலங்கு எழும் தருணங்களே உச்ச கணங்கள் என்று நகுலன் எண்ணிக்கொண்டான்.

திருதராஷ்டிரர் திரும்பி கைகளை விரித்து “இளைய யாதவனே, என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது? என் மைந்தன்! இதோ என் மைந்தன்! ஆ! என் மைந்தனை நான் கொல்லவில்லை. மூதாதையரே! தெய்வங்களே! என் மைந்தன் இதோ இருக்கிறான். என் குடித்தெய்வங்கள் என்னுடன் இருந்தன. என் நற்பொழுது நிலைத்தது! என் மைந்தனை நான் கொல்லவில்லை!” என்று கூவினார். பற்கள் கரிய முகத்தில் ஒளியுடன் தெரிய “என் மைந்தன் இருக்கிறான்! என் மைந்தன் இருக்கிறான்!” என்றார்.

இளைய யாதவர் மேலும் அருகணைந்து “மைந்தனைக் கொன்றதும் உண்மையே” என்றார். அவர் சொல்வது புரியாமல் கை அந்தரத்தில் நிற்க திருதராஷ்டிரர் “என்ன சொல்கிறாய்?” என்றார். “அது துரியோதனன் சமைத்த இரும்புப் பாவை” என்றார். “நன்று! நன்று செய்தாய்! என்னுள்ளிருந்து இவ்வண்ணமொரு கொடுந்தெய்வம் எழும் என்று நான் எண்ணியதே இல்லை. இத்தனை இருள் இருந்திருக்கிறது என்னுள். எத்தனை கெடுமதியாளனாக நான் இருந்திருக்கிறேன்! நன்று! தெய்வங்களே, என்னை காத்தீர்கள்! மூதாதையரே, எனக்கு நல்லூழ் அளித்தீர்கள்!” என்றார் திருதராஷ்டிரர்.

பின்னர் மீண்டும் பீமனைத் தழுவி அவனை முத்தமிட்டு “எத்தனை இனியவன்! இவன் என் கையில் வளர்ந்த மகவு… தழுவுந்தோறும் தெவிட்டாத உடல் கொண்டவன். இவனை இளமையில் எத்தனை ஆயிரம் முறை தோள் தழுவியிருப்பேன்! என் தோள்களிலிருந்து இவனை இறக்கிவிட்டதே இல்லை” என்றார். தலையைச் சுழற்றியபடி “இனியவன்! இப்புவியில் எதைவிடவும் எனக்கு இவன் இனியவன். இப்புவியில் இனி நான் இவனுருவில் வாழ்வேன். என் மைந்தன் இவன்! எஞ்சியிருக்கும் என் மைந்தன் இவன் மட்டுமே!” என்றார்.

பீமன் அவர் மார்பில் முகம் சேர்த்து “ஆம் தந்தையே, தங்கள் மைந்தன். அப்பாவையென இப்போது என்னை இறுக்கிக் கொல்வீர்கள் எனில் அதுவே என் நல்லூழ் என்று எண்ணுவேன்” என்றான். அவனை ஓசையெழ அறைந்து “பேசாதே! இவ்வண்ணம் எதையும் என்னிடம் பேசாதே!” என்று சொல்லி திருதராஷ்டிரர் மீண்டும் பீமனை இறுகத் தழுவிக்கொண்டார். “நான் அறிகிறேன், உன் உள்ளம் எங்கெல்லாம் செல்கிறது என்று நன்கறிகிறேன். உன் மைந்தர்களின் இறப்பு உன்னை கொல்கிறது” என்றார்.

“ஆம், தந்தையே. என் மைந்தர்களின் சாவில் இருந்து என்னால் வெளிவரவே இயலவில்லை” என்றான் பீமன். திருதராஷ்டிரர் “ஆம் மைந்தா, அது கடினமானதுதான். தந்தைக்கு மைந்தர் இழப்பு தன் இறப்புக்கு நிகர். ஆனால் நீ வெளிவந்தாகவேண்டும். அஸ்தினபுரியின் பொருட்டு, உன் தமையன் பொருட்டு, உன் குடி இங்கு வாழவேண்டும். அனைத்தையும் கடந்து செல்க! நிகழ்ந்ததனைத்தும் கனவென்று கொள்க! இல்லையென்று எண்ணினால் இல்லாமல் ஆகுமளவுக்கு கனிவு கொண்டதே இங்குள்ள அனைத்தும். மைந்தரை மறந்துவிடு. பெருகும் கங்கைப்புனலில் அவர்களுக்கு கடன் கழித்த மறுகணமே அவர்களை கடந்து சென்றுவிடு” என்றார்.

பீமன் அவர் தோளில் தலை சாய்த்து ஓசையிலாது அழுதான். அவர் அவன் தலையை வருடினார். மீண்டும் மீண்டும் அவன் குழலில் முத்தமிட்டார். அவர்கள் இருவரும் பிற எவரும் அங்கிலாததுபோல் ஒரு தனிமையை சென்றடைந்தனர். ஒருவரை ஒருவர் தழுவி, தொடுகையாலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, அங்கிருந்தனர். இரு பெருநாகங்கள் ஒன்றையொன்று தழுவி நெகிழ்ந்து இறுகி மீண்டும் நெகிழ்ந்து இறுகிக்கொண்டிருப்பதுபோல். சுனையொன்றின் சுழிப்புபோல. பிறர் அவர்களை வெறுமனே நோக்கி நின்றிருந்தனர்.

யுதிஷ்டிரன் கைகூப்பி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தார். அர்ஜுனன் தளர்ந்து இளைய யாதவருக்குப் பின்னால் சென்று நின்று பின்னர் மீண்டும் தளர்ந்து சுவரோரமாக சாய்ந்து நின்றான். சகதேவன் காந்தாரியின் அருகிருக்க அவள் தன் கைகளால் அவன் தலையை வருடிக்கொண்டிருந்தாள். அவன் விழி மூடி அவள் தொடையில் நெற்றியை வைத்து ஊழ்கத்திலென அமைந்திருந்தான்.

நீண்ட மூச்சுடன் இருவரும் பிரிந்தனர். திருதராஷ்டிரர் “செல்க! உன் அன்னையிடம் வாழ்த்துச்சொல் பெறு!. உளம் நிறைந்து அவள் உனக்களிக்கும் சொல்லால் நீ துயர் அற்று மீள்வாய்” என்றார். “ஆம்” என்றபடி பீமன் எழுந்து சென்று காந்தாரியின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவள் தன் இரு கைகளையும் அவன் தலையில் வைத்து “சிறப்புறுக! எஞ்சும் வாழ்வு இனிதாகுக! மீட்பு கொள்க!” என்றாள். அவன் அவள் காலில் தன் தலையை வைத்தான். காந்தாரி மேலும் குனிந்து அவன் செவிகளைப் பற்றி தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.

அவன் நிலத்தில் அமர்ந்து அவள் மடியில் முகம் புதைத்து கை தளர்ந்து அமர்ந்திருக்க அவன் குழல்கற்றைகளை கைகளால் வருடியபடி “துயருறாதே, மைந்தா. துயர் மானுட உயிருக்கு இயல்பான ஒன்று அல்ல. உவகையே உயிரின் நிறைநிலை. துயர் நிலைகுலைவு. நிலைகுலைந்தவற்றை சீரமைக்க ஐந்து பூதங்களும் ஓயாது முயல்கின்றன என்பார்கள். வானென அமைந்த தேவர்கள் அதன் பொருட்டே மண்ணுக்கு இறங்குகிறார்கள் என்பார்கள். எண்ணுக, இத்துயர் கடந்து போகும்! அறிக, அனைத்துத் துயர்களும் கடந்துபோகும்! நீ இவை அனைத்திலிருந்தும் எழுவாய். அனைத்தும் ஒருநாள் நினைவென்று ஆகும். நிகழ்ந்தவை நிகழ்ந்தாக வேண்டியவை என்றாகும்” என்றாள்.

பீமன் அவள் மடியில் விழி மூடி கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் “நிறைவுற்றோம், தந்தையே. இந்த ஒரு நாளால் அனைத்திலிருந்தும் விடுபட்டோம். இனி துயரில்லை, இனி எதையும் அஞ்சுவதில்லை. இனி எந்த தெய்வங்களிடமும் கேட்க ஒன்றுமில்லை எங்களுக்கு” என்றார். திருதராஷ்டிரர் கைநீட்டி “யாதவனே, ஏன் இவ்வண்ணம் எல்லாம் நிகழ்ந்ததென்று நான் கேட்கப்போவதில்லை. நீ அறியாத ஏதுமில்லை என்று, என்று நீ அஸ்தினபுரிக்கு வந்தாயோ அன்றே அறிவேன். மெய்யுரைக்க வேண்டுமெனில் இவ்வண்ணமெல்லாம் நிகழும் என்று முன்னரே அறிந்திருந்தேன். இதுவரை நான் ஆற்றிய அனைத்தும் அவ்வண்ணம் நிகழ்தலாகாது என்பதற்காகவே” என்றார்.

பின் மெல்ல கசப்புடன் நகைத்து “உண்மையில் நான் இதுகாறும் செய்தவை எல்லாம் உனக்கெதிரான போர் மட்டுமே. அதில் நான் தோற்றுவிட்டேன். அவ்வாறன்றி வேறு வழியில்லை” என்றார். முகம் உள்ளெழுச்சியில் நெளிய கைகளைத் தூக்கி உரத்த குரலில் “இதோ என் மைந்தரை தோள் தழுவுகையில் மீண்டும் பெருந்தந்தையென்று உணர்கிறேன். இத்தருணத்தில் இவ்வாறு எழ முடிந்ததை எண்ணி ஆம் ஆம் என்று தெய்வங்களிடம் சொல்கிறேன். அவர்கள் என்னை வெல்ல இயலாது. நான் எளிய மானுடன் அல்ல, குலம் சமைக்கும் பிரஜாபதி. பிரஜாபதிகளை காலமும் தெய்வமும் வெல்ல இயலாது. பெருகுவதொன்றே அவர்களின் ஊழ். நான் பெருகி இப்பாரதவர்ஷம் முழுக்க நிறைவேன்” என்றார்.

“ஆம் அரசே, இங்கிருந்து பெருகி எழுபவர் நீங்கள் மட்டுமே. குருகுலம் ஒருபோதும் அழியாது” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்! ஆம்! ஆம்!” என்று திருதராஷ்டிரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். பின்னர் நீண்ட பெருமூச்சுடன் உளம் நகர்ந்து “அந்தச் சிலை! அதை தழுவுகையில் நான் எதை எண்ணினேன்? அந்தத் தோள்கள் எனக்கு நன்கு பழக்கமானவை. ஒருகணம் இவன் என்றும் மறுகணம் அவன் என்றும் தோன்றும் உடல் அது” என்றார். “அதை நாம் மீண்டும் எண்ணவேண்டியதில்லை. எண்ணி எண்ணிச் செல்லும் தொலைவுகள் வாழ்வுக்குரியவை அல்ல. வாழ்வை துறப்பவை அவை” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று திருதராஷ்டிரர் கூறினார். “நலம் பெறுக! அனைத்தும் நன்றென்றே அமைக!” என்றார்.

யுதிஷ்டிரன் “தந்தையே, இத்தருணத்தில் நீத்தார்கடனுக்காக தாங்கள் எங்களுக்கு நற்சொல் அளிக்க வேண்டும்” என்றார். “நிகழ்க! காற்றுவெளியை நிறைத்திருக்கும் அனைவரும் அன்னமும் நீரும் விழிநீரும் பெற்று விண்புகுக! அவர்கள் இங்கு ஆற்றியவை அனைத்தும் நிறைவுற்றதென்று அவர்கள் அறியட்டும். மானுடரின் விழைவுகளால் எழுவதல்ல அந்நிறைவு, ஊழ் வகுத்த வட்டத்தை இருமுனை இணைத்து முடிப்பதனால் எழும் நிறைவு அது. அதை விண்ணிலிருந்து மட்டுமே மானுடர் அறியமுடியும். அவர்கள் அங்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

யுதிஷ்டிரன் வணங்கி “எனில் நாங்கள் சொல் கொள்கிறோம், தந்தையே!” என்றார். “அவ்வாறே” என்றார் திருதராஷ்டிரர். யுதிஷ்டிரன் பீமனின் தோளைத் தொட்டு “எழுக, மந்தா! தந்தை ஓய்வெடுக்கட்டும்” என்றார். “ஆம், நான் ஓய்வெடுக்க வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவு ஓடியவன் போலிருக்கிறேன். இப்பெருங்களைப்பை இதற்கு முன் எப்போதும் உணர்ந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். பீமனின் தோளைத் தொட்டு இளைய யாதவர் “எழுக, பீமசேனரே! நலமே நிறைந்தது. இது தெய்வங்கள் எழுந்த பொழுது” என்றார்.

பீமன் கண்களைத் துடைத்தபடி எழுந்து “வருகிறேன், அன்னையே” என்றான். காந்தாரி அவன் கன்னத்தை மெல்ல தட்டினாள். சகதேவனும் “வாழ்த்துக, அன்னையே!” என்றான். அவள் அவன் கைகளைப் பற்றி தன் உதடுகளில் வைத்து முத்தமிட்டாள். யுதிஷ்டிரனும் அர்ஜுனனும் அருகணைந்து “விடைகொள்கிறோம், தந்தையே” என்றனர். அவர்கள் ஒவ்வொருவராக வெளியே செல்ல இளைய யாதவர் மட்டும் குடிலுக்குள் நின்றார். நகுலன் திரும்பிப் பார்க்க “செல்க!” என்றார்.

அவன் வெளியே சென்றதும் யுதிஷ்டிரன் திரும்பிப்பார்த்து “அவன் வரவில்லையா?” என்றார். “அவர்களுடன் தனிமையிலிருக்கிறார்” என்றான். “இனியென்ன அவன் சொல்லவேண்டியிருக்கிறது அவர்களிடம்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “ஒருவேளை இனிமேல்தான் அவர் உண்மையிலேயே கூற வேண்டியதை கூறுவார் போலும்” என்று சகதேவன் சொன்னான். புரியாமல் புருவம் சுளிக்க அவனைப் பார்த்தபின் யுதிஷ்டிரன் “நெஞ்சிலிருந்து பேரெடை ஒன்று அகன்றது. இத்தருணத்தை எண்ணி எண்ணியே துயிலழிந்திருந்தேன். ஒரு கணத்தில் அனைத்திலிருந்தும் விடுபட்டவன் போலிருக்கிறேன்” என்றார்.

பெருமூச்சுகள் வழியாக அவர் முகம் மலர்ந்தபடியே வந்தார். “இப்போர் நிகழவேயில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அனைத்துக்கும் முன்னால் சென்று அஸ்தினபுரியில் உடன்குருதியினருடன் விளையாடி மகிழ்ந்திருந்த நாட்களுக்கே சென்றுவிடலாம்போல் தோன்றுகிறது” என்றார். பீமன் பெருமூச்சுடன் “விண்ணுலகொன்று உண்டு, அங்கு அவர்களுடன் தோள்தழுவி விளையாடுவோம்” என்றான். யுதிஷ்டிரன் “அதன் ஒரு கீற்றை இன்று அறிந்தோம், இளையோனே” என்றார்.

 

திரும்பிச் செல்கையில் தேரிலேயே யுதிஷ்டிரன் துயில்கொள்ளத் தொடங்கியிருந்தார். தேரை நோக்கி செல்கையிலேயே அவர் நடை தளர்ந்து சகதேவனை பற்றிக்கொண்டுதான் நடந்தார். தேர் மிக மெல்ல ஒழுகிச்செல்வதுபோல் ஓடியது. குடிலை அடைந்து திரைவிலக்கி இறங்கிய சகதேவனும்கூட துயிலிலிருந்து விழித்தவன் போலிருந்தான். “மூத்தவரே! மூத்தவரே!” என இருமுறை அழைத்த பின்னரே யுதிஷ்டிரன் விழித்துக்கொண்டு தேரிலிருந்து தொய்ந்த நடையுடன் இறங்கினார்.

பீமன் புரவியில் வந்து இறங்கி “நானும் துயில்கொள்ளவே விரும்புகிறேன், இளையோனே” என்றான். சகதேவன் யுதிஷ்டிரனை மெல்லத் தாங்கி குடிலுக்குள் கொண்டுசெல்வதை நகுலன் பார்த்தான். சற்று நேரத்தில் அவன் வெளிவந்து “அவர் விழித்துக்கொள்ளவே இல்லை” என்றான். அர்ஜுனன் புரவியை நிறுத்தி குடிலை சிறிது நேரம் பார்த்துவிட்டு திரும்பி குறுங்காட்டுக்குள் புகுந்து மறைந்தான். பீமன் “எனக்கும் காடுதான் துயிலுக்குரிய இடம்” என்றபின் புன்னகைத்து நகுலனை தோளில் தட்டிவிட்டு காட்டுக்குள் புகுந்து கிளையொன்றை பற்றித் தாவி மரத்தின் மீதேறி இலைகளுக்குள் மறைந்தான்.

சகதேவன் புன்னகைத்து “நீயும் துயில்கொள்ள விரும்பக்கூடும்” என்றான். “ஆம், விந்தையானதோர் வெறுமை. அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. உண்மையில் இது இனிதாகக்கூட இல்லை. இனி ஒரு கணம்கூட இல்லை, இனி எதிர்காலமென்பதே இல்லை என்று தோன்றுகிறது. இத்தருணத்தில் இறப்பொன்றே இயல்பானதென்றுபடுகிறது” என்றான். சகதேவன் புன்னகைத்தபின் நடக்க நகுலன் உடன் நடந்தான். “நாம் துயரை ஏன் விழைகிறோம்? நம் அன்றாடத்தின் சலிப்பையும் வெறுமையையும் துயர்போல நிறைப்பது பிறிதொன்றில்லை என்பதனாலா?”

அவர்கள் தங்கள் குடிலுக்குள் சென்று அமர்ந்தனர். சகதேவன் தன் மேலாடையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு மஞ்சத்தில் படுத்து “தெய்வங்களே!” என்று முனகினான். பின்னர் விழிகளை மூடியபடி “மானுடர் எத்தனை உயர்ந்த நிலைக்கு செல்ல இயல்கிறது! எத்தனை படிகளை மானுடருக்கு தெய்வங்கள் திறந்து வைத்திருக்கின்றன! தெய்வங்களின் அருகே சென்று அமரும் வரை விண் விரிந்திருக்கிறது!” என்றான்.

நகுலன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மிக அழகாக மாறிவிட்டதுபோல் தோன்றியது. முகத்தில் இருந்த அப்புன்னகையை அவன் பார்த்து நெடுநாட்களாகியிருந்தது. சகதேவன் “வேறெந்த நிலையிலும் மனிதன் முழுமை கொள்வதில்லை. தந்தையும் அன்னையும் என்னும் நிலையில் மட்டுமே முழுநிலை கூடுகிறது. பிற அனைத்தும் பொய், மிகை கற்பனைகளை அள்ளிச் சூடிக்கொள்ளும் உருவங்கள். அன்னையும் தந்தையும் என்று ஆவதொன்றே கருவிலேயே மனிதருக்கு அளிக்கப்படும் ஆணை” என்றான்.

பின்னர் எண்ணி மேலும் தொடர்ந்தான் “முனிவர்கள் இப்புவியையே அன்னையும் தந்தையும் என்று நின்று அறிபவர்களாக இருக்கலாம். அளிப்பதற்கு மட்டுமே உளம் கொள்பவர்கள். அன்பன்றி பிறிது எதையும் கொள்ளாதவர்கள்.” அவன் குரல் தாழ்ந்து தாழ்ந்து சென்றது. அவன் சொல்லும் சொற்கள் பொருளழிந்தன. “அன்னையும் தந்தையும்” என்ற சொற்கள் மட்டும் கேட்டன. நாக்குழறி வெற்றொலியாகியது. சற்று நேரத்தில் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது.

நகுலன் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். தன் தலை மடியில் வைத்திருந்த கையில் மோதுவதை உணர்ந்து விழித்தெழுந்தான். அமர்ந்தபடியே துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்து எழுந்து நின்றான். கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு மேலாடையைச் சீரமைத்து வெளியே வந்தான். காற்று சீராக வீசிக்கொண்டிருந்தது. பின்காலைக்குரிய உருகி வழிந்த வெயில். பசுந்தழை வெயில்பட்டு வேகும் மென்மணம். மரக்கிளைகளுக்கு அப்பால் கங்கை பளபளத்துக்கொண்டிருந்தது. பறவைக்குரல்கள் அடங்கத் தொடங்கிவிட்டிருந்தன.

குடில்நிரைகளில் ஏவலரும் பெண்களும் அந்தணரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுக்குரல்கள், தறிகள் மீது முழைக்கழிகள் அறையும் ஓசை. புரவிகளின் மெல்லிய கனைப்பொலி. ஒவ்வொன்றும் இனிதாகிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். மரங்கள், குடில்கள், ஒளி அனைத்தும் கேளா இசையால் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்படலமென்று ஆகிவிட்டிருந்தன.

அவன் மெல்ல நடந்து தன் புரவி நோக்கி சென்றான். அது நன்றாக தலைதாழ்த்தி துயின்று கொண்டிருந்தது. அருகணைந்து அவன் அதன் தோளில் தொடும்வரை விழிப்பு கொள்ளவில்லை. அதன் பின்னரும் மெல்லவே கண்விழித்து அவனைப் பார்த்து மூக்கை விரித்து சற்றே சீறியது. அவன் அதன் மேல் ஏறி அமர்ந்த பின்னரும் துயிலிலிருந்து முழுதும் விழிக்காமலேயே நடைகொள்ளத் தொடங்கியது. அவன் அதை கழுத்தைத் தட்டி செலுத்தினான். குடில்களையும் மரங்களையும் நன்றாக உலர்ந்து செந்நிறச் சுடர் கொண்டிருந்த நிலத்தையும் விடாய்கொண்ட விழிகளால் தவிக்கத் தவிக்க தொட்டுத் தொட்டு நோக்கியபடி சென்றான்.

அனைத்திலும் அழகென்று நிறைந்திருந்தது பிறிதொன்று. உளமகிழ்வை அளிப்பவை எல்லாம் அழகானவை. உளமகிழ்வோ உள்ளிருந்து எழுகிறது. வெளியே இருக்கும் அனைத்தையும் தொட்டுத் தழுவி அறிகிறது. இந்த மூங்கில் கழைகள் ஏன் தித்திக்கின்றன? அந்த மரங்களின் இலையசைவில் ஏன் அத்தனை குழைவு? அடுமனைப்புகை தன் மெல்லிய கலைவில் உள்ளத்தைத் தொட்டு வருடிச்செல்லும் மென்மையை எங்ஙனம் அடைகிறது?

ஒரு நாரை சிறகசைத்து மிதந்து வந்து குடிலுக்குப் பின் அமைந்த அசைவில் மெய்ப்பு கொண்டு நடுங்கி அவன் புரவிமேல் அமர்ந்தான். பற்கள் உரசிக்கொண்டு காதுக்குள் விந்தையானதோர் உராய்வோசையை எழுப்பின. பின்னர் மீண்டு மீண்டும் புரவியைத் தட்டி செலுத்தினான். “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று அவன் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. காட்டின் அத்தனை இலைகளும் நாநுனிகளாகி தவித்துத் தவித்து துழாவி உண்ணும் ஓர் இனிப்பு எங்கும் நிறைந்திருந்தது.

ஒரு சொல். பொருள் அல்ல, வெறும் சொல். களிப்பென்றும், உவகையென்றும், இனிமையென்றும் அதை மாற்றிக்கொள்ளலாம். பித்தென்றும், கனவென்றும், ஊழ்கமென்றும் அதை ஆக்கலாம். ஒன்றுதல் என்றும், இன்மையென்றும் அதை சொல்லலாம். இது ஒரு துளி. கடலையே உணர்ந்தவர்கள் இருக்கலாம். இத்துளியே எனக்குக் கடல். கடலை உணர்ந்தோர் தேவர். அதை சுவைத்தபின் அவர்கள் சொல்லும் அனைத்தும் வேதம்.

அவன் மீண்டும் திருதராஷ்டிரரின் குடிலுக்கே வந்தான். நான்கு ஏவலர் அங்கிருந்து வந்து தலைவணங்கினர். “இளைய யாதவர் எங்கே? அங்கே இருக்கிறாரா?” என்று அவன் கேட்டான். “இல்லையே. அவர்தான் எங்களை அனுப்பினார். அந்த இரும்புப் பாவையை சீரமைத்துக் கொடுக்கும்படி சொன்னார்” என்றான் ஒருவன். “சீரமைத்துவிட்டீர்களா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், அது மிக எளிதில் சீரமைத்துக்கொள்ளும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அது போருக்கானது அல்லவா?” என்றான் அவன்.

நகுலன் அவர்களைக் கடந்து சென்று திருதராஷ்டிரரின் குடில் முன் புரவியை நிறுத்திவிட்டு இறங்கி நின்றான். மிக மெல்ல நடந்தபோது குடிலுக்கு வெளியே நின்றிருந்த சஞ்சயனை கண்டான். சஞ்சயன் அவனைக் கண்டு புன்னகைத்தான். “என்ன செய்கிறார்கள்?” என்று நகுலன் தாழ்ந்த குரலில் கேட்டான். “மைந்தனுடன் இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். நகுலனின் நெஞ்சு படபடத்தது. மிக மெல்ல காலடி எடுத்துவைத்து அவன் குடில் வாயிலை அடைந்து உள்ளே பார்த்தான்.

திருதராஷ்டிரரும் காந்தாரியும் மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர். மஞ்சத்தில் அந்த இரும்புப் பாவை படுத்திருந்தது. திருதராஷ்டிரர் அதன் தோள்களை தன் கைகளால் வருடிக்கொண்டிருந்தார். காந்தாரி அதன் தலையை தடவினாள். இருவரும் முகம் மலர்ந்து சொல்லின்மையில் மூழ்கி அமர்ந்திருந்தனர்.

முந்தைய கட்டுரைபக்தியும் அறிவும்
அடுத்த கட்டுரைஆகுலோ ஆகுனை…