ஆகுலோ ஆகுனை…

முகில்செய்தி

முகில்செய்தி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நலம் தானே. மேகசந்தேசம் பதிவு எனக்குள் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தியது.

முக்கியமாக… ‘ஆகுலோ ஆகுணை’ பாடலில்  வரும் இந்த இரு வரிகள்.

“ஆகலா தாகமா சிந்தலா வந்தலா,

ஈ கரணி வெர்ரினை ஏகதம திருகாட”

(பசியா தாகமா கவலையா கலக்கமா…

இப்படி ஒரு பித்த்தியாய்  தனிமையில்

திரிகையில் …)

இந்த வரிகளை முதலில் ஒரு தெலுங்கு கதை தொகுப்பின் முதல் பக்கத்தில் பார்த்தேன்.

இயக்குனர் வம்சியின் கதைகள் அவை. இந்த வரிகளில் உள்ள ஏதோ ஒன்று என்னை மீண்டும் மீண்டும் அசை போட வைத்தது. வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்காக இப்படி பித்து பிடித்து அலையும் காலம் பற்றி இப்பொழுது நினைத்தால் ஏக்கம் தான் தோன்றுகிறது. அது இனிமேல் முடியுமா என்ற அவநம்பிக்கைதான் வருகிறது. முதல் தடவை இதை அசைபோட்டு கிறங்கி போகும் போது காதலில் இருந்தேன். அந்த ஒருதலைக் காதலுக்கு என்னை ஒரு பெருந் காதலனாக பாவிக்க இந்த வரிகள் உதவின. ஆனால், போக போக பெரும் கலைகளின் மீது, உன்னதங்கள் மீது(ஏன் ஜெயமோகனின் எழுத்துக்களின் மீதும் தான்!) எனக்குள் இருக்கும் ஒரு பெருங்காதலுக்கு இந்த பித்து நிலையை ஊகித்து கொள்வேன்.

இப்பொழுதும் அதே போதையை இவை அளிக்கின்றன. என்னை நான் திடீர் என்று ஒரு பித்தனாக பொய் தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ள, மிகையுணர்ச்சி கொள்ள உதவுகின்றன.

இந்த பாடல் சினிமாவுக்காக எழுதினதல்ல. அறுபதுகளில் கிருஷ்ண சாஸ்திரி எழுதிய ‘கிருஷ்ண பக்ஷம்’(தேய் பிறை) என்ற நூலில் இருந்து எடுத்து மெட்டு அமைக்க பட்டது.

தெலுங்கு நவீன இலக்கியத்தில் கிருஷ்ண சாஸ்திரி ‘பாவ கவி‘ என்று அழைக்க படுவார். இது ‘ப்பாவம்அல்ல பாவம்.  தான், தன் தனிமை, தன் அளவிலா காதல், வானளாவிய ஏக்கம், அது தரும் துன்பங்கள்இயற்க்கை அழகுகள் மீது மோகம் என்பவை இந்த பாவ கவிதைகளின் பேசு பொருள். அதில் இவர் முன்னோடி.தெலுங்கு புது கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

தமிழின் பாரதிதாசனுடன் ஒப்பிடத்தக்கவர்  தெலுங்கு இனத்தின் தற்பெருமையை கட்டமைக்க கவிதைகள் எழுதிய ராயப்ரோலு சுப்பாராவ், மார்க்சிய தாக்கத்துடன் தெலுங்கு சொல்லிசையின் உச்சம் என எண்ணத்தக்க கவிதைகளை தந்த “மகா கவி“ ஸ்ரீஸ்ரீ போன்றவர்களை ‘ அப்யு தய‘(முற்போக்கு என்று மொழிபெயர்க்கலாம்!)  கவி என்கின்றோம். அந்த போக்கிற்கு முற்றிலும் மாறாக ‘தான்’ என்கிற ஒரு பாவனையை உருவாக்கி அதில் ஒரு மானுட காதல் ஏக்கத்தை உருவாக்கியவர் கிருஷ்ணா சாஸ்திரி. நிச்சயமாக ஆங்கில ஷெல்லி, கீட்ஸின் பாதிப்பு இருண்டாலும்… நம் மண்ணின், மொழியின், கலாச்சார உச்சங்களை கவிதையில் கொண்டு வந்தார் இவர். இவரின் ஊர்வசி கவிதை… ஒரு க்ளாஸிக்.

அது மட்டுமல்ல, தன் கவிதைகள் மட்டும் அல்லாது, தெலுங்கின் புது கவிதைகள் எழுதும் அனைவரையும் பாமரர்களுக்கு அறிமுகம் செய்யும் பெரும் பணியை மேற்கொண்டவர். எல்லா கிராமங்களுக்கும் சென்று தான் பொருட்டென கருதும் கவிஞர்களின் கவிதைகளை பாடியவர். இதை  ஒரு வேள்வியாகவே கருதியவர்.

ஸ்ரீ ஸ்ரீ போல் இவரும் சினிமாவுக்கு பாடல்கள் எழுதினர். கிராமங்களுக்கெல்லாம் சென்று கவிதைகளை பாடிய இவரின் குரல் முதுமையில் ஊமையாயிற்று.அவருக்கு அஞ்சலியாகத் தான் இந்த பாடலை தாசரி நாராயண ராவ் தன் படத்தில் பதிவு செயதார் என்று நினைக்கிறேன்.

இந்த பாடலுக்கு சம்பந்தப் பட்டு எனக்கு இரண்டு மனக்குறைகள் உண்டு. ஒன்று, நுட்பமான  இயற்க்கை வர்ணனைகளை சற்றே மிகையான கவிதை மொழியில் சொல்லும் இப்பாடலை… ஒரு கிராமிய பெண் பாடுவதாக அமைத்தது. இன்னொன்று… ஒரு கிராமீய பெண் பாடுவதாக அமைந்ததாலேயே இதில் உள்ள அந்த தேவையற்ற, துடுக்கான தாளம்.இதை இன்னும் கொஞ்சம் மென்மையாக அமைத்திருக்கலாம் இந்த மனுஷன் என்று தான் ரமேஷ் நாயுடு பற்றி எண்ணிக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,

ராஜு.

***

அன்புள்ள ராஜு

அருமையான பாடல். அந்த வரிகளின் சொற்பொருளை அளிக்கமுடியுமா?

ஜெ

***

ஜெ,

‘இலையில் இலையாக பூவில் பூவாக கிளையில் கிளையாக நுன்னிளம் கொடியாக
இந்த  காட்டில் மறைந்திடமாட்டேனோ
எப்படியேனும் இங்கேயே இருந்திட மாட்டேனோ…,

ஆகுலோ = இலையில்
பூவுலோ = பூவினில்
கொம்ம = கிளை
நுனு லேத்த  = சிறு சிறு இளம் என்று அர்த்தம்.
ரெம்ம = கிளையில் இருந்து பிரிந்து வரும் சிறு கிளை. இலையின் காம்புக்கும் கிளைக்கும் நடுவில் இருப்பது. ஆங்கிலத்தில் தேடினால் twig or branchlet என்று வருகிறது. தமிழில் சிறு கிளை அல்லது கொடி என்று இணையத்தில் பார்த்தேன். கொடி என்பது சரியான அர்த்தம் இல்லை என்றாலும்… சிறு கிளை-யை விட இதே பொருத்தமாக பட்டது.

அடவி = காடு
தாகி = ஒழிந்துக்கொள்ளுதல் அல்லது மறைந்துபோதல்
எட்டு லைனா = எப்படியேனும்
இ சடனே = இங்கேயே
ஆகி = நின்றுவிடுதல்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30
அடுத்த கட்டுரைசண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்