யக்ஷி உறையும் இடம்

 

கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்?

6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி!

கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஜோலி உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

 

நாலைந்து நாட்களாகவே தொடர்ச்சியாக நான் கவனித்துவரும் செய்தி கேரளத்தில் ஜோலியம்மா ஜோசஃப் என்னும் ஜோலி  தாமஸ் செய்த தொடர்கொலைகள். சும்மாவே கேரளத்தில் செய்திப்பஞ்சம். இப்படி ஒரு செய்தி கிடைத்தால் ஊடகம் கொண்டாடிவிடும். நாளொன்றுக்கு ஏழெட்டு திருப்பங்கள். அதிரடி கருத்துக்கள். உளவியல் சமூகவியல் ஆய்வுகள். விவாதங்கள். இன்னும் ஓராண்டுக்குள் இந்தக்கதை சினிமாவாகிவிடும்

ஜோலி [தமிழில் நாம் ஜாலி என்று எதைச் சொல்கிறோமோ அதேதான். மலையாள உச்சரிப்பு] ஒரு அசாதாரண நிகழ்வுதான். அடிக்கடி இவ்வண்ணம் நிகழ்வதில்லை. ஒரு பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரை நஞ்சிட்டுக் கொன்றிருக்கிறாள். நான்குபேருக்கு சயனைட். இருவருக்கு பூச்சிமருந்து. கொல்வதற்கு முன்பு சிறுதுளிகளாக நஞ்சு கொடுத்திருக்கிறாள். அவர்கள் வாந்தியும் மயக்கமும் வந்து சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உடல்நலிந்து நோயுற்றிருக்கிறார்கள். அதன்பின் நஞ்சு அளிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்

கொலைசெய்தபின் ஜோலி இறந்தவர்களுக்காக கதறிஅழுதிருக்கிறாள். துயரம் கொண்டு பலநாள் இருந்திருக்கிறாள். இறந்தவர்களின் உடல்மேல் ஜோலி விழுந்து கதறும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்பின் மிகமிக இயல்பாக வாழ்ந்திருக்கிறாள். மேலும் கொலைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறாள். இறந்தவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறாள். தன் கணவனைக் கொன்றபின் கணவனின் தம்பியின் மனைவியையும் அவள் குழந்தையையும் கொன்றுவிட்டு அவனை மணந்துகொண்டிருக்கிறாள். முதல்கணவனில் ஜோலிக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுக்கு நல்ல அன்னையாக இருந்திருக்கிறாள். நட்பு சுற்றம் அனைவருக்கும் இனியவராக, நம்பகமானவராக வாழ்ந்திருக்கிறாள். ஆகவே கடைசிவரை அவர்கள் அவளை சந்தேகப்படவில்லை.

உறவினர்களில் ஒருவர் சந்தேகப்படுகிறார். அண்டைவீட்டுக்காரரும் சந்தேகப்படுகிறார். அதுவும் மிகமிகத் தற்செயலாக. ஜோலி செய்த சிறு பிழை ஒரு சொத்தை போலி ஆவணம் வழியாக கவர எண்ணியது . அதிலிருந்து தொடங்கி கொலைகளை நோக்கிச் சென்றது உறவினரின் ஐயம். ஆனால் அவர்கள் இருவரும் குடும்பத்தின்மேல் பழிசுமத்துவதாகவே மற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள். கடைசியில் போலீஸ் வந்து ஒரு பிணத்தை அகழ்ந்து எடுத்து சோதனை செய்து சயனைடை கண்டுபிடித்தபோதுதான் அனைத்தும் வெளியாகியது. கேரளமே அதிர்ந்தது. முதற்கட்ட விசாரணையின்போது ஜோலி எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மிகமிக ஒருங்கிணைவுள்ள பதில்களைச் சொன்னார். போலீஸே அவர் பேசியதை நம்பி குழம்பியது. அனால் அதன் பின் நிபுணர்கள் வந்து மொத்தம் 36 மணிநேரம் கேள்விகள் கேட்டனர். அதன்பின்னரே ஜோலி முன்பின்னாக பதில் சொல்லத் தொடங்கினார்.சிக்கிக்கொண்டாள்.

இப்போது அனைத்தையுமே ஒப்புக்கொள்கிறாள். அதற்குக் காரணம் வழக்கறிஞர்களின் ஆலோசனை. ஏனென்றால் ஜோலியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சான்றாகக் கருதப்படாது. எத்தனை விரைவில் வழக்கு பதியப்படுகிறதோ அத்தனை விரைவில் அவள் பிணையில் வெளியே வரமுடியும். அதன்பின் வழக்கு பல ஆண்டுகள் நடக்கும். அனேகமாக இருபது ஆண்டுகள். அதுவரை ஜோலி மகிழ்ச்சியாக வெளியே இருக்கமுடியும். இன்றைய நிலையில் நீதிமன்றம் அவளை தண்டிக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் எந்தக்கொலைக்குமே நேரடிச் சாட்சிகள் இல்லை. சந்தர்ப்பசாட்சியங்களைக் கொண்டு தண்டிக்க முடியாது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து சயனைடால் இறந்தார்கள் என்பதற்கான சான்றுகளை எடுப்பதும் கடினம்.அதாவது ஜோலி செய்தவை அனைத்துமே ‘நம்பமுடியாத’ அளவுக்கு பெரியவை, தீவிரமானவை’ என்பதனாலேயே அவள் வெளியே வந்துவிடுவாள்

ஜோலிக்காக ஆஜராகவிருப்பவர் புகழ்பெற்ற குற்றவழக்கறிஞரான பி.ஏ.ஆளூர் [பிஜு ஆண்டனி ஆளூர்] பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தவர். ஒரு பேட்டியில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்று அவர் சொல்கிறார். ஏனென்றால் இறந்தவர்களின் இறப்புக்கான காரணம், நேரம் எதையுமே இனி அறிவியல்முறைப்படி ஐயமில்லாமல் நிரூபிக்கமுடியாது. குடும்பத்திற்கு வெளியே சாட்சிகள் எவருமில்லை. பெரும்பாலும் போதியசாட்சிகள் இல்லை என போலீஸே நீதிமன்றத்திற்கு அறிவிக்கவே வாய்ப்பு. அல்லது மக்களை திருப்திப்படுத்த வழக்கை நடத்தி கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தரும். உயர்நீதிமன்றத்தில் ஜோலி விடுதலை ஆவாள். இந்த அளவுக்கு அவள் மாட்டிக்கொண்டதே கூட அவள் கிறித்தவர் என்பதனால்தான்.இந்து என்றால் சடலத்தை எரித்திருப்பார்கள். எந்தச் சான்றும் இருந்திருக்காது.

ஜோலி எடுத்துக்கொண்டது பெரிய சொத்துக்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால் ஐந்துகோடி வரலாம். அவள் பிறப்பால் ஏழை அல்ல. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இறந்தவர்களிடம் அவர் எந்த மனவருத்ததிலும் கோபத்திலும் இருக்கவில்லை. அவர்கள் அவளை மோசமாக நடத்தவுமில்லை. அவளை நம்பினர். அவள் அளித்த உணவை உண்டனர். மனைவி இறந்தபின்னரும்கூட ஜோலியின் மாமனார் அவளை நம்பி அவள் அளித்த உணவை உண்டார். நஞ்சு ஊட்டப்பட்டு இறந்தார். அதன்பின்னரும் குடும்பத்தில் அனைவரும் அவளை நம்பினர்.

அவளுக்கு இக்கொலைகளால் கிடைத்தது என்ன? பெரிதாக ஒன்றுமே இல்லை. அவள் இளமைப்பருவத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தனவா? அவளுடைய வளர்ப்புக்காலத்தில் சிடுக்குகள் உண்டா? எதுவுமே இல்லை. மிகமிக சராசரியான குடும்பம். மிகமிக இயல்பான இளமைப்பருவம். படிப்பு அதன்பின் திருமணம். பெரிய ஆசைகளை உருவாக்கும் நகரச்சூழல் இல்லை. சிறிய ஊரில்தான் வாழ்க்கை. அப்படியென்றால் என்னதான் காரணம் இத்தனை கொலைகளுக்கு? இத்தனை கொலைகளுக்குப் பின்னரும் எப்படி அவள் இயல்பாக மகிழ்ச்சியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாள்?

மேலும் ஆச்சரியம் அவளுடைய வேலை. அவளை கல்லூரி பேராசிரியை என்றே அவளுடைய குடும்பத்தினர், மகன்கள் எல்லாரும் நம்பியிருந்தனர். அடையாள அட்டையை வெளிப்படையாக வீட்டில் தொங்கவிடுவது அவள் வழக்கம். ஆனால் அவள் படித்தது வெறும் பிகாம் மட்டுமே. பிறந்தவீட்டில் இருந்தபோது எம்.ஏ படித்திருக்கலாம் என புகுந்தவீட்டில் நம்பினர். புகுந்தவீட்டில் படித்திருக்கலாம் என பிறந்தவீட்டில் நம்பினர்.ஒவ்வொரு நாளும் கல்லூரிக்குச் சென்று காண்டீனில் அமர்ந்துவிட்டு வந்தாள். காண்டீனில் இருந்தவர்கள் அவள் அருகிலிருந்த பியூட்டிபார்லரின் உரிமையாளர் என நம்பினர். பியூட்டிபார்லர் உரிமையாளர்கள் அவள் கல்லூரி ஊழியை என நினைத்தனர். பதினான்கு ஆண்டுக்காலம் அவ்வாறு எண்ணிக்கொண்டனர் ஒவ்வொரு நாளும் காரில் அவள் கல்லூரிக்குச் சென்றுவந்தாள்.

ஜோலி உள்ளூர் தாசில்தார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவள்.அவளை மிகமிக இனிமையானவளாக அவர்கள் நினைத்தார்கள். அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டபோது திருச்சபை அவளை விலக்கியது. அவளை திரும்பச்சேர்த்துக்கொள்ளும்படி பிஷப் கடிதம் எழுதினார். அந்தக்கடிதம் பொய்யானது. ஆனால் எவருக்கும் சந்தேகம் வரவில்லை.

உளவியல்நிபுணர் சொல்கிறார், அவள் ஒரு கடுமையான உளநோயாளி என. ஒருவர் பொய்சொன்னால் நாம் அணுக்கமாக கண்களைப் பார்த்தால் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் அவர் உளச்சிக்கலால் அதை உண்மையாக நம்பிச் சொன்னால் நாமும் நம்பிவிடுவோம். ஜோலி வெவ்வேறு யதார்த்தங்களில் முழுமையாகவே மெய்யாக வாழ்ந்தாள். ஆகவே அவளுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. எல்லாமே உண்மைதான். ஜோலி வீட்டில் இருந்துகொண்டு தன் கல்லூரிக்கு செல்பேசியில் வேலைசார்ந்து நிறையவே பேசுவதுண்டு என்கிறார் கணவர். பணம் முதலீடு உட்பட பல விஷயங்களை ஜோலி பேசினார். எல்லாமே பொய். பொய்யே மெய். ஒன்றுக்கு இன்னொன்றுடன் தொடர்பில்லை. நல்ல அன்னையாக வாழும்போதே கொலைசெய்ய தயக்கமில்லை. கொலைசெய்தபின் குற்றவுணர்ச்சியும் இல்லை. குழந்தையைக் கொன்றபின்னரும்கூட

ஜோலி இக்கொலைகளை வெறும் மகிழ்ச்சிக்காகவே செய்திருக்கவேண்டும் என்பது ஒரு நிபுணர்கணிப்பு. வெறும் லாபத்திற்காகச் செய்திருந்தால் குழப்பம் இருக்கும், குற்றவுணர்ச்சியும் தொடரும். முதற்கொலையைச் செய்ததுமே அதன் கிளர்ச்சியை அறிந்திருப்பாள். அதன்பின் கொலை அவள் வாழ்க்கையை உத்வேகம் கொண்டதாக ஆக்கியது. அவளுக்கு சவால்களை முன்வைத்தது. தர்க்கபுத்தியை கற்பனையை தூண்டியது. வெற்றிக்குப்பின் சாதனை உணர்வை அளித்தது. சிலநாட்களிலேயே மீண்டும் கொலைசெய்ய தூண்டுதலை கொடுத்தது. ஜோலி மேலும் மூவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தாள். அதற்குள் மாட்டிக்கொண்டாள். கொலைசெய்த அனைவரின் அருகிலும் அமர்ந்து அவர்கள் சிறுகச்சிறுகச் சாவதை ரசித்திருக்கிறாள்.

இதெல்லாம் ஜோலியின் பக்கமிருந்து பார்க்கையில்.மறுபக்கம் இன்னும் விந்தை. அவளை எப்படி அத்தனைபேர் முழுமையாக நம்பினர்? அவளுடைய இயல்பான புன்னகை, இனியபேச்சு எல்லாமே காரணம்தான். முதன்மைக்காரணம் அழகு. கேரளபாணியில் அவள் ஒரு முதன்மை அழகி. நடுவயதிலும்கூட அழகியாகவே இருந்தாள். அழகுநிலையத்திற்கு வாரந்தோறும் சென்று அழகியாக நீடித்தாள். அழகிய முகம்போல மிகப்பெரிய திரை வேறில்லை. எங்குமே செல்லுபடியாகும் நாணயம் வேறில்லை. அழகை நாம் கள்ளமின்மை என, நன்மை என, இனிமை என, தூய்மை என , அன்பு என, பண்பு என , பெருந்தன்மை என, குடிப்பிறப்பு என பலவகையாக கற்பனைசெய்துகொள்கிறோம்

 

 

ஆனால் ஜோலி கைதுசெய்யப்பட்ட பின் இரண்டே நாளில் அந்தமுகம் அப்படியே கொடூரமானதாக மாறிவிட்டது. உள்ளிருந்து அத்தனை அழகின்மைகளும் வெளியே வந்து  முகமாக மாறிவிட்டன. பேரழகியாகிய யக்ஷி கோரைப்பல்லும் எரியும்கண்களும் புதர்போல முடியுமாக கொடூரத்தோற்றம் கொள்வதைப்பற்றி கேரளத்தின் தொன்மங்களில் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறோம்!

முந்தைய கட்டுரைரே – கடிதம்
அடுத்த கட்டுரைதிண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா