வருவது வரட்டும்!- கடிதம்

“வருவது வரட்டும்!”

எவ்வாறோ அவ்வாறே!

அன்புள்ள ஜெ,

 

எனக்குத் தாலாட்டாகப் பாடப்பட்ட மெட்டு இந்த “சின்னப் பெண்ணான போதிலே” பாடல், ஆனால் வரிகள் என் அம்மாவுடையது. என் தம்பி பிறந்த பின் அதே பாடல் ஒரு சில மாறுதல்களுடன்  அவனுடைய தாலாட்டு ஆகியது.

 

இதன் ஆங்கில வடிவத்தை உங்கள் கட்டுரை வழி தான் அறிந்தேன்.  தொடர்ந்து இணையத்தில் தேடியதில் பானுமதி அம்மா அவர்கள் பாடிய “Que sera sera” கிட்டியது.  கற்பகம் திரைப்படம்  தெலுங்கில் 1965 இல் “தொடு நீடா” என்ற பெயரில் வெளிவந்தது. அதில் இதே பாடலை சில வரி மாற்றங்களுடன் பாடியிருப்பார். இந்திய உச்சரிப்புடன் அவர் பாடிய இப்பாடல் என் தாயின் தாலாட்டு போலவே உற்சாகத்தையளிக்கிறது.

 

அன்புடன்

ஸ்வேதா,

பெங்களூர்

 

அன்புள்ள ஸ்வேதா

 

ஆச்சரியம்தான். அந்த அசல் பாடலின் இந்திய மறு வடிவங்கள் அனைத்திலும் ஒன்று கவனமாக தவிர்க்கப்படுகிறது. அதில் மொத்தவாழ்க்கையையும் சொல்லி எது எப்படியோ அப்படி என்னும் ஊழ்வாதம் சொல்லப்படுகிறது. ‘நீர்வழிப்படும் புணைபோல ஆருயில் முறைவழிப்படும்’ என்பதே அதிலுள்ளது. அதைத்தான் அஞ்சுகிறார்கள். ‘நல்லதே நடக்கும்’ என்று சொல்ல ஆசைப்படுகிறார்கள். நம் கலாச்சாரத்திலேயே இந்த வேறுபாடு உள்ளதா என்ன? அப்படியென்றால் கணியன் பூங்குன்றன் நம் குரல் இல்லையா? அது நாம் மெல்ல மெல்ல அகற்றிவிட்ட இன்னொரு மெய்யியலா? சமணம் இங்கே நிலைக்காமல் போனதற்குக் காரணமே அந்த ஊழ்வாதத்தில் உள்ள உளவிலக்கமா? நமக்குத் தேவையாக இருப்பது இனிய உலகியல்வாதம்தானா?

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29
அடுத்த கட்டுரைநேரு – ஒரு கடிதம்