சண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்

இனிய ஜெயம்

 

கொஞ்சநாள் தமிழ் எண்ம நூலகம் பராமரிப்புப் பணிகள் காரணமாக,ஓய்ந்து நின்றிருந்தது.தற்போது செயல்படத் துவங்கிய நிலையில், நான் முன்பு வாசித்த நூலின் சுட்டியை உயிர்ப்பிக்க முடிந்தது.

 

திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடான சண்டேசுவரர் கலைக்களஞ்சியம். சண்டேஸ்வரர் எனும் தனித்த வழிபாட்டு மரபின் புராணம் வரலாறு சிற்ப வழிபாட்டுமுறை   போன்ற  அனைத்து அலகுகளும்  குறித்த விவரங்கள் பல்வேறு படங்களுடன் அடங்கிய முழுமையான நூல்.

 

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluU2&tag=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D#book1/

 

இந்த நூலின் அட்டைப்படமே சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்திதான். சண்டேச நாயனார் என அறியப்பெற்ற விசார சருமனை எவ்வாறு ‘சண்டேச’ எனும் விகுதிகள் சைவம்  கொண்டுவந்தது எனும் ‘விவரணை’ இந்த நூலில் இல்லை. ஆனால் சண்டேச நாயனார் வழிபாடு எங்கெல்லாம் திகழ்ந்தது, தமிழ் நிலமெங்கும் கிடைக்கும் சண்டேச அனுக்ரக மூர்த்தி படிமங்கள் குறித்த விவரங்களும் விளக்கங்களும் இதில் உள்ளன.

 

ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திருந்து சண்டேஸ்வரர் சிற்பங்கள் கிடைப்பதாக குறிக்கும் இந்த நூல் அந்த சிற்பங்கள் என குறிப்பது லகுலீசர்படிமத்தை. எமசண்டீசர் வடிவத்துடன் இணையாக இருப்பது என்பதால் லகுலீசர் சிற்பம் அப்படி இனம் காணப்படுவது இயல்பே.

 

இந்த நூலுக்குப் பிறகான கால் நூற்றாண்டில் பல கல்வெட்டுக்கள் படிக்கப்பெற்று, ஆய்வுகளைத் தொடர்ந்து இவர் சண்டேஸ்வரர் வடிவான எமசண்டீசர் அல்ல லகுலீசர் என அறியப் பெற்றது.  அந்த ஆய்வுக்கான தொடர் புலங்களை மையம் கொண்டதே மங்கை ராகவன் குழுவினரின் தமிழகத்தில் லகுலீசபாசுபதம் நூல்.

 

http://kongukalvettuaayvu.blogspot.com/2018/05/24-12-2017.html

 

மேற்கண்ட சுட்டி வழியே இந்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னகர்வதை காணSet featured imageலாம். பொதுவாக ஆச்சாரம், பக்தி, ஆய்வுகள் மூன்றும் நேரெதிரான திசைகளில் பயணிப்பவை. ஆச்சாரமான வழியில் பயின்று வந்த மனம், சண்டேஸ்வரர் என வழிபடபட்டவர் லகுலீசர் என்பதை ஒப்பாது. பக்தியும் அவ்வாறே வியாழன் தோறும் இவர்கள் வணங்கும் ‘குரு பகவான்’ அதே கோவிலில் வேறு இடத்தில் இருக்கிறார். அப்படி நம்பி இவர்கள் வணங்குவது தட்சிணாமூர்த்தி என இவர்கள் அறிவதில்லை.அவர்களுக்கு அது ஒரு பொருட்டும் அல்ல. ஆகவே பக்தியில் லகுலீசர், சண்டேச நாயனராகவோ சண்டேஸ்வரர் என்றவதும் இயல்பே. ஆய்வுகள் இந்த இரண்டு நிலைகளுக்கும் வெளியில் நிற்பவை.

 

சமீபத்தில் தமிழகத்தில் ஒரு கோவிலில், தனது தேவியை இடது மடியில் ஏந்தி அமர்ந்திருக்கும் விநாயகர் புடைப்பு சிற்பம் இன்று கண்டேன். தேவியின் தலை மட்டுமே தெரிந்தது. சிற்பம் இடுப்புக்குக் கீழே பல்லிளிக்கும் வண்ணத் துணியால் [அது புடைப்புச் சிற்பம் என்பதால்] பொதியப்பட்டிருந்தது. இப்படி பல கோவில்களில் அழகிய சிற்பங்கள் பக்தாள் மனம் ஆபாசப்பட்டு விடக்கூடாது என்று கருதி பழைய துணியால் பொதியப்பட்டு நிற்பது வாடிக்கை. சோழக் கோவில் ஒன்றில் சிவன் பார்வதி சரச சிற்பம் ஒன்று [சிவன் பார்வதியின் இட முலையை,தனது இடக்கரத்தால் பற்றி நிற்பது ஆபாசம் அன்றோ] இப்படி பொதிக்குள் நின்றிருந்தது.

 

அந்த ஆபாசத்தை விட நான் செய்வது எந்த ஆபாசமும் இல்லை. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, விநாயகர் மீதான கந்தலை விலக்கிப்பார்த்தேன். வினாயகரின் ஊர்த்துவ லிங்கத்தை தேவி பற்றி இருக்கிறாள். தேவியின் இடைக்கரவை தனது துதிக்கை கொண்டு தொட்டிருக்கிறார். விஷயம் அறிந்த நண்பரை தொடர்பு கொண்டேன். உச்சிஷ்ட கணபதி. தாந்த்ரீக மரபின் ஒரு பகுதி. நெடிய வழிபாட்டு, உபாசனை மரபு கொண்ட மூர்த்தி.  சுற்றிலும் ஏதேனும் ஆச்சாரவாதியோ பக்தரோ இருந்தால் மனம் துணுக்குற்று இருப்பார். என்ன செய்ய ஆய்வு மனம் இந்த ஆவரணா வை விலக்குவதைத்தான் முதல் பணியாகக் கொண்டிருக்கிறது. :)

சண்டிகேஸ்வரர்

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஆகுலோ ஆகுனை…
அடுத்த கட்டுரைவாசல்பூதம்