பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 8
குழல்கற்றைகள் ஈரமாக இருந்தமையால் தலைப்பாகை அணிய முடியவில்லை. தலைதுவட்டிக்கொண்டிருந்தபோது நகுலன் உள்ளத்தால் யுதிஷ்டிரனின் அவைக்கு சென்றுவிட்டிருந்தான். அங்கே என்ன சொல்லவேண்டும் என்று சொல்லை எடுத்து கோக்கத் தொடங்கியபோதுதான் தன் உள்ளம் திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்த அனைத்திலிருந்தும் மிக விலகி, எண்ணி எடுக்கத்தக்க சில சொற்களாக அனைத்தையும் மாற்றிவிட்டிருப்பதை உணர்ந்தான். அதன்பொருட்டே வேறெங்கோ சென்றது அகம். எதைஎதையோ கோத்தது. எவற்றையெல்லாமோ எடுத்து போர்த்திக்கொண்டது.
திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்தது வாழ்நாள் இறுதிவரை நீடிக்கும் ஒரு நினைவு. அல்லது நாளையே அதை உள்ளம் கழித்துவிடவும்கூடும். அத்தருணத்தின் அறியமுடியாமையும் உணர்வுச்சுழல்களும் அடியிலியைச் சென்றடைந்து மீண்ட அவ்வெறுமைப்பெருவெளியும் இத்தனை எளிதாக சொல்லாக மாறுமென்பதை எண்ணும்போது அவனுக்கு விந்தையானதோர் நிறைவும் பின்னர் புன்னகையும் தோன்றியது. சொல்லைப்போல் முடிவுற்றுவிட்ட பிறிதொன்றில்லை. மீண்டும் நேரடி நிகழ்வினூடாக, கற்பனையினூடாக அதைத் திறந்து விரித்தாலொழிய அது ஒன்றையே சுட்டி நின்றிருக்கும்.
அவன் யுதிஷ்டிரனின் அவைக்களம் நோக்கி செல்கையில் அச்சொற்களை மீண்டும் ஒருமுறை முறையாக கோத்து அடுக்கி உருவமைத்துக்கொண்டான். ஆகவே அவன் நடை சீரான காலடிகளாக அமைந்தது. யுதிஷ்டிரன் தன் குடிலுக்கு வெளியே சாலமரத்தடியில் போடப்பட்டிருந்த தாழ்வான மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க சகதேவன் அவர் அருகே பின்னால் அமர்ந்திருந்தான். சற்று அப்பால் மரங்களில் சாய்ந்தபடி பீமனும் அர்ஜுனனும் நின்றனர். ஏவலர்கள் மேலும் விலகி நிற்க தௌம்யர் யுதிஷ்டிரனுக்கு நேர் முன்னால் உயரமான மரப்பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மாணவர்கள் நின்றனர். யுதிஷ்டிரனுக்கு வலப்பக்கம் அமைச்சர்கள் நின்றிருந்தனர்.
அவர்கள் மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சு அத்தனை செறிவானதல்ல என்பது அவர்களின் விழிகள் அலைந்ததில் இருந்து தெரிந்தது. யுதிஷ்டிரன் முதலிலேயே நகுலனை பார்த்துவிட்டார். அவருடைய சொல் தயங்கியதும் தௌம்யரும் பிறரும் திரும்பி நோக்கினர். நகுலன் அருகணைந்து சொல்லின்றி தலைவணங்கி நின்றான். யுதிஷ்டிரன் அவனை நிமிர்ந்து பார்த்து சற்றே எரிச்சலுடன் “நெடும்பொழுதாக உனக்காக காத்திருக்கிறோம்” என்றார். “நான் அங்கிருந்து வந்து ஒற்றர்களை சந்தித்து சில ஆணைகள் விடுக்க வேண்டியிருந்தது” என்றான் நகுலன். என்ன என்பதுபோல் யுதிஷ்டிரன் ஏறிட்டுப் பார்த்தார்.
“பிற அரசியரும் திருதராஷ்டிரருடன் தங்க விரும்பினார்கள். அதனால் என்ன நிகழும் என்பதை எண்ணவேண்டியிருந்தது. ஆனால் அது முறையானது என்பதனால் அவர்களை அங்கு அனுப்ப ஆணையிட்டேன்” என்றான். யுதிஷ்டிரன் “அவர்கள் அங்கு தங்க இடமிருக்கிறதா?” என்றார். “இப்போது அவர்கள் பேரரசருடன் இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அவர்களுக்கான குடில்களை அங்கு போட்டுவிடமுடியும். அனைத்துக்கும் ஆணையிட்டிருக்கிறேன்” என்று நகுலன் கூறினான்.
அப்பேச்சினூடாக அவர்களின் எண்ணங்களை அவன் திருதராஷ்டிரரின் மேல் திருப்பிவிட்டான். தௌம்யர் “அவர்கள் அவருடன் இருப்பது நன்று” என்றார். ஆனால் கூடவே மெல்லிய குரலில் “அவர்கள் பதின்மர்” என்றார். அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுபோல் அச்சொல் ஒலித்தாலும் அனைவரும் திரும்பி கூர்ந்து நோக்கினர். அவரே அச்சொற்களை உணர்ந்து “பத்து முகங்களைப்போல. உள்ளத்தின் பத்து வடிவங்கள்” என்றார். “ராவணப்பிரபுவைப்பற்றி அவ்வண்ணம் சொல்வதுண்டு. அவருடைய பத்து ஆணவநிலைகள் அவை என. இவை அறத்துணையின் பத்து வடிவங்களாக இருக்கக் கூடும்.” அப்போதும் அவர் சொல்ல வருவதென்ன என்று நகுலனுக்கு புரியவில்லை. யுதிஷ்டிரன் தவிர பிறர் அதை உளம்கூர்ந்து எண்ணவுமில்லை.
தௌம்யர் நகுலனை நோக்கிவிட்டு “அவர்கள் அறத்துணை என்பதன் எடுத்துக்காட்டுக்கள் என்பதை மறுக்கவேண்டியதில்லை. ஆனால் பத்து நிலைகள். பத்து எனில் கொழுநருக்காக கண்களை கட்டிக்கொண்ட காந்தாரி ஓர் எல்லை. மறு எல்லையில் உளம் உடைந்து சாளரத்தில் அமர்ந்தவள்… விழியின்மை. பற்று என்பது ஒரு விழியின்மை. கற்பு என்பதும் இன்னொரு விழியின்மையே” என்றார். புன்னகைத்து “நான் சொல்லவருவதை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. இதெல்லாம் சற்றே வழிவிட்டுச் செல்லும் எண்ணங்கள். என் குருமரபுக்கு மட்டுமே உரியவை. பிறர் இவற்றை உளக்கோணல் என்றே எண்ணக்கூடும்” என்றார்.
“சொல்க!” என்றார் யுதிஷ்டிரன் தணிந்த குரலில். “இப்படி சொல்கிறேன். உலகளந்தானுக்கு மஞ்சமும் குடையும் ஆகி நின்றிருக்கும் முதல்நாகம் ஆயிரம் தலைகொண்டது. ஈராயிரம் நா கொண்டது. வாழ்த்தும் பணிவும் என அதன் நா ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆயிரத்தின் மடங்குகளில் என பெருகிச் செல்லும் அச்சொற்களில் பலகோடியில் ஒன்று அவர்மேல் நஞ்சு கக்கும் என்று தப்தகீதிகை சொல்கிறது.” நகுலன் அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றான். யுதிஷ்டிரன் “என்ன வாய்ப்பு?” என்றார். தௌம்யரை நோக்கி “என்ன நிகழும்?” என்றார். நகுலன் “நமக்கு வேறு வழியில்லை, அமைச்சரே” என்றான். “ஆம், அவருக்கும் வேறுவழியில்லை” என்றார் தௌம்யர்.
மீண்டும் ஒரு சொல்லின்மை உருவாகியது. காடு ஓலமிட்டுக்கொண்டிருந்தது. நகுலன் தௌம்யரை பார்த்துக்கொண்டிருந்தான். வேதம் பெருங்கனவென எழுந்து ஆட்டிவைக்கும் காடுகளை அவன் கண்டு மீண்டிருந்தான். இங்கே அது அன்றாட உலகியல் மெய்மையாக, அவற்றை நிகழ்த்தும் சடங்குகளாக மாறி அமைந்திருக்கிறது. வேதமுடிபினர் அளவைநோக்கை வெறுப்பதை அவன் கண்டிருந்தான். ஆனால் அப்போது அதுதான் பயனுள்ளதா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொன்றையும் இயற்கை ஒளியில் அவற்றுக்கான மெய்யான அளவில் நிறுத்துகிறது. தெய்வங்களையும் அளந்தே வைத்திருக்கிறது அளவைநோக்கு. வேதமுதன்மைநோக்கு என்கிறார்கள் அவர்கள். வேதம் அவர்களின் அளவுகோல். அதை மாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது.
யுதிஷ்டிரன் பொருளற்ற எண்ணங்களில் உழல்வதை அவருடைய விழிகளின் மங்கல் காட்டியது. சற்று நேரம் கழித்து உளம் மீண்டு அசைந்தமர்ந்து “நாம் பேரரசரைக் கண்டு வணங்கி சொல் பெற்ற பின்னரே நீர்க்கடன் தொடங்கவேண்டுமென்று தௌம்யர் ஆணையிடுகிறார், இளையோனே” என்றார். நகுலன் “ஆம், அது முறையே” என்றான். யுதிஷ்டிரன் மேலும் ஒவ்வாமையை உடலில் காட்டி “ஆனால் நாம் சென்று வணங்கி சொல் பெறும் நிலையில் அவர் உள்ளாரா? இப்போது இந்த அவை அறிய வேண்டியது அதுவே” என்றார்.
நகுலன் “எந்நிலையிலாயினும் அவர் நம் தந்தை” என்றான். யுதிஷ்டிரன் பெருகும் எரிச்சலுடன் உரக்க “நான் உன்னிடமிருந்து நெறியுரைகளை எதிர்பார்க்கவில்லை. இன்று நிகழ்ந்ததை வைத்து உன் கணிப்பென்ன என்று அறியத்தான் உன்னை அழைத்தேன்” என்றார். அவர் எரிச்சல்கொண்டது நகுலனுக்கு உவப்பாக இருந்தது. அவன் தன் நிலையழிவை கடந்து நின்று சொல்லெடுக்க வாய்ப்பாக அமைந்தது அது. “இன்றைய நிகழ்வுகளை வைத்து நாம் எதையும் முடிவெடுக்க முடியாது” என்றான். “ஆம், ஆனால் நிகழ்ந்தவையே அடையாளம்… சொல்” என்றார் யுதிஷ்டிரன்.
தௌம்யர் “இன்று பேரரசி அரசரைச் சென்று சந்தித்தபோது என்ன நிகழ்ந்தது? அதை முதலில் சொல்க!” என்றார். நகுலன் “அவர்கள் இன்று மைந்தரை இழந்த தந்தையும் தாயும் மட்டுமே. அறுதியில் அவர்களிடம் எஞ்சியது அந்நிலை மட்டும்தான். அதுவே நிகழ்ந்தது. தழுவிக்கொண்டு விழிநீர் உகுத்தனர்…” என்றான். யுதிஷ்டிரன் கை நீட்டி அவனைத் தடுத்து “அவ்வாறே நிகழும் என்று நானும் எண்ணினேன். அத்துயர் உச்சியில் அவர்கள் வஞ்சினம் கொண்டார்களா? நம்மைக் குறித்த பழிச்சொற்கள் அவர்கள் நாவில் எழுந்தனவா? பேரரசியோ அரசரோ நம்மை தீச்சொல்லிட வாய்ப்புண்டா? நாம் சென்று அவர்களைப் பார்ப்பது நலம் பயக்குமா? நான் அறிய விரும்புவது அதை மட்டும்தான்” என்றார்.
நகுலன் கசப்புடன் “இத்தருணத்தில் மானுடரைப் பற்றி என்ன சொல்ல இயலும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருக்கிறார்கள். முந்தைய கணம் அடுத்த கணத்தை உருவாக்காமல் ஆகிவிட்டிருக்கிறது இங்கே. மூத்தவரே, இன்று எவரைப் பற்றியும் எக்கணிப்பையும் சொல்லும் நிலையில் நானில்லை” என்றான். பீமன் உடலை அசைத்து எழுந்தபோது கைகள் மார்பிலிருந்து தழைந்தன. “இப்பேச்சுக்கு பொருளே இல்லை. நாம் சென்று அவரைப் பார்த்து வணங்கி சொல் பெறவேண்டுமென்பது முறையெனில் அதை செய்வோம். அதன் பொருட்டு தீச்சொல்லோ பழிச்சொல்லோ வருமெனில் அது நமக்குரியது என்றே கொள்வோம். எண்ணிச் சூழ்ந்து இங்கு அமர்ந்திருப்பதுபோல் வீண்செயல் பிறிதில்லை” என்றான்.
யுதிஷ்டிரன் “வாயை மூடு… நீ அவர் முன் சென்று நின்றிருக்கப்போகிறாயா? கீழ்மகனே, நீ அவருக்குச் செய்தது என்ன என்பதை உணர்ந்திருக்கிறாயா? ஒரு தந்தையின் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர்மைந்தரையும் கொன்றுவிட்டு அவரை எதிர்கொள்ளப்போகிறாய்” என்றார். “நான் அவர்களை போரில் வென்றேன். படைக்கலம் எடுத்து களம்வரும் ஒருவன் முடிந்தால் என்னை கொல் என்னும் அறைகூவலையே விடுக்கிறான். வென்றால் கொல்லும் ஒப்புதலை வழங்குகிறான்… நான் போர்வென்றவன். என் வெற்றியை தெய்வங்களுக்கு அளித்துவிட்டவன். எதைப்பற்றியும் வருந்தவேண்டியதில்லை நான்” என்றான் பீமன்.
யுதிஷ்டிரன் சினத்துடன் உரக்க “நீ நெறி பேசுகிறாயா? என்னிடம் அறம் பேச வந்தாயா?” என்றார். “ஆம், என் அறம் பற்றி எனக்கு எந்த ஐயமும் இல்லை. எதைப்பற்றியும் குற்றவுணர்ச்சியும் இல்லை” என்று பீமன் சொன்னான். “செய்தவற்றின்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்வதே நரகம் என்பது… நான் அதில் இல்லை.” யுதிஷ்டிரன் “அது மானுட இயல்பு. குற்றவுணர்ச்சி அற்றவை விலங்குகள்” என்றார். “மூத்தவரே, இக்குற்றவுணர்ச்சி ஒரு நடிப்பு. இச்செயலைக் கடந்துசென்று வெற்றியின் கனிகளை உண்ண நாமனைவரும் அதை பயன்படுத்திக்கொள்கிறோம். நான் எதையும் நாடவில்லை. ஆகவே எனக்கு எந்த நடிப்பும் தேவையில்லை” என்றான் பீமன்.
“சீ, கீழ்மகனே! என்ன சொன்னாய்?” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்துவிட்டார். “என்னடா சொன்னாய்? என் முகத்தை நோக்கி நீ என்னடா சொன்னாய்?” பீமன் உறைந்த முகத்துடன் அமைதியாக நிற்க தௌம்யர் “அரசே, அமர்க!” என்றார். யுதிஷ்டிரன் பதறும் உடலுடன் அமர்ந்துகொண்டார். “இவன் சொல்வதென்ன? இவனுடைய சொற்களில் என்றுமிருந்தது இந்த நஞ்சு. இன்று அது நொதித்து கூர்கொண்டுவிட்டிருக்கிறது. அறிவிலி… காட்டாளன். அமைச்சரே, இவன் வடிவில் காட்டின் இருள் எழுந்து வந்து பாண்டுவின் குடியை பழிப்பு காட்டுகிறது. பாண்டுவால் கொல்லப்பட்ட அந்த விலங்கின் வஞ்சம் போலும் இது.” அவர் தன் தலையில் அறைந்து கொண்டார். “ஊழ், ஊழன்றி வேறில்லை…”
தௌம்யர் “நாம் இப்போது பேசவேண்டியவை இவை அல்ல. ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்துக்கொள்வதில் பொருளில்லை” என்றார். “ஏன் இதை செய்கிறோம்? அமைச்சரே, இங்கே நிகழ்வது இதுவே. நாங்கள் ஐவரும் சந்தித்துக்கொள்ளவே இயல்வதில்லை. ஒருவரை நோக்கி ஒருவர் நஞ்சு கக்காமல் எங்களால் மீள இயல்வதில்லை” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஐவரும் ஓருடலின் ஐந்து முகங்கள்” என்றார் தௌம்யர். “நீங்கள் உங்களிடமே சொல்லிக்கொள்வனதான் சொல்லாகவும் எழுகின்றன.” யுதிஷ்டிரன் குரல் தளர்ந்து “ஏன் இந்த பெருந்துன்பம்? ஏன் துயரை வளர்த்து அதில் இப்படி திளைக்கிறோம்? ஏன் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்கிறோம்?” என்றார்.
சகதேவன் “நஞ்சில் புழுத்த புழுக்கள்போல் துயருக்கே பழகி அதில் வாழத் தொடங்கிவிட்டிருக்கிறோம். ஆகவே அது நமக்கு போதாமலாகிவிட்டிருக்கிறது” என்றான். அவன் குரலில் இருந்த ஏளனம் யுதிஷ்டிரனின் உள்ளத்தை அடங்கச்செய்தது. “ஆம், உண்மை. நம்மைப்போல் ஏளனத்துக்குரிய சிற்றுள்ளங்கள் இங்கு வேறில்லை…” என்றார். நகுலன் தன்னுள்ளே புன்னகைத்துக்கொண்டான். துயரைக் கொட்டி அதை வெறுப்பினூடாக வளர்த்து உச்சத்தை அடைந்து ஓர் ஏளனம் வழியாக கீழிறங்கி வருவதே ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தௌம்யர் “நாம் பேசவேண்டியதை பேசுவோம்” என்றார்.
நகுலன் “ஆம், அதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “அமைச்சரே, பேரரசர் நம்மை நோக்கி என்ன சொல்லக் கூடுமென்பதை இத்தருணத்தில் அவரே அறியார். இவ்வனைத்தையும் நிகழ்த்தும் தெய்வங்கள்கூட அவற்றை சொல்ல முடியாது. ஒவ்வொருமுறையும் நம் கணிப்புகள் அனைத்தையும் கடந்து ஏதோ ஒன்றுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்னும்போது இங்கு அமர்ந்து ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி கணிப்பதில் உள்ள பொருளின்மையை நாம் உணர்வதில்லை” என்றான். யுதிஷ்டிரன் “நம் செயல்களை பொருளற்றுப் போகச்செய்வது தெய்வங்களின் ஆணை. ஆனால் நாம் ஆற்றும் செயலுக்கான பொருள் ஒன்று நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அச்செயலை நம்மால் நம்பி ஆற்றமுடியாது” என்றபின் சகதேவனிடம் “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றார்.
சகதேவன் “அவர்கள் விழிநீர் உகுத்திருக்கிறார்கள், அது ஒன்றே இப்போது போதுமானது” என்றான். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “மூத்தவரே, விழிநீர் அனைத்தையும் கழுவுவது. முதன்மையாக வஞ்சத்தை. பேரரசியின் அணைப்பில் சிறுமைந்தராக மாறிய பேரரசர்தான் அங்கிருப்பார். ஒருவேளை அவர் அகம் மீண்டும் நஞ்சு கொள்ளக்கூடும். ஆனால் இப்போது இக்காலையிலேயே நாம் அவரை சந்திக்கச் சென்றால் அங்கிருப்பவர் சற்றுமுன் உளம் கனிந்தவர். மைந்தர்போல் உளத்தூய்மை கொண்டவராக அவர் இருக்க வாய்ப்பு. ஆகவே அஞ்சவேண்டியதில்லை” என்றான்.
யுதிஷ்டிரன் திரும்பி நகுலனிடம் “நான் என்பொருட்டு அஞ்சவில்லை. அங்கிருப்பவர் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர் மைந்தரையும் இழந்தவர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என மும்முடிசூடி அமரத்தக்க மைந்தனை இழந்தவர். அறியாது ஒரு அவச்சொல் அவர் நாவில் எழுமெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அதன் நஞ்சையே சென்றடையும். எரிமழையென அவர் சினம் நம் குடிமேல் விழும். அதை தவிர்ப்பது அரசன் என என் கடமை” என்றார். நகுலன் ஓர் உளத்துடிப்பை உணர்ந்தான்.
சகதேவன் “அவ்வண்ணம் ஒன்று எழுமென்றால் அதை எவ்வகையிலும் நாம் கடக்க இயலாது. தந்தையென ஒரு சொல்லேனும் அவர் நம்மை பழித்துச் சொல்லாமலிருந்தால் அதுவே குறை” என்றான். “என்ன சொல்கிறாய், இளையோனே?” என்றார் யுதிஷ்டிரன். “நமக்குரிய பழி என ஒன்று உண்டு எனில் அதை நாம் பெறுவோம். அனைத்து தீச்சொல்லுக்கும் தகுதியானவர்கள் நாம் என்பதை நாமே அறிவோம். தந்தையிடமிருந்து தண்டம் பெறாமல் நாம் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மூத்தவரே, இளஅகவையில் ஒரு பிழை செய்தால் அன்னையிடமிருந்து அதற்குரிய தண்டனையைப் பெற்றால்மட்டுமே நம் அகம் நிறைவுறுகிறது” என்றான்.
“இன்று அதை நமக்களிக்க அவரன்றி வேறெவரும் இல்லை” என்று அவன் தொடர்ந்தான். “சென்று அவர் முன் நிற்போம். அவர் நம்மை அழிப்பதென்றால் நிகழட்டும். நம் குடியையே பொசுக்குவார் என்றால் அதுவும் முறையே.” பீமன் “நான் எப்பிழையும் இயற்றவில்லை. எவர் அளிக்கும் தீச்சொல்லும் என்னை வந்தடையாது. தேவை என்றால் நானே முன்னால் செல்கிறேன். நான் மட்டுமே சென்று அவருடைய பழிச்சொல்லை பெற்றுக்கொள்கிறேன்” என்றான். யுதிஷ்டிரன் அவருடைய எல்லா பொறுமையையும் இழந்தார். “நீ உளம்தொட்டுச் சொல். இப்போதேனும் நீ உன் மைந்தரைக் கொன்றவர்களும் போரில்தான் கொன்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா? சொல்” என்றார்.
அச்சொல் எவ்வண்ணம் சென்று அறையும் என யுதிஷ்டிரன் நன்கறிந்திருந்தார். கைகள் தளர விழிகள் சுருங்க முகத்தசைகள் இழுபட்டு அதிர பீமன் அவரை வெறித்துப் பார்த்தான். இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து உரசியபடி மரம் பிளக்கும் ஒலியில் உறுமினான். தௌம்யர் அவர்களின் நடுவே புகுந்து “இங்கு நின்று இதைப்பற்றி வெறுமனே சொல்லாடிக்கொண்டிருப்பதில் எப்பொருளும் இல்லை. அவர் எந்நிலையில் இருந்தாலும் சரி, எது நிகழக்கூடுமென்றாலும் சரி, அங்கே சென்று அவர் கால் பணிந்து சொல் பெற்று இந்நீர்க்கடன் சடங்கை நிகழ்த்துவதே நம்முன் உள்ள ஒரே தெரிவு. மாற்றுவழி ஒன்றில்லை” என்றார்.
நகுலன் “ஆம், நான் கூறவருவதும் அது மட்டும்தான்” என்றான். யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் “அதை நானும் அறிவேன். இருப்பினும் ஏதேனும் ஒரு வழி தோன்றுமோ என்று எண்ணினேன்” என்றபின் “இளைய யாதவன் எங்கே?” என்றார். “காலையிலிருந்து அவர் தன் குடிலில்தான் இருக்கிறார்” என்றான் சகதேவன். “அவனை உடனழைத்துச் செல்வோம்” என்று யுதிஷ்டிரன் கூறினார். சகதேவன் “மூத்தவரே, இது நமக்கும் நம் தந்தையருக்குமான தருணம். இதில் அவர் எதற்கு?” என்றான். யுதிஷ்டிரன் “ஏனெனில் இப்போரை நிகழ்த்தியவன் அவன். இவையனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியவனும் அவனே. முதலில் அவன் நின்றிருப்பதே முறை” என்றார்.
“போரை அவர் நிகழ்த்தியிருக்கலாம். நம் தந்தைக்கு எதிராக அனைத்தையும் செய்தவர்கள் நாமே. மானுட குலத்திற்கும் பாரதவர்ஷத்து அரசர்களுக்கும் அவர் தம் பெண்டிருக்கும் மறுமொழி சொல்லவேண்டிய இடத்தில் இளைய யாதவர் இருக்கலாம், நம் தந்தையருக்கு சொல்லளிக்க வேண்டியவர் அவர் அல்ல” என்று சகதேவன் சொன்னான். “ஆம்” என்றபின் யுதிஷ்டிரன் தத்தளிப்புடன் “ஆனால் அவன் வந்து முன்னால் நின்றால் அனைத்தும் எளிதாகலாம். பேரரசி இளைய யாதவன் மேல் பெரும்பற்று கொண்டவர். இன்று காலை வந்திறங்கியபோது இளைய யாதவனை வாழ்த்தினார். அவனுடன் இருக்கையில் தந்தையும் அவ்வாறு எண்ணக்கூடும். அனைத்தையும் எளிதாக்கும் ஒன்று அவனிடம் உள்ளது. இத்தருணத்தையும் அவன் எளிதாக்கி அளிக்கக்கூடும்” என்றார்.
நகுலன் “ஒருவேளை மூத்த தந்தை முனிந்தெழுந்தால்கூட அந்நஞ்சனைத்தையும் அவரே தாங்கிக்கொள்ளவும் கூடும் அல்லவா?” என்றான். அச்சீண்டலால் சீற்றமடைந்த யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறே. அந்நஞ்சையும் அவனே தாங்கட்டும். அதுவே முறை. அவன் பொருட்டு நாம் படைகளையும் மைந்தரையும் அளித்தோம். நம் பொருட்டு அவன் அத்தீச்சொல்லை பெறட்டும். அதில் என்ன பிழை?” என்றார். “நன்று. தீச்சொல் அவருக்கு, மண்ணும் முடியும் நமக்கு” என்று பீமன் பல்லைக் கடித்தபடி சொன்னான். யுதிஷ்டிரன் “மண்ணும் முடியும் எனக்கு வேண்டியதில்லை. நீயே வைத்துக்கொள். அரசனையும் இளையோரையும் கொன்றவன் நீ அல்லவா? காட்டரசு நெறிப்படி நீயே முடிசூடும் தகுதி கொண்டவன். நீ முடி கொள்க! நான் அஸ்தினபுரிக்கோ இந்திரப்பிரஸ்தத்துக்கோ வரவில்லை. இக்காட்டிலேயே இருந்துகொள்கிறேன். இங்கு தவம் செய்கிறேன். என் இறுதியை நான் கண்டடைகிறேன். ஆம், நீ செல், நீயே நிலம்கொள்க!” என்றார்.
“மெய்யாகவே காட்டில் இருக்க விரும்புபவன் நான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள், மூத்தவரே” என்று சொன்னபின் பீமன் நகுலனிடம் “நாம் கிளம்புவோம். அனைத்து ஒருக்கங்களையும் செய்” என்றான். “நீ சொன்னதற்கு என்ன பொருள்? நீ சொன்னதற்கு என்ன பொருள்? அதை முதலில் சொல்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். தௌம்யர் “வீண்சொல் வேண்டாம். இளைய யாதவர் உடன் வரட்டும். உரிய சொற்களை எடுப்பதற்கான ஆற்றல் அவருக்குண்டு. மெய்யாகவே இத்தருணத்தை அவர் எளிதாக்கக்கூடும்… கிளம்புக!” என்றபின் “நீங்கள் ஐவரும் இணைந்தே செல்லுங்கள். பேரரசியும் பேரரசரும் உளம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் தருணமே அதற்குரியது. இன்னமும் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை. இளைய யாதவர் நேராகவே அங்கு வரட்டும். அவரை அழைத்துவர நான் என் மாணவர்களை அனுப்புகிறேன்” என்றார்.
“இவன் சொல்லும் இச்சொற்கள்… இவன்!” என்று பீமனை நோக்கி கைநீட்டி பேசத்தொடங்கிய யுதிஷ்டிரனை நோக்கி சினத்துடன் கை நீட்டித் தடுத்து “போதும். இனி இங்கு சொல் வேண்டியதில்லை” என்றார் தௌம்யர். தன்னை அடக்கி தணிந்து யுதிஷ்டிரன் “அவ்வாறே” என்று தலைவணங்கினார். பீமன் பொருட்டின்மை தெரிய உடலை திருப்பிக்கொண்டான்.