‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 7

நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து ஆடைகளை ஈரமாக்கியது. புலரொளி மறைந்ததுமே எழுந்த இளவெயில் கீற்றுக்கள் காட்டுக்கு அப்பாலிருந்து இலைகளை ஊடுருவிச் சாய்ந்து வந்து விழுந்து வெட்டி அகற்றிய புதர்களின் வேர்கள் விரல்கள் என, நரம்புகள் என பரவியிருந்த சிவந்த ஈரமண்ணில் விழுந்து மெல்லிய புகையை கிளப்பிக்கொண்டிருந்தன. அவன் புரவி அந்த வெயிலின் வெம்மையால் எழுந்த சேற்று மணத்தை குனிந்து முகர்ந்து கழுத்து சிலிர்த்து மூக்கு விடைத்து ஆழ மூச்சுவிட்டது. அவன் அதன் கழுத்தையும் காதுகளையும் வருடி “செல்க! செல்க!” என்றான்.

அது எப்போதுமே அவனுடைய உளவிசையை பொருட்படுத்துவதில்லை. மிக மெல்ல காலெடுத்து வைத்து தலையசைத்து நடந்து, அவ்வப்போது நின்று தரையில் கிடக்கும் ஏதேனும் இலைச்சருகை வாயால் கவ்வி எடுத்து மென்று பாதியை உமிழ்ந்து, தன் போக்கில் செல்லும். தன் உளவிசையை பொருட்படுத்தாத புரவிதான் அப்போது அவனுக்கு உகந்ததாக இருந்தது. பாய்ந்து திசைவெளியில் விரையும் புரவி விரைவிலேயே கால்சோர்ந்து நுரை கக்கி விழுந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. இந்த அன்னைக் குதிரை தன் எல்லைகளை நன்கறிந்தது. தன்னை விலங்கென்று எப்போதும் உணர்வது. அனலென்றும் காற்றென்றும் ஆக முயலாதது. ஒருபோதும் தன் இறுதி விளிம்பில் சென்று முட்டுவதற்காக அது பாய்ந்தெழுவதில்லை. இது எந்த வில்லாலும் செலுத்தப்பட்ட அம்பல்ல. நீரோடையென தன் வழியையும் விசையையும் தானே அமைத்துக்கொள்ளும் அகஆற்றல் கொண்டது.

குடில் முன் வந்து அதுவே நின்று ஒருமுறை செருக்கடித்தது. அவன் இறங்கி அதன் கழுத்தை தட்டிவிட்டு கடிவாளத்தை அதன் முதுகிலேயே போட்டான். அது சிலிர்த்தபடி சென்று முள்மரத்தடியில் நின்று புண்பட்ட காலை தூக்கிக்கொண்டது. குடிலுக்குள் சென்று நின்றபோதுதான் தன் உடல் முழுக்க வெம்மை மிகுந்து ஈரம் பரவியிருப்பதை உணர்ந்தான். மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டி கண்களை மூடிக்கொண்டபோது உடல் குளிரத் தொடங்கியது. வெளியே காலடி ஓசை கேட்க, எழ உளம் குவியாமல் கண்களை மூடியபடியே “வருக!” என்றான். ஒற்றன் உள்ளே வந்து தலைவணங்கி நின்றான். “ஆணைகள்?” என்றான். “சொல்” என்று நகுலன் சொன்னான். “பிற அரசியரையும் பேரரசரிடமே அனுப்ப வேண்டுமா?” என்று ஒற்றன் கேட்டான். “அவர்கள் அவ்வாறு கோரினார்கள்.” ஒரு கணத்திற்குப் பின் “ஆம், அதுதானே முறை” என்று நகுலன் சொன்னான். “அவ்வண்ணமெனில் ஆகுக! ஒரு சொல் உசாவாமல் அதை செய்யக்கூடாதென்று தோன்றியது” என்றபின் அவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

நகுலன் சற்று முன் நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் உள்ளத்தில் ஓட்ட முயல்பவன்போல கண்களை மூடி நினைவுகளை எடுத்தான். அந்தக் காட்சியே மிகப் பழையதாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்து வியப்படைந்தான். பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததென்று தோன்றியது. அல்லது எவரோ கூறி நினைவில் பதிந்தது. அல்லது ஏதோ நூலொன்றில் படித்தது. எத்தனை விரைவாக உணர்வுமிக்க தருணங்களிலிருந்து உள்ளம் நம்மை விலக்கிக்கொள்கிறது என்று அவன் எண்ணிக்கொண்டான். எளிய தருணங்கள் அருகிருக்கும் அனைத்தையும் இழுத்து அவற்றுடன் சேர்த்து முடிச்சிட்டு விரித்துக்கொள்ளவும் பெருக்கிக்கொள்ளவும் கூர்த்துக்கொள்ளவும் முயல்கிறோம். அதனில் நம்மை பெய்கிறோம்.

பெருந்தருணங்களை அணுகுகையிலேயே ஏன் கால்கள் தயங்குகின்றன? ஏனென்றால் பெருந்தருணங்கள் முற்றாகவே மானுடருக்கு அப்பால் நின்றிருக்கின்றன. தெய்வங்களால் இயக்கப்படுகின்றன. அங்கு தன் அறிவுக்கும் கற்பனைக்கும் இடமில்லை என்பதை அறியாத மானுடரில்லை. அவ்வறியமுடியாமையின் மையத்தில் கண்களை மூடி பிறிதொன்று எண்ணாமல் பாய்ந்து சென்று அமிழ விழைபவருமில்லை. பெருந்தருணங்களில் மானுடர் செயலற்றுவிடுகிறார்கள். அறிந்த அனைத்தையும் மறந்து ஆவதென்ன என்று அறியாமல் அதன் சுழலுக்கு தன்னை அளிக்கிறார்கள். பெருந்தருணங்களை எண்ணி நோக்கி காலெடுத்து வைத்து சென்றடைபவர்கள் உண்டா? பெருமானுடர்கள் அவ்வாறு இருக்கலாகும். அவனைப்போல. அவன் அவற்றை நாற்களம் என ஆடுகிறான். நடனமென உடலாக்கிக் கொள்கிறான். பீலியென சூடிக்கொள்கிறான். உடற்பொடி என உதறி முன்செல்கிறான்.

நான் எளியன். என்னைப்போன்ற எளியோர் அதை நோக்கி பெருவிசைகளால் தள்ளப்படுகிறார்கள். அதனால் ஏனென்றறியாமல் ஈர்க்கப்படுகிறார்கள். அதில் எரிந்தழிகிறர்கள். அல்லது பிறிதொருவராகி வெளிவருகிறார்கள். அதிலிருந்து விலகவும் விடுவித்துக்கொள்ளவும் முயல்கிறார்கள். அல்லது அதை சிறிதாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். கையில் நிற்கும் அளவுக்கு எளிதாக்கிக்கொள்கிறோம். பற்றிக்கொள்ள பிடிகளும் புழங்குவதற்கு உரிய வடிவமும் உரியதாக உருமாற்றிக்கொள்கிறோம். அதன்பொருட்டே இத்தவிப்பு. அது ஏன் பெருந்தருணம்? எனில் இப்போது இங்கு நிகழ்வன அனைத்துமே பெருந்தருணங்கள் அல்லவா? ஆம், மெய்யாகவே அப்படித்தான். பெருநிகழ்வொன்றின் பகுதி என்று ஆகும்போது அனைத்துமே அந்நிகழ்வின் முடிவிலா எடையை தாங்களும் கொண்டு விடுகின்றன. இன்று முற்றத்தில் பரவியிருக்கும் நீராவி படிந்த இளவெயில்கூட பொருட்செறிவு மிக்கது. புரிந்துகொள்ளவே முடியாதது. ஒரு கொலைப்புன்னகைபோல. ஒரு வாளின் ஒளிபோல. வேறெங்கிருந்தோ ஊறிவழியும் ஒளிர்நஞ்சு போலும் அது. இல்லை, அது பொருளற்றது. நஞ்சு தன்னில் சாவு என்னும் விழுப்பொருள் கொண்டது. இந்த ஒளி அவ்வாறல்ல.

பெருந்தருணங்கள் அனைத்திலிருந்தும் ஒரு விழுப்பொருளை மானுடர் திரட்டி வைத்திருக்கிறார்கள். ராகவராமனின் கதையை எழுதிய தொல்வேடனின் பாடல்களில்தான் எத்தனை அரிய மெய்மைகள். எவ்வளவு செறிந்த பொருள் கொண்ட வரிகள். பெருந்தருணங்களுக்கு அப்படி ஒரு மானுட உட்பொருள் இருக்க இயலாது. இவ்வுலகில் புழங்கும் ஒரு மெய்மை அதில் திரளவும் வாய்ப்பில்லை. அவை யானை காலில் நாம் இடும் தளைப்புச் சங்கிலிகள். புரவிக்கு நாமிடும் கடிவாளங்கள். பொன்னிலும் இடலாம். அருமணிகள் பொறிக்கலாம். அவையனைத்தும் நம்முடையவை. அவை அறியாதவை. பெருமலைப்பாறைகளை பார்க்கையில் எல்லாம் உள்நுழைய வழியில்லாத மாளிகைகள் என்று அவன் இளமையில் எண்ணிக்கொண்டதுண்டு. மெய்யாகவே அவை உள்ளீடற்றவைதானா என்ற ஐயம் வளர்ந்த பின்னரும் வந்ததுண்டு. பலமுறை கனவுகளில் பாறைகளை முட்டியும் உந்தியும் சுற்றிச் சுற்றி வருவதாக கண்டிருக்கிறான்.

 

அவன் துயின்றுவிட்டிருந்தான். ஓசை கேட்டு விழித்தபோது வாயிலில் ஏவலன் நின்றிருந்தான். அவன் எழுந்தமர்ந்து கைகளால் முகத்தை துடைத்தபடி கூறுக என்னும் பொருளில் “ம்” என்றான். “அவை கூடியிருக்கிறது, அரசே. தங்களின் வருகை அங்கு எதிர்நோக்கப்படுகிறது” என்றான் ஏவலன். நகுலன் எழுந்து “நான் நீராடிவிட்டு செல்ல வேண்டும்” என்றான். “அரசர் அமர்ந்துவிட்டார்” என்றான் ஏவலன். “அவை நிகழ்க! நான் உடனே வருகிறேன்” என்றான். ஏவலன் விலகிச்சென்றதும் குடிலுக்குள்ளிருந்து சிறிய மரக்குடைவுக்கலத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தனது மாற்று ஆடையையும் மரவுரியையும் எடுத்தபடி வெளியே சென்று ஈரமண்ணில் கால் புதைய நடந்து கங்கையை நோக்கி இறங்கினான்.

அந்நிலம் அனல் விழுந்த இடம்போல சூழ்ந்திருந்த காட்டை எரித்து விரிந்துகொண்டிருந்தது. படகுத்துறையில் பணியாளர்கள் காலையிலேயே ஏதோ செய்யத் தொடங்கியிருந்தார்கள். ஒருபக்கம் படகுகளில் பொருட்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் துறைமேடை விரிவாகிக்கொண்டிருந்தது. அவன் கண்ட நாள் முதல் அந்தப் படகுத்துறை ஒவ்வொரு கணமும் மேலும் பெரிதாகிக்கொண்டிருந்தது. எண்ண எண்ணத்தான் தேவை பெருகுகிறது. மூங்கில்களை சேற்றுபரப்பில் வைத்து அறைந்து இறக்கிக்கொண்டிருந்தனர். பறக்கும் ஆடையை பலகையில் அறைவதுபோல் கங்கையை கரைச்சேற்றில் அறைகிறார்கள் என்று தோன்றியது. இந்தப் படித்துறையில் திகழும் இக்காலத்தில் அதை கட்டி நிறுத்த முயல்கிறார்கள். பனிமலை இறங்கி ஆழ்கடல் செல்லும் பெருக்கு அவள். இங்கு இந்த மூங்கில் தறிகளில் சிக்குண்டு சற்றே நெளிந்து நிலைகொள்வது போன்ற ஒரு நடிப்பை அவளும் வழங்குகிறாள்.

அவன் நீராடும் துறைக்காக அங்கிருந்து அகன்று அகன்று சென்றான். சில கணங்களிலேயே யுதிஷ்டிரனின் அவைக்கூடலை தான் மறந்துவிட்டிருந்ததை சில கணங்கள் கடந்தே கீற்று நினைவு எழுந்தபோது உணர்ந்தான். கையிலெடுத்த இலையை உளம்கொள்ளாமல் வீசுவதைப்போல் அதை உதறினான். அப்பால் காட்டிற்குள் நீத்தார்பலி கொடுப்பதற்கான படித்துறைகள் ஒருங்கியிருந்தன. ஆனாலும் சிலர் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பண்படாத மரப்பலகைகளை ஆணிகளால் அறைந்து நீர்விளிம்பில் மேடையாக எழுப்பி இரண்டடுக்குப் படிகளாக ஆக்கியிருந்தார்கள். அதற்குமேல் மண் வெட்டித்தெளிவிக்கப்பட்டு அதன்மேல் மணல் பரப்பி சடங்குமுற்றம் அமைக்கப்பட்டிருந்தது. நீருக்கு அடியில் பிரதீபர் அமைத்த கல்லாலான படிகள் உள்ளன. அந்தப் படிகள் அங்கிருப்பது வீரர்களை உவகைக்கொப்பளிப்பு அடையச்செய்வதை அவன் கண்டான். முதல்நாளே அனைவரும் நீரில் பாய்ந்து மூழ்கி அதை தொட்டு மீண்டனர். “ஆம், படிகள்!” என்று ஒருவரை ஒருவர் நோக்கி கூவினார்கள். வந்த அன்றே நீரில் இறங்கி மூழ்கி கைகளால் துழாவி அடியைத் தொட்டு மேலெழுந்து வந்த யுதிஷ்டிரன் கையால் குழலை அள்ளி பின்னால் சரித்து, வாயில் அள்ளிய நீரை நீட்டி உமிழ்ந்து, கை சுழற்றி நீந்தி, அணைந்து கால் ஊன்றி நின்று “படிகள் உள்ளன, இளையோனே. மென்பாறையாலானவை! தொட்டறிய இயல்கிறது” என்றார். கரையில் நின்றிருந்த நகுலன் ஆர்வமில்லாமல் “ஆம், கூறினார்கள்” என்றான். “நீ தொட்டறியவில்லையா?” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை” என்றான் நகுலன்.

“இறங்கிப் பார்! நமது மூதாதை தன் போர் வெற்றியின் பொருட்டு அமைத்தது… அது மிகப் பெரிய போர். அன்று சௌவீரர்களும் யவனர்களும் சைப்யர்களும் ஒற்றைக்குலமென தங்களை திரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சோனகர்களின் உதவி இருந்தது. பீதர்களின் வணிகப்பாதைமேல் அவர்கள் கோன்மை கொண்டிருந்தமையால் முடிவில்லா செல்வமும் இருந்தது. அவர்களை வெல்லாமல் அஸ்தினபுரி நிலைகொள்ள இயலாதென்றனர் அமைச்சர். அவர்கள் ஒருநாள் கீழ்நிலம் நோக்கி வருவார்கள், முளைக்கையிலேயே அழிப்பது மேல் என்றனர் படைத்தலைவர். பிரதீபர் பெரும்படையுடன் வடமேற்கே சென்றார். ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்க இயலாதென்றும் அறிந்திருந்தார். அவருக்கு இங்கே எவரும் துணையில்லை. அப்போதும் மகதம் நமக்கு எதிராகவே இருந்தது. அன்றைய அங்கமும் வங்கமும் கலிங்கமும் பிரக்ஜ்யோதிஷமும் பௌண்டரமும் பஞ்சசஹ்யம் என்ற பேரில் ஒற்றைக்கூட்டென்று இருந்தனர்.”

யுதிஷ்டிரன் மேலெழுந்து வந்து உடல் நீரை உதறினார். உள்ளத்தின் எழுச்சியாலோ குளிராலோ அவர் உடல் நடுங்கியது. “அன்று அஸ்தினபுரியின் முழுப் படையையும் வடமேற்கே கொண்டுசெல்வதென்பது தற்கொலையென ஆகிவிடும் வாய்ப்புள்ள முயற்சி. ஆனால் பெருமானுடர் பெருந்திட்டங்களையே வகுக்கிறார்கள். பிரதீபர் முதலில் படையுடன் சென்று மகதத்தை தாக்கி அவர்களின் பதினெட்டு கங்கைப் படகுத்துறைகளை அழித்தார். அவர்கள் அஞ்சி பின்வாங்கினர். அஸ்தினபுரியின்மேல் படைகொண்டு வந்து நாம் கைப்பற்றிய படகுத்துறைகளை மீட்க எண்ணிய மகதர் பஞ்சசஹ்யத்திடம் உதவி கேட்டார். அந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே பிரதீபர் வடக்கே கிளம்பிவிட்டார். அவர்கள் பேசி கூட்டமைப்பதற்குள் வென்று மீளமுடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார். எத்தனை துணிவு, எத்தனை தன்னம்பிக்கை… அது தன் மீதான நம்பிக்கை மட்டும் அல்ல. தெய்வங்கள் மீதான நம்பிக்கையும்கூட.”

“வடக்கே பெரும்பாலை. அது உச்சக்கோடையும்கூட. கோடையில் கீழ்நிலத்தார் பாலையில் நுழையவே அஞ்சுவர் என எண்ணியிருந்தமையால் சௌவீரக்கூட்டு நம்மை எதிர்பார்க்கவே இல்லை. படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்னும் செய்தி சென்றபோதுகூட அவர்கள் பாலைநிலத்தில் நமது படை வற்றி அழியும் என்றே எண்ணினார்கள். ஆனால் பாலையில் வற்றி அழிவது சிறுநதிகள். சிந்து பாலையை நிறைத்து பெருகிச் செல்வது அல்லவா? நமது படைகளில் மூன்றிலொருவர் நீரின்றியும் வெயிலில் வெந்தும் வெங்காற்றில் மூச்சிழந்தும் மடிந்தனர். ஆனால் எஞ்சியோர் சிபிநாட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து யவனர்களின் நகரங்கள் ஒவ்வொன்றாக வென்றனர். ஆயிரம் யானைகளில் பொன்னை ஏற்றிக்கொண்டு வந்தார் பிரதீபர் என்று பாடுகிறார்கள் சூதர்கள். இப்போதுகூட அஸ்தினபுரியின் கருவூல அறைகளில் அன்றைய கொள்ளைச்செல்வம் நிறைந்திருக்கக்கூடும்.”

“அதன்பின் மகதர் நம்மை எதிர்க்கத் துணியவில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அது எப்போதுமே அப்படித்தான், இளையோனே. ஒரு பெருவெற்றிக்குப் பின் உண்மையில் வென்றவர்கள் வலு குறைந்திருப்பார்கள். புண்பட்ட யானையை பூனை எதிர்க்கமுடியும். ஆனால் வெற்றி எதிரிகளை அச்சுறுத்தும். அவர்கள் நம்முடன் பேச்சுக்கு வந்தனர். வடக்கே செல்கையில் தன் மைந்தர் சந்தனுவை இங்கே படையுடன் நிலைகொள்ளச் செய்துவிட்டே சென்றார் பிரதீபர். மகதர்கள் நமக்கு பதினெட்டு படகுத்துறைகளை அளித்தனர். எட்டு கோட்டைகளும் நமக்கு வந்தன. மகதம் பணிந்ததுமே சந்தனு படையுடன் சென்று கோசலத்தையும் ஏழு சிறுநாடுகளையும் வென்று கங்கைமேல் நமது ஆட்சியை முழுமை செய்தார்.”

“கங்கையின் மேலான நமது கோன்மையே நம்மை வளர்த்தது… கங்கை வந்து மாமன்னர் பிரதீபரின் மடியில் அமர்ந்தாள் என்றும் அவளை தன் மைந்தன் சந்தனுவுக்கு அவர் மணமகளாக ஆக்கினார் என்னும் கதை உருவானது அவ்வண்ணம்தான்” என்றார் யுதிஷ்டிரன். அவன் வெறுமையாக நோக்கிக்கொண்டு நிற்க யுதிஷ்டிரன் “கங்கை நமது ஊர்தியும் படைக்கலமும் ஆக திகழ்ந்திருக்கிறது. விசித்திரவீரியனின் காலத்தில் நாம் கங்கையை இழக்கலானோம். எந்தையின் காலகட்டத்தில் கங்கை முழுமையாகவே நம்மிடமிருந்து அகன்று மகதத்தால் கொள்ளப்பட்டது. கங்கையை ஆள்பவனே ஆரியவர்த்தத்தின் மெய்யான அரசன் என்பார்கள்” என்றார். “அங்கர் கங்கைக்கரையை முழுமையாகவே வென்றார்” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் அவனை நோக்கி திரும்பாமல் “நாம் அறுதியான வெற்றியை அடையவேண்டும். நம் கொடிவழிகள் இன்னும் நூறாண்டுகள் ஐயமின்றி கொள்ளும் கோன்மையை” என்றார்.

மீண்டும் நீரில் இறங்கி நீந்தியபடி “அன்று வடபுல வெற்றியின்பொருட்டு பிரதீபர் ஒரு ராஜசூயவேள்வியை நிகழ்த்தினார் என்கிறார்கள். அதன் தொடக்கமாக மாபெரும் நீர்க்கடன் ஒன்று நடந்தது. அனைத்து நீத்தாருக்கும் அளிக்கப்பட்ட கொடை. அதன்பொருட்டு கட்டப்பட்டது இப்படித்துறை. இதைப்பற்றி பிரதீபவிஜயமும் ஜயபிரதீபமும் விரிவாகவே சொல்கின்றன” என்றார். நீந்தி கால்களை நீருள் துழாவியபடி “கீழே இரண்டு படிகளை தொட முடிகிறது. மேலும் ஒரு படி சேற்றுக்குள் இருக்கலாம்” என்றபின் மீண்டும் நீரில் மூழ்கி ஆழத்திற்கு சென்றார். அவருடைய நீண்ட தலைமுடி நீரில் அலைபாய்ந்தது.

அவன் அங்கு நிற்க இயலாமல் திரும்பி நடந்தான். நீருக்குள் மூழ்கி குளிர்ந்து எவர் கண்களுக்கும் படாமல் அந்தப் படிகள் அமைந்திருக்கின்றன. அவற்றின் மேல் கங்கையின் மென்சிறகு பொதிந்திருக்கிறது. இந்தப் படிக்கட்டும் நீரில் மூழ்கும். நீர்ப்பலிக்குப் பிறகு இப்போது அமைந்த மரப்படிகளை கல்லால் எடுத்து கட்டிவிடவேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டிருந்தார். ஒருவேளை அவருடைய அகத்தில் ஒரு ராஜசூயத்திற்கான திட்டம் இருக்கலாம். ஆண்டுதோறும் அளிக்கும் நீர்ப்பலி அங்குதான் நிகழும். பின்னர் அதுவும் நீரில் மூழ்கும். பலிச்சடங்குகள் சுருங்கி ஒருவேளையாகி, ஒரு கைப்பிடி நீராகி, ஒரு விரல் செய்கையாகி ஒரு சொல் நினைவாகி மறையும். பிறிதொரு படிக்கட்டு எழும்.

எனில் நான் இப்போது நின்றிருக்கும் இந்த மண்ணில் நாளை அமையும் இன்னொரு படிக்கட்டு உள்ளது. அதன் இயல்கை வாய்ப்புக்கு மேல் நின்றிருக்கிறேன். தன் உள்ளம் சென்றுகொண்டிருக்கும் திசையை எப்போதுமே ஒருகணம் திரும்பி நின்று நோக்கி வியப்பது அவன் வழக்கமாகிவிட்டிருந்தது. உள்ளம் பெருக்காகவே எப்போதும் இருந்தது. புறவுலகுடன் அதன் தொடர்பு இலைதாவும் தவளை போலத்தான். தொட்டுத்தொட்டு எழுந்தமைந்தது. அவன் தன் உள்ளம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவிட்டது என்றே எண்ணினான். ஆனால் அங்குள்ள அனைவரின் உள்ளமும் அப்படித்தான் கொப்பளித்து ஓடிக்கொண்டிருந்தது என விழிகள் காட்டின.

ஒருவேளை யுதிஷ்டிரனுடைய உள்ளம் அவ்வண்ணம் இல்லாமலிருக்கலாம். கல்வியால் அடைந்த சொற்கரை அதற்கு அமைந்திருக்கலாம். அவன் அங்கு நின்று நோக்கியபோது நீரிலிருந்து எழுந்து தலைமயிரை அள்ளி பின்னாலிட்டு கைகூப்பியபடி கரை நோக்கி வந்த யுதிஷ்டிரனை கண்டான். ஒடுங்கிய தோள்களிலிருந்து நீர்வழிந்து இறங்கியது. நீராடும்போது மட்டும் அவரில் கூடும் சிறுவனின் பாவனை வந்துவிட்டிருந்தது. கரை நின்ற ஏவலனிடம் அவர் எதையோ சொன்னபோது வெண்பற்கள் தெரிந்து மறைய அவர் புன்னகைப்பதுபோல் இருந்தது.

கங்கையின் ஓரமாக இருந்த நாணல் புதர்களுக்குள் செல்லும் பொருட்டு பலகைகள் போட்டு வழி அமைக்கப்பட்டிருந்தது. நாளும் பலர் நடந்து சென்றமையால் பலகைகள் சேற்றில் அழுந்தி அங்கே ஒரு ஒற்றையடித்தடம் இருப்பதாகவே உணரச்செய்தன. கால்கள் மட்டுமே பலகையை உணரமுடிந்தது. பலகையின் விளிம்பில் கால் வைத்தபோது மறுமுனை திடுக்கிட்டு மண்ணை அதிரவைத்தது.

அவன் இறங்கி கங்கையின் நீர்விளிம்பை அடைந்தான். அது நீராடுவதற்குரிய இடமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. கங்கைக்குள் ஒரு செறிமண் பாறை நீட்டி நின்றது. கங்கையின் உதடுகளின்மேல் நீட்டிய ஒற்றைப் பல் என்று அது தோன்றியது. அவன் மேலாடையைக் களைந்து மரவுரி அணிந்து நீரில் பாய்ந்திறங்கி மூழ்கி மேலெழுந்து வந்தான். கைவீசி நீந்தி கரையை அணுகினான். உடலில் இத்தனை வெம்மை நிறைந்திருக்கிறதா? நீரில் வெம்மை கரைய உள்ளிருந்து மேலும் வெம்மை எழுந்து தோல்பரப்பை அடைவதை உணர முடிந்தது. ஆனால் அவன் கரையேறிவிட்டான்.

கங்கையில் இறங்கினால் பொழுது பிந்தும் வரை நீந்திக்கொண்டிருப்பது அவன் வழக்கம். அவை நிகழ்வுகளுக்கு பிந்தக்கூடாதென்பதனால் மிக முன்னதாகவே நீராட்டுக்குச் செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தான். இன்னொரு கைச்சுழல் நீச்சல், இன்னொரு முழுக்கு என எண்ணி எண்ணி பொழுது செல்வதை அறியாது நீரிலிருப்பான். மழைக்கால நீரின் சேற்று மணம், கோடைகால நீரின் ஆழ்ந்த தண்மை, மேல் பரப்பிலொரு மென்படலமாக செல்லும் வெயில்வெம்மை என கங்கையின் அனைத்து நிலைகளையும் அவன் அறிந்திருந்தான். ஒவ்வொன்றினூடாகவும் கடந்துசென்றுகொண்டிருப்பான்.

ஒவ்வொரு நாளும் என நீராடிய பின்னரும்கூட கனவில் கங்கையில் நீராடும் நினைவு வந்துகொண்டே இருந்தது. ஆனால் அப்போது கங்கையில் நீராடுவதை அவன் அஞ்சினான். பெரும்பாலும் சிற்றோடைகளிலோ சிறு சுனைகளிலோதான் நீராடினான். கங்கைக்கரைக்கு வந்த பிறகு ஒரு முழுக்குக்கு மேல் அவனால் நீராட முடிந்ததில்லை. ஒருகணம் தயங்கினால் கங்கையில் இறங்கவும் முடியாதென்பதனால் அணுகியதுமே கண் மூடிக்கொண்டு எண்ணாமல் பாய்ந்து துழாவி நீந்தி கரையேறிவிடுவது அவன் வழக்கம் என ஆயிற்று.

ஆயிரம் கைகளுடன் அள்ளி இழுத்து ஆழத்திற்கு கொண்டு செல்ல முயலும் கங்கையிடமிருந்து தப்ப விரும்புபவன்போல மூச்சு திணற கரைப்பாறையைப் பற்றி மேலே திரும்பிப்பார்க்காமல் மரவுரி எடுத்து தலை துடைத்து ஆடை மாற்றி அகன்று சென்றான். நீராட எழும்போதும் தலை துவட்டுகையிலும் விழி கொள்ளாது நீரின் ஒளிப்பெரும்பரப்பை பார்த்து நின்றிருப்பது அவன் வழக்கம். நீராடிய பிறகும் நெடுநேரம் கங்கையை நோக்கி நின்றிருப்பதும் உண்டு. இப்படி ஒரு கணமும் திரும்பாமல், அச்சுறுத்தும் விதியிடமிருந்தென அன்னை நீர்ப்பெருக்கிடமிருந்து ஓடி அகல்வோம் என ஒருபோதும் எண்ணியதில்லை.

நடக்கையில் அவன் மிகவும் களைத்திருந்தான். அத்தனை களைப்பு எதனால் என்று எண்ணினான். உள்ளம் ஓடிய நெடுந்தொலைவின் களைப்பு. எண்ணி எண்ணிச் சென்ற தொலைவு அனைத்தையும் சலித்துச் சலித்து நடந்து மீளவேண்டியிருக்கிறது. அவனுக்கு அப்போது யுதிஷ்டிரனின் அவைக்குச் செல்ல சற்றும் உளம்கூடவில்லை. வெளியே எங்காவது சென்றுவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. உடனே கிளம்பி எங்கேனும் சென்றுவிடுவோம் என்று எண்ணியபோது அவ்வெண்ணமே மேலும் நடக்க ஆற்றல் அளித்தது. குடிலுக்கு மீண்டு ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோதுகூட அங்கிருந்து காட்டுக்குள், அறியா நிலம் ஒன்றுக்குள் செல்லப்போகிறோம் என்றே எண்ணிக்கொண்டிருந்தான். ஏவலன் வந்து நின்று தலைவணங்கியபோது பெருமூச்சுவிட்டான்.

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி
அடுத்த கட்டுரைஇசை- கடிதம்