‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 6

நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில் திடுக்கிட்டு, மேடுகளில் சரிந்து எழுந்து சகடம் உரசும் ஒலியுடன் சென்றுகொண்டிருந்தது. ஏவலன் தொலைவில் புரவியில் வருவதைக் கண்டதும் நகுலனின் உள்ளம் படபடப்பு கொண்டது. அவன் கூறப்போவது பிறிதொன்றல்ல என்று அறிந்திருந்தாலும்கூட அதை தன்னால் நிலைகொண்ட அகத்துடன் கேட்க முடியாது என்று தோன்றியது. அத்தருணத்தை ஒத்திப்போட அவன் உள்ளம் முயன்றது. மேலும் சில கணங்கள். மேலும் சில அடிகள். இன்னும் பொழுதிருக்கிறது. அதுவரை ஒன்றுமில்லை. இந்தக் காட்டின் இனிய காற்று, வெளுத்துவரும் இருள், எழுபறவை ஒலிகள். இருத்தலின் திகட்டாத் தித்திப்பு.

ஏவலன் வண்டியை ஒழியும்பொருட்டு பக்கவாட்டு நாணல் புதர் வழியாக புரவியைச் செலுத்தி கடந்து நகுலனின் அருகே வந்தான். நகுலன் அவனை நோக்கி தலையசைத்தான். இணையாக அவனுடன் புரவியில் வந்தபடி தாழ்ந்த குரலில் “பேரரசர் நல்ல உளநிலையில் இல்லை. தொடர்ச்சியாக அவருக்கு அகிபீனா கொடுக்கப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே விழிப்பு கொள்கிறார். உளத்தன்னிலை மீளாதவராகவே இருக்கிறார். சஞ்சயனும் சங்குலனும் அன்றி எவரும் அவர் அருகே செல்ல இயலவில்லை” என்றான். “சங்குலன் உடனிருக்கிறான் அல்லவா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், இருமுறை பேரரசர் தான் தங்கியிருந்த குடிலையே அடித்து நொறுக்கியிருக்கிறார். நேற்று மாலை எழுந்து கூச்சலிட்டு மூங்கில் தூண்களை அறைந்து உடைத்தார். குடில் அவர் மீதே விழுந்துவிட்டது. சங்குலன் அவரைப் பற்றி நிறுத்தி கைகளை கொடிகளால் பிணைத்துக்கட்டி அகிபீனா புகைசூழ அமைத்திருந்தமையால் துயின்றார். சற்று முன்னர்தான் விழித்தெழுந்தார். மீண்டும் அவருக்கு அகிபீனா கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது நான் சென்றேன்” என்றான் ஏவலன்.

“மற்றபடி அகிபீனாவை விரும்பி முகர்கிறாரா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், அவருக்கு அது வேண்டியிருக்கிறது. விடாய் கொண்டவர்போல் அவர் அப்புகையை அள்ளி அள்ளி இழுப்பதை தொலைவிலிருந்து நான் பார்த்தேன்” என்று சொன்னான். “அது நன்று. அது அவர் மறக்க விழைகிறார் என்பதற்கும் மறந்து துயில்வதில் மகிழ்வைக் காண்கிறார் என்பதற்கும் சான்று… பெருந்துயர்கொண்டவர்கள் துயில் வரவில்லை என்று புலம்பினால் அவர்கள் துயரிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டும்” என்றான் நகுலன். பின்னர் “பேரரசி வருவதை சஞ்சயனிடம் கூறியபோது அவன் சொன்னதென்ன?” என்றான். “பேரரசி வருவதென்றால் அதை தவிர்க்க வேண்டாம் என்றார். எந்நிலையிலும் அச்சந்திப்பு நிகழவேண்டியதுதான். அரசர் உளம் சோர்ந்திருக்கும் இத்தருணம் அதற்கு உகந்ததுதான் என்றார்.”

“பேரரசி இருக்கும் நிலையும் மற்றொன்றல்ல” என்று நகுலன் சொன்னான். “அவருக்கும் இப்போது பேரரசர் தேவைப்படுகிறார். அவர் உடைந்து கதறக்கூடும். அழுது மீள்வதும் ஆகும்.” ஏவலன் தலையசைத்தான். நகுலன் கைவீசி ஏவலன் செல்லலாம் என்று காட்டினான். அவன் விலகியதும் மீண்டும் கையசைத்து அருகழைத்து “பேரரசி பேரரசரை சந்திக்கச் செல்லும் செய்தியை மூத்தவரிடம் சென்று அறிவி. நிகழ்ந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறுக!” என்றான். அவன் மேலும் ஒரு சொல்லுக்காக காத்தான். “அனைத்தும் நன்றெனச் செல்கிறது. பேரரசி மீளக்கூடும் என்றேன் எனச் சொல்க!” என்றான்.

தலைவணங்கி ஏவலன் சென்ற பின்னர் நகுலன் நெஞ்சு தளர்ந்து கடிவாளத்தை இடக்கையால் பற்றிச் சுழற்றியபடி புரவியின் மேலேயே அமர்ந்தான். ஒன்றும் செய்வதற்கில்லை என்று உணரும்போது ஏற்படும் விடுதலை. தெய்வங்களிடம் வாழ்வை முற்றும் ஒப்படைக்க இயல்வதில்லை. உற்றாரிடமோ அரசிடமோ மூத்தோர் சொல்லிடமோ நெறிகளிடமோகூட முழு நம்பிக்கை கொள்ள இயல்வதில்லை. ஆனால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு நிலையில் அனைத்தையும் காலத்திடம் ஒப்படைத்துவிடுகிறோம். காலம் அடித்துச் சுழற்றி கொண்டுசெல்ல ஒப்புக்கொடுத்து ஒழுகுகையில் மட்டுமே முழு விடுதலையை உணர்கிறோம். மனிதர் கட்டுண்டிருப்பது செயல், செயல்வினையென்னும் இருமையின் ஊடாட்டத்திற்குத்தான். செய்க செய்க என்கின்றன உடலும் உயிரும். செயல்வினையை எதிர்நோக்கி தவிக்கிறது உள்ளம். இரண்டையும் கடந்த நிலை ஒன்றே விடுதலை எனில் தவத்தாரும் விடுதலை கொண்டவர் அல்ல. தவம் என்பதும் செயலே. தவம் ஒழிகையில் அடையும் தவப்பேறொன்று இருக்கக்கூடும்.

அச்சொற்களின் விந்தையால் அவன் புன்னகைத்தான். யுதிஷ்டிரனின் முகம் நினைவுக்கு வந்தது. அத்தகைய விந்தையான சொல்லாட்சிகள் வழியாக வாழ்வின் சில மெய்மைகளை சொல்லிவிடமுடியுமென்று நம்புவது அவருடைய இயல்பு. பல்லாண்டுகால நூல் நவில்தல் மெய்மை என்பது ஒருவகையான மொழி அமைப்பே என்னும் நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்கிறது. மொழியினூடாக வெளிப்படும்போது மட்டுமே மெய்மை மானுடரால் அறியத்தக்கதாகவும் ஆளத்தக்கதாகவும் இருக்கிறது. எனில் மொழி என்பது கைக்குவளை. அப்பெருநதியில் அள்ளி எடுத்த ஒரு மிடறுதான் அது கொண்ட மெய்மை. அதிலேயே அலைகளையும் வானையும் பார்க்கப் பயில்வதற்குப் பெயர்தான் கல்வி. கல்வி என்பது அறிதலின் எல்லைக்குள் நின்று அனைத்தையும் விளங்கிக் கொள்வதற்கான பயிற்சி அன்றி வேறல்ல. கற்றோர் தங்கள் கல்வியால் சிறைப்பட்டோர். கல்வி மானுடரை தங்கள் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும் திறன் கொண்டவர்களாக்குகிறது. ஆகவேதான் கற்றோர் மூடர்களென நின்றிருக்கும் தருணங்களை மீள மீள பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இத்தருணத்தில் அர்ஜுனனின் வில்லும் பீமனின் தோளும் என ஒவ்வொன்றாக பொருளிழந்து செல்கையில் யுதிஷ்டிரனின் கல்வி மட்டுமே ஏளனத்திற்குரியதாக மாறிவிட்டிருக்கிறது. ஏனெனில் காண்டீபம் தன் தோல்வியை உணர்ந்துவிட்டது. கதை மண்ணில் பதிந்துவிட்டது. இன்னமும் தன் மொழியை பற்றிக்கொண்டு தன் சிறுபீடத்தில் தருக்கி நின்றிருக்கவே யுதிஷ்டிரன் முயன்றுகொண்டிருக்கிறார். அவன் ஏன் ஒவ்வொருவரின் வெறுப்பும் அறுதியாக யுதிஷ்டிரன் மேல் சென்று படிகிறது என வியந்தான். அவர் ஆற்றியதென ஏதுமில்லை. அனைத்துக்கும் தடைகூறுபவராகவே இருந்திருக்கிறார். தயங்காது எதையும் ஆற்றியதில்லை. அனைத்தையும் விளக்கி ஏற்கவைத்தவன், ஆற்றி முடிக்கவைத்தவன் அவன். அவன்மேல் சினமெழவில்லை. ஏனென்றால் அவனுடைய அறியமுடியாமை அச்சமூட்டுகிறது. அச்சம் அளிக்காதவரிடமே சினமெழுகிறது. அறியமுடியாமை என்பது முடிவிலி. முடிவிலி என்பதே தெய்வமெழும் இடம். பிரம்மம் அறியமுடியாதது என்பதனால் அறியமுடியாமைகள் அனைத்தும் பிரம்மமே.

நகுலன் திருதராஷ்டிரரின் குடிலை தொலைவிலேயே பார்த்தான். அதன் மேல் மெல்லிய நீலப்புகை எழுந்துகொண்டிருந்தது. அடுப்பிலிருக்கும் கலம் போன்றிருந்தது அது. மண்ணுக்கு அடியில் அனல் சுழன்றெழும் அடுப்பொன்று இருக்கக்கூடும். அதற்குள் உலைக்கொந்தளிப்பென அலை நிறைந்திருக்கக்கூடும். அணுகுந்தோறும் அது ஒரு மாபெரும் உலைக்கலம் எனும் எண்ணத்திலிருந்து அவனால் மீளவே இயலவில்லை. சத்யசேனை தேரிலிருந்து திரைவிலக்கி எட்டிப்பார்த்து “அக்குடிலா?” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “சிறிதாக உள்ளதே” என்றாள். அந்நிலையிலும் பேரரசரின் முதன்மையையே அவள் எண்ணுவது அவனிடம் எரிச்சலை எழுப்ப “கொடி பெரிதாக உள்ளதே” என்றான். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி நனைந்த சிறகுகளுடன் தலைகீழாக கட்டப்பட்ட சேவல் என தொங்கிக்கிடந்தது. அவனை ஒருகணம் நோக்கிவிட்டு தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

வண்டி சேற்றில் சகடங்கள் ஆழப்புதைய முனகி இழுபட்டு, பின் தசை பிளந்து எழுவதுபோன்ற ஒலியுடன் சகடம் விடுபட, கூண்டு உலைந்து அசைய, முன்னால் சென்றது. திருதராஷ்டிரரின் குடிலுக்கு முன்னால் காவல் நின்றிருந்த ஏழு வீரர்கள் வண்டி அணைவதைக்கண்டு தலைவணங்கி வேல் தாழ்த்தி விலகினர். அவர்களின் தலைவன் தன் வேலுடன் நகுலனை அணுகி தலைவணங்கினான். “சஞ்சயனும் சங்குலனும் உடனிருக்கிறார்கள் அல்லவா?” என்று தாழ்ந்த குரலில் நகுலன் கேட்டான். “ஆம், அரசே” என்று அவன் கூறினான். சஞ்சயனுக்காக தனிக்குடில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கப்பால் காவலர்களுக்கான கொட்டகை நாற்புறமும் சுவரிலாது திறந்து நின்றது. திருதராஷ்டிரருக்கான உணவு சமைக்கும்பொருட்டு கட்டப்பட்ட அடுமனைக்குடில் சற்று அப்பால் குறுங்காட்டின் விளிம்பிலிருந்தது. சங்குலன் எப்போதுமே அவருடன் இருக்கிறான் போலும்.

சில நாட்களுக்கு முன்னரே அப்பகுதியின் மரங்களும் புதர்களும் வெட்டி அகற்றப்பட்டிருந்தமையால் தரையெங்கும் இலைகளும் சிதைந்த கொடிகளும் பரவி, புரவிகளும் வண்டிகளும் இரும்புக் குறடுகளும் மிதித்த தடங்களுடன் உழுதிட்ட வயல் போலிருந்தது முற்றம். சேற்றுத்தடம் ஆழப்பதிய வண்டி சென்று நின்றதும் நகுலன் அதன் திரைவாயிலருகே நின்று “வந்துவிட்டோம், அரசி” என்றான். சத்யசேனை திரைவிலக்கி அவனைப் பார்த்து “இங்குதானா?” என்றாள். “ஆம்” என்றபின் அவன் திரும்பி திருதராஷ்டிரரின் குடிலிலிருந்து சஞ்சயன் வெளியே வருவதை பார்த்தான். பின்னர் “அரசர் நல்ல உளநிலையில் இல்லை. அவர் அகிபீனா மயக்கிலிருக்கிறார் என்றார்கள்” என்றான். சத்யசேனை “இங்கு அனைவரும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். தன்னிலையுடன் இருப்பவர்கள் மிகச் சிலரே” என்றாள். பின்னர் படியில் கால் வைத்து இறங்கி சேற்றில் நின்று உள்ளிருந்து காந்தாரி இறங்குவதற்காக கைநீட்டினாள். காந்தாரி கைநீட்டி அவள் கையைப் பற்றியபின் தன் சிறிய கால்களை மரப்படியில் எடுத்துவைத்து இறங்கி சேற்றில் நின்றாள். உள்ளிருந்து சத்யவிரதை இறங்கி கையில் சிறிய பேழையுடன் நின்றாள். நகுலன் “வருக, பேரரசி!” என்றபின் நடந்தான்.

காந்தாரியின் கண்களைக் கட்டியிருந்த நீலத்துணியின் கீழ்விளிம்பு நனைந்து நிறம் மாறியிருப்பதை அவன் பார்த்தான். முதல் முறையாக அவள் விழிகளில் கண்ணீரைப் பார்க்கிறோம் என்று தோன்றியது. முன்னர் எப்போதேனும் அவள் அழுவதை பார்த்தேனா? குந்தியை சந்திக்கும்போது அவள் அழுதாளா? ஆம், அழுதாள். அவன் திடுக்கிடும்படி ஓர் உணர்வை அடைந்தான். குந்தியின் அருகே அவள் கைபற்றி அமர்ந்திருக்கையில் காந்தாரியின் விழிகளைப் பார்த்ததாகவே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவள் விழிகளை அவன் பார்த்ததே இல்லை என்றாலும் நினைவில் எழுகையில் எல்லாம் அவள் விழி கொண்டவளாகவே வந்தாள் என்பதை உணர்ந்தான். மீள மீள ஒவ்வொரு தருணமாக நினைவில் மீட்டினான். எவ்வண்ணம் இது நிகழ்கிறது? இந்நீலத் துணிக்கு அப்பாலிருந்து அவள் விழிகள் நோக்கிக்கொண்டிருக்கின்றனவா? அவள் விழிகளை நோக்கும் விழி ஒன்று தன் விழிக்கு அப்பாலிருக்கிறதா?

கண்மூடி தொலைநினைவில் ஆழ்ந்தபோதுகூட எப்போதும் விழி கொண்டவளாகவே அவளை அகத்தே உணர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்தான். அவ்விழிகள் சத்யசேனையின் விழிகள் அல்ல. சத்யவிரதையின் விழிகளோ பிற அரசியரின் விழிகளோ அல்ல. காந்தாரத்தில் வேறு எவருடைய விழிகளும் அல்ல. குந்தியின் விழிகள் அல்ல. திரௌபதியின் விழிகளோ பானுமதியின் விழிகளோ அல்ல. வேறு எவருடைய விழிகள்? மெல்லிய நீலம் கலந்த விழிமணிகள். சிறிய இமைப்பீலி கொண்டவை. எவருடைய விழிகள் என்று அவன் அகம் பதைத்து துழாவிக்கொண்டே இருந்தது. சகுனியின் விழிகளா? உடனே அகம் திடுக்கிட்டது. அவ்விழிகளுடன் காந்தாரியின் விழிகளுக்கு தொடர்பே இருக்கவில்லை. எனில் எவர் விழிகள்? ஏதோ தெய்வ விழிகள். சிலையிலெழுந்தவை. அது பளிங்குச்சிலை. அவ்விழிகள் இளநீலமணிகள்.

குடிலை நோக்கி செல்கையில் சஞ்சயன் அருகணைந்து தலைவணங்கினான். “எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று நகுலன் கேட்டான். “தன்னினைவு இருக்கிறது” என்று சஞ்சயன் கூறினான். “சங்குலன் உடனிருக்கிறான் அல்லவா?” என்றான். “அவன் அருகேதான் எப்போதும் இருக்கிறான்” என்றான் சஞ்சயன். குடிலை அடைந்து அதன் படலை திறந்தபோது காந்தாரி திரும்பி நகுலனிடம் “மைந்தா, நீயும் உடன் வருக!” என்றாள். நகுலன் “நான்…” என்றபின் “சஞ்சயன் உடன் இருப்பதே நன்று…” என்றான். மேலும் விரைவாக திணறும் குரலில் “மேலும் அங்கே சங்குலனும் இருக்கிறான்” என்றான். காந்தாரி ஒருகணத்திற்குப் பின் சஞ்சயனை நோக்கி முகம் திருப்பி “உள்ளே அழைத்துச் செல்க, சூதனே!” என்றாள். சஞ்சயன் “வருக, பேரரசி!” என்றபடி குடிலுக்குள் நுழைய காந்தாரி தலை குனிந்து உள்ளே நுழைந்தாள். சத்யசேனையும் சத்யவிரதையும் தயங்கும் காலடிகளுடன் தொடர்ந்தனர்.

அங்கிருந்து விலகிச்சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை நகுலன் அடைந்தான். ஆனால் அவ்வாறு சென்றுவிடமுடியாதென்றும் தோன்றியது. கதவுப்படலை பிடித்தபடி அவன் வெளியே நின்று குடிலுக்குள் பார்த்தான். உள்ளே திருதராஷ்டிரரின் காலடியில் அமர்ந்திருந்த சங்குலன் தன் மாபெருந்தோள்களுடன் எழுந்து ஓலைவேய்ந்த சுவரில் சாய்ந்து நின்றான். அக்கணமே சிலையென்றாகி அங்கே அவன் இல்லையென்று தோன்றலானான். குடிலுக்குள் மூங்கிலாலான தாழ்வான பெரிய மஞ்சத்தில் விரிக்கப்பட்ட மரவுரியின் மீது திருதராஷ்டிரர் படுத்திருந்தார். பெருந்தசை புடைத்து நரம்புகள் இறுகிய அவருடைய இரு கரிய கைகளும் மஞ்சத்திலிருந்து தழைந்து நிலத்தை முட்டிக் கிடந்தன. இரு பாதங்களும் மஞ்சத்திற்கு வெளியே நீட்டி நின்றன. வயிறு ஒட்டி, விலா எலும்புகள் வரிவரியாகப் புடைத்த மார்பு மூச்சில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. தொண்டைக்குழி பதைத்து அசைந்தது. சிறு கன்றுக்குட்டியின் திமிலளவு பெரிய தொண்டை முழை ஏறியிறங்கியது.

காந்தாரி கைகளைக் கூப்பியபடி திருதராஷ்டிரரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இரு அரசியரும் கைகளை கூப்பியிருந்தனர். திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி விளங்காச் சொல்லொன்றை புலம்பிக்கொண்டிருந்தார். அவரது தாடி மயிர் உதிர்ந்து நனைந்து திரிகளாக கழுத்திலும் தோள்களிலுமாக பரவியிருந்தது. உதடுகள் மடிந்து உள்ளடங்கியிருந்தன. ஆகவே மூக்கு புடைத்து வாய் மேல் மடிந்து நிழல் வீழ்த்தியிருந்தது. கண்கள் குழிந்து உள்ளே சென்றிருக்க இமைகளுக்குள் விழியுருளைகள் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. கன்னமுழை எழுந்து நெற்றி புடைத்து அவர் பிறிதொருவராக ஆகிவிட்டிருந்தார். தோலைப் புடைத்து உந்தியபடி மண்டையோடு மேலெழுந்துவிட்டதுபோல. அவரில் அனல் எரிந்துகொண்டிருப்பதுபோல நகுலன் உணர்ந்தான். தொன்மையான அடிமரக்கட்டை நாட்கணக்கில் கனன்று எரியும்.

காந்தாரி ஏதேனும் சொல்வதற்காக சஞ்சயன் காத்து நின்றிருந்தான். நகுலன் மீண்டும் காந்தாரியைப் பார்த்தபோது அவள் தன் விழிகளால் திருதராஷ்டிரரை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்ற அவன் திடுக்கிட்டான். விழிகள் இல்லாமலேயே பார்க்க முடியும்போலும். அல்லது ஒருவேளை மிக முதன்மையானவற்றை எல்லாம் விழிகளின்றிதான் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ? சஞ்சயன் காந்தாரியை பார்க்கவில்லை. திருதராஷ்டிரரையும் அவன் பார்க்கவில்லை. தலைகுனிந்து நிலத்தைப் பார்த்தபடி மெலிந்து தொய்ந்த தோள்களுடன் நின்றிருந்தான். ஆனால் அவன் காந்தாரியைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது எப்படி அவன் உடலின் வழியாக தெரிந்தது? வெவ்வேறு தன்னுணர்வுகள் ஒன்றையொன்று நுனிதொட்டு அசைவிழந்து நின்றிருந்த தருணம்.

காந்தாரி மெல்ல அசைந்து மூச்சொலி எழுப்பினாள். சஞ்சயன் தானும் உயிர்கொண்டு “தாங்கள் ஆணையிட்டால் நான் அரசரை எழுப்புகிறேன், பேரரசி” என்றான். “வேண்டியதில்லை” என்று சொன்னபின் அவள் சஞ்சயனைப் பார்த்து “அவர் அறிவாரா?” என்றாள். எந்த முன்பின் தொடர்பும் இன்றி கேட்டபோதும்கூட அவள் கேட்பதென்ன என்பதை உணர்ந்து “அங்கு அழைத்துச் சென்றேன்” என்று சஞ்சயன் சொன்னான். காந்தாரி மீண்டும் பெருமூச்சுவிட்டான். சஞ்சயன் அருகிருந்த மூங்கில் பீடத்தை எடுத்து திருதராஷ்டிரரின் கட்டிலின் அருகே இட்டு “அமர்க, அரசி!” என்றான். சத்யவிரதையும் சத்யசேனையும் இருபுறமும் பிடிக்க காந்தாரி எடைமிக்க உடலை மெல்ல தாழ்த்தி அதன் மேல் அமர்ந்தாள். பெருமூச்சுடன் மஞ்சத்தின் விளிம்பில் தன் கைகளை ஊன்றிக்கொண்டாள்.

இரு இணையரசியரும் திருதராஷ்டிரரின் காலருகே சென்று மண்ணில் அமர்ந்தனர். சத்யவிரதை தன் கையை நீட்டி நடுங்கும் விரல்களால் அவர் கால்களை தொட்டாள். சத்யவிரதையின் தோளை சத்யசேனை பற்றிக்கொண்டாள். காந்தாரி நிலம் தொட தழைந்திருந்த திருதராஷ்டிரரின் வலக்கையை தன் கையிலெடுத்து தூக்கிக்கொண்டாள். திருதராஷ்டிரரின் கையின் எடையை நகுலன் முன்பும் பலமுறை அறிந்ததுண்டு. மல்லர்கள் மட்டுமே அவர் கையின் எடையை தோளில் தாங்க முடியுமென்று அவன் அறிவான். காந்தாரியின் கை திருதராஷ்டிரரின் கையளவுக்கே பெரியது என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். கரிய பெருநாகமும் வெண்ணிறப் பெருநாகமும் முத்தமிட்டுக்கொண்டதுபோல் என்று தோன்ற விழிகளை விலக்கிக்கொண்டான்.

காந்தாரி திருதராஷ்டிரரின் கைகளை தன் மடியில் வைத்து அவ்விரல்களுக்குள் தன் விரல்களைச் செலுத்தி பற்றிக்கொண்டாள். திருதராஷ்டிரர் தன் துயிலுக்குள் எங்கோ அத்தொடுகையை உணர்ந்து முனகினார். பின்னர் தீச்சுட்டதுபோல் உணர்ந்து எழுந்து அமர்ந்தார். திரும்பி தலைசரித்து அவளைப் பார்த்து பிறிதொரு கையால் அவள் தோளைப்பற்றி உலுக்கி “அரசி! அரசி!” என்றார். காந்தாரி தாழ்ந்த குரலில் “படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “அரசி! அரசி!” என்று மீண்டும் அவர் கூவினார். பின்னர் உடலைத் தாழ்த்தி மீண்டும் மஞ்சத்தில் படுத்து “நீண்ட நிலம்! பாலை நிலம்! கோடை” என்றார். அவருடைய உதடுகளில் இருந்து அக்குரல் எழவில்லை எனத் தோன்றியது. “அங்கு ஒரு முள்மரச்சோலை. அதற்குள் பதினொரு உருத்திரர்கள்… மூவிழி கொண்டவர்கள். குருதிவிடாய் கொண்டவர்கள்” என்றார்.

நகுலன் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் சஞ்சயனைப் பார்த்தான். சஞ்சயன் அங்கிலாதவன்போல் ஆகிவிட்டிருந்தான். இரு விழிகளை மட்டும் அவன் அங்கே பதித்து எஞ்சவிட்டுச் சென்றிருந்தான் எனப் பட்டது. இரு செவிகள் மட்டும் அங்கு திறந்திருந்தன போலும். திருதராஷ்டிரர் உரத்த குரலில் கனைப்போசை எழுப்பினார். உறுமலும் இருமலும் கலந்து அவர் உடலை திணறச்செய்தன. மீண்டும் எழுந்து அமர்ந்து சிவந்த விழிக்குமிழிகள் துள்ள “அரசி, இங்கு வந்துவிட்டாயா?” என்றார். “இங்குதான் இருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “நாம் இனி அங்கு திரும்ப வேண்டியதில்லை. நாம் காட்டுக்கு சென்றுவிடுவோம். காடொன்றே இனி நமக்கு எஞ்சியுள்ளது” என்றார். “ஆம் அரசே, காடு ஒன்றுதான் நமக்கு எஞ்சியுள்ளது” என்று காந்தாரி சொன்னாள்.

அவர் அச்சொற்களின் முழுப் பொருளையும் அக்கணம் உணர்ந்தவர்போல துடிப்பெழுந்த உடலுடன் அமர்ந்திருந்தார். பின் நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறியபடி அவள் மடியில் தலை அறைந்து விழுந்து இரு பெருத்த தொடைகளுக்கு நடுவே தன் முகத்தை புதைத்துக்கொண்டார். தோள்கள் குலுங்க வலக்கால் வலிப்பு எழுந்ததுபோல் இழுபட்டுத் துடிக்க விம்மி அழுதார். காட்டுமரம் பிளந்து உள்ளே எரிந்த தீயின் தழல் எழுந்து ஆடுவதுபோல. தீயின் உறுமல். தீயின் சீறல். அவருடைய அழுகையை வெறித்த விழிகளுடன், சொல்லற்ற உள்ளத்துடன் நகுலன் பார்த்து நின்றான். கதவுப்படலை இறுகப் பற்றிக்கொண்டு தன் கால்கள் தளர்ந்து உடல் தழைவதை தவிர்த்தான்.

காந்தாரி அவர் தலையில் கையோட்டி, குழலை நீவிக்கொண்டிருந்தாள். அவருடைய உடலுக்குள் இருந்து பலர் பிளந்து வெளிவர முயல்வதுபோல தசைகள் புடைத்து திமிறி நெளிந்தன. அவருடைய குரல் அடைத்தது. தொண்டைமுழை மரமூடியென ஆகி கழுத்தை இறுக்கிக்கொண்டதுபோல அவர் திணறி விம்மி விக்கலோசை எழுப்பினார். பின்னர் வெடித்து மூச்சு எழ மீண்டும் கேவி அழுதார். ஆடி நிலைக்கும் ஊசல் என அழுகை ஓய மிகமிக நொய்ந்த ஒரு தேம்பல் அவரிடமிருந்து எழுந்தது. காந்தாரி மெல்லிய முனகலோசையை எழுப்பி அவரை நோக்கி குனிந்தாள். அழும் குழவியை ஆறுதல்படுத்த அன்னையர் எழுப்பும் ஓசை போலிருந்தது அது. அவள் தன் இரு கைகளாலும் அவர் தலையைப்பற்றி தூக்கி தன் முலைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

நகுலன் திரும்பி வெளியே காலடி எடுத்து வைத்தான். உடல் நிலம் நோக்கி சென்றது. அவன் மேலும் இரு அடி எடுத்துவைத்து குடிலின் வெளித்திண்ணையில் அமர்ந்து தலையை தன் கைகளால் தாங்கி கண்களை மூடிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைமெல்லிய பூங்காற்று
அடுத்த கட்டுரைநமது பெருமிதம் – கடிதங்கள்