மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?

யானைடாக்டர் கதையைப் படித்தபோது சில குழப்பமான உணர்ச்சிகள் – அழுத்தி வைப்பதை விட இங்கு வெளியிட்டால் விடை கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை. முதலிலேயே சொல்லி விடுகிறேன் – என் கேள்வி டாக்டர். கே. என்ற வரலாற்று மனிதரைப் பற்றியோ அவரது அன்பு மிகுந்த வாழ்க்கையைப் பற்றியோ அல்ல – அவரது தரிசனத்தைப் பற்றியே. (விடைக்குப் பதில் வசவு கிடைத்தாலும் சரிதான், மோதிரக் கைக் குட்டு என ஏற்றுக் கொள்கிறேன்.).

குட்டியாய் இருந்த முதல் எங்கள் வீட்டில் வளர்ந்த பெண் பூனை ஒன்று அழகான இரு குட்டிகள் போட்டது. இரண்டு குஞ்சுகளும் அழகாக விளையாடுவதையும் பால் குடிப்பதையும் தாயிடம் கொஞ்சுவதையும் பார்த்துக்கொண்டே பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். திடீரென்று ஒரு இரவு ஒரு ஆண் பூனை வந்து இரண்டையும் குதறிப் போட்டுவிட்டு சென்றது. அது அந்த தாய்ப் பூனையைப் புணர இரண்டு குட்டிகளும் இடைஞ்சலாக இருக்குமாம். மிருக நியாயம் என்று சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டோம். (பின் ஒரே வாரத்தில் அதே கடுவனுடன் இந்தப் பெண் பூனையைப் பார்த்தேன்).

அதன் பின் எப்போது டிஸ்கவரி, நேஷனல் ஜியோக்ராபிக், அனிமல் ப்ளாநெட் பார்த்தாலும் இதே கதை தான். யானைகள் சற்று தேவலாம் என்று நினைத்திருந்தேன் – வறட்சி காலத்தில் ஒரு பிடி யானை தலைவி வழி தவறிய வேறு எதோ ஒரு யானைக் குட்டியை கொம்புகளால் கொல்வது போல் செய்து விரட்டுவதைப் பார்க்கும் வரை. (கழுதைப் புலிகளிடம் அகப்பட்டு அந்தக் குட்டி அன்றே உயிரை விட்டதையும் காட்டினார்கள் – அது நல்லதுக்குதான் என்று விளக்கம் வேறு). தங்கள் கூட்டங்களுக்குள் தலைவன் அந்தஸ்துக்கும், பெரிய ‘அந்தப்புரம்’ வைப்பதற்கும் இவைகள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் வெகு பயங்கரம்.

மனிதனின் அற்பத் தனத்தைத் தூற்றுவது சரிதான் – ஆனால் விலங்குகளை அப்படிப் புகழ வேண்டுமா என்ன? ‘கடல் அளவு கருணை’ என்றால் என்ன – ஒரு நாயும்நரியும் யானையின் பாதையில் நின்று சரி சமனாக உரிமை கோர முடியுமா ? வறட்சி, வசிப்பிட சீரழிப்பு போன்ற பிறழ்வு நிலைகளின் போது எங்கே போகிறது இந்தக் கருணை எல்லாம்? மனிதனின் தர்மங்களை வைத்து விலங்குகளை எடை போடக் கூடாதென்றால் பின் எதை வைத்து அவற்றை ‘கருணை’, ‘நேர்மை’ என்றெல்லாம் சொல்கிறார்கள்?

விவாதத்தின் தரத்தை குறைத்திருந்தாலோ திசையை மாற்றியிருந்தாலோ

மன்னிக்கவும்.

அன்புடன்

மது

***

மது,

மிருகங்கள் மனிதனுடைய பண்பாட்டுக்குள் வாழ்பவை அல்ல. அவை அவற்றுக்குரிய காட்டுப்பண்பாட்டில் வாழ்பவை. அவற்றின் செயல்களை பெரும்பாலும் அவற்றின் மரபணுக்களில் படிந்துள்ள கூட்டுமனநிலையே தீர்மானிக்கிறது. தன் குட்டிகளில் மூத்ததை உண்ணும் மிருகங்கள் உண்டு. ஊனமுற்ற குட்டியை கைவிட்டுச்செல்பவை உண்டு. அங்கே போட்டிகள் உடல்பலத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒத்திசைவும் போட்டியும் தொடர்ந்து நிகழ்ந்து காட்டை செயலூக்கத்துடன் வைத்திருக்கின்றன.

மனிதன் நெடுங்காலமாக உருவாக்கிக் கொண்டுள்ள சமூகவாழ்க்கைக்கான நெறிகளே அவன் பண்பாட்டுக்கூறுகளாக மாறியுள்ளன. அன்பு, கருணை, பாசம் , ஈகை, சம உரிமை என நாம் சொல்லும் எத்தனையோ விஷயங்கள் நம்மால் மெல்லமெல்ல உருவாக்கிக்கொள்ளப்பட்டவை. இவற்றை மிருகங்களில் நாம் தேட முடியாது. அவற்றைக்கொண்டு மிருகங்களை நாம் மதிப்பிடவும் முடியாது. சிங்கம் அசைவம் சாப்பிடுகிறது என்று மனக்குறைப்பட்டால் அதில் பொருள் உண்டா என்ன?

மிருகம் இயற்கையின் ஒருபகுதியாக உள்ளது. அதன் வன்முறையோ காமமோ அதில் உள்ளவை அல்ல. அவை இயற்கையில் உள்ளவை. அதன் நல்லியல்புகளும் இயற்கையில் உள்ளவையே. ஆகவே மிருகங்களை நாம் உணர்ச்சிகரமாக அடையாளம் காணும்போது இயற்கையையே காண்கிறோம்.

மிருகங்களின் உ லகில் நாம் கைவிட்டு வந்த இயற்கையான் மேன்மைகள் உள்ளன. ஒரு காட்டியலாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு ஓநாய் எப்படியோ நெருக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த நட்பு அவருக்கு பெரிய தொநதரவாகக்கூட ஆகிவிட்டது. தினமும் அந்த ஓநாய் அவரை தேடி வரும். ஒருநாள் கூட பிரிந்திருக்க முடியாது. மற்றநாய்கள் பயந்து கதறும். ‘அதை ஒன்றும் செய்யமுடியாது. அன்பின் வளையத்திற்குள் வந்த மிருகங்கள் அதை மீறிச்செல்லவே முடியாது. அந்த வளையத்தை மீறும் ஒரே மிருகம் மனிதன்’ என்றார் — இதுதான் வேறுபாடு.

மிருகங்கள் அவற்றின் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் இயல்பான மன அமைப்பால் எளியவையாக உள்ளன. அவற்றின் அன்பு மறுபக்கங்கள் இல்லாதது. நிபந்தனை இல்லாதது. தன்னிச்சையானது. அந்த அன்பை அது எதற்கும் பயன்படுத்துவதில்லை. அதை அது திருப்பி அன்பைப்பெறுவதற்கான நிபந்தனையாகக்கூட ஆக்குவதில்லை. அதன் அன்பு மலரின் மணம்போல அதன் மனதுடன் இணைந்தது.

இந்த அன்பு மனிதர்களில் புனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஏனென்றால் மனிதர்கள் இரு அடிப்படை விஷயங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அகங்காரம், பேராசை. தன்னை ஓயாது முன்வைத்து நிரூபித்துக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது. உலகையே வென்றாக வேண்டியிருக்கிறது. இவ்விரண்டும் சேர்ந்து அவனுடைய அன்பை திரிபடையச் செய்கின்றன. நுட்பமான பல அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒன்றாக அவனுடைய அனைத்து பாதையை மாற்றிவிடுகின்றன. ஆனால் மிருகங்களுடனான உறவுகள் அப்படி அல்ல. அவற்றின் உறவு நேரான ராஜபாட்டை.

நுண்ணுணர்வுகொண்ட மனங்கள் சக மனிதர்களுடனான உறவை கூர்ந்து கவனிக்கின்றன. ஆகவே அவற்றின் இருண்ட ஆழங்கள் எப்போதும் கண்ணுக்குப்படுகின்றன. மேலும் பொதுவாக நுண்ணுணர்வு கொண்டவர்கள் சகமனிதர்களின் மனங்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ள வும் தயங்குவார்கள். ஆகவே அவர்களுக்கு சக மனிதர்களுடனான உறவு எப்போதும் சிக்கலானதாக இருக்கிறது. சலிப்பும் கசப்பும் துயரமும் கொடுப்பதாக உள்ளது. அவர்கள் மேலும் மேலும் தங்களை தூய்மைபப்டுத்திக்கொண்டு சகமனிதர்களின் சிறுமைகள் தங்களை முற்றிலும் பாதிக்காத இடத்திற்குச் சென்று விடும்வரை இந்த துன்பம் நீடிக்கிறது.

அந்த நிலையில் அவர்களுக்கு மிருகங்களுடனான உறவு மிக இதமானதாக இருக்கிறது. அது நிபந்தனைகள் ஏதுமில்லாத தூய நேசம் மட்டுமாக இருப்பதை ஒவ்வொரு கணமும் உணரமுடிகிறது. என் நாயின் கண்களைப் பார்க்கும்போது ‘ஆம், மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஒரு பழக்கம் அல்ல அன்பு .இப்பிரபஞ்சத்தில் அது தன்னியல்பாகவே ஊறிக்கொண்டிருக்கிறது’ என்ற உணர்ச்சியை அடைகிறேன்

ஆகவேதான் தியான மரபுகள் சாதகனுக்கு தனிமையை நிபந்தனையாக்குகின்றன. தியானம் செய்பவன் தன்னுள் உள்ள மனம் என்ற மாபெரும் கட்டின்மையை ஒழுங்குபடுத்த முயல்கிறான். அதற்கு அவன் தன்னுடைய மனதின் உள்வருகை வழிகளை மூடிக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே அவன் அதை கவனிக்க முடியும். அதற்குத்தான் தனிமை. சகமனிதர்களுடனான உறவுகளை, சமூக அமைப்புகளுடனான உறவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுதல் அதற்கான வழிமுறை. முடிந்தவரை இயற்கையின் மடியில் இருக்கவேண்டும்.

ஆனால் மலர்களும் செடிகளும் போலவே மிருகங்களும் இயற்கையாகவே கருதப்படுகின்றன. ஒரு ஆசிரமத்தில் சிங்கமும் புலியும் இருந்தாலும் சாதகன் மனம் கறைபடுவதில்லை. காரணம் அவை காமத்தாலும் வன்முறையாலும் ஆன வாழ்க்கையில் இருந்தாலும் காமத்தையும் வன்முறையையும் நிறைத்துக்கொண்ட உள்ளம் கொண்டவை அல்ல.

மிருகங்களைப்பற்றிய இந்த விவேகஞானத்தையே கதையில் உணர்ச்சிகொண்ட முறையில் யானைடாக்டரும், கதைசொல்லியும், பைரனும் சொல்கிறார்கள். ஷேக்ஸ்பியரில் பைரனில் தாகூரில், தல்ஸ்தோயில், பாரதியில் இந்த விவேகம் வெவ்வேறு முறையில் வெளிப்படுகிறது. உணர்ச்சிபூர்வமாக, கவித்துவமாக.

மிகச்சாதாரணமாக இதை நம்மைச்சுற்றிக் காணலாம். எந்த சமூக உறவும் இன்றி வெற்றுக்குப்பையாக தெருவில் வீசப்பட்ட மனிதர்களுக்கு எப்போதும் மிருகங்களே நல்லுறவாக இருக்கின்றன. தொழுநோயாளிகள், அனாதைப்பிச்சைக்காரர்கள் நாய் வைத்திருப்பதைக் காணலாம். மிருகங்களுடன் கொள்ளும் நட்பு மிகத்தீவிரமான அக அனுபவமாக வாழ்நாள் முழுக்க நீடிக்கிறது. நாய்கள், காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், குதிரைகள் இன்றுவரையிலான மானுட ஆன்மீகத்தை உருவாக்குவதில் ஆற்றிய பங்கு சாதாரணமானது அல்ல. ஆம், மிருகம் அன்பெனும் பிடிக்குள் முழுமையாக அகப்படும்– மனிதர்கள் அப்படி அல்ல.

நீங்கள் கேட்ட இக்கேள்வியை மேலைநாடுகளில் சிலர் பழங்குடிகளைப்பற்றி கேட்பதுண்டு. பழங்குடிகளின் இயல்பான அன்பையும் வாழ்நாள்முழுக்க பிசிறின்றி நீளும் நட்பையும் உணர நேர்ந்த ஐரோப்பியர் பலர் அந்த அப்பழங்குடிச் சமூகங்களைப்பற்றி பெருமதிப்புடன் எழுதியிருக்கிறார்கள். பலர் அவர்களுடன் சேர்ந்து வாழவும் முற்பட்டிருக்கிறார்கள். இயற்கைவாதிகள் பழங்குடிகளை இலட்சியவாத நோக்குடன் முன்வைப்பதை ஆட்சேபித்த ஐரோப்பியநோக்குள்ளவர்கள் பழங்குடிகளின் பண்படாததன்மைக்கு ஆதாரமாக அவர்களின் போர்களில் உள்ள வன்முறை, அவர்களின் சமூக கட்டமைப்பில் உள்ள கடுமை , ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ [சேவேஜ்] என்று சொன்னார்கள்.

அதற்குப் பதில் சொன்ன இயற்கைவாதிகள் வெறுமே தங்கிவாழ்வதற்காக, இயல்பான மிருக உந்துதல்களின் அடிப்படையில் போரிடும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால் வெறும் லாபநோக்குக்காக அவர்களை கோடிக்கணக்கில் கொன்று பூமியின் முகத்தில் இருந்தே அழித்த நாம் மட்டும் நாகரீகமானவர்களா என்றார்கள். எந்த பழங்குடிப்போரும் முற்றான அழிவில் முடிவதில்லை. ஆனால் நாம் நூற்றாண்டுகளாக முற்றழிவுகளை செய்துவருகிறோம். சகமனிதர்களை கோடிக்கணக்கில் கொன்று தள்ளியிருக்கிறோம். ஈவிரக்கமில்லாமல் அடிமைப்படுத்தி சுரண்டியிருக்கிறோம். பொருளியல் அடிமைகளாக்கி வைத்திருக்கிறோம். வணிகம் என்றபேரில் ஏமாற்றி பட்டினி போட்டு இன்றும் கொன்றுகொண்டிருக்கிறோம். நாம் அவர்களை விட எவ்வகையில் முன்னால் சென்றவர்கள் என்றார்கள்.

இந்த வேறுபாடுதான் நமக்கும் மிருகங்களுக்கும் இடையேயும் உள்ளது. இன்றுவரை உலகில் உள்ள அத்தனை யனைகளும் கொன்ற சகயானைகளை விட பல்லாயிரம் , ஏன் பல லட்சம் மடங்கு சக மனிதர்களை நாம் கொன்றிருப்ப்போம் அல்லவா? அதற்கு நாம் உருவாக்கிய கருவிகளையும் அமைப்புகளையும்தான் நாம் நம் நாகரீகத்தின் உச்சம் என்று சொல்கிறோம்.

இப்படிச் சொல்லலாம், நாம் குறுகிய சமூக எல்லைக்குள் மிருகங்களை விட, பழங்குடிகளை விட அதிக நெறிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களிடம் இல்லாத அகங்காரமும் பேராசையும் நம்மை ஒட்டுமொத்தமாக அவர்களைவிட கீழானவர்களாக, நசிவுசக்திகளாக ஆக்கிவிட்டிருக்கிறது.

மனிதனின் இந்த ஒட்டுமொத்த இருண்ட பக்கத்தைப் பார்க்கும் இலட்சியவாத மனங்கள்தான் அவனுடைய இயற்கையான ஆதிமனநிலையை பழங்குடிகளிலும் மிருகங்களிலும் கண்டுகொள்கின்றன. அதை ஒரு இலட்சியக்கனவாக முன்வைக்கின்றன. அதன் பொருட்டு பழங்குடிகளையும் மிருகங்களையும் உணர்ச்சிகரமாக எடுத்துச்சொல்கின்றன

ஜெ

முதற்பிரசுரம் Feb 20, 2011

முந்தைய கட்டுரைம.வே.பசுபதி 
அடுத்த கட்டுரைராமோஜியம்