‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 4

நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே மறுமொழியை தானும் சொல்வதே அவருடைய வழக்கமாக இருந்தது. சகதேவனிடம் கேட்கலாமென்று தோன்றியது. பெரும்பாலான நிகழ்வுகளில் சகதேவன்தான் முடிவெடுத்துக்கொண்டிருந்தான். புரவியைத் திருப்பிய பின் மீண்டும் தயங்கினான். அவனிடம் கேட்பதிலும் பொருளில்லை. அப்போது செய்யக்கூடுவதாக ஏதுமில்லை. காந்தாரி குந்தியையும் திரௌபதியையும் சந்திப்பதை எவ்வகையிலும் தவிர்க்க இயலாது என்று பட்டது.

அவன் தன் புரவியைத் திருப்பி குடில்களின் முற்றங்கள் வழியாக மெல்ல செலுத்தி குந்தியின் குடிலை நோக்கி சென்றான். குந்தியின் குடிலுக்கு அவன் சென்று சில நாட்களாகிவிட்டிருந்தது. ஓரிருமுறைக்குமேல் அவன் அவளை சந்திக்கவில்லை. அவன் சென்று பார்த்தபோதெல்லாம் அவள் தன்னிலையில் இருக்கவில்லை. அகிபீனா மயக்கில் உயிரிலா உடல் என மஞ்சத்தில் கிடந்தாள். அவளை நோக்கி நின்றபோது அவன் ஒருவகையான ஒவ்வாமையை உணர்ந்தான். தோல் வெளிறிச் சுருங்கியிருந்தது. தசைகள் ஒடுங்கி உடல் குறுகி நெற்றுபோலிருந்தாள். கண்கள் குழிந்து உள்ளே சென்றுவிட்டிருந்தன. உதடுகளும் உள்மடிந்து உதட்டுவரம்பைச் சூழ்ந்து சுருக்கங்களுடன் ஓரிரு நாட்களிலேயே பல்லாண்டு அகவையைக் கடந்து முதுமையை எய்திவிட்டிருந்தாள்.

அருகே நின்ற மருத்துவப்பெண்டு “நினைவு திரும்பவில்லை” என தணிந்த குரலில் சொன்னாள். “மீண்டெழுகையிலும் தன்னிலையழிந்தவராகவே தெரிகிறார். பித்தெழுந்து கூச்சலிடுகிறார். தன்னைத்தானே தாக்கிக்கொள்கிறார். எழுந்து வெளியே ஓட முற்படுகிறார். ஆகவே நினைவுமீளாமலிருப்பதே நன்று என்று மருத்துவர் சொன்னார்கள். அகிபீனா உணவு என அன்றாடமுறைமையாகவே அளிக்கப்படுகிறது” என்றாள். அவனுக்கு அந்த ஒவ்வாமை ஏன் என்று புரியவில்லை. அப்போது அவள் அரசியல்லாமல் ஆகிவிட்டிருந்தாள். அவளிடம் என்றுமிருந்த நிமிர்வும் விழைவின் விசையும் சூழ்ச்சித்திறனும் முற்றாக மறைந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாதவளாக ஆகிவிட்டிருந்தாள். அவள் பிறருடைய ஆதரவைத் தேடும் தருணம் அது. ஆனால் அவன் உள்ளம் அவளுக்காக கனியவில்லை. அங்கிருந்து உடனடியாக சென்றுவிடவேண்டும் என்றே தோன்றியது.

அதன்பின் அவளுக்குரிய அனைத்தையும் செய்ய அவன் ஆணையிட்டான். ஆனால் அவளை சந்திப்பதை ஒழிந்தான். அவளை அவ்வண்ணம் தவிர்ப்பது குறித்து குற்றவுணர்ச்சி கொண்டான். ஆனால் அவனால் அதை தன்னிரக்கமாக ஆக்கி விழிநீர் கசிந்து பின் பெருமூச்சுடன் கடக்கமுடிந்ததே ஒழிய அவளைச் சென்று சந்திக்கமுடியவில்லை. சந்திப்பதிலும் பொருளில்லை, அவள் தன்னிலையில் இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் அது வெறும் பேச்சு என்றும் அறிந்திருந்தான். அவள் அவனை ஒருவேளை அடையாளம் காணக்கூடும். ஆனால் அந்த ஒவ்வாமை அவள் மேல் அல்ல. அவளென அங்கே எழுந்தமைந்துள்ளது பிறிதொன்று. மானுடரை மீறிய ஒன்று மானுடரில் திகழ்வது. மானுடரை வெறும் அடையாளமென்றாக்கிக் கொள்வது அது.

அவன் குந்தியின் குடிலை அடைந்தபோது என்ன செய்வதென்று முடிவுசெய்துவிட்டிருந்தான். மருத்துவப்பெண்டு அவனைக் கண்டு வந்து வணங்கி “யாதவ அரசி அகிபீனா மயக்கிலேயே இருக்கிறார்கள். எப்போது நினைவுமீளுமெனச் சொல்ல முடியாது” என்றாள். நகுலன் “நான் பேரரசியின் நிலையென்ன என்று நோக்கவே வந்தேன்” என்றான். பின்னர் “அவர்கள் அந்நிலையில் இருக்கட்டும். சற்றுநேரத்தில் பேரரசி காந்தாரி அவர்களை பார்க்க வரக்கூடும்” என்றான். அவன் சொல்வதை அவள் புரிந்துகொள்ளாமல் “அவர்கள் விழித்தெழ வாய்ப்பே இல்லை” என்றாள். “ஆம், அந்நிலையே நன்று. அவர்கள் சந்திக்காமல் இருப்பதே உகந்தது. பேரரசி அன்னையை வந்து பார்த்துவிட்டுச் செல்லட்டும்” என்றான். அவள் புரிந்துகொண்டு தலையசைத்தாள்.

அவன் மீண்டும் புரவியைச் செலுத்தி அந்தக் குடில்நிரையின் மறு எல்லையில் அமைந்த திரௌபதியின் குடில் நோக்கி சென்றான். அங்கே திரௌபதி இருப்பாளா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அவள் ஒரு சிறுகுடிலுக்குள் ஒடுங்கியிருப்பவள் அல்ல என்றே உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் பல நாட்களாக அவள் குடிலின் இருளுக்குள் பிறர் முகம் நோக்காதவளாக ஒடுங்கிக்கிடக்கிறாள் என்றே செய்தி வந்துகொண்டிருந்தது. ஒருமுறைகூட அவன் அங்கே சென்று அவளை பார்க்கவில்லை. அவள்மேல் அவனுக்கு அச்சமே இருந்தது. அவள் முகம் நினைவிலிருந்தே அகன்று பிறிதொரு முகம் அங்கே பதிந்துவிட்டிருந்தது. அது எரிபுகுந்த மாயையின் முகம்.

செல்லச்செல்ல அவன் புரவியின் கால்கள் தள்ளாடின. அவனால் மேலும் செல்லமுடியவில்லை. புரவி நின்றுவிட்டது. அவன் அதை பலமுறை தட்டி ஆணையிட்டு முன்னால் செலுத்தினான். அது கனைத்துக்கொண்டும் இருமிக்கொண்டும் நடந்தது. திரௌபதியின் குடில்முன் ஏவல்பெண்டு நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் அருகே வந்து வணங்கினாள். “அரசியை பார்க்கவந்தேன்” என்று அவன் சொன்னான். அவள் “அரசி இங்கில்லை” என்றாள். அவன் திகைப்புகொள்ளவில்லை என்பது அவளை குழப்பியது. “அரசியை காலைமுதல் குடிலில் காணவில்லை. காலையுணவு கொண்டுவந்து வைத்தேன். அது அவ்வண்ணமே இருக்கிறது. அரசி எங்கே என்று உசாவினேன். காட்டுக்குள் சென்றுவிட்டதாக சொன்னார்கள். காட்டுக்குள் தேடிச்செல்லும் திறன் எனக்கு இல்லை. ஏவலர்களிடம் சொல்லி இளைய அரசர் சகதேவரிடம் செய்தியறிவித்தேன். அவ்வாறே விட்டுவிடும்படி அவர் ஆணையிட்டார். அரசியே திரும்பி வருவார் என்றார்” என்றாள்.

நகுலன் சில கணங்கள் அவளை வெறித்தபடி எண்ணத்தில் மூழ்கி நின்றான். பின்னர் “நன்று” என்றபடி புரவியை திருப்பினான். காந்தாரி வருகையில் திரௌபதி காட்டிலிருப்பதும் நன்றே. ஒவ்வொன்றும் உகந்தவகையிலேயே நிகழ்கிறது. அவன் உள்ளம் எளிதாகிக்கொண்டே வந்தது. தன் முகத்தில் புன்னகை எழுந்திருப்பதைக் கண்டு அவன் வியந்தான். அத்தனை துயர்நிறைந்த சூழலிலும் சிறிய ஆறுதல்கள் இனிதாகவே இருக்கின்றன. எண்ணிய நிகழ்ந்தால் மானுடர் உலகம் தனக்கானது என்று எண்ணும் மாயைக்குள் சென்றுவிடுகிறார்கள். அல்லது துயர் கொண்டிருப்பவர்களின் இயல்பு போலும் இது. மிகச் சிறிய இன்பங்களைக்கூட அவர்கள் தவறவிடுவதில்லை. இருளில் ஒளிக்கென விழிகள் தேடிக்கொண்டே இருக்கின்றன.

 

நகுலன் காந்தாரியின் குடிலுக்குச் சென்றபோது சத்யசேனையும் சத்யவிரதையும் வெளியே நின்றிருந்தனர். அவன் அருகணைந்து “பேரரசி ஒருங்கியிருந்தால் அவர் அன்னையை காணச் செல்லலாம்… அன்னையின் உடல்நிலை நன்று அல்ல. அவர் தன்னினைவு இன்றி இருக்கிறார். இருப்பினும் பேரரசி அவரைப் பார்ப்பது நன்றுதான்” என்றான். சத்யசேனை “அக்கை கிளம்பிவிட்டார்… உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றாள். நகுலன் பெருமூச்சுவிட்டான்.

காந்தாரி வண்டியில் ஏறிக்கொள்ள அவளருகே சத்யசேனையும் சத்யவிரதையும் ஏறி அமர்ந்துகொண்டார்கள். நீண்டதொலைவு இல்லை என்றாலும் களைத்திருந்த காந்தாரியால் நடக்கமுடியாது என்று சத்யவிரதை சொன்னாள். வண்டியில் ஏறி அமர்வதற்குள் காந்தாரி பெருமூச்சுவிட்டாள். காலையொளி விரியத் தொடங்கியிருந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பு மிளிர்வுகொண்டது. மரக்கூட்டங்களுக்குள் ஒளி இறங்க இலைவடிவங்கள் துலங்கின. வண்டி மெல்ல முன்னால் செல்ல நகுலன் குதிரையில் உடன் சென்றான். அவன் உள்ளம் விந்தையான ஒரு தவிப்பை அடைந்தது. காந்தாரி கிளம்பும்வரை அவனிடம் ஒரு ஆறுதல்நிலை இருந்தது. ஆனால் அவள் வந்து வண்டியில் ஏறிக்கொண்டதும் அது அகன்றது. அவள் கிளம்பிச்செல்வதில் அரிதான ஒன்று இருந்தது. அத்தகைய ஒன்று வீணாக நிகழவிருக்காது. தெய்வங்கள் உச்சநிலைகளை விரும்புபவை. மானுடரை மோதவிட்டு கண்ணீரையும் குருதியையும் கண்டு மகிழ்பவை.

காந்தாரியின் தேர் குடில்முற்றங்கள் வழியாகச் சென்றது. அதன் ஓசைகேட்டு உள்ளிருந்து இளையஅரசியரும் இளவரசியரும் வந்து நோக்கினார்கள். காந்தாரி குந்தியின் குடில்முற்றத்தை அடைவதற்குள் நோக்குபவர்களின் உள்ளங்களில் எத்தனை பெரிய உணர்ச்சிநாடகங்கள் நடந்து முடிந்திருக்கும் என அவன் எண்ணிப் பார்த்தான். மானுடரும் உச்சங்களை விரும்புகிறார்கள். அவற்றை அவர்கள் வகைவகையாக நிகழ்த்திப்பார்க்கிறார்கள். அவற்றிலொன்றே உண்மையில் நிகழ்கிறது. நிகழ்ந்தவற்றை மீண்டும் பெருக்கிக்கொள்கிறார்கள். ஒரு நிகழ்வு நூறாகிறது, ஆயிரமாகிறது.

குந்தியின் குடில்முற்றத்தில் நின்றிருந்த மருத்துவப்பெண்டு வந்து வண்டியின் அருகே நின்று வணங்கினாள். சத்யவிரதை சத்யசேனை இருவரும் இறங்கி காந்தாரியை கைகொடுத்து இறக்கினர். சற்று தள்ளாடிய பின் காந்தாரி வண்டியை பிடித்துக்கொண்டாள். ஒளியில் அவளுக்கு கண்கள் கூசுவது தெரிந்தது. அவள் கைகளை நெற்றிமேல் வைத்து முகத்தை சுருக்கிக்கொண்டாள். வானில் ஒளி எழவில்லை என்றாலும் அவளுடைய வெண்ணிற முகம் சுடர்கொண்டிருப்பதாக நகுலனுக்குப் பட்டது. மருத்துவப்பெண்டு “வணங்குகிறேன், பேரரசி. யாதவ அரசி நோயுற்றிருக்கிறார். அவர்களுக்கு அகிபீனா அளிக்கப்பட்டுள்ளது. விழிக்காத துயிலில் பன்னிரு நாழிகைகள் சென்றுள்ளன. அவர்களின் உள்ளம் நைந்திருக்கிறது. தன்மாய்ப்புநோக்கு கொண்டிருப்பதனால் விழிக்கச்செய்ய வேண்டாம் என்பதே மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. அவர்களை இப்போது வெறுமனே நோக்கமட்டுமே இயலும்” என்றாள்.

“எங்கிருக்கிறார்?” என்று காந்தாரி கேட்டாள். “குடிலுக்குள் மஞ்சத்தில் படுத்திருக்கிறார்கள். தாங்கள் விழைந்தால் வெறுமனே உடலை மட்டும் நோக்கி மீளலாம்” என்றாள் மருத்துவப்பெண்டு. “செல்வோம்” என்றபடி காந்தாரி உள்ளே நுழைந்தாள். சத்யவிரதையும் சத்யசேனையும் உடன் சென்றனர். மருத்துவப்பெண்டு வெளியே நின்றுவிட்டாள். நகுலன் தயங்கி நிற்க சத்யவிரதை “நீயும் வரலாம், மைந்தா” என்றாள். நகுலன் உடன் உள்ளே சென்றான். குடிலுக்குள் இருட்டு நிறைந்திருந்தது. ஒரு சிறு நெய்விளக்கின் சுடர் திரி தாழ்ந்து எரிந்துகொண்டிருந்தது. குடில் மூலையில் இருந்த கலத்தில் கனல் சீறிக்கொண்டிருக்க எழுந்த மூலிகைப்புகை உள்ளே நிறைந்திருந்தது. தாழ்வான மூங்கில்படல் மஞ்சத்தில் குந்தி கிடந்தாள். சுருண்டு அதன் ஒரு ஓரத்தில் ஒடுங்கியிருந்தது அவள் உடல். நீலநரம்போடிய கைகள் மெலிந்து கொடிகள்போல மாறிவிட்டிருந்தன. கூந்தல் நன்றாக நரைத்து பெரும்பகுதி உதிர்ந்து விரிந்து முருக்குத்தடியாலான தலையணையைச் சுற்றிச் சிதறியிருந்தது. வெண்ணிற உடல், வெண்ணிற ஆடை. ஒரு கொக்கிறகு விழுந்து கிடப்பது போலிருந்தாள்.

அவள் ஆழ்ந்து துயில்வதுபோல் மூச்சு உரக்க ஓடிக்கொண்டிருந்தாலும் வாய் எதையோ சொல்வதுபோல் அசைந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. அவ்வப்போது உடலில் ஒரு விதிர்ப்பு உருவாகியது. அது சில தருணங்களில் மெல்லிய வலிப்பென ஆகி இடக்கையும் இடக்காலும் இழுத்துக்கொண்டன. காந்தாரி அவளருகே நின்று குனிந்து நோக்கினாள். சத்யவிரதை அருகே இருந்த மூங்கில் பீடத்தை இழுத்து அருகே போட்டாள். அவள் சத்யசேனையின் தோளைப் பற்றியபடி எடைமிக்க உடலைத் தாழ்த்தி அதன்மேல் அமர்ந்தாள். குந்தியின் கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள். அவளுடைய கைகளும் சிறியவைதான். ஆனால் குந்தியின் கை கருக்குழவியின் கைபோல் அவள் பிடிக்குள் இருந்தது.

அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நகுலனால் உணரமுடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சொல்லின்றி உள்ளம் மட்டும் திகழமுடியும் என்பதை, உடலில் இருந்து எழுந்து அது வெளிசூழ்கை என நிலைகொள்ள முடியும் என்பதை அவன் உணர்ந்தான். செவிகளிலல்லாது ஓர் இசை ஒலிக்கக்கூடும். விழியறியாத ஒளி ஒன்று துலங்கக்கூடும். அவன் தன் உள்ளம் ஏன் நெகிழவில்லை என எண்ணிக்கொண்டான். அத்தருணம் விந்தையான அமைதியை கொண்டிருந்தது. அது உணர்வுகளால் ஆனதாக இருக்கவில்லை. சொற்களால் ஆனதாகவும் இருக்கவில்லை. அதில் எந்த அலையும் இல்லை. ஒரு படிகத்துளிபோல் அசைவற்ற ஒளியாக இருந்தது. நீடுசெல்லும் காலம் கொண்டதாக, அழிவற்றதாக. அது அவன் முழு இருப்பையும் இனிமையாக ஆக்கியது. அந்த இனிமை என மட்டுமே அதை அவனால் உணரமுடிந்தது. அல்லது அவ்வாறு அவன் அதை மீட்டு எடுத்துக்கொண்டான். அது வேறொன்று. அப்போது அவன் எதையும் உணரவில்லை. அதை உணரத்தொடங்கியதுமே அதிலிருந்து மீண்டுவிட்டான்.

குந்தி விழிகளைத் திறந்து காந்தாரியை பார்த்தாள். அவள் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. அவள் விழிகளிலிருந்து நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது. விசும்பல்களோ விம்மல்களோ இல்லாத அழுகை. உருகிவழிவதுபோல. கரைந்துகொண்டே இருப்பதுபோல. காந்தாரி அவள் கைகளை மிக மென்மையாக பற்றிக்கொண்டிருந்தாள். அத்தனை மென்மையாக ஆண்களால் எதையேனும் பற்றமுடியுமா என நகுலன் எண்ணினான். குந்தியின் உடலில் ஒரு மெல்லிய உலுக்கல் நிகழ்ந்தது. பின்னர் மெல்ல அவள் முகத்தசைகள் தளர்ந்தன. இமைசரிந்து விழிகள் மூடின. ஆனால் முழுமையாக இமை விழிகளை மூடவில்லை. கீற்றுபோல் ஓர் இடைவெளி தெரிந்தது. வாய் திறந்தபோது ஒட்டியிருந்த உதடுகள் விரிசலிட்டன. சிறிய வெண்பற்கள் தெரிந்தன. அவள் மூச்சு சீரடைந்தது.

காந்தாரி எழுந்துகொள்ளும் பொருட்டு கைநீட்டினாள். சத்யவிரதை சத்யசேனை இருவரும் அவளைப் பற்றித்தூக்கினர். அவள் சத்யசேனையின் தோளில் கைவைத்தபடி மெல்ல மூச்செறிந்தாள். அவர்கள் மூவரும் வெளியே சென்றார்கள். அவள் திரும்பியபோது மெல்லிய விளக்கொளியில் நகுலன் அவள் முகத்தை நோக்கினான். அங்கே விழிநீர் தெரியவில்லை. விழிகள் நீர்மைகொண்டவைபோலத் தோன்றின. அது விளக்கொளியின் மினுப்பு என்றும் தோன்றியது. அவர்கள் வெளியே சென்றபின் அறை மெல்ல சுருங்கி மீண்டும் தன்னிலை கொள்வதுபோலத் தோன்றியது. நகுலன் குந்தியின் முகத்தை நோக்கினான். அவள் புன்னகைப்பது போலிருந்தது. அவன் அகம் திடுக்கிட்டது. கூர்ந்து நோக்கியபோதும் அவ்வாறே தெரிந்தது. முகத்தசைகள் நெகிழ்ந்திருந்தமையாலும் உதடுகள் விரிந்து பற்கள் தெரிந்தமையாலும் எழுந்த தோற்றம் அது என அவனுக்குத் தெரிந்தது. ஆயினும் அது புன்னகை என்று எண்ணவே அவன் விழைந்தான்.

 

நகுலன் வெளியே வந்தபோது காந்தாரியும் சத்யவிரதையும் வண்டியில் ஏறிவிட்டிருந்தனர். சத்யசேனை கீழே நின்றிருந்தாள். அவன் அவளை அணுகி “பாஞ்சாலத்து அரசியிடம் செல்வதென்று பேரரசி கூறுகிறாரா?” என்றான். “அவர் மற்றொன்று சொல்லவில்லை. எனில் அவர் அங்கே செல்ல விழைகிறார் என்றே அதற்குப் பொருள்” என்று அவள் சொன்னாள். “நன்று” என்று அவன் தன் புரவியை அணுகினான். சத்யசேனை “பேரரசியின் உள்ளம் எனக்கும் புரியாததாகவே உள்ளது” என்றாள். அவன் விழிசுருக்கி நோக்கி நின்றான். அவள் சொல்லவருவதென்ன என்று புரியவில்லை. “பேரரசி இதுவரை உளமுடைந்து அழவில்லை… அவர் அத்தனை தன்னுறுதி கொண்டவர் அல்ல. மெய்யாகவே அவர் இப்படி இருப்பது எனக்கு திகைப்பாக உள்ளது” என்றாள். நகுலனின் அகம் நடுக்கம் கொண்டது. ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மிகத் தாழ்ந்த குரலில் விசையுடன் தெறித்த சொற்களால் சத்யசேனை “எனக்கு அச்சமாகவே உள்ளது. என்ன நிகழுமென்று சொல்லக்கூடவில்லை. பேரரசி பாஞ்சாலத்து அரசியை சந்திப்பது நன்று என்று எனக்குப் படவில்லை. எவ்வண்ணமேனும் அதை தவிர்ப்பது நன்று” என்றாள். “நான் அஞ்சிக்கொண்டேதான் இருக்கிறேன், மைந்தா. அவர் இளைய யாதவரைக் கண்டதும் கொந்தளிப்பார் என கருதினேன். பின்னர் அந்த நிலையழிவை புரிந்துகொண்டேன். குந்திதேவியிடம் அவர் அனல்கொண்டெழுவார் என்று ஐயமிருந்தது. ஆனால் குந்திதேவி நினைவிலாது கிடக்கிறார் என்பது ஆறுதலளித்தது. இப்போது நிகழ்ந்ததைப் பார்க்கையில் இதுவே அக்கையின் இயல்பு என்று தோன்றுகிறது. ஆயினும் அச்சம் நீங்கவில்லை. ஒருவேளை இவையனைத்தும் அங்கே அக்கை பெருகியெழும்பொருட்டே என்று இருக்கக்கூடும்…” நகுலன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “சென்று அவள் அங்கில்லாதபடி ஏதேனும் செய்” என்றாள் சத்யசேனை. “அவள் அங்கில்லை” என்று நகுலன் சொன்னான். “அவள் காட்டுக்குள் சென்றிருக்கிறாள் என்று காலையில் செய்தி வந்தது. பேரரசி அவளை சந்திக்க வாய்ப்பில்லை.”

சத்யசேனை பெருமூச்சுவிட்டு “எனில் நன்று… தெய்வங்கள் துணையிருக்கட்டும்” என்றாள். அவள் முகத்தில் கலக்கம் அகலவில்லை. “அக்கையின் உள்ளத்தை நான் நன்கறிவேன் என்பார்கள். அவ்வண்ணம் நானும் நம்பியிருந்தேன். உண்மையில் மானுட உள்ளத்தை இன்னொருவர் அறியவே முடியாதென்பது இத்தகைய தருணங்களில்தான் தெரியவருகிறது. அக்கை இத்துயரைக் கடந்தவர் அல்ல. அவர் இங்கே உளம்பரப்பி வாழ்பவர். பெருமரங்களைப்போல கிளையையும் தடியையும்விட பெரிய வேர்கள் கொண்டவர். அரசி அல்ல, அன்னை. மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் மறைந்ததை அவரால் தாள முடியாது. ஆகவே இந்த நிறைநிலை என்னை அச்சுறுத்துகிறது. ஏதோ ஒரு கணத்தில் அவர் வெடித்து எரிந்து அழிந்துவிடுவார் என்று தோன்றுகிறது…” அவள் மூச்சை இழுத்தபோது கழுத்துக்குழிகள் ஆழ்ந்திறங்கின. “அல்லது எவர்மீதேனும் கொடும் தீச்சொல்லை உமிழக்கூடும்… என்ன இருந்தாலும் நீங்கள் என் மைந்தர்.”

“அக்கையே” என்று சத்யவிரதை உள்ளிருந்து அழைத்தாள். சத்யசேனை “வந்துவிட்டேன்” என்று வண்டியில் ஏறிக்கொண்டாள். நகுலன் அவளை சில கணங்கள் நோக்கிநின்றான். மீண்டும் அந்தப் பதற்றத்தை அடைந்தான். திரௌபதி தன் குடிலில் இருக்கமாட்டாள் என்று நம்புவது என் விழைவுக்கற்பனையாக இருக்கலாம். அவள் அங்கே மீண்டு வந்திருக்கலாம். இத்தருணத்தை தெய்வங்கள் அமைத்திருக்கின்றன எனில் இதற்கு இலக்கையும் அவை உருவாக்கியிருக்கும். ஒவ்வொன்றாகக் கடந்து காந்தாரி சென்று நிற்கப்போவது திரௌபதியின் முன்னால் என தெய்வங்கள் வகுத்திருக்கலாம். ஆனால் அம்முறை மெல்லிய ஆர்வம் ஒன்று எழுவதை உணர்ந்தான். என்ன நிகழும்? விந்தையான, அச்சமூட்டுவதாகிய, எண்ணி எண்ணி உளமழியக்கூடிய ஒன்று. சொல்லிச்சொல்லிப் பெருக்கவேண்டிய ஒரு தருணம். அதில் உடனிருக்கவேண்டும் என்ற முதிரா விழைவு. இச்சலிப்பூட்டும் நாட்களில் ஓர் உச்சம். அவ்வாறு ஒன்று நிகழ்ந்தால் இச்சிறு துயரங்களெல்லாம் மறைந்துவிடும். தெய்வங்கள் வாய்ப்பளித்தால் என் சிறு அல்லல்களை எல்லாம் திரட்டி ஒரு பெருந்துயராக மாற்றிக்கொள்ளலாமா என்றே கேட்பேன்.

அல்லது அவள் மேல் கொண்ட வஞ்சமா இது? அவளை காந்தாரி தீச்சொல்லிடவேண்டுமென விழைகிறேனா? உடனே உள்ளம் அதை மறுத்தாலும்கூட அது அத்தனை எளிதாக கடந்துவிடக்கூடியது அல்ல என்றும் தோன்றியது. இந்தக் குடில்களில் திரௌபதிமேல் வஞ்சமில்லாத எவரேனும் இன்று இருக்கக்கூடுமா? அவளே இவ்வழிவனைத்திற்கும் முதன்மையாக வழிவகுத்தவள் என்று அனைவரும் நம்புகிறார்கள். அவளை பழிக்கிறார்கள். அவள் தன் மைந்தரை இழந்து கொடுந்துயரில் உழல்வதைக் கண்டு உள்ளூர நிறைவு கொள்கிறார்கள். மேலும் ஒன்று அவளுக்கு நிகழவேண்டும் என விழைகிறார்கள்.

நானும் அவ்வண்ணம்தான் எண்ணுகிறேன். எனக்குத் தெரியும் என் விழைவின் விசை என்ன என்று. என் ஆணவம் எவ்வண்ணம் புளித்து நஞ்சாகியதென்று. எனினும் நான் அவளை பழித்தேன். அதனூடாக என்னை அழுத்தும் துயரிலிருந்து விடுபட்டேன். ஒவ்வொருவருக்கும் பழிசுமக்க இன்னொரு மானுடர் தேவைப்படுகிறார். அனைத்துக்கும் முழுப் பொறுப்பேற்க எவராலும் இயல்வதில்லை. யுதிஷ்டிரனேகூட “எங்கே இவை தொடங்கின, இளையோனே? நாம் பிறக்கும் முன்னரே இவை தொடங்கிவிட்டன என்கிறார்கள். சத்யவதியின் பெருவிழைவே குருக்ஷேத்ரமென விளைந்தது என்கிறார்கள். அவர் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டுச் சென்ற துயரா இது?” என்று ஒருமுறை சொன்னார். “ஒன்றிலிருந்து ஒன்றென துயரும் வஞ்சமும் தீயும் பற்றிக்கொள்கின்றன என்கின்றது நெறிநூல்” என்று சொல்லி நீள்மூச்செறிந்தார்.

இன்னமும் பாண்டவ அரசியர் வந்துசேரவில்லை. அவர்கள் பாஞ்சாலத்து அரசியை வசைகூறிப் பழித்து கதறியழுததாக ஒற்றர்கள் கூறினார்கள். தேவிகை தலையிலறைந்து கதறியபடி மயங்கி விழுகையில் “அக்குடிகேடியால் அழிந்தது என் குலம். அவள் ஆணவத்தால் அழிந்தது அஸ்தினபுரியின் குடி!” என்று கூவினாள். விஜயை நெஞ்சிலறைந்து அழுதபடி வெளியே ஓடிவந்து முற்றத்திலிருந்து கைப்பிடி மண் எடுத்து பாஞ்சாலம் அமைந்த வடமேற்கு நோக்கி வீசி “உன் குருதி ஒருதுளியும் இப்புவியிலெஞ்சாது ஒழிக! நீ கொண்ட அனைத்தும் உன் கண்முன் அழிந்து மறைக! ஓயாத் துயரில் ஒரு நாளும் நீ துயிலமுடியாதாகுக!” என்று தீச்சொல்லிட்டாள். பாண்டவ அரசியர் இங்கே வந்து திரௌபதியை சந்திக்கையில் என்ன நிகழும்? அதற்கு முன் இதோ காந்தாரி அவளை சந்திக்கவிருக்கிறார்.

காந்தாரி வசையுரைக்கலாம். தீச்சொல்லிடலாம். என்ன செய்வாள்? திரௌபதி முன்பென்றால் வேங்கைபோல் வெறிக்கும் விழிகளுடன் நோக்கி நின்றிருப்பாள். ஒரு சொல் உரைக்கமாட்டாள். எவருடைய சினமும் பழியுரையும் அவளை சென்றடையாது. மானுடரின் வாழ்த்துக்கூச்சல்களுக்கும் கண்ணீருக்கும் அப்பால் நின்றிருக்கும் கருவறைத்தெய்வம் போலிருப்பாள். ஆனால் இன்று எந்நிலையில் இருக்கிறாள்? அவள் உருமாறிவிட்டிருப்பதை இருமுறை தொலைவிலிருந்து பார்த்தான். உடல் மெலிந்தமையால் மேலும் உயரமாகி சற்றே கூன்கொண்டவள்போல் தோன்றினாள். கன்ன எலும்புகள் மேடாகி எழ, முகவாய் உந்தி பற்கள் சற்றே முன்னெழ, கண்கள் குழிக்குள் பதிந்துகொள்ள அவள் அவன் அறிந்தவளே அல்ல என்று தோன்றினாள். நாட்கணக்காக துயில்நீப்பு. இருளில் முடங்கிய தனிமை. அவள் விழிகளில் என்றுமிருக்கும் நேர்நோக்கின் ஒளி மறைந்து தீரா நோயாளிகளுக்குரிய பொருளில்லா வெறிப்பு வந்துவிட்டிருந்தது.

அவன் அவளை எண்ணி அப்போது துயர்கொண்டான். அவள் ஒரு கொடியடையாளம் மட்டுமே. நாவாயை கொடி இட்டுச்செல்வதுபோலத் தோன்றுவது ஒரு விழிமயக்கு. நாவாய் கொடியை கொண்டுசெலுத்துகிறது. அதன் கூம்புவடிவும், பாய்களும், துடுப்பும், சுக்கானும். அதை அறியாத எவரேனும் உண்டா? ஆயினும் அவளை அனைத்துக்கும் முதன்மை என்று கொள்வதில் எவருக்கும் தயக்கமில்லை. உண்மையில் அவளை அனைவரும் முன்னிறுத்தியதே அதற்காகத்தான். மாமானுடர் திரளுக்கு கேடயங்கள்போல. முதற்களப்பலிகள் அவர்களே. அவர்களை அதன் பொருட்டே தலைமையில் நிறுத்தி வாழ்த்துகிறார்கள். அவர்கள் பலியான பின் தெய்வமாக்குகிறார்கள். அவளிடம் இச்சூழலே கேட்டுக்கொண்டிருக்கிறது, அவள் இவையனைத்துக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு தன்னை பலியிடவேண்டும் என்று. அதன்பொருட்டு காத்திருக்கிறது, அதற்காக அவளை அழுத்துகிறது.

அவள் அதை செய்யக்கூடியவள்தான். ஏனென்றால் அவ்வாறு எழுந்து முன்செல்கையில், எரிந்தழிகையில்தான் அவர்களின் ஆணவம் நிறைவடைகிறது. மாமானுடர் என்பவர் ஆணவத்தாலானவர்கள். ஆணவமே அவர்களை பேருருக்கொள்ளச் செய்கிறது. ஆற்றல்கொள்ளச் செய்கிறது. தலைமைகொள்ள வைக்கிறது. வெல்லவும் தருக்கவும் செய்கிறது. பொறுப்பேற்று பலியாவதென்பது தன்னை அளித்து இறுதிவெற்றியை ஈட்டுவது. தெய்வமாவது. தெய்வமாவதே மானுட ஆணவம் கொள்ளும் அறுதிவிழைவு. அதற்குக் குறைவாக எதனாலும் அது நிறைவுறாது. கொள்க என்னை என காலத்தின் முன் தலைகாட்டி நின்றிருக்கிறார்கள். எரிந்தழிய ஒரு முற்றம்தேடி அலைகிறார்கள். அவள் காத்திருக்கிறாள், இங்கு எதையோ அவள் முடிக்கவேண்டியிருக்கிறது.

அவன் தொலைவிலேயே திரௌபதியின் குடிலைப் பார்த்து அவள் உள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டான். வாயிலில் நின்றிருந்த ஏவல்பெண்டு அவனைப் பார்த்துவிட்டு ஓர் அடியெடுத்துவைத்து பின் திகைத்து நின்றாள். அவன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். தான் எதுவும் செய்யவேண்டியதில்லை என்று தோன்றியது. நிகழ்வது நிகழட்டும். பேரரசியே சென்று திரௌபதியை சந்திக்கட்டும். அவன் நெஞ்சு படபடத்தது. குடிலை நோக்கியபடி அசையாமல் புரவிமேல் அமர்ந்திருந்தான். அக்குடிலைப் பார்க்கையிலேயே அவள் உள்ளே இருப்பது எப்படி தெரிகிறது? அந்தக் காட்சியை உள்ளம் பலமுறை நடித்துவிட்டிருந்தது. அது நுண்ணுணர்வை கூர்தீட்டியிருந்தது.

வண்டி சகடங்கள் உரசும் ஒலியுடன் நின்றது. உள்ளிருந்து சத்யவிரதை எட்டிப்பார்த்து “பேரரசி திரும்பிச்செல்ல ஆணையிடுகிறார்” என்றாள். நகுலன் திகைப்புடன் “என்ன?” என்றான். “பேரரசி இப்போது பாஞ்சாலத்து அரசியை சந்திக்க விழையவில்லை. திரும்பிச்செல்ல ஆணையிடுகிறார்.” நகுலன் பெருமூச்சுவிட்டான். “ஆம், அதுவும் நன்றே” என்றான். அவன் கைகாட்ட வண்டி திரும்பியது. சத்யசேனையின் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. சத்யசேனை புன்னகை செய்தாள். வண்டி செல்லத்தொடங்கியதும் அவன் புரவியில் அமர்ந்தபடியே திரும்பி திரௌபதியின் குடிலை நோக்கினான். காந்தாரி ஏன் திரௌபதியை சந்திக்கத் தயங்கினாள் என்னும் வினா எழுந்தது. அதை அப்படியே தவிர்த்துவிட்டு புரவியைச் சுண்டி வண்டியைத் தொடர்ந்து சென்றான்.

முந்தைய கட்டுரைகீதையை எப்படிப் படிப்பது? ஏன்?
அடுத்த கட்டுரைமகரிஷி கடிதங்கள்