‘வீட்டவிட்டு போடா!’

 

ராஜன் சோமசுந்தரம் அமெரிக்கா செல்லும் வழக்கமான நம் கணிப்பொறியாளர்களைப்போல அங்கே சென்றபின் செயற்கைகோள் போல திரும்பி இந்தியாவைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல. அமெரிக்காவை அறிய, அதன் இசைமரபுகளில் ஊடுருவ பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதன்விளைவான வெற்றிகளையும் அடைந்தார். பேசும்போது அமெரிக்காவுக்கு ஜாஸ்,ப்ளுஸ்,ராப் வகை பாடல்கள் அளித்தது என்ன என்று கேட்டேன்.அமெரிக்காவுக்கான ஒரு ஜனரஞ்சக இசையை என்று சொன்னார்.

 

காரில் நீண்டபயணத்தில் இசைகேட்டபடி, அதைப்பற்றிப் பேசியபடியே சென்றோம். அப்போது ஒரு பாடல். ரே சார்ல்ஸ் இசையில் வந்த இப்பாடல் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. நம் நண்பர்குழாமில் அனேகமாக இதை கடைசியாகக் கேட்பவன் நானாகவே இருப்பேன்

 

What you say?

 

Hit the road Jack!

And don’t you come back no more, no more, no more, no more.

Hit the road Jack!

And don’t you come back no more.

 

Woah Woman, oh woman, don’t treat me so mean
You’re the meanest old woman that I’ve ever seen
I guess if you said so
I’d have to pack my things and go

 

[That’s right!]

 

What you say?

 

[Hit the road Jack!

And don’t you come back no more, no more, no more, no more.

Hit the road Jack

And don’t you come back no more.]

 

Now baby, listen baby, don’t ya treat me this-a way
‘Cause I’ll be back on my feet some day

[Don’t care if you do ’cause it’s understood

You ain’t got no money, you just ain’t no good]

 

 

Well, I guess if you say so
I’d have to pack my things and go

 

[That’s right!]

 

What you say?

 

[Hit the road Jack!

And don’t you come back no more, no more, no more, no more.

Hit the road Jack!

And don’t you come back no more.]

 

 

Well

[don’t you come back no more.]

 

Uh, what you say?

 

[don’t you come back no more.]

 

I didn’t understand you

 

[don’t you come back no more.]

 

You can’t mean that

 

[And don’t you come back no more.]

 

Oh, now baby, please

 

[don’t you come back no more.]

 

What you tryin’ to do to me?

 

[don’t you come back no more.]

 

Oh, don’t treat me like that

 

[don’t you come back no more.]

 

அதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தோன்றியது, அமெரிக்கப் பண்பாட்டுக்கு இவ்விசைமுறைகள் அளித்தது நாட்டார் மரபைத்தான் என்று. எந்த ஒரு பண்பாடும் நாட்டார்ப்புலம் இல்லாமல் நீடிக்க முடியாது. நீண்ட வரலாறுள்ள நாடுகள் இயல்பாகவே நாட்டார் பண்பாட்டை திரட்டி நினைவில் வைத்திருக்கின்றன. குழவிப்பருவத்திலேயே அவை தாலாட்டாக அறிமுகமாகின்றன. பின்னர் விளையாட்டாக, காதல்பாடல்களாக அவை கூடவே வருகின்றன. கடைசிவரை உடனிருந்து தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன

 

தனக்கென்று ஒரு நாட்டாரிசை அமெரிக்காவுக்கு இருக்க வாய்ப்பில்லை. அது குடியேறிகளின் நாடு. அங்கிருந்த பூர்வகுடிகள் அனேகமாக அழிக்கப்பட்டனர். அமெரிக்கப் பண்பாட்டில் அவர்களின் இடம் என்பது பெரும்பாலும் ஏதுமில்லை. அவர்களின் மொழி, இசை எதுவுமே அங்கே வாழவில்லை. குடியேறிகள் பலவகையானவர்கள். அவர்களுடன் வந்த நாட்டாரிசை ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்து தனித்த நாட்டாரிசையாக வளர அங்கே சூழல் அமையவில்லை. அந்த வெற்றிடத்தைத்தான் கருப்பினத்தாரின் இசை நிரப்பியது.

 

கருப்பினத்தாரின் இசையை தொடர்ந்து கேட்கையில் அது முழவுத்தாளத்தின் கூர்மையை, துடிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று படுகிறது. எனது பயிற்சியில்லா செவிகளின் முதல் பதிவைச் சொல்கிறேன். அது அவர்களின் ஆப்ரிக்க மரபிலிருந்து வருவது. கித்தாரிலும் அந்தத் தாளமே வெளிப்படுகிறது. அடுத்தபடியாக பலர் சேர்ந்து பாடுவதன் ஒத்திசைவையும் முரண்விளையாட்டையும் அப்பாடல்களில் காண்கிறேன். இந்தப்பாடலிலேயே உரையாடல்போல ஒன்றுடன் ஒன்று வெட்டிச்செல்லும் குரல்கள், ஒன்றன்மேல் ஒன்று ஏறிச்செல்லும் பேச்சுக்கள், கூடவேதாளம் இசை என ஒரு கலவை அற்புதமாக அமைந்திருக்கிறது.அறுதியாக, ஆழ்ந்த துயர்மிக்க ஒர் ஓலம். குறிப்பாக ப்ளூஸ் இசையில்.

 

இவை ஒருங்கிணைந்து உருவான இந்த இசைமரபுகள் அமெரிக்காவுக்கான ஒருவகை நவீன நாட்டார்மரபாக ஆகிவிட்டன என்று படுகிறது. இந்த நாட்டார்மரபு வாய்மொழியாக- செவிமரபாக இல்லை. உடனடியாக பதிவாகி உலகப்புகழ்பெற்றுவிடுகிறது.ஆகவே பரப்பிசை என அடையாளம் காணப்படுகிறது. ஆயினும் இது ஒருவகையான நாட்டாரிசையே

 

நாட்டாரிசைக்கும் பரப்பிசைக்குமான வேறுபாடு மிக மெல்லியது. நாட்டாரிசையை பரப்பிசை உடனடியாக எடுத்தாளத் தொடங்குகிறது. அதை பொதுமைப்படுத்திப் பரப்புகிறது.நமது நாட்டாரிசையான தெம்மாங்கை நாம் சினிமாப்பாடலாகவே பெரும்பாலும் கேட்டிருப்போம்.ஆய்வாளர்கள் இவ்விரு மரபுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்

 

அ.நாட்டாரிசை அதற்குரிய நிலப்பரப்பில், வாழ்க்கைச்சூழலில், பணிக்களத்தில் இயல்பாக எழுவதாகவும் அதிலிருந்து பிரிக்கமுடியாததாகவும் இருக்கும். நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு போல

 

ஆ.நாட்டாரிசையில் பாடகன் என்னும் தனியான கலைஞன் பெரும்பாலும் இருப்பதில்லை. அவன் தன் திறனை திட்டமிட்டு பயின்று வளர்த்துக்கொள்வதில்லை. அனைவருமே பாடுவார்கள். சிலர் சிறப்பாகப் பாடுவார்கள்

 

இ.பரப்பிசை தன்னை நுகர்வோர் ரசனைக்கேற்ப தகவமைத்துக்கொள்கிறது. நாட்டாரிசை அவ்வாறு தகவமைவதில்லை. அங்கே கேட்பவரும் பாடுபவரும் ஒன்றே

 

ஈ.பரப்பிசை தன் தேவைக்கேற்க அனைத்து இசைமரபுகளையும் கொண்டுவந்து  கலந்து பயின்று முன்வைக்கிறது. புதுமையை நோக்கிய பயணம் அதன் அடிப்படை இயல்பு.நாட்டாரிசை அவ்வாறல்ல. அது இயல்பான பண்பாட்டுக்கலப்பின் விளைவான இசைக்கலப்பை மட்டுமே ஏற்கிறது. தெம்மாங்குப்பாட்டில் ‘இங்கிலீஷ் நோட்டு’ கலப்பதுபோல.

 

ஆகவே இந்தப்பாடல்களை நாட்டாரிசை என்று சொல்லமுடியாது, பரப்பிசைதான். ஆனால் அமெரிக்காவின் நாட்டாரிசை இந்தப்பரப்பிசைதான் என்று சொல்லவேண்டும். இதிலுள்ள நாட்டார் பண்பாட்டுக்கூறுகள் ஆர்வமூட்டுபவை.  உதாரணமாக இந்தப்பாடல். உலகமெங்கும் நாட்டாரிசையில் உள்ள ஒரு சிறப்புக்கூறு ஆணும்பெண்ணும் ஊடியும்கூடியும் விளையாடுவது. சீண்டிக்கொள்வது. அத்தகைய பாடல்களை பல்வேறுவடிவில் நாட்டாரிசையில் காணலாம். வியப்பூட்டுவது என்னவென்றால் பலநாடுகளில் உள்ள நாட்டாரிசையில் இவ்வகைப் பாடல்களின் அமைப்பு பெரும்பாலும் ஒன்றே.

 

நாட்டாரிசையின் தொன்மையான வடிவங்கள் அனைத்திலுமே அறுவடைக்கொண்டாட்டம் முக்கியமான ஒரு நிகழ்வு. ஆணும்பெண்ணும் எல்லைகளைக் கடந்து சென்று பேசிக்கொள்வதும் உறவாடுவதும் சமூகத்தால் அப்போது ஏற்கப்படுகிறது. சாலமோன் பாடல்களிலிருந்தே அதற்கான சான்றுகள் உள்ளன. நம் ஹோலி கொண்டாட்டமும், ஆண்கள்மேல் பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி விளையாடும் ஆடல்களும் அக்கொண்டாட்டத்தின் நீட்சிகளே. அந்நிகழ்வின் பகுதி இப்பாடல்கள் பாடப்படுகின்றன. பணியிடங்களிலும் அவை ஒலிக்கின்றன.

 

ஹிட் த ரோட் ஜாக் அப்படிப்பட்ட பாட்டு. தமிழில் வேண்டுமென்றால் ‘வீட்டைவிட்டுப்போடா நாயே, திரும்பி வராமல் ஒழி’ என்று மொழியாக்கம் செய்யலாம். ஆனால் அது ஒரு கொஞ்சல்தான். ‘அப்படிச் சொல்லாதே என் கண்ணு’ என்று அவன் கெஞ்ச அவள் மிஞ்ச ஒரு உச்சக்கட்ட செல்லம்கொஞ்சலில் முடிகிறது இப்பாடல்.

 

ரே சார்ல்ஸ் அமெரிக்கக் கருப்பின இசைக்கலைஞர்களில் ஒரு தொன்மம் போலச் சொல்லப்படுபவர். soul music என்னும் இசைமரபை தொடங்கியவர் எனப்படுகிறார். ப்ளூஸ் இசையின் இன்னிசைத்தன்மையும் துடிப்பான தாளமும் கலந்து உருவான இசைமுறைமை இது.அமெரிக்க நாட்டாரிசையின் கலப்பும் இதிலுண்டு. ஐந்து வயதில் பார்வையை இழந்த ரே சார்ல்ஸ் விழியிழந்தோர் பள்ளியில் பிரெய்லி முறையில் இசையை வாசித்து இசைக்கக் கற்றவர். அவரைப்பற்றி அமெரிக்க இசைரசிகர்கள் ஒரே பரவசமாகப் பொழிவதைக் கண்டேன்.

 

ரே சார்ல்ஸ் பற்றி ரே என்னும் சினிமா வெளிவந்துள்ளது. அதை முன்பு பார்த்த நினைவு. அப்போது இசைபற்றிய புரிதலேதும் இல்லாமல் ஒரு வாழ்க்கை வரலாறாக அதைப்பார்த்தேன். ரே புகழ்பெற்றதும் அவருடன் உறவுகொள்ள பெண்கள் வரிசையாக வந்து காத்து நிற்பதும் அவர் ஒவ்வொரு பெண்ணாகத் தெரிவுசெய்து கூட்டிச்செல்வதும் ஒரு திகைப்பை அளித்தது. ஆனால் கட்டற்ற நுகர்வு புலன்களை தளரச்செய்ய அவர் போதையடிமை ஆகி சிறையில்வாழும் நாட்கள் அதன் இன்னொரு பக்கத்தைக் காட்டின

 

இந்தப்பாடல் ரே சார்ல்ஸின் எளிமையான புகழ்பெற்ற இசையமைப்புக்களில் ஒன்று. இதில் பெண்குரல் அவருடைய மனைவி ஷீலா ரே சார்ல்ஸுடடையது.  எனக்கு இப்பாடல் புகழ்பெற்ற ‘ஒத்தரூபா தாரேன் ஒணப்பத்தட்டும் தாரேன் ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடப்பக்கம் போவோம்’  தான் நினைவூட்டியது. அதேபோன்ற பல பாடல்கள் தெம்மாங்கில் உள்ளன. ஆணும் பெண்ணும் சீண்டிக்கொள்ளும் பாடல்கள். அது ஒரு விளையாட்டு என இருவருக்குமே தெரியும். காதல்கொண்ட விலங்குகள் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல.

 

 

Ray Charles – Wikipedia

Ray (film) – Wikipedia

ஒத்தரூபா தாரேன்

முந்தைய கட்டுரையாதும் ஊரே
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24