“வருவது வரட்டும்!”

டோரிஸ் டே

சிலபாடல்கள் சில தருணங்களில் ஒரு பண்பாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. அவை எங்கிருந்து கிளம்பி எப்படி அவ்வண்ணம் ஆகின்றன என்பது வியப்புக்குரியது.பலசமயம் பொருட்படுத்தப்படாத ஏதாவது நாடகம், சினிமாவிலிருந்து அவை வரும். நாட்டார்பாடல்கள் இயல்பாக அந்த இடத்தை அடைவதுண்டு. அவை தலைமுறை தலைமுறையாகப் பாடப்பட்டு பலருடைய உணர்வுகள் பகிரப்பட்டு பல தருணங்களுடன் இணைந்து ஒரு கட்டத்தில் ஒரு தெய்வச்சிலைபோல் ஆகிவிடுகின்றன

இப்படி உருமாறும் பாடல்களுக்குச் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அவற்றிலொன்று அவை மிக எளிமையானவையாக இருக்கும் என்பது. மழலையர்பாடலின் தன்மை அவற்றிலிருப்பதும் வழக்கம். அனைவரும் பாடலாம் என்பதே அந்தப்புகழை அவற்றுக்கு அளிக்கிறது. அவற்றின் பொருளும் ஆழ்ந்ததாக இருக்காது. அனைவருமறிந்த ஒன்றாக, ஆனால் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கும். சொல்லிச்சொல்லி பெருகும் அப்பாடல் சிலதருணங்களிலேனும்  ‘என்ன ஆழ்ந்த பொருள்” என நம்மை வியக்கச் செய்திருக்கும். அதன்பின் நாம் அதை நினைவில்போற்றுவோம். தலைமுறைகளுக்குக் கடத்துவோம்.

இது அத்தகைய பாடல். அமெரிக்காவில் அத்தனை குடும்பச் சந்திப்புகளிலும் பாடப்படும் ஒரு பாடல் என இதை ராஜன் சோமசுந்தரம் சொன்னார். வெவ்வேறுவகையில் வேடிக்கையாகவும் துயரமாகவும் இதைப் பாடுவார்கள். அனைவரும் சேர்ந்து பாடலாம். எப்படியும்பாடலாம் என்னும் எளிய அமைப்பு கொண்டது

When I was just a little girl
I asked my mother, “What will I be?
Will I be pretty? Will I be rich?”

Here’s what she said to me
“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”

When I grew up and fell in love
I asked my sweetheart, “What lies ahead?
Will we have rainbows day after day?”
Here’s what my sweetheart said
“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”

Now I have children of my own
They ask their mother, “What will I be?”
Will I be handsome? Will I be rich?”
I tell them tenderly
“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be
Que Sera, Sera!”

“Que Sera, Sera என்ற – மொழிச் சொல்லுக்கு Whatever Will Be, Will Be  என்று பொருள். தமிழில் எதுவானாலும் நடந்தேதீரும் என்று பொருள் சொல்லலாம். அமெரிக்க பாடலாசிரியர்களான ஜே லிவிங்ஸ்டன் மற்றும் ரே ஈவன்ஸ் இருவரும் [Jay Livingston and Ray Evans] எழுதி 1956ல் வெளியானது இந்தப்பாடல். புகழ்பெற்ற அமெரிக்கப்பாடகியும் நடிகையுமான டோரிஸ் டே [Doris Day] இதை ஆல்ஃப்ரட் ஹிச்சாக்கின் [ Alfred Hitchcock ]  The Man Who Knew Too Much (1956) என்ற படத்தில் பாடி அறிமுகம்செய்தார்.

இப்பாடல் உடனடியாக பிரபலமானது. தனி இசைத்தட்டாக வெளிவந்து தொடர்ச்சியாக விற்பனைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்துகொண்டிருந்தது. ஹிச்சாக்கின் படத்தில் இடம்பெற்ற பாடல்வடிவம் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் அக்காடமி விருதை பெற்றது. அதன்பின் இதற்கு நூற்றுக்கணக்கான வடிவங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அமெரிக்கச் சமகால வரலாறு இது. ஆகவே இணையத்தில் செய்திகள் முடிவில்லாமல் வந்துகொண்டிருக்கின்றன.

“que sera, sera” என்ற சொல்லாட்சி விதியை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் மனநிலையின் சொல்வடிவாக பரவலாகியது. இதை “cheerful fatalism” என்கிறார்கள். இது ஒரு ஸ்பானிய- இத்தாலிய வட்டாரவழக்குச் சொல்லாட்சி. உண்மையில் இச்சொல்லாட்சிக்கு ‘வருவது வரட்டும்’ என தோராயமான ஒரு பொருளை மட்டுமே அளிகமுடியும். ஆனால் இன்று இது பலநூறு முறை பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது

இப்பாடலின் ஒரு தமிழ் வடிவமும் வெளிவந்துள்ளது. ஆரவல்லி என்னும் திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதியது. இசை ஜி.ராமநாதன். ஜிக்கியும் ஏ.எம்.ராஜாவும் பாடியது. ஹிச்சாக்கின் படம் வெளிவந்த அடுத்த ஆண்டே இந்தப்படம் வெளிவந்துள்ளது -1957ல். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படம். மாடர்ன் தியேட்டர் நிறுவனம் பொதுவாக பாடல்களை நகல்செய்து பயன்படுத்துவதில் புகழ்பெற்றது. இப்போது பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. எஸ்.ஜி.ஈஸ்வர் என்பவர் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.

சின்னப்பெண்ணான போதிலே
சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

(சின்னப்பெண்ணான போதிலே)

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னியென் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்

வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் என் நிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் கண்கள் தேடும் உண்மை தனை
சொல் நிலவே நீ என்றேன்.

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் காணலாம்

இந்தப்பாடல் அவ்வளவாக புகழ்பெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் ஆர்வமூட்டும் ஒன்று உள்ளது. மூலத்தில் “வருவது வந்தே தீரும். எதிர்காலம் நாம் பார்க்கக்கூடியது அல்ல. வருவது வரட்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் ’உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தான் என்றாள்’ என்று வருகிறது. நேர் எதிரான கருத்து. இருவேறு மனநிலைகளைக் காட்டுகின்றன இப்பாடல்கள்.

அன்றைய அமெரிக்கா இந்தியா இரு நாடுகளின் நிலைகளைக்கொண்டு இவற்றை ஒப்பிடுகையில் ஒரு புரிதல் ஏற்படுகிறது  அன்றைய இந்தியா பஞ்சமும் வறுமையும் நிறைந்திருந்தது. சுதந்திரப்போருக்குப் பிந்தைய தேசஉருவாக்கப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அன்றாட துயர்களும் கூடவே நம்பிக்கையும் நிறைந்திருந்த சூழல். அன்று எல்லாமே நன்றாக நடக்கும் என்னும் சொல்லே உவப்பாக இருந்திருக்கிறது. வருவது வரட்டும் என்னும் துணிவு இல்லை. அது ஒரு அமங்கலமான கூற்றாக, விதியை அறைகூவுவதாகத் தோன்றியிருக்கலாம்

ஆனால் அமெரிக்கா அன்று தெம்புடன் வளர்ந்துகொண்டிருந்தது. போருக்குப்பிந்தைய பொருளியல்தளர்வு இருந்தது. அதன்விளைவான உளச்சோர்வும் நிறைந்திருந்தது. ஆனால் நம்பிக்கை ஓங்கிக்கொண்டிருந்தது. உலகப் பொருளியல்சக்தியாக,அமெரிக்கா எழுவது கண்ணுக்குத் தெரிந்தது. தொழில்துறைகளில் வளர்ச்சி தென்படத் தொடங்கியது. அந்நம்பிக்கையே அவ்வரிகளில் வெளிப்படுகிறது. ஒரு நாடு அஞ்சிக்கொண்டிருந்தது இன்னொன்று நம்பிக்கைகொண்டிருந்தது.

***

முந்தைய கட்டுரைசெங்காட்டுக் கள்ளிச்செடி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22