அமெரிக்க நூலகச் சந்திப்பு

அமெரிக்க நூலகம் ஒன்றில் பேசுவது என்பது ஒருவகையில் சாதாரண நிகழ்வு, ஆனால் இன்னொருவகையில் அரிய வாய்ப்பு. அவர்கள் எழுத்தாளரை கூடுமானவரை ஆராய்கிறார்கள். அவருடைய எழுத்தின் தரம், அவருடைய ஏற்பு இரண்டையும். ஆகவே நண்பர் ராஜன் சோமசுந்தரம் அமெரிக்காவில் வடகரோலினாவில் ராலே அருகிலுள்ள Wake County Government Public Library சார்பில் நூலகத்தில் ஒரு பேச்சு குறித்துச் சொன்னபோது குழப்பமாக உணர்ந்தேன். அதை தவிர்க்கலாமென்றேன். ராஜன் வற்புறுத்தினார்

முக்கியமான சிக்கல், என்னால் ஆங்கிலத்தில் பேசமுடியாது என்பது. ஏனென்றால் ஆங்கிலத்தில் நான் வாய்திறக்கும் வாய்ப்பே அமைவதில்லை. நான் அறிந்த ஆங்கிலச் சொற்களில் மிகச்சிலவற்றுக்கே எனக்கு உச்சரிப்பு தெரியும். என் ஆங்கிலம் என் காதில் விழுந்தால் நானே திடுக்கிட்டுவிடுவேன். பொதுவாக செவிவழி அறிதலில் ஆர்வமற்றவன் என்பதனால் நான் ஆங்கிலத்தை கேட்பதும் பெரும்பாலும் கிடையாது. நான் பேசும் ஆங்கிலமெல்லாம் நட்சத்திரவிடுதிகளில் சாப்பாடுக்கு ஆணையிடுவதற்காக மட்டுமே. எந்தமொழியும் நாவிலெழவேண்டுமென்றால் செவிகளில் விழவேண்டும். நா சொல்லிப் பழகவேண்டும்.

ராஜனிடம் எனக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை அமர்த்தும்படிச் சொன்னேன். அவரே உதவுவதாகச் சொன்னார். அவரும் மேடையில் அமர்ந்தார். நான் மேடையில் அவருடைய கோட்டை போட்டுக்கொண்டு அமர்ந்தேன். அது நூலகத்து நடைமுறை. எவர் கோட்டுபோட்டாலும் ஒரு கம்பீரம் வந்துவிடும், ஒரே காரணம் அதன் தோள்களின் வடிவமைப்புதான். உள்ளே துணிவைக்கப்பட்டு தோள்கள் சதுரவடிவில் வெட்டி இறங்கும்படி தைக்கப்பட்டிருக்கும். அது நம் தோள்களின் தொய்வை நேராக ஆக்கிவிடும். திண்தோளுடன் ஒரு தற்படம் எடுத்து அருண்மொழிக்கு அனுப்பி ‘பாருடி’ என்றேன்.

சொற்பொழிவை கேள்விபதிலாக ஆக்கிக்கொண்டோம். நூலகத்தின் தலைவி என்னை ஒரு பொதுப்பேட்டி காண்பதாகவும், வருகையாளர்களும் கேள்விகேட்கலாம் என்றும் ஏற்பாடு. ஒழுங்காக பேச்சை தயாரித்துக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றலாயிற்று. ஏனென்றால் உடனடிக் கேள்வி பதில் என்றால் யோசித்துச் சொல்லவேண்டும். நான் யோசிப்பது தமிழில். மலையாளமே ஆனால்கூட அதை உடனுக்குடன் மொழியாக்கம் செய்தே பேசுவதுவழக்கம். ஆங்கிலத்தை ஓரளவேனும் பேச ஆங்கிலத்திலேயே யோசிக்கவேண்டும். மொழியாக்க ஆங்கிலம் ஒரு தனி மொழி. ஆங்கிலத்துக்கு மகள் மாதிரி.

முதல் கேள்வி வழக்கம்போல என் எழுத்தின் தூண்டுதல் எங்கிருந்து, எப்படி தொடங்கினேன் என்பது. அதைச் சொல்கையில் எனக்கு நெஞ்சில் படபடப்பும், தொண்டையில் அடைப்பும், சொற்குழறலும் ஏற்பட்டன. ஒருவழியாகச் சொல்லிவிட்டேன். ஆனால் உண்மையில் தமிழில் பேசும்போதே பலசமயம் முதல் ஐந்துநிமிடம் இந்தவகையான குழறல் உருவாகிவிடுவதுண்டு. எல்லா பேச்சுமே ஐந்து நிமிடம் கழித்துத்தான் ஒழுக்காக வெளிப்படத்தொடங்கும். வெளிப்படாவிட்டால் அவ்வளவுதான், ஒன்றும்செய்ய முடியாது

ராஜனின் உதவி தேவைப்படவில்லை. சற்றுநேரத்தில் நானே சமாளித்துக்கொண்டேன். சொல்லப்போனால் பேசும் மொழி எது என்பது நினைவில் இல்லாமலாகிவிட்டது. மெல்லிய நையாண்டியும் கேலியும்கூட வெளிப்பட்டன. இலக்கியக் கோட்பாடுகள், தத்துவம் போன்றவற்றில் சிலவற்றை தமிழில்சொல்வதைவிட ஆங்கிலத்தில் சொல்வது எளிது என எனக்கு முன்னரே அனுபவம். ஏனென்றால் அவற்றை ஆங்கிலத்தில்தான் படிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்தே சொல்கிறோம். தமிழில் அவற்றைக் கூர்மையாகச் சொல்லவும் முடியாது. தமிழில் பேசும்போதே சொற்களுக்கும் வரையறைகளுக்கும் ஆங்கிலத்தை நாடுகிறோம்.ஆங்கிலத்தில் சொன்னதை இப்போது தமிழில் எழுதும்போதுதான் கூர்மை குறைந்து சொற்றொடர் சிக்கலாகிப் பரவிச்செல்கிறது.

இரண்டு மணிநேரச் சந்திப்புக்குப்பின் பொதுவாக அனைவருமே என் உரையாடல் சிறப்பாகவும் சரளமாகவும் இருப்பதாகச் சொன்னார்கள். ராஜனிடம் கேட்டேன். பல ஆங்கிலச் சொற்கள் அமெரிக்க உச்சரிப்புக்கு மாறானவை என்றார். ஆனால் அமெரிக்கர்கள் வேறுவேறு உச்சரிப்புக்களுக்குப் பழகியவர்கள். ஆகவே அமெரிக்காவில் எல்லாமே சரிதான்.சீன உச்சரிப்புக்குப் பழகியவர்களுக்கு இந்திய உச்சரிப்பெல்லாம் பிரிட்டிஷ் தரம் போல. பழைய படம் ஒன்றில் அடூர் பாஸி சொல்வார், ஒரு நெஞ்சுரம் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஆங்கிலம் பேசலாம் என்று. அது உண்மைதான் போலிருக்கிறது.

ஒரு மாதிரி சமாளித்துவிட்ட நிறைவு. ஆனால் ஆங்கிலம் என்றல்ல ,வேறெந்த மொழியில் உள்ளம் மிகையாக ஈடுபட்டாலும் அது தமிழ் புனைவெழுத்தாளனாக எனக்கு இழப்புதான். என் தாய்மொழியாகிய மலையாளத்தைக்கூட அதன்பொருட்டுத்தான் தவிர்த்துவந்திருக்கிறேன். மொழிகளுக்கு தங்களுக்கென்றே ஓர் ஒலியமைப்பும் சொற்றொடர் அமைப்பும் உண்டு. ஒருவரின் அகம் ஒருமொழியிலேயே திளைக்கும்போதுதான் ‘நடை’ என ஒன்று உருவாகிறது. நடை என்பது ஓயாமல் உள்ளத்தில் ஓடும் அகமொழியின் புறவடிவம். ஒருவகையில் அது தன்னிச்சையான பெருக்கு. மூச்சுபோல. புறவயமாக அதை நடை என ஆக்க சற்றே பயிற்சிதேவை, அவ்வளவுதான்.

அசோகமித்திரன் ஒரு கட்டுரையில்  ‘பெரும்படைப்பாளிகள் ஒரு மொழியில் மூழ்கியிருப்பவர்கள்’ என்று சொல்வார்.அது உண்மைதான் என்றே தோன்றுகிறது. இருமொழிப் படைப்பாளிகள் உலகமெங்கும் உண்டு. நானும் இருமொழிப் படைப்பாளியே. மலையாளத்திலும் ஒரு பத்தி வாசித்தாலே என்னுடையது என அடையாளம் காணும் நடையை உருவாக்கியிருக்கிறேன். என் நடைக்கு தனி மதிப்பும் அங்கு உண்டு. ஆனாலும் எந்த இருமொழிப் படைப்பாளிக்கும் ஒருமொழியே அடிப்படை மொழியாக இருக்கும். அதிலிருந்தே அவர் இன்னொரு மொழிக்கு எழுவார். மூலமொழியின் நுண்ணிய அமைப்பு இரண்டாம்மொழியிலும் திகழும், பலசமயம் அந்த இரண்டாம்மொழியில் அவர் அடையும் தனித்தன்மை வாய்ந்த நடை அவ்வாறு அடையப்பட்டதாக இருக்கும்.

எழுத்தாளன் ஒரு மொழிக்குள்ளேயே பலவகையான மொழிநடைகளுக்குள் புழங்கமுடியும். இன்று நான் எழுதுவதில் வெண்முரசின் மொழி வேறு, என் பொதுவான புனைவுமொழி வேறு. நான் ஒவ்வொரு புனைவுக்கும் ஒவ்வொருமொழியை பயின்றுகொள்பவன். அதற்காக உளமாற்றம் செய்துகொள்வேன். அதன்பொருட்டு வாசிப்பேன், ‘டம்மி’யாக எழுதிப்பார்ப்பேன். விஷ்ணுபுரம் எழுதியபின் நாற்பதுக்கும் மேற்பட்ட துப்பறியும் நாவல்களை வாசித்து என் அகநடையை மாற்றிக்கொண்டு அதன்பின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை எழுதினேன்.

வெள்ளையானை நாவலின் மொழியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒர் ஆங்கிலமொழியாக்க நெடி உண்டு. கொற்றவையின் நடை முற்றிலும் வேறான ஒன்று. அதில் பழம்பாடல்களின் சாயல் கொண்டுவரப்பட்டது. சிறுகதைகளிலேயே கூட மாடன்மோட்சம் கதையின் நடைவேறு ஊமைச்செந்நாய் கதையின் நடைவேறு. ஆனால் இவையெல்லாமே தமிழின் நுண்ணிய வாய்ப்புகளிலிருந்து உருவாகும் நடைவேறுபாடுகள். ஒருமொழியை உபாசனை செய்வதன் விளைவுகள். இன்னொருமொழியில் மிகையாகத் திளைக்கையில் நம் புனைவின் தேவைக்கு அப்பால், அயல்மொழியின் தனித்தன்மைகள் நம் நடைக்குள் புகுந்துவிடக்கூடும்

இதைச் சுந்தர ராமசாமி சுட்டிக்கொண்டே இருப்பதுண்டு. ஆங்கிலம் நம் அகமொழியை மிகப்பெரிய அளவில் ஊடுருவுவது, மாற்றுவது என்று சுந்தர ராமசாமி சொல்வார். ஆங்கிலத்தில் வாசித்தால் அன்றே தூங்குவதற்குமுன் நல்ல தமிழில் கொஞ்சம் வாசித்தாகவேண்டும் என்பார். அதை நான் என்றுமே கடைப்பிடிக்கிறேன். மேஜைமேல் எப்போதுமே செவ்விலக்கியநூல் ஒன்று திறந்தே இருக்கும். பெரும்பாலும் கம்பராமாயணம். பத்து செய்யுள்போதும், தமிழ் மணக்க தூங்கப்போகமுடியும்

அதேபோல மேடைப்பேச்சையும் சுந்தர ராமசாமி எழுத்துநடைக்கு எதிரானது என்றே சொன்னார். மேடையில் தொடர்ச்சியாகப் பேசுபவர்களின் நடை அறியாமல் மாறிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் கண்முன் கேள்வியாளர்களை உருவகம் செய்துகொள்ளத் தொடங்கிவிடுவார்கள் என்பது அவர் எண்ணம். அது சரியா தெரியவில்லை. எதற்கு வம்பு என்பது என் எண்ணம். ஆகவே ஆண்டுக்கு ஐந்தாறு உரைக்குமேல் ஒப்புக்கொள்வதில்லை.

வேக் கவுண்டி நூலக உரையாடலில் என்னைக் கவர்ந்தது நூலகர் டயானா ஷீல்ட்ஸ் அவர்கள் என்னைப்பற்றிய செய்திகளை இணையம் வழியாக கூடுமானவரை சேர்த்துக்கொண்டுவந்து முறையாக அறிமுகம் செய்தது. இந்தவகையான ஒரு நேர்த்தியை நம் பல்கலைகளில்கூட காணமுடியாது. அறிமுகத்திற்கு அப்பால் அவர் கேட்ட பெரும்பாலான கேள்விகள் ஆர்வமூட்டுபவை.

வெண்முரசு போன்ற நீண்ட படைப்பை எப்படி அன்றாடம் எழுதுகிறீர்கள், எழுத்தாளர்கள் எழுதுவதற்குரிய ஆய்வுக்கும் எழுத்துப்பணிக்கும் நெடுநாட்கள் எடுத்துக்கொள்கிறார்களே என்றார். நான் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக மகாபாரதத்தில் வாழ்பவன். ஐந்து வயதில் என் அம்மா மகாபாரதத்தை முழுமையாக படித்து முடிப்பதைக் கேட்டேன். மேலும் இருமுறை அம்மா படித்திருக்கிறார்கள். மகாபாரதம் முற்றோதுதல் ஒரு கேரளச் சடங்கு. மகாபாரதக் கதகளிகளைக் கண்டிருக்கிறேன். மகாபாரத நாவல்களை வாசித்திருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலுமாக மகாபார்தத்தின் முழுமையான மொழியாக்கங்களை பலமுறை வாசித்திருக்கிறேன். மகாபாரதத்தை எழுதும் நோக்கம் முப்பதாண்டுகளாக உடனிருக்கிறது. மகாபாரதம் நிகழந்தவை எனக்கூறத்தக்க நிலங்களுக்கு இருபதுபயணங்களுக்கும் மேல் செய்திருக்கிறேன். முன்னோட்டமாக ஆறு கதைகளை எழுதியும் பார்த்திருக்கிறேன். இவைதான் தயாரிப்பு. மகாபாரதம் பற்றி மட்டுமே இப்படி எழுத முடியும் என்றேன். ஒன்றை நன்கு அறிய அதில் வாழ்வதுதான் ஒரே வழி என்றேன்.

என்னுடைய நோக்கம் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தை ஒரு பெரிய சித்திரமாக வரைவது. அதன் அனைத்து முரணியக்கங்களுடனும் அனைத்து நுட்பங்களுடனும். இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொன்மங்களையும் வரலாற்றுக்கட்டமைப்பையும் சொல்லிவிடுவது. மிகமிக பெரிய திட்டம்தான். ஆனால் இலக்கியத்தில் அது சாதாரணம்தான். பால்ஸாகின் Human comedy இதைவிடப் பலமடங்குபெரிய கனவு, இருமடங்கு பெரிய படைப்பு.

சமகால அமெரிக்க ஆக்கங்களை வாசிக்கிறீர்களா, அவர்களில் உங்களைக் கவர்ந்தவர் எவர் என்று டயானா கேட்டார். சமகால அமெரிக்க ஆக்கங்களில் பேசப்படுபவற்றை  மட்டும் வாசிக்கிறேன். அதுவும் சமீபகாலமாகக் குறைவு. எல்லா இலக்கியப் போக்குகளையும் தெரிந்துகொள்வதற்காக படைப்புக்களை வாசிக்கும் நிலையை நெடுநாட்களுக்கு முன்னரே கடந்துவிட்டேன். இன்று என் அகத்தேடலுக்கு துணையாகும் படைப்புக்களையே வாசிக்கமுடிகிறது. அவை பெரும்பாலும் செவ்விலக்கியங்களே என்றேன்.

அமெரிக்க இலக்கியத்தில் ஒருகாலத்தில் ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன், ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், ஃபாக்னர் போன்றவர்கள் பிடித்தமானவர்கள். இவர்கள் அனைவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். நான் எமர்ஸனின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவன். அவருடைய ஒரு சிறுநூலை மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஸிங்கரின் பல கதைகளை மொழியாக்கம் செய்து என் சிற்றிதழில் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவ்வண்ணம் எவருமில்லை. இந்திய இலக்கியச் சூழலிலேயே கார்வருக்குப் பின் எந்த அமெரிக்க எழுத்தாளரும் பேசப்பட்டதில்லை.

அமெரிக்க எழுத்து என முன்னிறுத்தப்பட்டு எனக்குக் கிடைப்பவை பெரும்பாலும் உலகியல் அடிப்படை கொண்டவை. காமகுரோதமோகங்களைப் பற்றி மட்டுமே பேசுபவை. அவற்றில் பல தளங்களை அவை தொட்டுப்பேசுகின்றன என்பது உண்மையே. ஆனால் அவற்றின் எல்லை அது. இன்று மானுட அகம் காமகுரோதமோகங்கள் நிறைந்ததுதான் என்பதில் எந்தக் கண்டடைதலும் எனக்கில்லை. அதற்கு அப்பால் என்ன உள்ளது என்னும் வினாவே என் எழுத்து. அவ்வண்ணம் ஒன்றும் இல்லை என்றால் எதையேனும் உருவாக்கிக் கொள்ளமுடியுமா என்ற தேடலே நான் கொண்டிருப்பது. சமகால அமெரிக்க எழுத்து அவ்வகையில் எனக்குப் பெரிதாக எதையும் அளிப்பதில்லை.

இன்று நான் இலட்சியவாதம் சார்ந்த ஆர்வம் கொண்டவன். இலட்சியவாதி அல்ல, ஆனால் இலட்சியவாதங்களின் எழுச்சி வீழ்ச்சி குறித்து எழுதுபவன். நான் இதுதான் வாழ்க்கை என எழுதுவதில் இன்று ஆர்வம் கொண்டிருக்கவில்லை, எழுத்தாளன் வாழ்க்கையை எழுதி உருவாக்கவேண்டியவன் என்றே நம்புகிறேன் என்றேன். அவ்வகை அமெரிக்க எழுத்து எதையும் நான் காணவில்லை.

அமெரிக்க எழுத்தில் இன்றைய பெரிய டிரெண்ட் ஆக காண்பது ‘புலம்பெயர்ந்தவர்களின்’ எழுத்து. வெவ்வேறு பண்பாடுகள் அமெரிக்காவில் அடையும் மாற்றங்களும் தடுமாற்றங்களும் அப்பண்பாடுகளுக்கு நடுவிலான மோதலும். ஜூம்பா லகரி முதல் சமீபத்தில் படிக்க நேர்ந்த யின் லி வரை. இவ்வகை எழுத்துக்கு அமெரிக்கச் சூழலில் உள்ள முக்கியத்துவம் தமிழில், வேறொரு பண்பாட்டுச்சூழலில், கிடையாது.

மேலும் இந்தப்படைப்புக்களை வாசிக்கையில் அவை மிகமிக கச்சிதமாக அமைந்துள்ளதை காணமுடிகிறது. கச்சிதம் என்பது ஒருவகை செயற்கைத்தன்மைதான். உயிர்த்தன்மையில் ஒரு கச்சிதமின்மையும் இருக்கும். அந்த கச்சிதம் என்பது ஒரு கூட்டு உழைப்பால் உருவாவது. கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவபோதமே அந்த கச்சிதத்தை நோக்கி கொண்டு செல்கிறது.அப்படி ஒரு புறவய வடிவ ஒருமையை கலைஞன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பெரும்படைப்புக்களில் பிசிறுகளிலேயே கலையின் வீச்சு வெளிப்படுகிறது. கலை என்பது மீறலிலும் கட்டுக்கடங்காத தன்மையிலும் உள்ளது. கலை என்பது மிகமிக முன்னுரைக்கமுடியாத போக்கு கொண்டது. [Organic artwork is imperfect in its own way].

அப்படியென்றால் அமெரிக்கச் சூழலில் இருந்து இந்திய – தமிழ் இலக்கியச்சூழல் பெற்றுக்கொள்வது என்ன? தனிப்பட்ட முறையில் நான் பெற்றுக்கொள்வது என்ன? இரு தளங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு இலக்கியத்திலும் என்னிடமும் உள்ளது. ஒன்று, இலக்கியக் கொள்கைகள் மற்றும் இலக்கியத்தைப் பாதிக்கும் துறைசார் சிந்தனைகள். உதாரணமாக கிளிந்த் புரூக்ஸ் முதலானவர்கள் முன்வைத்த அமெரிக்க புதுத்திறனாய்வு, அதன் பிரதிசார் இலக்கிய ஆய்வுமுறை. பின்னர் நவீனவரலாற்றுவாதம். இரண்டாவதாக, அறிவியல்புனைகதைகள். ராபர்ட் சில்வர்பெர்க்,அஸிமோவ் முதல் இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அறிவியல் எழுத்தாளர்கள் பரவலாக பாதிப்பை உருவாக்கியவர்கள். நானும் அவர்களை விரும்பி வாசிப்பதுண்டு.

என் நாளை எப்படி திட்டமிடுகிறேன் என்று கேட்டார். நான் எழுந்ததுமே எழுதவேண்டும் என்னும் கொள்கை உள்ளவன். மதியம் ஒரு தூக்கம். அது இன்னொரு காலையை அளிக்கிறது. இன்னொரு எழுத்துக் கட்டம். பொதுவாக சிறிய சில்லறை விஷயங்களில் பொழுதைச் செலவிடுவதில்லை. அன்றாடவேலைகளில் உள்ளத்தை ஈடுபடுத்துவதில்லை. எப்போதுமே உச்சநிலையில் இருக்க விழைவேன். எழுத்து வாசிப்பு இல்லையேல் பயணம், அதுதான் என் வாழ்க்கை என்றேன்.

இன்று உலகளாவிய இலக்கியப் பொதுப்போக்கு என எதையேனும் பார்க்கிறேனா என்று டயானா கேட்டார். அவ்வாறு உலகளவில் ஒரு பொதுப்போக்கு இன்று இருக்க இயலாது. புத்தகவணிகம், பதிப்பகத்தாரின் தேவை ஒரு பொதுப்போக்கை உலகளாவ உருவாக்குகிறது. பொதுவாக ஐரோப்பியர் ஏற்கும் அரசியல்சரி கொண்ட படைப்புக்கள், துப்பறியும் படைப்புக்கள் வெளிவந்து பரவலாகப் பேசப்படுகின்றன. அது இலக்கியப்பொதுப்போக்கு அல்ல. இது பின்நவீனத்துவக் காலம். நவீனத்துவம் உருவாக்கிய உலகளாவிய பொதுத்தன்மைகள் இன்று ஏற்கப்படுவதில்லை

அமெரிக்க எழுத்தைப் பார்க்கையில் அமெரிக்காவிற்கு வந்த புலம்பெயர்ந்தவர்களின் எழுத்தே பொதுவான போக்காகக் காணக்கிடைக்கிறது. தங்கள் அடையாளங்களை உருவாக்கவும், இழந்த அடையாளங்களை மீட்கவும் அவர்கள் கொள்ளும் போராட்டம் என அதைச் சொல்லலாம். கலாச்சார, பண்பாட்டு பன்மைத்தன்மைக்கு அப்பால் ஒரு மானுடத்தன்னிலையை உருவாக்கிக்கொள்வதற்கான முயற்சி அது.

ஆனால் இந்தியாவின் பொதுப்போக்கு முற்றிலும் வேறானது. மரபை இன்றையசூழலில் நின்று வகுத்துக்கொள்வதே இந்தியாவின் முதற்சவால். எங்கள் மரபு மிகப்பெரியது. ஒருசமயம் பெரிய சுமை, இன்னொரு சமயம் பெரிய செல்வம். சிலர் அதிலிருந்து விடுபட முயல்கிறர்கள். சிலர் அதை புரிந்துகொள்ள முயல்கிறார்கள். சிலர் அதை மாற்றியமைக்கவும் புதிதாகச் சமைக்கவும் முயல்கிறார்கள்.

இத்தகைய வேறுபாடுகள் உலகமெங்கும் உள்ளன. அவற்றுக்கு அப்பால் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை ஒன்று என்றால் இதைச் சொல்லலாம். இன்று புனைவில் தர்க்கபூர்வத்தன்மைக்கு மதிப்பு குறைகிறது. தர்க்கமற்ற ஒரு அறிதலுக்காக இலக்கியம் முயல்கிறது. பித்து, கட்டற்றநிலை,கனவு வழியாக செயல்படும் ஓர் அறிவுத்தளத்தை அடைவதை இலக்காகக்கொண்டிருக்கிறது

இலக்கியவாசிப்பிலும் எழுத்திலும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு என்னவாக உள்ளது என்று டயானா கேட்டார். சமூக ஊடகங்கள் சுருக்கமான உடனடி வாசிப்பை இலக்காக்குகின்றன. இது ஒரு குறிப்பிட்டவகை மொழிநடையை பொதுவான போக்காக ஆக்குகிறது. சுருக்கமான சிறிய சொற்றொடர்கள். வர்ணனைகள் அற்ற நேரடியான கூறுமுறை – ஸீரோ நெரேஷன் அதன் இயல்பு. அத்துடன் மேலோட்டமான சொல்நகைச்சுவை, விளையாட்டுத்தனம், சீண்டும்தன்மை ஆகியவற்றையும் அது கொண்டுள்ளது. இது வாசிக்கும் அனைவரிலும் செல்வாக்கு செலுத்துகிறது. அனைவரும் எழுதலாமென்பதனால் இவ்வகை எழுத்து பெருகி பொதுப்போக்காக ஆகிறது. ஆனால் இலக்கியம் என்பது எந்நிலையிலும் பொதுப்போக்குக்கு எதிரானதே. தரப்படுத்தப்பட்ட எதற்கும் எதிரானதே. இலக்கியவாதி சமூக ஊடகங்களை ஒருவேளை பயன்படுத்திக்கொள்ள முடியும். சமூக ஊடகங்களிலிருந்து நல்ல இலக்கியவாதி உருவாக முடியாது.

வாசகர்களிடமிருந்து எழுந்த கேள்விகள் பல. இரண்டு கேள்விகள் நினைவிலுள்ளன. ஒன்று, துப்பறியும் கதைகள் இலக்கியமாகுமா? [அவர் சுட்டிக்காட்டிய பெயர் ஸ்டீபன் கிங்] நான் சொன்னேன், அவை இலக்கியமாகும். அவற்றின் கூறுமுறை ஒரு தடை அல்ல. அவை கூறுவதற்கும் அப்பால் சென்று பல அடுக்குகளாக வாசகன் செல்லத்தக்க தளங்களைக் கொண்டிருக்குமென்றால், வாழ்க்கைமேலும் பண்பாட்டின்மேலும் வரலாற்றின்மேலும் அவை கூர்நோக்கு கொண்டிருக்குமென்றால்.[Critique on life, history and culture ] உதாரணம், உம்பர்ட்டோ ஈகோவின் நேம் ஆஃப் த ரோஸ்

இன்னொரு கேள்வி பாப் டைலனுக்கு நோபல் அளிக்கப்பட்டதைப் பற்றி. நான் சொன்னேன், அவர் அமெரிக்கப் பண்பாட்டுக்கு முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் நோபல்பரிசு என்பது ஓர் எழுத்தாளரை உலகுக்கு அடையாளம் காட்டுவது. ஒரு பண்பாட்டிலிருந்து எழுந்து உலகுநோக்கிப் பேசுபவரே அதற்குத் தகுதியானவர். பாப் டைலன் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் எனக்கு எவ்வகையிலும் தொடர்புறவில்லை. ஃபிலிப் ராத்துக்கு அளிக்கப்பட்டிருந்தால் அது இந்தியவாசகனும் பொருட்படுத்தும் விருதாக இருந்திருக்கும்.

பலகேள்விகள். பொதுவாக நான் முன்னரும் பலமுறை மறுமொழி சொன்னவைதான். ஆகவே சுருக்கமாகவும் கூர்மையானச் சொற்களிலும் கூற முடிந்தது. ஒரு நல்ல சந்திப்பு என்று தோன்றியது. எந்த உரையாடலிலும் நானே ஒன்றைச் சொல்லிவிட்டு அதை ஏன் சொன்னேன் என ஆராய்வதுண்டு, அது இம்முறையும் நிகழ்ந்தது

***

முந்தைய கட்டுரைஓஸிபிசா, ரகுபதிராகவ…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21