பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 3
நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது தெரிந்தது. “யார்?” என்று திடுக்கிட்டதுமே அவனுக்கு அது நிழல் எனத் தெரிந்துவிட்டது. ஆனால் அந்த முந்தைய கணத்தில் அங்கே நின்றவன் சதானீகன். அவன் நடுங்கியபடி குடில்படலைப் பிடித்தபடி நின்றான். சகதேவன் கமுகுப்பாளை வேய்ந்த மூங்கில் மஞ்சத்தில் படுத்திருந்தான். அவன் “இளையோனே” என அழைத்ததுமே சகதேவன் கண்களை திறந்தான். “வந்துவிட்டாயா?” என்றான். “நான் சற்றுமுன் அவனை பார்த்தேன்.”
“நானும் பார்த்தேன்” என்றான் நகுலன். “நான் சதானீகனை…” என்று சகதேவன் சொல்லத்தொடங்க “ஆம்” என்றான் நகுலன். “அது கனவா? கனவெனில்…” என்றான் சகதேவன். “கனவல்ல…” என்று நகுலன் சொன்னான். “அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். நம்முடன்.” சகதேவன் “ஏன் இருக்கவேண்டும்? இந்தத் துயரை அவர்களின் இருப்பால் பெருக்குகிறார்கள்… அவர்கள் சென்று மறையட்டும்” என்றான். “நாம் அவர்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்யவில்லை” என்றான் நகுலன். “மூத்தவரே, மெய்யாகவே உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை உள்ளதா? நாம் கொடுக்கும் அன்னமும் நீரும் அங்கு சென்று சேர்கின்றனவா?” என்றான் சகதேவன். நகுலன் “நாம் செய்யக்கூடுவது இது ஒன்றே” என்றான்.
அதன்பின் அவனுக்கு துயில் வரவில்லை. மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் காட்சிகள் அலையடித்தன. சகதேவன் “பேரரசி வந்தார்களா?” என்றான். “ஆம்” என்றான் நகுலன். “இளைய யாதவர் வந்து அவர்களை எதிரேற்றார்.” சகதேவன் “அவருக்கும் அது தேவைப்படுகிறது” என்றான். “எது?” என்றான் நகுலன். “ஆறுதல்… பேரரசி வாழ்த்துச்சொல் மட்டுமே சொல்வார்கள். அதை செவிகளால் கேட்டால் அவர் தன்னை ஆற்றிக்கொள்ள முடியும்.” சில கணங்களுக்குப் பின் நகுலன் “எனில் எவர் கடுமொழி உரைக்கக்கூடும்? எவர் தீச்சொல்லிடக்கூடும்?” என்றான். “நம் அன்னை” என்றான் சகதேவன். நகுலன் ஒரு சிறு திடுக்குறலை உணர்ந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.
நகுலன் சில கணங்களுக்குப் பின் “நாம் பேரரசரைக் கண்டு நீர்க்கொடைக்கு அவரை அழைக்கவேண்டும். அப்படி ஒரு முறைமை எஞ்சியிருக்கிறது” என்றான். சகதேவன் “ஆம், அதைத்தான் இங்கே அவையில் பேசிக்கொண்டிருந்தார்கள்” என்றான். நகுலன் “மூத்தவர் அஞ்சுகிறார்” என்றான். சகதேவன் “தீமையை அஞ்சிவாழ்ந்தவர் இன்று அறத்தை அஞ்சுமிடத்திற்கு வந்துவிட்டார்” என்றான். நகுலன் அவன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தான். “நாம் செய்யக்கூடுவது என்ன?” என்று இறுதியில் அவனே கேட்டான். “செய்யக்கூடுவது ஒன்றே. சென்று தலைவைப்பது. பெருமதக்களிற்றின் கால் எளிய உயிர்களை அறிவது என்று சொல் உண்டு. அது நிகழட்டும்.” நகுலன் “சொல்வது எளிது, அதை இயற்றுதல் அவ்வாறல்ல. பேரரசர் பித்துநிலையில் இருக்கிறார். அவரிடம் மானுடர்க்குரிய எதையும் நாம் எதிர்பார்க்கவியலாது” என்றான்.
சகதேவன் “எனில் ஒன்று செய்க, பேரரசி காந்தாரி பேரரசரை முதலில் சந்திக்கட்டும்” என்றான். நகுலன் எழுந்தமர்ந்தான். “ஆம், அது ஒரு நல்ல வழி” என்றான். “பேரரசியை சந்திக்கும் கணம் முதியவர் உளமுடைந்து கதறுவார். கொந்தளித்து கொதித்து மெல்ல ஆறி நிலைகொள்வார். அதன்பின் நாம் செல்வோம்” என்றான் சகதேவன். “அத்துடன் பேரரசியும் அரசரைக் கண்டு விழிநீர் உகுத்த பின் நிலைமீள்வார்.” நகுலன் “பேரரசி நிறைநிலையில்தான் இருக்கிறார்” என்றான். “இல்லை, அவ்வாறு இருக்கவியலாது. எந்த அன்னையாலும் அவ்வண்ணம் இருக்கவியலாது. அவர் பேரன்னை” என்றான் சகதேவன். “இளையோனே, இன்று காலை சற்றுமுன் அவர் இளைய யாதவரை அருகே கண்டார். நிறைகுடம் என்றே தெரிந்தார். வாழ்த்துச்சொல் மட்டுமே அவர் நாவில் எழுந்தது” என்றான். “ஆம், அது அவர் நிறைநிலை. பேரரசியென அவர் முழுமைகொண்டவர். அன்னை அகத்தே கொதித்துக்கொண்டிருக்கிறார். எவர்மேல் எக்கணம் அந்த அனல் பெருகிப்பொழியும் என நம்மால் சொல்லிவிடமுடியாது” என்றான் சகதேவன்.
நகுலன் “அன்னை முகத்தை பலமுறை அருகெனக் கண்டேன். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை” என்றான். “அவர் அழுதாரா?” என்றான் சகதேவன். “இல்லை” என்றான் நகுலன். “நீயும் நானும் கதறிக்கொண்டிருக்கிறோமே” என்றான் சகதேவன். “நாம் எளியோர்” என்று நகுலன் சொன்னான். “அவர்கள் பேரன்னை, ஆனாலும் உள்ளே ஓர் எளிய அன்னை உறைந்தாகவேண்டும். நெஞ்சிலறைந்து கதறுபவள். நிலையழிந்து விழுபவள். உலகையே பொசுக்கும் சினம் எழுபவள். மூன்று முழுமுதல் தெய்வங்களுக்கும் தீச்சொல்லிடுபவள்…” என்று சகதேவன் சொன்னான். “அச்சினப்பெருந்தெய்வம் எழுவதை நாம் காண்போம். ஐயமே இல்லை…” நகுலன் பெருமூச்சுவிட்டான்.
சகதேவன் “அன்னை தன் அரசரை சந்திக்கையில் அது வெளிப்பட்டால் பிழையில்லை. அவருடைய கொந்தளிப்பை தாங்கும் மலையென அவர் நின்றிருப்பார். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆற்றிக்கொள்வார்கள். அவர்களின் துயர் இன்னமும் வெளிப்பாடு கொள்ளாதது. துயர் வெளிப்பாடு கொள்கையில் குறைவது, இன்பம் வெளிப்பாட்டில் பெருகுவது. அத்தருணத்தை ஒருக்குவோம். அதன்பின்னர் அவர்களை நாம் சென்று சந்திப்போம். நாம் செய்வதற்கு உகந்தது இது ஒன்றே” என்றான். நகுலன் பெருமூச்சுவிட்டான். சகதேவன் கசப்பான சிரிப்புடன் “மைந்தரை இழக்கையில் பெண்கள் கணவர்கள்மேல் கடுஞ்சினம் கொள்கிறார்கள். வாழ்நாள் முழுக்க அவ்வெறுப்பை அவர்கள் பேணவும் செய்கிறார்கள்” என்றான்.
“ஏன்?” என்று நகுலன் திகைப்புடன் கேட்டான். “அறியேன். ஆனால் இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்” என்றான் சகதேவன். “எனில்…” என்றான் நகுலன். ஒன்றும் சொல்லாமல் சகதேவன் பேசாமல் அமர்ந்திருந்தான். “ஆம்” என்றான் நகுலன். “நாம் இன்னமும் அவர்களை சந்திக்கவில்லை.” சகதேவன் “அவர்கள் இன்று மாலை இங்கே வருகிறார்கள்” என்றான். “அவர்கள் வரவேண்டியதில்லை அல்லவா?” என்றான் நகுலன். “ஆனால் வரவிழைவதாக சொன்னார்கள்” என்று சகதேவன் சொன்னான். “அவர்களை எண்ணிப்பார்க்கவே இல்லை” என்றான் நகுலன். சகதேவன் கண்களை மூடிக்கொண்டான். நகுலன் கூரைச்சரிவை பார்த்தபடி சொல்லில்லா உள்ளத்துடன் படுத்திருந்தான்.
சகதேவன் பெருமூச்சுடன் எழுந்து சென்றான். நகுலன் துயில்வரக்கூடும் என எண்ணிக்கொண்டே படுத்திருந்தான். ஆனால் உள்ளம் விழிப்புகொண்டுவிட்டது. சென்ற பல நாட்களாக துயில் என அவன் உணர்ந்தது எல்லாம் எதிர்பாராதபோது அலையென வந்து அறைந்து சுழித்துக்கொண்டு சென்று எங்கெங்கோ ஆழ்த்தி மீளக் கொண்டுவீசும் ஒரு நிலைமறப்பை மட்டும்தான். புரவியூர்கையிலேயே துயில்கொண்டான். ஆனால் எண்ணிப்படுத்தால் துயில் மறைந்துவிடும். அவன் தன் அகத்தையே நோக்கிக்கொண்டு படுத்திருந்தான். அது எப்போது தன் மூடுதிரைகளை களையும்? எப்போது அந்த ஆழத்து நஞ்சை வெளியே எடுக்கும்? கூரிய முனையை தேடித்தேடிச் செல்லும் குழவியின் கை என அதை மட்டுமே அகம் நாடியது.
அத்தனை சொற்களும், நினைவுகளும் வெறும் நடிப்புகள் மட்டுமே. அத்தனை குவியல்களுக்கும் அடியில் அதுவே உயிருடன் இருக்கிறது. இரும்பாலும் கல்லாலும் மூடப்பட முடியாத ஒரு நோக்குபோல. அதை நோக்குவதொன்றே அதை ஒத்திப்போடுவதற்கான வழி. அதை நோக்கும்போது அது சுருங்கி மறைந்துவிடுகிறது. அப்படியே விட்டுவிட்டால் ஏதோ ஒரு கணத்தில் அது சுருளவிழ்ந்து எழுந்து சீறிக் கொத்துகிறது. இதோ அதை நோக்கிக்கொண்டிருக்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன். எக்கணம் என் நோக்கு திசைமாறும்? எப்படி நான் அதற்கான விரிசலை வழங்குவேன்?
இதை நான் ஏன் செய்கிறேன்? அத்துயரை ஒத்திப்போடுகிறேன். இல்லை. அது மட்டும் அல்ல. அத்துயருடன் விளையாடுகிறேன். உயிர்ப்புண்ணைக்கூட தொட்டுத்தொட்டு விளையாடும் மானுடக் கை. விளையாடுவது மேலும் பெரிய ஒன்றை அகற்றுகிறது. இந்த வலியைவிட, இத்துயரைவிடக் கொடியது அது. காலமெனும் பெருந்துயர். இருத்தல் என்னும் மாபெரும்துயர். காலத்தை எதுவும் நிறுத்தமுடியாது, மூன்று முதற்தெய்வங்களுக்கும் அப்பாற்பட்டது அது. காலத்தை மூவரும் மூவகையில் வென்றனர். ஒருவன் கிடந்து துயின்றான். இன்னொருவன் படைப்பில் அதை கடந்தான். பிறிதொருவன் ஆடலில் அதை சுழற்றிக் கலைத்தான். இங்கே நிறைந்திருப்பவை அவை மூன்றும். உயிர்கள் துயில்கின்றன. படைக்கின்றன. முடிவிலாது ஆடுகின்றன. துயரை வைத்து ஆடுகின்றன. சாவை வைத்து ஆடுகின்றன.
கட்டவிழ்ந்து சூழ்ந்துகொண்டது துயர். அக்கணம் ஒரு மதகுவாயிலெனத் திறந்து அதை பெருக்கெடுக்கச் செய்தது. “மைந்தா… என் மைந்தா!” என்று விம்மியபடி அவன் அழுதான். நெஞ்சத்தசையை கையால் பற்றிக் கசக்கியபடி தொண்டை இறுகி மூச்சு தெறிக்க விம்மலும் விசும்பலும் கேவல்களுமாக அழுதுகொண்டிருந்தான். சூழ்ந்திருந்த இருளில் அவன் அழுகை பரவி அதை ஈரமும் எடையும் கொண்டதாக ஆக்கியது. அது அவன் மேல் அழுந்தி படுக்கைமேல் இறுக்கியது. உடல் பெரும்பாறையொன்றால் மண்ணுள் செலுத்தப்பட்டதுபோல் அசைவிழந்தது. அவன் மெல்ல ஓய்ந்தான். மைந்தன் மைந்தன் மைந்தன் என்னும் சொல்லாக அவன் அகம் ஓடிக்கொண்டிருந்தது.
பின்னர் அவன் தன்னை உணர்ந்தபோது தனிமைதான் பெருகிவிட்டிருந்தது. ஆழ்ந்த அழுகைக்குப் பின் உணரும் விடுதலை அல்ல. மேலும் எடைகொண்டுவிட்டிருந்தான். இதை நான் கடக்கவே போவதில்லை. இது உயிர்கொல்லும் பிளவை. எனக்கு மட்டும் அல்ல இது. இங்கே அனைவருக்கும்தான். இத்தனை நேரம் அவனும் அழுதுகொண்டிருந்தான் போலும். ஆகவேதான் கிளம்பிச்சென்றான். நீயும் அழுக என விட்டுவிட்டுச் சென்றான். அவன் சகதேவனை நினைத்துக்கொண்டான். அந்தக் குடிலில் அதேபோல அவன் அழுதுகொண்டிருப்பதை.
விடிவதற்கு முன்னரே அவன் எழுந்துகொண்டான். துயிலவில்லை, ஆனால் அரைநாழிகை அவன் சித்தம் இல்லாமலாகி மீண்டது. அது துயிலுக்கிணையான ஓய்வை அளித்துவிட்டிருந்தது. அவன் வெளியே சென்றபோது விடியலின் ஓசைகள் காட்டிலிருந்து எழுந்தன. அப்பால் வேள்விச்சாலையிலிருந்து வேதச்சொல் ஒலித்தது. அவிப்புகையை முகர முடிந்தது. அரசர் வேள்விக்குச் சென்றிருப்பார் என எண்ணிக்கொண்டான். தௌம்யர் கூறும் எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்பவர் அவர்தான். பீமனும் அர்ஜுனனும் அங்கே இருப்பதாக நம்பிக்கை, அவர்கள் அவ்வப்போது காட்டிலிருந்து வந்துசென்றார்கள்.
நகுலன் புரவியை நோக்கி சென்றான். அது முதிய பெண்புரவி. அவன் அணுகுவதை உணர்ந்ததும் அது நீள்மூச்செறிந்து செவிகளை முன்கோட்டியது. அதன் முன்னங்கால் முறிந்துவிட்டிருந்தது. அதற்கு கட்டுபோட்டிருந்தனர். மூங்கில் வைத்துக் கட்டி தேன்மெழுகும் அரக்கும் களிமண்ணும் குழைத்து பற்று போட்டு இறுக்கியிருந்தனர். முன்னங்காலில் எடை செலுத்தாமல் அது நடந்தது. அவன் அதன் முன்னங்கால்மேல் உடல் அமையாதபடி அமர்ந்திருக்க பயின்றிருந்தான். போருக்குப் பின் காட்டில் விடப்பட்ட புரவிகளில் ஒன்று அது. புரவிகள் அனைத்தும் கொன்று உண்ணப்பட்டன, பெண்புரவிகளைத் தவிர.
போருக்குப் பின் அவனை எந்தப் புரவியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் அருகணையும்போதெல்லாம் அவை அச்சத்துடன் விழிசுழற்றி வாய்திறந்து நாக்கு வளைய பின்னடி எடுத்துவைத்து மெய்ப்புகொண்டன. மூச்சு சீற மெல்ல உறுமின. அவன் மென்சொல் உரைத்தும் கையசைவுகளால் அணுக்கமுத்திரை காட்டியும் அணுகும்போது மேலும் அஞ்சின. அவற்றின் அச்சம் என்ன என்று அவன் முதல் நாளுக்குப் பின்னரே உணர்ந்தான். அவ்வறிதல் அவனை சாவுக்கு நிகரான சோர்வை நோக்கி கொண்டுசென்றது. மைந்தர்துயர் இல்லையேல் அச்சோர்விலேயே உயிரை போக்கிக்கொண்டிருப்போம் என்று தோன்றியது. ஒரு துயரை இன்னொரு துயரே ஈடுசெய்ய முடியும். வெப்பம் வெப்பத்தால் ஈடுசெய்யப்படுகிறது என்கிறது மருத்துவநூல்.
அவன் அதுவரை ஊர்ந்து வந்த முதிய கடுவன்புரவி அன்று காலைதான் உயிர்விட்டது. அது நோயுற்றிருந்தது. அதன் வாயிலிருந்து கெடுமணம் எழுந்தது. அதன் வெளிப்போக்கு அழுகிய சடலம்போல் நாறியது. போரில் மானுடக்குருதியை உண்டுவந்தது அது. அதனால் காட்டுப்புல்லை அதன்பின் விரும்பி உண்ண முடியவில்லை. நத்தைகளையும் தவளைகளையும் பிடித்துத் தின்றது. சிதல்புற்றுக்களையும் புழு அடுக்குகளையும் தேடி நா துழாவியது. நீளுடல் கொண்ட ஒரு சாரைப்பாம்பை அது கவ்வி வாய்க்குள் இழுத்து மென்று உண்பதை அவன் கண்டான்.
அதை அணுக வீரர்கள் அஞ்சினர். அது மானுடரை கடித்துக்குதறி குருதி உண்டது. அது குதிரையல்ல, வேங்கை என்றனர் வீரர். அவன் அதை காட்டுக்குள் கண்டான். அவனை தாக்கவந்த குதிரை நின்று செவிகூர்ந்து பின் உறுமியபடி விலகி ஓடியது. அவன் அதை துரத்திச் சென்று பிடித்தான். காட்டுக்கொடிகளால் அதை கடிவாளமிட்டு கொண்டுவந்தான். அச்சுறுத்தி அடக்கி அதை ஊர்தியாக்கினான். அவன் சொல்லும் சொற்கள் எதையும் அது செவிகொள்ளவில்லை. அதன் பழகிய உடல் ஆணைகள் தொடுகைகளாக எழுந்தபோது ஏற்றுக்கொண்டது.
ஆனால் அது அவனை தலைவனாகவோ நண்பனாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. மானுடரை அது அடையாளம் காணவில்லை. விழியுருட்டி அனைவரையும் கவ்வ வந்தது. புல்லுண்ணவும் அன்னநீர் அருந்தவும் மறுத்துவிட்டது. அருகே நின்ற எருது ஒன்றைக் கொன்று குருதியுண்டபோது அதை மீண்டும் காட்டுக்குள் துரத்திவிடலாம் என்று யுதிஷ்டிரன் சொன்னார். சகதேவன் “அதை கொல்லாமல் காட்டில் விடலாகாது. குருதியுண்ணும் குதிரைகளின் கொடிவழி ஒன்றை அது உருவாக்கிவிடக்கூடும்” என்றான். “அதற்குள் குடியேறியிருப்பது என்ன என்று நாம் அறியோம்.”
நகுலன் அது அவ்வண்ணம் நீணாள் வாழாது என்றான். அதன் வயிற்றுக்குரியது அல்ல குருதி. குருதியை உண்ணும் விலங்குகளின் வயிற்றுக்குள் வாழும் தெய்வங்கள் வேறு. இது போரில் குருதியுண்டது, போருக்குப் பின் நிலைமீளாமல் தவிப்பது. சகதேவன் “நூல்களின்படி நாகங்கள் நஞ்சுகொண்டதும் பின்னாளில்தான். சிம்மங்கள் குருதிபழகியதும் இவ்வாறாக இருக்கக்கூடும்” என்றான். நகுலன் “புரவி தெய்வங்களால் ஆளப்படுவது. நாம் அதை இழிவுசெய்கிறோம்” என்றான்.
அதைப் பழக்கிஎடுக்க அவன் பலவாறாக முயன்றான். அவனை பலமுறை அது கடிக்க வந்தது. ஒருமுறை தோளில் குருதி பெருகும்படி கடித்தும்விட்டது. அக்குருதியை அது நா சுழற்றி உண்பதை அவன் அச்சத்துடன் நோக்கிக்கொண்டு நின்றான். அந்த நாச்சுழல்வு அச்சமூட்டியது. அதை அவன் உள்ளம் மறக்கவே இல்லை. அச்சுழலலில் தெரிந்த சுவை. தன் குருதியை தானே அவ்வண்ணம் நா திளைக்க உண்பவனாக உணர்ந்தான். உணவு செரிக்காமல் அது வயிறு வீங்கி இறந்தது. அது முந்தையநாள் ஒரு பூனையை முடியுடன் கவ்வி உண்டது என்றார்கள் ஏவலர்.
அதன் சாவுக்கணங்களில் அதன் விழிகளை அருகிருந்து நோக்கினான் நகுலன். அது அவனை வஞ்சத்துடன் நோக்கியது. அவன் அதன் முகத்தருகே தன் கையை கொண்டுசென்றான். அது தலைசுழற்றி அவனை கடிக்கவந்தது. அவன் அதன் கண்களிலிருந்த வெறிப்பை நோக்கினான். நெஞ்சு திடுக்கிட எழுந்துகொண்டான். அத்தனை புரவிகளும் அவனிடம் அதே வஞ்சத்தையே காட்டின. அவன் காலடியோசையிலேயே உடல்விதிர்க்க முகம் சுழற்றி மூச்சு சீறி மகிழும் புரவிகளை இனி பார்க்கப்போவதே இல்லை என உணர்ந்தான்.
காட்டுக்குள் அந்த முதிய பெண்புரவியைக் கண்டதும் அவன் அதை நோக்கியபடி நின்றான். அவனைக் கண்டதும் அது அருகே வந்தது. பின்னர் திகைத்ததுபோல நின்று செவிகோட்டியது. மூச்செறிந்தபடி மயிர்ப்பு கொண்டு வால்சுழற்றியது. பின்னர் மெல்ல பின்கால் எடுத்துவைத்தது. அவன் அதன் அச்சத்தை உணர்ந்து கைகூப்பினான். கண்ணீர் வார அவ்வாறே நின்றான். பின்னர் கண்களை மூடி நிலத்தில் அமர்ந்தான். அக்கணம் கத்தியை எடுத்து கழுத்தில் பாய்ச்சியிருப்பான். அவ்வாறான நூறு நூறு தருணங்களில் அவனைக் காத்த ஒன்றே அப்போதும் தடுத்தது.
அவன் அப்புரவி தன் அருகே வந்து நிற்பதை உணர்ந்தான். அது தன் உளமயக்கு என்று தோன்றியது. ஆனால் மெய்யாகவே அது வந்து அருகே நின்றிருந்தது. அவன் அதன் கழுத்தைத் தழுவியபடி “அன்னையே! அன்னையே!” என விம்மி அழுதான். அதன் கால்கள் உடைந்திருப்பதை கண்டான். அதனால் காட்டில் வாழமுடியும். ஆனால் அது மானுடருடன் குலத்தாரும் குட்டிகளும் சூழ வாழ்ந்து பழகியது. அவனுடன் வர அது விழைந்தது. அவன் அதற்கு க்ஷமை என்று பெயரிட்டான்.
க்ஷமை அவனைக் கண்டதும் மெல்ல தலையசைத்தது. அது வரவேற்பொலிகளை எழுப்புவதில்லை. எந்த உளக்கிளர்ச்சியையும் வெளிப்படுத்துவதில்லை. அதன் இயல்பான பொறைநிலையில் அனைவரையும் இணையாக நடத்தியது. அவன் அதன் கழுத்தையும் தோளையும் வருடினான். பின்னர் மேலேறி அமர்ந்துகொண்டு காந்தாரியின் குடில் அமைந்திருந்த பகுதி நோக்கி சென்றான்.
காந்தாரி துயில்கொள்ளவில்லை எனத் தெரிந்தது. அவளுடைய குடில் முன் பந்தம் எரிந்துகொண்டிருக்க அதன் ஒளியில் ஏவற்பெண்டுகள் நடமாடும் நிழலசைவு தெரிந்தது. நகுலன் அருகே சென்றபோது அவனை சத்யசேனை கண்டுகொண்டாள். ஏவற்பெண்டுகளுக்கு ஆணையிட்டபடி நின்ற அவள் அவனிடம் முகமனுரைத்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கி அருகே சென்று தலைவணங்கினான். “அரசி ஒருங்கிவிட்டார்… பிற அரசியரும் இளவரசியரும் விழித்தெழ இன்னும் பொழுதாகலாம்” என்றாள். “அவர்களுக்கு இன்று உச்சிப்பொழுதுவரை வேறு அலுவல்கள் இல்லை. பேரரசியிடம் மட்டுமே நான் சில சொல்லவேண்டும்” என்றான் நகுலன்.
“உள்ளே வருக!” என்றாள் சத்யசேனை. அவள் உள்ளே சென்று வரவறிவிக்க அவன் குனிந்து குடிலுக்குள் சென்றான். காந்தாரியின் குடில் பத்துபேர் படுக்கும் மஞ்சங்களுடன் அவள் அமர்ந்து விருந்தினரை சந்திப்பதற்குரிய பீடங்களுடன் பெரிதாகவும் விரிவாகவும் கட்டப்பட்டிருந்தது. அவள் இளஞ்சிவப்பு ஆடை அணிந்து ஓரிரு அணிகலன்களுடன் மரப்பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் முகமன் உரைத்து வணங்க அவள் அவனை வாழ்த்தி அமரும்படி கை காட்டினாள். அவன் அமர்ந்துகொண்டு “பேரரசி, தாங்கள் இன்று பேரரசரை சந்திக்கலாம். அவர் இன்னும் முக்தவனத்திற்குள் வரவில்லை. தாங்கள் சென்று அவரைச் சந்தித்து இருவராக உள்ளே நுழையலாம் என அரசர் எண்ணுகிறார். அரசரும் தங்களை சந்தித்து அடிபணிய விழைவுடன் இருக்கிறார்” என்றான்.
“ஆம், அவர் இங்கில்லை என அறிவேன்” என்றாள் காந்தாரி. “நானும் இளையோரும் சென்று அவருடன் இருக்கவேண்டும். நீர்க்கடன் என்பது ஆண்களுக்குரியது. பெண்டிர் துயர்த்துணை மட்டுமே.” நகுலன் “ஆம்” என்றான். “அதற்குமுன் நான் யாதவ அரசியையும் பாஞ்சாலத்து அரசியையும் சந்திக்கவேண்டும். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் அல்லவா?” நகுலன் மூச்சடைக்க பேசாமல் இருந்தான். “அவர்கள் இங்கிருப்பதாக அறிந்தேன்” என்றாள் காந்தாரி. நகுலன் இடறிய குரலில் “ஆம் அரசி, இங்குதான் இருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை சந்திப்பதில் அறப்பிழையோ நெறிமீறலோ இல்லை அல்லவா?” என்றாள்.
“அரசி, இது உங்கள் அரசு. இன்னும்கூட நீங்களே அஸ்தினபுரியின் பேரரசி. நீங்கள் சந்திப்பதற்கு நீங்களே முடிவெடுக்கலாம்” என்றான் நகுலன். “ஆனால்…” என்று மெல்ல சொன்னான். “அவர்கள் தங்கள் சந்திப்பை மறுக்கவியலாது. அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை நீங்கள்தான் உசாவி முடிவெடுக்கவேண்டும்” என்றான். காந்தாரி “அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் நான் அவர்களை சந்தித்தாகவேண்டும்” என்றாள். “பேரரசி, அவர்கள் இன்று மைந்தர்சிறந்த அன்னையரோ மண்வென்ற அரசியரோ அல்ல. அவர்கள் கொடுந்துயரில் மூழ்கியிருக்கிறார்கள். சாவுக்கும் மேலான துயர் அது.”
“மைந்தர்துயரை நானும் அறிவேன்” என்றாள் காந்தாரி. அப்போதுதான் தன் சொற்களின் பொருளின்மையை அவன் உணர்ந்தான். அவன் உள்ளம் குன்றியது. “நான் அவ்வாறு பொருள்கொள்ளவில்லை…” என்றான். “நான் அவர்களை சந்திக்கிறேன். என் மருகியரும் அவர்களை சந்திப்பது நன்று. அதன்பின்னர் நான் அரசரை சந்திக்கச் செல்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். நகுலன் “அவர்களில் என் அன்னை படுக்கையில் இருக்கிறார். விழிப்பு எழாதபடி அகிபீனா அளிக்கப்படுகிறது. அரசி திரௌபதியும் எங்கிருக்கிறோம் எவ்வண்ணம் இருக்கிறோம் என்று உணரா நிலையில் இருக்கிறாள்” என்றான். “ஆம், அதை உணர்கிறேன். நான் அவர்களை சந்திக்கவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஆகுக, அரசி!” என நகுலன் தலைவணங்கினான்.
அவன் வெளியே வந்தபோது சத்யசேனையும் சத்யவிரதையும் முற்றத்தில் நின்றிருந்தனர். அவன் தயங்கி நிற்க அவர்கள் அருகே வந்தனர். “அரசி…” என்றான் நகுலன். சத்யவிரதை “சொல்க!” என்றாள். “பேரரசி அன்னையையும் திரௌபதியையும் சந்திக்க விழைகிறார்கள்…” என்றான். சத்யவிரதை அவனை கூர்ந்து நோக்கினாள். “இத்தருணத்தில் அவர்கள் இருக்கும் நிலை… அதை என்னால் கூறிவிட முடியாது” என்றான் நகுலன். “அவர்கள் ஒரே ஒரு சொல்லால்கூடக் கொல்லப்படக்கூடும்… அதை மட்டுமே கூறவிழைகிறேன்.” சத்யசேனை “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றாள். நகுலன் “இச்சந்திப்பு இப்போது தேவையில்லை” என்றான். “இதை தவிர்க்க இயலாது, ஆனால் ஒத்திப்போடலாம்… அருள்கூரவேண்டும்.”
சத்யவிரதை மறுமொழி சொல்வதற்குள் சற்று அப்பால் நின்றிருந்த நிகுதி சீற்றத்துடன் உறுமலோசை எழுப்பியபடி அருகே வந்தாள். “தவிர்க்க முடியாது. இச்சந்திப்பு நிகழ்ந்தாகவேண்டும். எந்நிலையிலும் இச்சந்திப்பை தவிர்க்க முடியாது… அது என் தமக்கையின் உரிமை. அவருக்குள் யாதவநாட்டு இயக்கியிடமும் பாஞ்சாலத்துக் கொற்றவையிடமும் பேசுவதற்கு சொற்கள் இருக்குமென்றால் அவற்றை அவர் கேட்டாகவேண்டும். அவருக்கு அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை.” அவள் விம்மலுடன் தன்னை திரட்டிக்கொண்டாள். “அவர் நெஞ்சுக்குள் நஞ்சென அச்சொற்கள் இருக்கும் என்றால் அவற்றை அவர் உமிழட்டும். எவர் இறந்தாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. இத்தனை உயிர்களை குடித்துவிட்டு அவர்களுக்கு மட்டும் என்ன ஒரு வாழ்வு? பெற்ற மைந்தரையும் பெயர்மைந்தரையும் கொன்றுகளியாடியவர்களிடம் எவர் அளிகூரவேண்டும்?”
நகுலன் “மெய், ஒரு சொல்லையும் நான் மறுக்கவில்லை. உங்கள்முன் பெரும்பழி சேர்ந்தவனாகவும் கீழினும்கீழோனாகவும் மட்டுமே என்னால் நின்றிருக்க இயலும். ஒரு சொல்கூட நெறிசார்ந்து சொல்லும் தகுதி எனக்கில்லை. எங்களில் எவருக்குமே தெய்வங்களை நேர்நின்று நோக்கும் அறநிலை இல்லை. ஆயினும்…” என்றான். உளம் உலைந்து எழ இரு கைகளையும் நீட்டி “மைந்தன் என்றும் கொழுநன் என்றும் நான் இதை செய்தாகவேண்டும். அரசி உங்களிடம் அளி இரந்து நின்றிருக்கிறேன். அருள்க!” என்றான். சத்யசேனை ஏதோ சொல்ல முயல தேஸ்ரவை உரத்த குரலில் கூவியபடி முன்னால் வந்தாள். “நிறுத்துங்கள், அக்கையே. இவர்களுக்கு நீங்கள் ஒரு சொல்லும் அளிக்கலாகாது. எங்களை மீறி சொல்லளிக்கப்படும் என்றால் சங்கறுத்துச் செத்துவிழுவதே நாங்கள் செய்யக்கூடுவதாக இருக்கும்… ஆறு பாலைநிலத்துத் தெய்வங்களின் மேல் ஆணை! மூதன்னையர் மேல் ஆணை!” என்றாள்.
சத்யசேனை திகைத்து அவர்களை மாறிமாறி நோக்க நகுலன் “நன்று, அரசி. என்னால் உங்களுக்குள் பூசல் வேண்டாம். பேரரசி எண்ணியதே நிகழட்டும். அன்னையையும் அரசியையும் அவர் உடனே சந்திக்க ஒருங்குசெய்கிறேன். இதுவரை இவையனைத்தையும் கொண்டுவந்து சேர்த்த ஊழே இதையும் நிகழ்த்துக” என்றான். தலைவணங்கி தன் புரவிமேல் ஏறிக்கொண்டான். அது முறிந்த காலை மெல்ல எடுத்துவைத்து மூச்சிளைப்பின் ஒலியுடன் நடக்கத்தொடங்கியது.