அமெரிக்காவின் வண்ணங்கள்

ராஜன் சோமசுந்தரத்துடன்

அமெரிக்காவில் ஒருமாதம் ஓய்வுச்சுற்றுலா என்பது ஒரு பெரிய ஆட்ம்பரம்தான், ஒருவேளை தொழிலதிபர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே வாய்ப்பது. வாசகர்கள் ,நண்பர்கள் இருப்பதனால் எனக்குச் இயல்வதாகிறது. இம்முறை அருண்மொழி வராமலிருந்ததுதான் பெரிய குறை. அவள் இருந்திருந்தால் நான் பாட்டுக்கு இன்னமும் ‘சின்னப்புள்ளைத்தனமாக’ இருந்திருக்கலாம்.

என் வாழ்க்கையில் அவளுடைய பங்களிப்பு என்ன என்று இப்போதுதான் தெரிந்தது. நான் இயல்பாக இருக்கும் ஓர் இடம். இலக்கியவாதி அல்ல. அறிவுஜீவி அல்ல. சாதாரண அசட்டு நாரோயிலான். அபத்தமான, அசட்டுத்தனமான கருத்துக்களை அவளிடம்தான் துணிந்து சொல்லமுடியும். இந்தியப்பெண்களுக்கே உரிய ‘சரி, நமக்கு வாய்ச்சது அவ்ளவுதான்’ என்னும் மனநிலையில் அவளும் கடந்துசென்றிருப்பாள். இனி அவளில்லாமல் பயணம் இல்லை என நினைத்துக்கொண்டேன்

இந்தப்பயணம் முழுக்க முழுக்க சுற்றுலா நோக்கம் கொண்டது. இது அமெரிக்காவில் இலையுதிர்காலம். இலையுதிர்காலத் தொடக்கத்தில் காடுகளில் மரங்கள் வண்ணம் மாறி பொன்னிறமும் செந்நிறமும் கொண்டு உதிரத்தொடங்கும். காடு பூப்பதுபோல ஒரு வண்ணக்காட்சி அது. அமெரிக்காவின் சுற்றுலாக்கவற்சிகளில் ஒன்று. அதைப்பார்ப்பதே முதன்மையான திட்டம். அதன்பொருட்டு நீண்ட கார்ப்பயணம். இலக்கியச் சந்திப்புக்கள் எதையும் திட்டமிடவில்லை. எதற்கும் ஒப்புக்கொள்ளவுமில்லை. எவருக்கும் தெரிவிக்கவுமில்லை. நண்பர்களுக்காக ராலேயிலும் வாஷிங்டனிலும் இரு சந்திப்புகள். இரு சாதாரண உரையாடலகள். அவ்வாளவுதான்

இந்தப்பயணத்தின் முதன்மைக் காரணம் ராஜன் சோமசுந்தரம்தான். திருவாரூர்க்காரர். ராலேயில் வசிக்கிறார். சென்றமுறை இவருடைய இல்லத்தில் தங்கியிருந்தோம். ராஜன் அடிப்படையில் இசையமைப்பாளர். இளமையிலேயே வயலின் கற்றவர். வயலின் கற்பிக்கிறார். இவருடைய இசையமைப்பில் சங்கப்பாடல்களின் தொகுதி ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் உட்பட முக்கியமான பாடகர்கள் பாட உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞர்களின் இசைக்கோப்பு கொண்டது

அதில் ஒரு பாடல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ முன்னரே வெளியாகியிருக்கிறது. ஃபெட்னா தமிழ்ச்சங்கம் நடத்திய உலகத்தமிழ்மாநாட்டின்போது அதன் கீதமாக அறிவிக்கப்பட்டது இது. நவீனக்கலப்பிசை. அத்தனை பாடல்களும் இனியவை. ஆனால் எனக்கு மிகப் பிடித்தமானது பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ‘வேரல் வேலி’. அழகான இசைக்கோப்பு. மேலையிசையுடன் பொருந்தும் ஜெயஸ்ரீயின் குரல். அனைத்துக்கும் மேலாக ஆபேரி ராகம். ராஜன் அஷ்டவக்ர கீதைக்கும் இசையமைத்திருக்கிறார்

 

ராலேயில் ராஜன் சோமசுந்தரமும், விவேக்கும், ராஜனின் மனைவி சசி, குழந்தைகள் ஆதி, தன்யா ஆகியோரும் ,அவர் தந்தை சோமசுந்தரமும் வந்து விமானம் ஏற்றிவிட்டார்கள். ஆதி “ஸ்டார்பக் காபி’ என கோரி வாங்கினான். அது ருசிக்காக அல்ல, கௌரவத்திற்காக குடிக்கப்படுவது என்பது என் எண்ணம். காபி வாசனை ஒவ்வாமை கொண்ட எவரேனும் இருந்தால் அவர்களால் அமெரிக்க விமானநிலையங்களுக்குள் நுழையவே முடியாது.முன்னதாக நான் வந்து இறங்கியபோது ராஜனும் சசியும் விவேக்கும் விவேக்கின் மனைவியும் வந்து வரவேற்றனர். அதே நிகழ்வின் மறுபக்கம்.

ராலேயில் இருந்து நியூயார்க். அங்கே இறங்கி ஏறவேண்டும். தேங்கிக்கிடந்த மின்னஞ்சல்களை வாசித்து மறுமொழிகள் அனுப்பினேன். சினிமா வேலைகள் குவிந்து கிடக்கின்றன. சென்று இறங்கிய அன்றே கிளம்பி சென்னை. பொன்னியின் செல்வன் முதல் வேலை. மேலும் சில படங்கள். அவற்றின் இயக்குநர்களின் மின்னஞ்சல்கள். கவலைகள், பதற்றங்கள்.

 

 

 

பொதுவாக இத்தகைய நீண்ட விடுமுறைக் களியாட்டங்களுக்குப்பின் வேலைக்குத் திரும்புவது போல சள்ளைபிடித்த எண்ணம் வேறில்லை. உலகின்மீதே கசப்பு ஏற்படும். அடுத்த பயணம் பற்றிய கனவே அதைக் கடந்து நம்மை மீட்டெடுக்கச் செய்யும். ஆனால் எனக்கு அவ்வாறில்லை. சினிமாவேலைகள் எல்லாமே உற்சாகமான நினைவுகள். இன்னொரு கொண்டாட்டம் பற்றிய எதிர்பார்ப்புகள்

2004ல் என்னிடம் லோகி சொன்னார். “ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததற்காக ஒருநாளும் மனம்சலிக்க நேராது. சினிமா ஒரு பெரிய கொண்டாட்டம். அதை அறிந்தவனால் இன்னொரு வேலையைச் செய்ய முடியாது. எழுத்தாளன் நவீன வாழ்க்கையில் ச்செய்யத்தக்க தொழில் என்றால் முதலில் இதுதான் . இதைவிடப்பெரிய கொண்டாட்டம் வேண்டுமென்றால் நீ ஏதேனும் நாடோடிக் கும்பலுடன் கதைசொல்லியாக கிளம்பிச் சென்று நான்குநாளைக்கு ஒரு ஊரில் தங்கி வாழவேண்டும்”.

லோகியை நினைக்காத நாள் இல்லை. இன்றும் கனிந்த விழிகள் கொண்ட அந்த மூத்தவரை எண்ணிக்கொள்கிறேன். அந்த மனிதர் என் வாழ்க்கையில் புகுந்திராவிட்டால் இன்று என்னவாகியிருப்பேன்? வெற்றுக்காகிதங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பேனா?

நியூயார்க்- பாரீஸ் விமானத்தில் வெண்முரசு ஒரு அத்தியாயம் எழுதினேன். அரைத்தூக்கம் போல் ஒரு நிலை. விமானத்தின் இரைச்சலின் சீரான ஒழுக்கு ‘மெஸ்மரைஸ்’ செய்வது. ஆனால் அது எழுதவும் செய்கிறது. நகுலன் யுதிஷ்டிரனிடம அதிகாரவிருப்பு உள்ளுறைவதைப்பற்றிப் பேசும் ஓரு பகுதி. மிகநுட்பமானது, நானே என்னைக் கண்டுகொண்ட ஓர் இடம்.

[திருமதி விவேக், விவேக், அவர் மகள், ராஜன் சோமசுந்தரம், அவர் மனைவி சசி]

ஆச்சரியமாக அருகே இருந்த வெள்ளைக்காரி “என்ன எழுதுகிறாய்? அது என்ன மொழி?” என்று கேட்டாள். நான் விளக்கினேன். உடனே விக்கிப்பீடியாவை எடுத்துப்பார்த்தாள். முகமே மாறியது. “நான் உங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?’’ என்றாள். “என் நண்பர்களுக்கு அனுப்பினேன். என் நண்பன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசவேண்டும் என்கிறான்” என்றாள்.பொதுவாகவே அமெரிக்கர்களிடம் நூலாசிரியன் என்றால் ஒரு தனி மதிப்பு. புனைவிலக்கிய ஆசிரியனுக்கு ஒரு படிமேலான மதிப்பு. சென்ற இடமெல்லாம் எழுத்தாளன் என்றதுமே விக்கிப்பீடியாவை வாசித்துவிட்டு பாய்ந்து வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

விமானங்களில் இது இப்போதைய வசதி – வைஃபி. இது நல்லதா என்று தெரியவில்லை. அப்பயணத்தின்போது மட்டும்தான் நாம் உலகுடன் தொடர்பில்லாமல் வானில் மிதக்கிறோம். அவ்வுணர்வே மாயம் செய்வது. இன்று அத்தனைபேரும் வழக்காமான ‘சாட்’ டில் அமைந்திருக்கிறார்கள்.

அவள் காதலன் அனோஜன் பாலகிருஷ்ணன் போல முடிசூடியிருந்தான். “நான் வரலாற்று நாவல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். மகாபாரதம் வாசித்திருக்கிறேன்’ என்றான். ’ஒட்டுமொத்தமாக மகாபாரதப்போரின் அழிவை எப்படி பார்க்கிறீர்கள்?” என்றான்.

 

நான் “அப்படிச் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. அது மிகச்சிக்கலான ஒரு வரலாற்று நிகழ்வு. நான் இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன். எண்ணிப்பாருங்கள்” என விளக்கினேன். “இரு உலகப்போர்களும் பேரழிவுகள். ஆனால் முதல் உலகப்போரால்தான் உலகநாடுகளில் முடியாட்சி இல்லாமலாகியது. இரண்டாம் உலகப்போரால் காலனியாதிக்கம் மறைந்தது. மன்னர்களின் ஆணவங்களால் நிகழ்ந்த போர்களில் இறந்தவர்களில் பத்து சதவீதம்பேர் கூட முதல் உலகப்போரில் இறந்திருக்க மாட்டார்கள். காலனியாதிக்கம் உருவாக்கிய படையெடுப்புகள் மற்றும் பஞ்சங்கள் இரண்டாம் உலகப்போரைவிட இருபது மடங்கு பெரிய அழிவை உருவாக்கியவை ஆகவே அவ்விரு போர்களினாலும் அழிவல்ல, ஆக்கமே உருவாகியது என ஏன் சொல்லமுடியாது?”

அவன் “ஆம், அப்படி பார்க்கலாம்தான்” என்றான். “மகாபாரதப்போர் அழிவுதான். ஆனால் அது இந்தியாவில் இன்னொரு யுகத்தை உருவாக்கியது. பழைமையான முடியாட்சிகளுக்குப் பதிலாக புதிய முடியாட்சிகள் உருவாகி வந்தன. மௌரியப்பேரரசு உருவாவதற்கான அடித்தளம் அவ்வாறுதான் அமைந்தது என்று யோசிக்கமுடியும்… “ என்றேன். “ஆர்வமூட்டும் பார்வை” என்று அவன் சொன்னான்

பாரீஸில் இரண்டு மணிநேரம். ஒரு திரைக்கதையை கொஞ்சம் எழுதினேன். மீண்டும் விமானம். இம்முறை அவாமின் மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டேன். வாந்தி வராமலிருப்பதற்குரியது. ஆனால் நல்ல தூக்கம் அளிக்கும் – என்னைப்போல மதுவோ பிற மாத்திரைகளோ சாப்பிடாதவர்களுக்கு. பெங்களூர் வரை ஒரே தூக்கம்

பெங்களூரில் இறங்கினேன். என் பெட்டிகள் இரண்டும் வந்துசேரவில்லை. ஒருமணிநேரம் சுழல்பட்டையில் ஓடும் பெட்டிகளைப் பார்த்து நின்றேன். நெடுநாட்கள் பெண்பார்த்து மனைவி அமையாத ஒர் இளம்நண்பர் சொன்னார், அது அவ்வண்ணம் தன் பெட்டி வருவதற்காக சுழல்பட்டை முன் நிற்பதைப்போல என்று. எல்லாருடைய பெட்டிகளும் வரும். எல்லாமே நமது பெட்டிபோல் தோன்றும். நம்முடையது அல்ல என்றும் தெரியும்

என் பெட்டிகள் வரவில்லை என எழுதிக்கொடுத்தேன். அவை நியூயார்க்கில் தங்கிவிட்டிருக்கின்றன. இது இப்போதெல்லாம் அடிக்கடி நிகழ்கிறது. காரணம், விமான நிறுவனங்கள் இணைந்து விமானங்களைச் செலுத்துவது. அமெரிக்காவின் டெல்டா ஏர் பிரான்ஸின் ஏர் பிரான்ஸுடன் இணைந்து இந்த பயணத்தை அளித்தது. இது செலவுசுருக்குதல். ஆனால் மிகச்சிறந்த ஒத்திசைவு தேவையாகிறது

அந்த இணைவு நிகழாமலிருக்க காரணமாக அமைவது இன்று வலுப்பெற்றுவரும் ஒப்பந்த – தொகுப்பூதிய ஊழியர் முறை. பெரும்பாலான ஊழியர்கள் தற்காலிகமாக மணிக்கு இவ்வளவு கூலி என பேசி அமர்த்தப்படுபவர்கள்.அமெரிக்காவெங்கும் இந்த முறைதான். அவர்கள் எதற்கும் பொறுப்பு ஏற்கவேண்டியதில்லை. வேலைபோனால் அடுத்த வேலை, அவ்வளவுதான். ஆகவே எதையும் கண்டுகொள்வதில்லை. ஒரு வேலையில் நீண்டநாள் நீடிப்பதில்லை. ஆகவே அனுபவமும் பயிற்சியும் இல்லை. என்ன கேட்டாலும் விதிமுறை நூல்களை பார்ப்பார்கள், இன்னொருவரிடம் கேட்பார்கள், அல்லது ஐ டன்னோ’தான்.

ஒருவழியாக நாகர்கோயில். இன்றே அடுத்த பயணம். பெங்களூர் முதல் எங்கும் மழைதான். பயணம் முடிந்தபின் ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ள முடியவில்லை. அன்றன்றே எழுதுவதே மிகச்சிறந்தது. எழுதப்படாத பயணம் நினைவிலிருந்தும் அகன்றுவிடுகிறது. ஆனால் வெண்முரசு எழுதுவதற்கே தாவு தீர்ந்துவிட்டது

இம்முறை நீண்ட பயணக்குறிப்பாக அன்றி குறிப்புகளாக எழுதிக்கொண்டால் என்ன என்று தோன்றுகிறது. எழுத ஆரம்பித்தபின்னரே நான் என்னென்ன கண்டேன் என்பது எனக்குள் திரண்டு வரும். எழுத்தாளன் வாழ்வது இருமுறை, வாழும்போது ஒருமுறை எழுதும்போது மறுமுறை. மெய்யான இருபிறப்பாளன் அவனே

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20