அறிவுஜீவிகள்- கடிதங்கள்

நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் இணையதளத்தில் பெரும்பாலும் சீரியஸான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சில்லறை விவாதங்கள். அதில் ஒன்றுதான் வாசகசாலை பற்றிய விவாதம். நீங்கள் சொல்வது என்ன என்று அவர்களுக்குப்புரியவில்லை. விமர்சனம் வருகிறது என்றதுமே வசைபாடுகிறார்கள். பெரும்பாலும் இதெல்லாம் இப்பாடித்தான் இங்கே நடைபெறுகிறது. வேறுவழியில்லை. எதுவானாலும் முதலிலே சண்டை போடுவோம் என்னும் மனநிலை.

ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரு விஷயம் பற்றிய கட்டுரை இது.

https://www.sciencealert.com/people-who-pick-up-grammar-mistakes-jerks-scientists-find

இதில் என்ன சொல்லியிருக்கிறது என்றால் இலக்கணப்பிழைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பது ஒருவகையான மனச்சிக்கல். அது தாழ்வுணர்ச்சியிலிருந்து வருவது. அறிவார்ந்த செயல்களில் ஈடுபட முடியாமல் போகும்போது எழும் ஒரு பாவனை இது. இதைப்போன்றதுதான் பிழைகாணும் போக்கு. ஒரு பிழை கண்டுபிடித்தால் தான் பெரியவன் ஆகிவிடுவேன் என்னும் மனப்பிரமை. பெரும்பாலானவர்கள் பிழைகாணும் பரபரப்பில் உண்மையான பிழைகளை கண்டுபிடிக்காமல் தாங்களே பிழைகளை கற்பனைசெய்துகொள்கிறார்கள். இந்த மனச்சிக்கலை பொருட்படுத்தாமல் போவதே நல்ல வழி

ஆர்.ராமச்சந்திரன்

***

இனிய ஜெயம்

அரவிந்தன் கண்ணையன் அவர்களின் கடிதம் கண்டேன். நான் குறிப்பிட்டது திட்டவட்டமாக அவரைத்தான் எனில் அவர் பெயரை குறிப்பிட்டு உங்களுக்கு அல்லது அவருக்கோ கடிதம் எழுதுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. [அவர் கோபித்துக் கொள்வாரா என்ன? :) ] ‘கூறுகெட்ட’ தனமாக எல்லைகளை கடப்பவன் நான் என்பதை நீங்களும் அறிவீர்கள் :) நான் சுட்டியது ஒரு குறிப்பிட்ட வகையான தன்மையை.

அறிவுஜீவி, கலைத்து அடுக்கும் எதையும் அதை தொடர்ந்து ஆய்வு செய்து பின்தொடர்ந்து கொண்டிருப்பவனாக இருப்பான். அன்றாட புற சூழல் புற கருத்தியல் மோதல்கள் என்னவாக இருக்கிறது என்பதை அவன் பொருட்படுத்துவதில்லை. அன்றாடம் நிகழும் ஒன்றுக்கு எதிர்வினையாக ஒன்றை உருவாக்கி முன்வைத்து விட்டு ஓய்ந்து அமர்ந்துவிட மாட்டான்.

இதில் ஈடுபடுபவர்களைத்தான் நான் பாப்கார்ன் அறிவுஜீவிகள் என்றேன். இன்றைய சூழலில் அல்ல கொஞ்ச மாதம் முன்பு திருக்குறள் குறித்து பேசி நாகசாமி அவர்கள் சர்ச்சையில் சிக்கினார் அப்போதும். உதாரணமாக நீங்கள் சுட்டி அளித்த அரவிந்தன் கண்ணையன் அவர்களின் கட்டுரையே எடுத்துக் கொள்வோம், இத்தனை தரவுகளையும் வாசித்து ஒரு கட்டுரை எழுத அதன் பின்னால் சிலமாத உழைப்பு இருக்கிறது. அதே போன்றதுதான் நாகசாமி அவர்களுடையதும். அவருடையது வாழ்நாள் உழைப்பு . ஒரு மாத மேஜை வாசிப்பு உழைப்பின் முன் தகர்ந்து போகும் பணிதான் நாகசாமி அவர்களின் வாழ்நாள் பணியா என்ன?

நான் சுட்டும் பாப்கார்ன் அறிவுஜீவிகள் மண்டைக்குள் பிரத்யேகமான சாப்ட்வேர் உண்டு. ஜாரட் டைமண்ட், பில் ப்ரைசன் நேரு மோதி அம்பேத்கர் ஷேக்ஸ்பியர் ஜீசஸ் என எவரை அவரது மண்டைக்குள் உள்ளிட்டாலும் ஒரே மாதம்,ஐநூறு ‘ஆதாரபூர்வ தகவல்’ அடிப்படையில் ஜாரட், ப்ரைசன் பிறர் எல்லாமே மண்டையில் மசாலா இல்லாத பேப்பர் பலூன் என அவர் நிறுவி விடுவார். நாகசாமி போன்ற சில விஷயங்களில் கொஞ்சம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை நெருங்கிவிடுகிறார். மற்றபடி உங்கள் நண்பர் பாப்கார்ன் அறிவு ஜீவி அல்ல என்பதை இந்தக் கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் .

தமாஷ் அறிவு ஜீவிகள் என யாரை சொல்கிறேன் எனில்,உதாரணமாக ஒரு அறிவுஜீவி ஆதாரபூர்வமான தரவுகள் அடிப்படையில் விவேகானந்தர் தனது கருத்துக்கள் களப்பணிகள் வழியே இந்து மதத்தில் உருவாக்கிய சீர்திருத்தங்களை செய்த களப்பணிகளை ஒரு பிரமாதமான கட்டுரையாக எழுதி, அதன் தொடர்ச்சி இது, ஆக இந்துக்கள் அனைவரும் மாரிதாஸ் பின்னால் அணி திரளவும் என்று முடித்தால் அது எத்தனை தமாஷாக இருக்கும்? இந்த தமாஷ்கள் அவர்களின் அரசியல், அதிகாரத்துக்கு வரும் முன்பு அறிவு ஜீவிகளாக மட்டுமே இருந்தவர்கள். இன்று தமாஷ் இணைந்து விட்டது :) இதிலும் கலைத்து அடுக்குபவர் தனது பணியில் தீவிரம் கொண்டவர் எனில் என்னவாக இருப்பார் என்பதற்கு உதாரணம் சிலைத் திருடன் நூல் எழுதிய எஸ் விஜயகுமார். அவரது நூலை இந்த அறிவு ஜீவிகள் கொண்டாடினார்கள். அந்த நூலில் இந்திய அரசாங்கம் திருடுபோகும் இந்திய கலைச் செல்வங்களை தடுப்பதில் எங்கெல்லாம் ஓட்டை விட்டிருக்கிறது என்று தரவுகள் உண்டு. இன்றைய அரசாங்கம் அந்த ஓட்டையை இன்னும் கொஞ்சம் பெரிதாக மாற்றி இருக்கிறது. நூலாசிரியர் இந்த அரசு கொண்டு வந்த சட்டத் தளர்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். காரணம் இவர் பாப்கார்ன் அறிவு ஜீவி அல்ல என்பதே. தமாஷ் அறிவு ஜீவி தரப்பு இதை சைலன்ட் மோடில் போட்டு விட்டு மாரிதாஸ் பின்னால் நின்று கூவிக்கொண்டு இருக்கிறது. இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே இப்படி பல தமாஷ்களை சொல்லலாம். ஆக உங்கள் நண்பர் இந்த தமாஷ் அறிவுஜீவிகள் தரப்பிலும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.:)

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைமுற்போக்கின் தோல்வி ஏன்? -1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43