நமது ஊற்றுக்கள்
சுப்பு ரெட்டியார்- கடிதம்
ஐயா வணக்கம்.
தங்களின் இணைய பக்கத்தில் சுப்புரெட்டியார் அவர்களின் நினைவு குமிழிகள் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். அந்நூலில் திருச்சி மாவட்டம் அருகே உள்ள முசிறி பற்றி படிக்க நேர்ந்தது.
நான் ஒரு வார காலமாக அந்த நகரில் தங்கியிருக்கிறேன். 1930 களில் சுப்புரெட்டியார் தங்கி படிக்க உதவி செய்த கே .ஆர் என்று அழைக்கப்படும்திரு ராமச்சந்திர ஐயர் பற்றிய தரவுகளை நான் பல்வேறு மூத்தவர்களிடம் விசாரித்தேன். யாருக்கும் அவரைப்பற்றி நினைவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறுகிறார்கள். நூறு வருடத்திற்குள் ஒரு மனிதனை இந்த உலகம் மறந்து விடுமா?
நன்றி தங்களின் குறிப்புகளுக்கு…
தமிழ்சங்கர்
அன்புள்ள தமிழ்,
ஒரு வருடக்காலத்திற்குள் மறந்துவிடும் என்பதைத்தானே கண்டுகொண்டிருக்கிறோம்? சுப்புரெட்டியாரையே சிலருக்குத்தான் தெரியும்
ஜெ
அன்புள்ள ஜெ
ந.சுப்புரெட்டியாரின் நூலை தரவிறக்கி வாசித்தேன். எளிமையான நடை. ஆகவே ஒரே வீச்சாக அவருடைய பயணக்குறிப்புக்களை வாசிக்கமுடிந்தது. மிக முக்கியமான நூல். ஏனென்றால் இன்றைக்கு நாம் நம் பண்பாட்டுச்செல்வங்களை இழந்துகொண்டிருக்கிறோம். அவற்றைப்பற்றிய பேச்சுக்களே இல்லை. உதாரணமாக தினத்தந்தி 2000 வாக்கில் வரலாற்றுச்சுவடுகள் என்னும் நூலை வெளியிட்டது. 100 வருட தமிழக வரலாறு அது. ஆனால் முழுக்கமுழுக்க சினிமா வரலாறு. கொஞ்சம் அரசியல். அவ்வளவுதான். இந்நிலையில் சுயமுயற்சியால் தமிழக்க்கோயில்களையும் அதைச்சூழ்ந்துள்ள வரலாற்றையும் விரிவாகப்பதிவுசெய்துள்ள சுப்புரெட்டியார் போன்றவர்கள் போற்ற்ற்குரியவர்கள்
ராஜசேகர்