மகரிஷி கடிதங்கள்

அஞ்சலி:மகரிஷி

அன்புள்ள ஜெ..

 

எழுத்தாளர் மகரிஷி அக்காலத்தில் வெகுஜன எழுத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். குமுதம் இதழின் ஆஸ்தான எழுத்தாளர். ரஜினிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய புவனா ஒரு கேள்விக்குறி இவரது கதைதான்..

 

இவர் நல்ல இலக்கிய வாசகர் என்றாலும் சிற்றிதழ் சூழலில் இயங்கியவர் அல்லர் என்பதால் இவரது,மறைவு குறித்து இலக்கியவாதிகள் மத்தியில் பெரிய எதிர்வினையை எதிர்பாரப்பதற்கில்லை.

ஆனால் அவர் இயங்கிவந்த வெகுஜனபத்திரிக்கைகளின் எதிர்வினை ஏமாற்றம் அளித்தது.

 

யாரோ ஒரு எழுத்தாளர் மறைந்ததுபோல குமுதம் வலைத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. குமுதம் வாசகர்களுக்கு மகரிஷி முக்கியமான பெயர். அதை தற்போதைய குமுதம் பொறுப்பாளரககள் உணரவில்லை.

 

எழுத்தாளர் பாலசுப்ரமணியன் அய்யர் மறைந்தார் என டைம்ஸ் இதழ் தலைப்பிட்டிருந்தது. தமிழ் இந்து இதழ் அப்படி தலைப்பிடாவிட்டாலும் பாலசுப்ரமணி என்றுதான் செய்தி முழுதும் குறிப்பிட்டுள்ளது.

 

இவையெல்லாம் பொதுவான வாசகர்கள்  மனதை புண்படுத்தின.

 

இந்த சூழலில் சற்றும் எதிர்பாராமல் உங்களிடமிருந்து ஆழமான அஞ்சலிக்கட்டுரை வெளிவந்திருந்தது.

 

மிகவும் நனறி

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ,

 

மகரிஷி பற்றிய குறிப்புக்கு நன்றி. இதுவே அவரைப்பற்றித் தீவிர இலக்கிய முகாமிலிருந்து வந்த முதல் குறிப்பு என நினைக்கிறேன். தீவிர இலக்கிய முகாமில் அங்குள்ள ஜாம்பவான்களைப்பற்றிப் பேசவே ஆளில்லாத நிலையில் மகரிஷி பற்றியெல்லாம் பேச யார்?  நீங்கள் அவரை மிகக்கறாராக, ஓர் எல்லையில் நிறுத்தி வரையறை செய்கிறீர்கள். அவர் நவீன இலக்கியத்திற்குள் வரமாட்டார், ஆனால் அவர் எழுதிய சில கதைகள் நவீன இலக்கியப்பண்புகொண்டவை, அப்படித்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த அளவிலாவது அவரைப்பற்றிய பேச்சு உருவானதற்கு நன்றி

 

எஸ்.சேஷகிரீசன்

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் கட்டுரையில் ஒரு வரி. சிற்றிதழ்ச் சூழலில் எழுதியமையாலெயேஎ நவீன இலக்கியச் சூழலுக்குள் திகழும் பல படைப்புக்களைவிட மகரிஷி எழுதிய படைப்புக்கள் மேலானவை. உண்மை. இதே அளவுகோலின்படிச் சொல்லத்தக்க படைப்பாளிகள் பலர் நம் சூழலில் உள்ளனர். சிற்றிதழ்ச்சூழலில் எழுதுவது, சூடோ இலக்கிய மொழியை கையாள்வது ஆகியவற்றின் வழியாகவே இலக்கிய அங்கீகாரம் பெற்றவர்கள் பலர் இங்கே உள்ளனர். வணிக எழுத்திலுள்ள ஒழுக்கும் அழகும்கூட இல்லாத பாமரப்படைப்புக்கள் அவை

 

ஜெயராமன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23
அடுத்த கட்டுரையாதும் ஊரே