காடு இரு கடிதங்கள்

 

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

,அன்புள்ள ஜெ

 

வணக்கம். நான் மாதவி,

 

வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை. கிரிதரன் போல நானும் முதலில் காடு கண்டு பயந்தேன். பின்பு காடு எனக்குள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.காடு என்பது குறுகிய எல்லைகளுக்குள் அடைக்க முடியாது,நம் மனமும் அப்படியே.

 

பருவ நிலைகளுக்கு ஏற்ப காடு எவ்வாறு மாறுகிறதோ, அதேபோல் தான் கிரியின் மனமும். குட்டப்பன் என்ற மனிதனிடம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய எளிய தீர்வு இருந்தது. அவரது சமையல் மிகவும் பிடித்துப் போனது.

 

நடுவே தாங்கள்  குறிப்பிட்ட வன நீலி கதை படித்து இரவில் காய்ச்சல் ஏற்பட்டது. வனநீலிக்கு நான் என் மனதில் ஒரு கொடூர பிம்பம் கொடுத்துவிட்டதால் என்னவோ, நீலியை பற்றி படிக்கும்போதும் அதே பிம்பம் தோன்றியது.

 

ஆனால், கிரிதரன் காட்டிற்கு அம்மாவுடன் இடம்பெயர்ந்து வந்து வருவதாக கூறும்போது வேண்டாம் என பதறும் போது  நீலி ஒரு தேவதையாகவே எனக்கு தோன்றுகிறாள்.

 

அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும் கிரியின் மீது அளவுகடந்த அன்பும் புரிதலும் நீலீக்குள் இருக்கிறது. எவ்வாறு அப்புரிதல் ஏற்பட்டது? என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

 

நீலி ஏன் இறந்து போய்விட்டாள் என்ற ஆதங்கமும், கிரியும் அவளும் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையும் எனக்குள் எழுந்தது. இந்த கற்பனை சரியா தவறா என்று தெரியவில்லை.

 

கிரியை தவிர வேறு உலகமே தெரியாத வேணி,தேவாங்கை மகள் போல பாவிக்கும் ரெசாலம், அப்பாவை குறை கூறாமல் வீட்டு பொறுப்பை ஏற்க நினைக்கும் கிரியின் மகன்,தன் மகனை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் கிரியின் அம்மா அனைவருமே எதார்த்தத்தின் உச்சகட்டம்.

 

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இப்படி ஒரு படைப்பை முழுவதுமாக படித்ததில் மகிழ்ச்சி.இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு அளித்த தங்களுக்கு நன்றி.

 

காடு என்னை பொருத்தவரை ஒரு சிறந்த வாழ்நாள் அனுபவம். நான் தற்போது இன்றைய காந்தி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

நன்றி,

மாதவி சிவதாணு.

 

 

அன்புள்ள மாதவி

 

காடு முதலில் ஒரு நேரடியான காதல்கதையாகத் தோன்றும். அதில் நீலி உட்பட அனைத்துமே வெவ்வேறு குறிப்புப்பொருட்கள் கொண்டவர்கள். அதனுடன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும்தோறும் அது தெளிவுறும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

 

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

காடு நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். என்னால் என் உணர்வுகளை எழுதமுடியுமென தோன்றவில்லை. ஏன் எனக்குக் காடு இவ்வளவு முக்கியமாக இருந்தது என்று மட்டும் எண்ணிப்பார்க்கிறேன். நாம் வாழும் உலகம் கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் காடு கட்டுப்பாடுகள் இல்லாதது. அது ஒரு கொண்டாட்டம். காட்டுக்குள் சதுரம் நீள்சதுரம் முக்கோணம் போன்ற வடிவங்கள் இல்லை என காடு நாவலில் ஓர் இடத்தில் வருகிறது. என்னைப்போன்ற ஒரு பெண் காட்டுக்குள் செல்லவே முடியாது. தனியாகச் செல்வது கனவிலும்கூட கிடையாது. ஆகவே காடு எனக்கு ஒரு ரகசியக்கொண்டாட்டமாக இருக்கிறது என நினைக்கிறேன்

 

உஷா விஜயகுமார்

 

அன்புள்ள உஷா

 

காடுபிடித்தல், காடுகேறுதல் என்று பல சொல்லாட்சிகள் மலையாளத்தில் உண்டு. கட்டுமீறிப்போதல், வடிவமழிந்துவிடுதல் என்னும் பொருள்கொண்டவை அவை

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஇசை- கடிதம்
அடுத்த கட்டுரைகுருதி [சிறுகதை]