‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18

பகுதி மூன்று : பலிநீர் – 5

படகில் ஏறி அமர்ந்ததுமே கனகர் பிறிதொரு உளநிலையை அடைந்தார். கங்கைக்கரையிலிருந்து கிளம்பிய இறுதிப்படகில் அவர் இருந்தார். அனைத்து இளவரசிகளும் படகில் ஏறிக்கொண்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னர் தன் படகில் ஏறி படகோட்டி அமைத்த விசிப்பலகையின்மேல் எடைகொண்ட உடலை அமைத்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டு பின்னால் சாய்ந்தார். அவருக்கு முன்னால் நிழலுருவக் காட்டுடன் நாணல்கரை கொண்ட நிலம் மாபெரும் மரக்கலம்போல் ததும்பி அலைகொண்டபடி நின்றது. அவருடைய ஆணைக்காக படகோட்டி காத்திருந்தான். ஏவலன் அருகே வந்து மெல்ல தொண்டையொலி எழுப்பியதும் நிமிர்ந்து பார்த்தார். “கிளம்பலாமா என்று கேட்கிறார்கள், அமைச்சரே” என்றான். “ஆம், ஆம், கிளம்பலாம்” என்றபின் அவர் பெருமூச்சுவிட்டு மீண்டும் உடலை தளர்த்திக்கொண்டார்.

அவர் முன் விழிநிறைத்து நின்றிருந்த மாபெரும் நிலம் அசைந்து பின்னகர்ந்து செல்லத்தொடங்கியது. நீரலைகளின் கிளைப்பொலி விலகிச்சென்றது. படகின் விலாவில் அறையும் சிற்றலைகளின் ஓசையும், துடுப்புகள் நீரில் விழுந்து சுழன்று மேலெழும் சலசலப்பும் மட்டும் அவரைச் சூழ்ந்திருந்தன. காற்றில் விரிந்த பாய் விம்மிப் புடைத்து வளைவு கொண்டு வடங்களை இறுக்கி வலியுடன் முனக வைத்தது. வெவ்வேறு பலகைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டும், முட்டிக்கொண்டும் ஒலி எழுப்பின. முறுகலோசை, இறுகலோசை, உரசலோசை, தேய்வோசை, வழுக்கலோசை, குழைதலோசை. ஓசைகள் ஒவ்வொன்றும் ஒரு சொல். அனைத்தும் வலி வலி என்றே கூவின. அப்படகு சற்றும் விரும்பாத ஒரு பயணத்தை செய்துகொண்டிருப்பதாக உணர்ந்தார். அதன் ஒவ்வொரு பலகையும் அதை முன்செலுத்தும் துடுப்புக்கும் பாய்க்கும் எதிராக முனகிக்கொண்டிருந்ததுபோல் தோன்றியது.

கண்களை மூடி அந்த ஒலியை கேட்டுக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு கணத்தில் அஸ்தினபுரியின் அரண்மனையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தார். சாளரக்கதவுகள் காற்றில் அசைகின்றன. கீல்கள் முனகிக்கொள்கின்றன. நூற்றுக்கணக்கான கலங்கள் முட்டி ஒலிக்கின்றன. குறடுகள் ஓசை எழுப்புகின்றன. அவ்வரண்மனை காற்றில் ஒழுகிச் சென்றுகொண்டிருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு பொருளும் அவ்விழுப்புக்கு எதிராக வலு கூட்டுகிறது. ஒன்றையொன்று பற்றிக்கொண்டும் கவ்விக்கொண்டும் செறுத்து நிற்கிறது. ஆனால் அவ்வொழுக்கு மிகப் பெரியது. தெய்வங்களாலும் நிறுத்த இயலாது. அவ்வொழுக்கிலிருந்து தப்ப ஒன்றே வழி. மூழ்கிவிடுவது, மண்ணுக்குள் எவரும் விழிகளாலோ சிந்தையாலோ தொட முடியாத ஆழத்தில். அங்கு அசைவில்லை. எங்கும் செல்ல வேண்டியதில்லை. அமைந்து செறிந்து ஊழ்கத்திலென காலம் கடந்து கிடக்கலாம்.

என்றோ ஒருநாள் மேலிருந்து அகழ்ந்து இறங்கி வருவார்கள் மானுடர்கள். வேறு உலகத்திலிருந்து, வேறு மொழிகளுடன், வேறு எண்ணங்களுடன். ஆனால் நம் முகங்களுடன், நம்மை அறியாத விழிகளுடன். அஸ்தினபுரியின் அரண்மனை முகட்டுக் குவைகளினூடாக துளைத்து இறங்கி வந்த ஒருவனை அவர் கண்டார். அவன் அவர் விழிகளை சந்தித்ததும் திடுக்கிட்டு பின்னகர்ந்தான். எவரிடமோ இங்கே என்று சுட்டிக்காட்டினான். மேலும் சிலர் அணுகிவந்தனர். அவரைச் சூழ்ந்து நின்று கைசுட்டி நோக்கி அறியா மொழியில் பேசிக்கொண்டனர். அவரை மேலும் அணுகி வந்து கூர்ந்து நோக்கினர். அவர் கால்களையும் கைகளையும் தொட்டனர். அவர் தான் கல்லாகிவிட்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் எப்படி அவர்களை என்னால் நோக்க முடிகிறது? கல்லில் விழி எழுமா என்ன? விழி எங்கும் எழும். கல்லில் மரத்தில் சிப்பியில்… எழவேண்டும் என எண்ணினால் எங்கும் விழி மலர்ந்துவிடும். காளான் பூப்பதுபோல…

அவர் விழித்துக்கொண்டபோது படகு கங்கையின் நடுவே இருண்ட நீரின்மேல் ஒழுகிச் சென்றுகொண்டிருந்தது. வானம் தீட்டப்பட்ட இரும்பென ஒளிகொண்டிருந்தது. கரையில் நின்றிருந்தபோது இந்த நீர்தான் ஒளி வழிவெனத் தெரிந்தது. இதன் மீதேறி வந்தபின்னர் எப்போது இது இருள் கொண்டது? அவர் வானில் நிறைந்திருந்த விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தார். மழைமுகில்கள் அகன்றுவிட்டிருக்கின்றன. ஆகவேதான் விண்மீன்கள் எழுந்துள்ளன. விண்மீன்கள் எப்பொருளையும் அளிக்காத சொற்கள் போலிருந்தன. மாபெரும் காவியம் ஒன்றை முன்பின் தொடர்பற்ற சொற்களின் பெருக்காக மாற்றிவிட்டதுபோல். அறியாத மொழிதான், ஆனால் முன்னோர் ஊழ்கம் வழியாக அதில் சிலவற்றை மட்டும் படித்தறிந்திருக்கிறார்கள். அப்பொருளை உதறி வெறுமனே விழிகளால் வெறித்துக்கொண்டிருக்கிறேன் நான்.

முகில் விலகியதனால் போலும் காற்று வலுத்தொலித்து ஓடியது. அதை அள்ளி நடனக்கைகள்போல் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்த பாய்களுக்குள் சுழற்றிச் செலுத்திக்கொண்டு தன்னை முன்செலுத்திக்கொண்டிருந்தது படகு. வானம் ஊதிப் பறக்கவைக்கும் சிறு சருகு. அவர் பெருமூச்சுடன் எழுந்தமர்ந்தார். “ஏதேனும் அருந்துகிறீரா, அமைச்சரே?” என்று ஏவலன் கேட்டான். “ஆம், குளிர்ந்த நீர்… இன்நீரெனில் நன்று” என்று அவர் சொன்னார். “அவ்வாறே” என்று ஏவலன் வணங்கி திரும்பிச்சென்றான். அவன் கொண்டு வந்த குடுவையை வாங்கி இன்நீரை அருந்தி நெஞ்சையும் வயிற்றையும் நிரப்பிவிட்டு அருகே வைத்தார். பின்னர் “எத்தனை இளவரசியர் நீரில் விழுந்திருப்பார்கள்?” என்றார். ஏவலன் பேசாமல் நின்றான். “எவரிடமேனும் கணக்கேதும் இருக்க வாய்ப்புண்டா?” என்றார். “இல்லை. அங்கு சென்ற பின்னர் கணக்கெடுக்கவேண்டும். சிலநூறு பேர் விழுந்திருக்கக் கூடும்” என்று அவன் சொன்னான். “கரையிலிருந்து நடு ஆற்றுக்கு வந்த பின்னர் எவரும் நீரில் குதிக்கவில்லை.”

அது கனகருக்கு விந்தையாக இருந்தது. “ஏன்?” என்றார். அப்பால் நின்றிருந்த படகோட்டி “பொதுவாக கங்கைக்கு உள்ளே வந்த பின்னர் எவரும் நீரில் பாய்வதில்லை, அமைச்சரே” என்றான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “அறியேன். ஆனால் அது வழக்கமில்லை என்று மட்டும் அறிந்திருக்கிறேன்” என்றான் படகோட்டி. கனகர் விந்தையான உளஎழுச்சியுடன் “நான் சொல்கிறேன். ஏனெனில் கங்கையின் நடுவில் வந்த பிறகு கரை அகன்றுவிடுகிறது. அங்குள்ள வாழ்க்கையும் அங்கு சொல்லப்பட்ட நெறிகளும் பொருளற்றவையாகிவிடுகின்றன. எனவே அங்குள்ள துயர் முற்றாக மறைந்துவிடுகிறது” என்றார். படகோட்டி புன்னகைத்து “எனில் கரை செல்லாமல் கங்கையிலேயே உலவிக்கொண்டிருக்க வேண்டும். கடல் முதல் காசி வரை மீண்டும் காசி முதல் கடல் வரை. ஒருபோதும் மண்ணை உணரக்கூடாது. வாழ்வு துயரற்றிருக்கும்” என்றான்.

அவன் சொல்வதில் இருந்த பொருளின்மையை உணர்ந்து கனகர் புன்னகைத்ததுமே அது பொருள் மிக்க கூற்றாகவும் தோன்றியது. உளமெழுந்து பறக்க எழுந்துகொண்டு “ஏன் கங்கையிலேயே வாழக்கூடாது? அது இயல்வதுதானே?” என்றார். “மாலுமிகள் எத்தனையோ பேர் கரையணைவதே இல்லை. கரையணைந்தாலும் மிக விரைவிலேயே மீண்டும் கலத்திற்கு திரும்பிவிடுகிறார்கள்.” படகோட்டி “ஆம். அது இயல்வதுதான், அமைச்சரே. ஆனால் மண்ணிலுள்ள மானுடர் அனைவரும் கங்கைக்குள் வாழமுடியாதல்லவா?” என்றான். அவர் மீண்டும் அமர்ந்துகொண்டு “மாலுமிகள் துயரற்றவர்களா என்ன?” என்றார். படகோட்டியின் முகம் மாறுபட்டது. “பின்னர் இவ்வினா எழும்வரை நான் எண்ணியதில்லை, அமைச்சரே. ஆனால் மெய்யாகவே மாலுமிகள் துயரற்றுதான் இருக்கிறார்கள்” என்றான்.

கனகரின் உள்ளம் படபடத்தது. அமர்ந்துகொண்டு “சொல்” என்றார். “அவர்கள் இன்று மட்டுமே கொண்டவர்கள். நேற்றும் நாளையும் அற்றவர்கள். ஆகவே அவர்களுக்கு கடன் கொடுக்கலாகாது, அவர்களின் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லையென்று கரையில் கூறப்படுவதுண்டு. கரையில் அவர்கள் கொள்ளும் உறவுகளை நீரில் எழுந்ததுமே மறந்துவிடுவார்கள் என்று பெண்டிரை எச்சரிக்கிறோம். மாலுமிகளும் தாங்கள் கிளம்பியதுமே தங்களை மறந்துவிடும் பரத்தையரைதான் விரும்புகிறார்கள்.” கனகர் மூச்சுத்திணறலுடன் “ஆம்!” என்றார். “அவர்கள் சூதாடுகிறார்கள், மிஞ்ச மிஞ்ச குடிக்கிறார்கள். நாளையென ஒன்றில்லையென்று இன்று களியாடுகிறார்கள். கடலுக்குள் சென்று அமைந்த எந்த மாலுமியும் கரை வந்து வாழ்ந்ததில்லை. கரையில் இன்பமொன்று இருப்பதாகவே மாலுமிகள் உணர்ந்ததில்லை. எனில் அவர்கள் கரையிலிருப்பவற்றைவிட மேலான வாழ்க்கை ஒன்றை வாழ்கிறார்கள் என்பதுதானே பொருள்?” என்றான்.

“மெய்தான்” என்றபின் கனகர் மீண்டும் எழுந்துகொண்டார் “ஏனெனில் நீருக்குமேல் அரசுகளில்லை. நகரங்களுமில்லை. அரசுகள் இல்லை எனில் நெறிகள் இல்லை. நெறிகள் தேவையில்லை எனில் வரலாறில்லை. வரலாறில்லை எனில் நாளை எனும் கனவும் இல்லை. எத்தனை பெரிய விடுதலை!” என்றான். “ஆம்!” என்றார் கனகர். எண்ண எண்ண அவனுக்குள் சொற்கள் பெருகின. “ஏன் அங்கு அரசுகளில்லை? ஏன் எனில் அங்கு நீர் நிலையற்றிருக்கிறது. அதன்மேல் மிதக்கத்தான் முடியுமே தவிர அடித்தளங்களை அமைக்க இயலாது. வேரூன்ற இயலாது. வேரின்மைபோல் விடுதலை வேறில்லை.” அவன் நெஞ்சில் கைவைத்து மெல்ல கூவினான். “தெய்வங்களே, இதை எப்போது உணர்ந்தேன்! இத்தனை காலம் எப்படி உணராமல் இருந்தேன்!”

கனகரால் அமர இயலவில்லை. சரிந்திருந்த வடத்தைப் பிடித்தபடி தனக்கு சுற்றும் அலையடித்த அலைவளைவுகளை நோக்கினார். நிலையின்மையைத்தான் இத்தனை காலம் அஞ்சியிருந்தேனா? இத்தனை காலம் நிலையின்மையிலிருந்து தப்பத்தான் முயன்றேனா? இத்தனை அறிதல், இவ்வளவு சொற்கள், எண்ணற்ற நெறிகள் அனைத்தும் இந்நிலையின்மையிலிருந்து எழுந்து ஒரு நிலைக்கோளை உருவாக்கிக் கொள்வதற்காகத்தானா? எத்தனை எளியவர் மானுடர்! அங்கே மனிதர்கள் உருவாக்கியிருக்கும் அனைத்து நகரங்களும் நிலைக்கோளுக்கான அவர்களது கனவுகள் மட்டுமே. அந்நகரங்கள் ஒன்றுடன் ஒன்று போர்புரிவதுகூட அறுதியாக நிலைகொண்டு விடவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் மண்ணும் அலைகொள்வதே. சற்று விசை குறைந்த அலை. காலத்தை இன்னும் விரித்து நீட்டிக்கொண்டால் அந்நகரங்களும் மரக்கலங்களே. அவற்றில் கொடிகள் பறப்பதைக் கண்டாவது அதை உணர்ந்திருக்கவேண்டும்!

அவர் எண்ணங்கள் மேலும் கட்டுமீறி செல்லத்தொடங்கின. அவருடைய பித்துடன் தானும் உடன் வந்தவனாக விழிகள் ஒளிகொண்டு நின்றான். அறிஞர்கள் இத்தனை காலம் சொன்னவை அனைத்துமே நிலைகொள்க நிலைகொள்க என்றுதான். வேதம் விண்ணிடம் முறை கொள்வது இங்கே நிலைபெறச்செய்க என்று மட்டுமே. சொற்கள் நிலைகொள்க! நெறிகள் நிலைகொள்க! குடி நிலைகொள்க! குருதி நிலைகொள்க! எது நிலைகொள்ளல்? நிலைகொள்ளாமை என்னும் பேரருள் மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கையில் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து தெய்வக்கொடை அனைத்தையும் மறுத்து இங்கு நோக்கி நின்றிருக்கிறான். உண்மையில் இங்கிருந்து நான் எங்கும் மீள விரும்பவில்லை. கலம் இப்படியே கடலுக்குச் செல்லட்டும் என்றே ஆணையிடுவேன். “நான் நிலைகொள்ள விரும்பவில்லை. இங்கே வேரூன்றி எழுந்த அனைத்தையும் உதறிச்செல்லவே எண்ணுகிறேன்” என்றார்.

படகோட்டி “நாம் செல்லும் ஒரு காலம் வரும், அமைச்சரே” என்றான். அனைத்து அகச்சொற்களும் ஒருகணத்தில் விசையழிய கனகர் நடுங்கும் கைகளுடன் வடங்களைப் பற்றியபடி நின்றார். பின்னர் கால் தளர்ந்து பின்னகர்ந்து அமர்ந்துகொண்டார். பெருமூச்சுவிட்டபடி மெல்ல தன்னுள் தான் அமைந்தார். நிமிர்ந்து அந்தப் படகோட்டியிடம் “உன் பெயரென்ன?” என்றார். “நான் தென்னிலத்தைச் சார்ந்தவன். நாகர்குலத்தவனாகிய சாத்தன்” என்று அவன் சொன்னான். “தென்னிலத்திலிருந்து இங்கு வந்தவனா?” என்றார். “அல்ல. நெடுங்காலத்துக்கு முன் தென்னிலத்திலிருந்து எனது மூதாதை ஒருவர் இங்கு வந்தார். இங்கே ஒரு பெண்ணை மணந்து மைந்தரை ஈன்றார். அவர் பெயர் சாத்தன். நான் அவர் பெயர் கொண்டவன்” என்று அவன் சொன்னான். “சாத்தன் இளநாகன் என என்னை அழைக்கிறார்கள்.”

“சாத்தன்!” என்று அவர் தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். “உன் நிலத்துக்கு என்றேனும் சென்றிருக்கிறாயா?” என்றார். “இல்லை. எனக்கு நிலமென்று ஒன்றில்லை என்று என் தந்தை சொன்னார். அங்கே தென்னிலம் நீரருந்தும் பசுவின் நாவென கடலில் துழாவி நெளிந்துகொண்டிருக்கிறது என்றார். நிலையற்றது தென்குமரி நிலம். ஒரு நாள் அங்கு செல்லவேண்டும். அங்கு சென்று அமைவதற்காக அல்ல, அங்கிருந்து கிளம்பிச்செல்வதற்காக” என்று சாத்தன் சொன்னான். அவனை கனகர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். கன்னங்கரிய சிற்றுடல். செதுக்கப்பட்ட முகம். ஒளிரும் கண்கள். இவனை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே கண்டேன்? “உன் மூதாதை ஏன் வடக்கே வந்தார்?” என்று அவர் கேட்டார். அவன் புன்னகைத்தபோது சிறுவன் என ஆனான். “ஏனென்றால் அவர் தெற்கே பிறந்தவர்” என்றான்.

 

கனகர் தன் அருகே நின்று எவரோ தன்னை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். “எழுக! எழுக!” என்று அவன் சொன்னான். அக்குரல் தெரிந்ததாக இருக்கவே திடுக்கிட்டு மேலெழுந்து பார்த்தபோது குழலில் சூடிய மயில்பீலியைத்தான் கண்டார். திகைப்புடன் எழுந்து “நீயா? நீ எப்போது இப்படகுக்குள் வந்தாய்?” என்றார். “நான் உங்கள் அருகேதான் நின்றுகொண்டிருந்தேன். உங்களுடன் படகில் நானும் ஏறினேன்…” என்றான். “நான் பார்க்கவில்லையே?” என்றார். “நீங்கள் வேறேதோ கனவிலிருந்தீர்கள்” என்று அவன் சொன்னான். “இதோ முக்தவனம் வந்துவிட்டது. நீங்கள் இங்குதான் இறங்கவேண்டும்.”

“முக்தவனம்! அங்கு பாண்டவர்கள் அல்லவா இருக்கிறார்கள்? நான் அங்கு செல்ல எண்ணவில்லை” என்றார் கனகர். “நான் இவையனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பியவன். என் இடம் இங்கே இல்லை. அது தெற்கே உள்ளது. கடல் அருகே எழுந்த ஒரு மலை. அதன் உச்சியில் ஒரு சிறு குடில்.” அவன் புன்னகைத்தான். “நான் ஏன் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்?” என்றார். “அமைச்சரே!” என்று அழைத்தபோது அக்குரல் மாறுபட்டிருப்பதை உணர்ந்து அவர் திடுக்கிட்டார். அருகே சாத்தன் நின்றிருப்பதை கண்டார். ஒருகணத்துக்குப் பின்புதான் முன்பு வந்தது கனவு என்று தெளிந்தார். “அமைச்சரே!” என்று சாத்தன் மீண்டும் அழைத்தான். “என்ன?” என்றபடி அவர் எழுந்தார்.

“முக்தவனம் வந்திருக்கிறது. தொலைவில் விளக்குகள் தெரிகின்றன” என்றான் சாத்தன். “நமது படகுகள் சென்று சேர்ந்துவிட்டனவா?” என்று கனகர் கேட்டார். “நாம் நமது படகை மும்மடங்கு பாய்விரித்து முன்னால் செலுத்தி நிரைமுகப்பிற்கு வந்துவிட்டோம். நம்மைத் தொடர்ந்து அரசியரின் படகுகள் வந்துகொண்டிருக்கின்றன” என்று சாத்தன் சொன்னான். “ஆம், நான் துயின்றுவிட்டேன்” என்று கனகர் சொன்னார். மேலாடையால் வாயை துடைத்தார் “எத்தனை பொழுது துயின்றிருப்பேன்?” என்று கேட்டார். “ஆறு நாழிகைப் பொழுது” என்று சாத்தன் சொன்னான். “ஆறு நாழிகையா!” என்றபின் அவர் “அகிபீனாகூட உண்ணவில்லை” என்றார். அகிபீனா இன்றி அத்தனை பொழுது துயின்று எத்தனை நாளாகிறது என்று எண்ணிக்கொண்டார். “இந்தக் காற்று ஆழ்ந்த துயிலை அளிக்கிறது போலும்” என்று சொன்னார். சாத்தன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அவனிடம் “உன் பெயர் சாத்தன் என்று சொன்னாயல்லவா?” என்றார். “ஆம்” என்றான். “நான் உன்னை கனவில் கண்டேன்” என்றார். அவன் புன்னகைத்தான்.

ஒரு திடுக்கிடல்போல அவனை திரும்பிப்பார்த்து “உன் முகம்!” என்றார். சாத்தன் தலைவணங்கி “கூறுக, அமைச்சரே!” என்றான். “உன் முகத்தில் வேறேதோ சாயல்” என்றபின் கைவீசி “பித்து… வெறும் மாயை” என்று சொன்னார். அவன் தலைவணங்கி அகன்றான். அவர் படகின் முகப்பில் சென்று நின்று தொலைவில் முக்தவனத்தின் விளக்குகள் செந்நிறச் சுடர்நிரையென நெளிவதை பார்த்துக்கொண்டிருந்தார். வானில் சுழற்றி வீசி எறியப்பட்ட செவ்வரளி மாலைபோல என்று எண்ணிக்கொண்டார். உடனே அவர் புன்னகைத்தார். அத்தகைய ஒப்புமைகள் அவர் உள்ளத்தில் வழக்கமாக எழுவதில்லை. இதை வேறெவ்வாறு சொல்லலாம் என்று அவர் எண்ணினார். செம்மணி மாலையைச் சுழற்றி வீசியதுபோல என்று அதே ஒப்புமையே பிறிதொரு வடிவில் நெஞ்சில் எழுந்தது. சரி, இது நமக்குரிய வழி அல்ல என்று அவர் தனக்கே சொல்லிக்கொண்டார்.

தன் முகம் புன்னகையில் மலர்ந்திருப்பதை உணர்ந்தார். இப்படி ஓர் உளவிரிவு எங்ஙனம் நிகழ்ந்தது? சென்றுகொண்டிருக்கும் இடம் என்ன என்று அறிந்த பின்னரும்கூட ஏன் இந்த மகிழ்ச்சி? ஆறு நாழிகை ஆழ்ந்து துயின்றதனால் இருக்கலாம். விழிகளும் உள்ளமும் தெளிந்துவிட்டிருக்கின்றன. உடலெங்கும் அனைத்துத் தசைகளும் தளர்ந்திருக்கின்றன. அவர் திரும்பி சாத்தனை நோக்கி கையசைத்தார். அவன் அருகே வந்ததும் “இன்நீர்!” என்றார். அவன் கொண்டுவந்த இளஞ்சூடான இன்நீரை அருந்தி கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் படகின் முகப்புக்குச் சென்று வடத்தைப் பற்றியபடி நின்றார். அவருடைய படகுக்குப் பின்னால் பெருநிரையென விழி தொடும் தொலைவு வரை ஒளி விளக்குகள் நெளிந்தாட படகுகள் வந்துகொண்டிருந்தன. அனல் உருகி வழிவதுபோல் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதுவும் முன்பு எண்ணியதுதானா என்ற ஐயம் எழுந்தது. நீர் அனல்கொள்கிறது என இன்னொரு எண்ணம் எழுந்தது.

அதை எங்கு பார்த்தோம் என்று தன் நினைவை துழாவினார். ஒருமுறை உலைக்களமொன்றின் அருகே சென்றுகொண்டிருந்தார். அங்கு இரும்பை உருக்கி கம்பிகளாக நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்தார். அனல் அவ்வண்ணம் வழிந்தோட முடியுமென்பதை முதன்முறையாக அப்போதுதான் கண்டார். ஒழுகும் அனல். கொழுந்தாடும் நீர். அவர் விழிகளிலிருந்து சித்தத்தை விடுவிக்க முயன்றார். சித்தம் இப்போது எதையோ தவிர்க்கிறது. எதை? முக்தவனத்தின் காவல்மாடத்திலிருந்து முரசுகள் முழங்கத் தொடங்கின. முக்தவனத்திற்கு உள்ளே இருந்த குடில்களின் நடுவிலிருந்து முரசொலி எழுந்தது. அவருடைய படகு ஒவ்வொரு பாயாக சுருக்கி சுருட்டிக்கொண்டது. பாய்கள் பாய்மரத்தூணில் அறைந்து காற்றில் இழுபட்டுத் துடித்தன. காற்றின் விசையைக்கொண்டே அவற்றைச் சுழற்றி பாய்மரத்தில் கட்டினார்கள். கயிறுகள் தளர்ந்து சுருள்களாகி படகின் பலகைப்பரப்பில் உரசலோசையுடன் விழுந்தன.

அதுவரை கூரிய அம்பென சென்றுகொண்டிருந்த படகு விசையழிந்து இருபுறமும் தள்ளாடியது. யானை மேல் அமர்ந்திருப்பதுபோல் அவர் உடல் அசைந்தது. முக்தவனத்தின் முகப்பில் கங்கைக்குள் மூங்கில்களை அறைந்து அவற்றின்மேல் பலகைகளைப் பரப்பி படகுத்துறை ஒன்றை அமைத்திருந்தார்கள். அதன்மேல் நின்றிருந்த காவலர்கள் எரி சுழற்றி ஆணையிட படகின் முகப்பில் நின்றிருந்த மரக்காவலன் எரியால் மறுமொழி கூறினான். படகு முனைதிரும்பி ஒழுகி துறைமேடை நோக்கி சென்று அங்கிருந்த மூங்கில் வில்களில் முட்டி தடுமாறி விலா ஒதுங்கி பலகைவிளிம்பின் மேல் ஒட்டி நின்றது. சீழ்க்கை ஓசைகளால் பேசிக்கொண்டபடி படகிலிருந்த குகர்கள் வடங்களை துறை நோக்கி வீசினர். அங்கிருந்தவர்கள் அவற்றை எட்டிப் பிடித்து பெருமூங்கிலால் ஆன தறிக்கால்களில் சுற்றி இறுக்கினர். படகு நிலைகொண்டதும் துறையிலிருந்து நீண்ட பலகை வந்து விளிம்பில் பொருந்தியது.

ஏவலர் இருவர் துறைமேடைமேல் ஏறினர். அதன்பின் மேலாடையை இழுத்து சுற்றிக்கொண்டு கனகர் கால்வைத்து அதன்மேலேறிச் சென்று நின்றார். அதுவரை உடலிலிருந்த அசைவு குருதியை அலைகொள்ளச் செய்திருந்தமையால் நிலைகொண்ட படகுத்துறையிலும் அவர் உடல் தள்ளாடியது. உடல் ஆடுவதுபோல் ஒருகணமும் பின் படகுத்துறை ஆடுவதுபோல் மறுகணமும் தோன்ற தலை சுழன்றது. கண்களை மூடிக்கொண்டபோது உடலுக்குள் குருதியலையை உணர்ந்தார். மூச்சை இழுத்துவிட்டு தன்னுடலை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றார். அதற்குள் அவர் உடல் ஒரு பக்கமாக பிடித்து தள்ளப்பட்டதுபோல் சரிந்தது. அருகிருந்த ஏவலன் அவரை பற்றிக்கொண்டான். அவர் தள்ளாடியபடி சென்று குமட்டி வாயுமிழத்தொடங்கினார். உடலிலிருந்து முழு நீரும் வெளிவருவதுபோல உமிழ்ந்துகொண்டிருந்தார். பின்னர் எழுந்து நீரை அள்ளி வாயிலிட்டு கொப்பளித்தார். மீண்டும் நீரருந்தியபோது உடல் குமட்டி அதையும் வெளியே தள்ளியது.

படகுத்துறையின் காவலர்தலைவன் வந்து அவர் அருகே நின்றான். அவர் எழுந்ததும் தலைவணங்கினான். “தாங்கள் படகில் வழக்கமாக பயணம் செய்வதில்லை போலும்” என்றான். “நான் பயணமே செய்வதில்லை” என்று அவர் சொன்னார். “படகில் செல்வது எப்போதும் துன்பம் அளிப்பது எனக்கு.” காவலர்தலைவன் “படகு நிலையற்ற அடித்தளம் கொண்டது. நம் உடல் நிலையான மண்ணுக்காகவே படைக்கப்பட்டுள்ளது” என்றான். அவர் அவனைப் பார்த்தபின் தன்னருகே நின்றிருந்த சாத்தனை பார்த்தார். காவலர்தலைவன் “பேரரசியரின் படகு அணுகும்போது கூறுக, அமைச்சரே. இங்கிருந்து பார்த்தால் தெரியவில்லை” என்றான். கனகர் “ஆம்” என்று தலையசைத்தார். காவலர்தலைவன் “நீத்தார்சடங்குகளுக்கு வருகிறார்கள் என்பதனால் முறைமைகள் தேவையில்லை என்பது மரபு. ஆயினும் வருவது பேரரசி என்பதனால் சில சடங்குகள் இருக்கவேண்டும் என்று ஆணை” என்றான்.

தொலைவில் பானுமதியின் கொடிகொண்ட படகு தெரிந்தது. அதற்கு வலப்பக்கம் காவலர் படகு வந்தது. அவ்விரு படகுகளுக்கும் நடுவே காந்தாரியின் படகை பார்த்தார். “பேரரசியும் அரசியும் சேர்ந்தே வருகிறார்கள்” என்று அவர் கூறினார். “நன்று” என்று காவலன் கூறி கையசைக்க முழவுகள் முழங்கி காந்தாரி கரையணைவதை அறிவிக்கத் தொடங்கின. முரசுகளின் ஓசை இருளில் எழுந்து மேலும் மேலும் முரசுகளால் வாங்கப்பட்டு அகன்று சென்றது. பானுமதியின் படகு மெல்ல பின்னடைந்தது. காந்தாரி முதலில் வருவதனால் இறுதியாக கரையணைய பானுமதி எண்ணுவதை அவர் உணர்ந்தார்.

இருளுக்குள் சாலையில் இருந்து ஒரு சங்கொலி எழுந்தது. கனகர் “எவர் வரவேற்க வருகிறார்கள்?” என்றார். “இளைய பாண்டவர் நகுலன் படித்துறைக்கு வந்து வரவேற்பதாக எனக்கு செய்தி வந்தது” என்று காவலர்தலைவன் சொன்னான். “ஆனால் அவர் பொருட்டு சங்கொலி எழுவதில்லை” என்றார் கனகர். “ஆம், அரசர்களுக்கே சங்கொலி எழும்” என்றபின் காவலர்தலைவன் குழப்பத்துடன் முன்னால் சென்று இடையில் கைவைத்து நோக்கி நின்றான். இருளுக்குள்ளிருந்து மீண்டும் சங்கோசை எழுந்தது. பந்தங்களின் ஒளி அணுகிவர தெரிந்த கொடியைப் பார்த்ததுமே கனகர் “இளைய யாதவர்!” என்றார். “ஆம், அவர்தான்” என்றான் காவலர்தலைவன். “அவர் பேரரசியை வரவேற்க வரவேண்டியதில்லையே? எம்முறைப்படியும் அதற்கான வழி இல்லையே” என்று கனகர் சொன்னார். “ஆனால் அவர் வந்துகொண்டிருக்கிறார்” என்று காவலர்தலைவன் சொன்னான்.

அவரை வரவேற்பதற்காக காவலர்தலைவன் முன்னால் சென்று நின்றான். அவனுக்கு இருபுறமும் காவலர்கள் அணிவகுத்தனர். கனகர் துவாரகையின் கருடக்கொடியை பந்தங்களின் ஒளியில் பார்த்தார். அதற்குப் பின்னால் வந்த வெண்ணிறப் புரவி மீது இளைய யாதவர் அமர்ந்திருந்தார். அவர் தலையிலணிந்திருந்த பீலியைத்தான் கனகர் முதலில் கண்டார். ஒரு தனி விழி என அது பந்தங்களின் ஒளியில் துலங்கித் தெரிந்தது.

முந்தைய கட்டுரைநாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
அடுத்த கட்டுரைதினமணி- கடிதங்கள்