வரலாற்றின் சரடு

’செண்டிமெண்டான’ விஷயங்கள் சார்ந்த எல்லா செய்திகளையும் எனக்கு அனுப்பும் நண்பர் ஒருவர் உண்டு. அவர் அனுப்புவனவற்றில் அவ்வப்போது ஆர்வமூட்டும் செய்திகள் உண்டு என்பதனால் நான் அவரை தடை செய்யவில்லை. பெரும்பாலானவை எளிமையான உணர்வுநிலைகள், நெகிழ்ச்சித்தருணங்களாகவே இருக்கும். ஆனால் இத்தகைய தருணங்களின் பண்பாட்டுப்புள்ளிகள் எனக்கு என்றுமே ஆர்வமூட்டுபவை. ஏன் அந்த உணர்வுநிலை உருவாகிறது என எண்ணத்தொடங்கினால் நாம் நெடுந்தொலைவு செல்லத் தொடங்கிவிடுவோம்

அத்தகைய பதிவு இது. ஹரிஹரசுதன் தங்கவேலு [Hariharasuthan Thangavelu] என்னும் அமெரிக்க வலைப்பதிவர் எழுதியது.

***

பிலடெல்பியாவில் நான் தங்கியிருக்கும் வீட்டின் அருகில் இந்த தாத்தா செக்யூரிட்டி கார்டாக வேலை செய்கிறார். எப்ப காலைல பார்த்தாலும் ‘Have a Good day my son, Mary Ellen blesses you !’ என்பார். நமக்கு பதில் வாழ்த்து, வணக்கம் சொல்றது ஒரு இயல்பா உடனடியா வராது. ‘Thank you’ னு எளிமையா சொல்லிட்டு ஓடிருவேன்.

பஸ்ல போகும் போது கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஏன்டா நமக்கு மட்டும் இந்த பதில் வாழ்த்து, வணக்கம், திருப்பி நலம் விசாரிக்கிறது எல்லாம் இயல்பா வர மாட்டேங்குதுனு முதல் இரண்டு நாள் மனசு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. சரி இன்னிக்கு தாத்தா சொல்றதுக்கு முன்னாடி நாம சொல்லிடனும் னு வந்தேன். தாத்தாவை பார்த்ததும் ‘Have a great day Papa’ ன்னேன். மனுஷன் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி அடுத்த நொடி ஜிலீர்னு சந்தோசம் ஆயிட்டார். ‘Aw..You called me papa.. you called ma papa.. Oh my Mary Ellen, This sweet man called me papa’ ன்ட்டு சிரிச்சிட்டே நடந்து போய்ட்டார்.

பஸ் வர தாமதமாக, நான் வெயிட் பண்றத பார்த்து, தாத்தா என்கிட்டே வந்து திரும்ப பேச ஆரம்பிச்சார். அவர் பேர் சாமுயேல், 79 வயசு, பக்கத்து அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி கார்ட்னு அறிமுகப்படுத்திகிட்டு என்னை பத்தி விசாரிச்சார். நான் ஹரி ப்ரம் இந்தியா, உங்களுக்கு இந்தியா தெரியுமானு கேட்டேன்.

கொஞ்ச நேரம் உண்மையாவே யோசிச்சார். ஆனா இந்தியா அவருக்கு பிடிபடலை, பின் வருத்தமான முகத்தோட சொன்னார்.

‘Oh, Im Sorry son !, Papa Sammy never seen anything but philly, தினமும் 12 மணி நேரம் வேலை, வாரம் முழுவதும் செய்யணும். அப்பதான் ஜேக்கப்பும் நானும் சாப்பிட முடியும், ஸ்கூல் பீஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் … And I got to pay my taxes too மை சன்.

தட்ஸ் ஒகே பாப், But ஜேக்கப் யாரு ? னு ஆர்வமா கேட்டேன்.

“Aw! ..ஜேக்கப்… Sweet ஜேக்கப் ! என் பேரன்..You know….. He’s a little man, But he’s a great kid.. Jacabs father got arrested by feds.. He’s a good man too… but bad temper..!!”

“I am sorry to hear that” என வருத்தம் தெரிவித்தவனிடம், Oh…தட்ஸ் ஒகே ..You reap what you sow my son என சொல்லி முகத்தை பார்த்தார் !

சரி ! கொஞ்சம் பேச்சை மாற்றலாம் என்று நினைத்து உங்க சம்பளம் எவ்வளவு பாப் என கேட்டேன்.

“As per the law its 15 bucks per hour, but they pay me only 11 dollors, ….oh ..my Almighty Mary Ellen blesses them.. and God bless America ! “

கம்மியா இருக்கே பாப் , கஷ்டமா இல்லையா ? “

“Yeah, that sad..yeah.. But you should know one thing my son, grandpa’s never let their grandkids down, even it’s just a penny for an hour, I gotta make that work for Jacob. “

இதைக் கேட்டதும் உடல் சிலிர்த்துவிட்டது. நாடு, மொழி, இனம் என அனைத்தும் வேறுபட்டாலும் தாத்தாக்கள் பேரன்களிடம் கொண்ட அன்பு மாறுவதில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றவே, அப்படியே கேட்டேன்.

பக பக வென உடல் அதிர சிரித்தார். சாலையில் செல்வோரிடம் கை காட்டி சொன்னார் , “This young man wants to take a picture with me…Thats pretty.. Really !!”

ஏன் பாப்..வேண்டாமா ?”

நோ ..நோ .. I aint say that..No body takes picture with papa sammy ever, No one wants my picture son ..are you sure ….You wanna do this ..”

“Oh Come on ..definitely.”என சொல்லி செல்பிகளை க்ளிக்கினேன். படத்தை எடுத்து பார்த்தால் என் முகத்தில் செல்பிகளுக்கு பழகி போன ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல், அதே சமயம் Papa Sammy முகத்தை பாருங்கள். புதிதாய் பிறந்த குழந்தை போல கள்ளம் கபடமின்றி சிரிக்கிறார். படத்தை அவருக்கு காட்டினேன், முகமெங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க, ஒரு வெட்க சிரிப்பில் நாணி கொண்டே சொன்னார்.

“Oh..Jesus ! Is this Papa Sammy ! Oh.. mother Ellen would really love to see this, she blesses you my son..

ஆரம்ப நாளிலிருந்தே இந்த விஷயத்தை கவனித்து வந்தேன். சரி இப்போது கேட்கலாம் எனத் தோன்றியது.

பாப் ஒரு சந்தேகம் !… மதர் மேரி என்று தானே சொல்வார்கள்..மதர் எலன் என்பது யார் ?

ஒரு நிமிடம் என் முகத்தை ஆழ்ந்து கவனித்தவர் பிறகு ஒரு மென்சோகம் இழையோடும் புன்னகையுடன் சொன்னார்.

“Ellen was my wife, She was everything to me…அவள் இறந்ததில் இருந்து அவள் தான் எனக்கு எப்போதும் மதர் மேரி ! “.

*

தன் செண்டிமெண்ட் பற்றி நான் சொல்ல வரவில்லை. இந்தச் சித்தரிப்பில் ஒரு சிறுவிஷயம் என் கவனத்தை நெருடியது. sammi என்ற பெயர். காந்தி அவருடைய சுயசரிதையில் ஆப்ரிக்காவில் பதினேழாம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்கள் அங்கே சாமி என அழைக்கப்பட்டார்கள் என்றும் அவர்களின் பெயருடன் இயல்பாகவே அச்சொல் இணைந்துகொண்டிருந்தது என்றும் தானும் கரிய நிறமுடையவராக இருந்தமையால் தன்னையும் சாமி என அவர்கள் அழைத்ததாகவும் சொல்கிறார். sammi என்ற சொல் இழிவுபடுத்துவதாகவும் அடையாளப்படுத்துவதாகவும் ஒரே சமயம் திகழ்ந்ததை விவரிக்கிறார்.

இந்த கருப்பு முதியவரின் பெயருடன் sammi என இருக்கிறது. பெயராக. அவர் தன்னை சாமியப்பா என்றுதான் சொல்கிறார். தென்னாப்ரிக்காவிலிருந்து அமெரிக்கா வந்த ஆப்ரிக்க இந்தியராக இருப்பாரோ? ஏனென்றால் அவருடைய முடி, உதடு, பற்கள் எதுவுமே அவரை ஆப்ரிக்கக் கருப்பினத்தவராகக் காட்டவில்லை. நம்மூர் அடிநிலைச் சாதியினர் போலிருக்கிறார். ஆப்ரிக்கக் கலப்பும் இருக்கலாம். அவருக்கு இந்தியா பற்றி எதுவும் தெரியவில்லை. ஆப்ரிக்கா பற்றியும் தெரியவில்லை. ஆனால் நீத்தார் வழிபாடு கொண்டிருக்கிறார். அதுவும் இந்திய நம்பிக்கைதான். ஆப்ரிக்கர்களிடம் நீத்தார் வழிபாடு இவ்வடிவில் இல்லை

எல்லாமே சாத்தியங்கள்தான். ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் ஒரு அற்புதமான கதைப்புள்ளி. ஆனால் வரலாறு பற்றிய அறிவின்மை, இன அடையாளங்கள் பற்றிய அறிவின்மை காரணமாக நெடுங்காலத்திற்குப்பின்னர் பிரிந்துபோன இரு துளிக் குருதிகள் ஒன்றை ஒன்று சந்தித்தபின்னரும் அடையாளம் காணமுடியாமல் போனதைப்பற்றித்தான் அந்தக்கதையை எழுதவேண்டியிருக்கும்

 

முந்தைய கட்டுரைசென்னையில் வாழ்தல்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19