நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்

 

அமேஸான் – கடிதம்

அன்புள்ள ஜெ,

 

ஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

 

கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து விட்டு அப்புறம் அறிவு ஜீவி தரப்பே தமாஷ் என்கிறார்.

 

ஹ்ம்ம்ம் பாவம் அவருக்கு பிடித்த நாகசாமியை குறைச் சொல்லி விட்டேன். பத்ம பூஷன் வாங்கியவரை அவமதித்து விட்டேனாம். கடலூரார் பத்ம விருது பெற்ற வைரமுத்துவின் இலக்கிய மேன்மை குறித்து இணையத்தில் எழுதப் போகும் கட்டுரைக்காக மிளகாய் பஜ்ஜியும் தேங்காய்ச் சட்டினியுமாய் காத்திருக்கிறேன். எனக்கு பாப்கார்ன் பிடிக்காது.

 

நாகசாமியை குறைச் சொன்னதைப் படித்து ரத்தம் கொதிப்பவர் நாம் நீலகண்ட சாஸ்திரி பற்றி எழுதியதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

 

நாகசாமியை நீங்களும் வரலாற்றாசிரியராக கருதாதது கடலூர் சீனுவுக்கு தெரியுமா?

 

அரவிந்தன் கண்ணையன்

 

அன்புள்ள அரவிந்தன்

 

இன்று ஊருக்குக் கிளம்புகிறேன். நியூயார்க்கில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்கென்னவோ இனிமேல் நாம் சந்தித்தாலே நியூயார்க்கில், அந்த உலகக்கூர்முனையில்தான் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்

 

நீங்கள்தான் அந்த அறிவுஜீவியா? நாமறியாமல் என்னென்னமோ நடக்கிறது உலகில்.

 

வரலாற்று அறிஞர்கள் மூன்றுவகை. தொல்லியல் போன்ற துறைகளில் அடிப்படை ஆய்வுகளைச் செய்பவர்கள். அவர்களைன் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறலாம். இரண்டாம் வகை தரவுகளைக்கொண்டு முடிவுகளை நோக்கிச் செல்பவர்கள், வரலாற்றை ஒட்டுமொத்தச் சித்திரமாக உருவாக்குபவர்கள். அவர்களை வரலாற்று ஆசிரியர்கள் எனலாம். மூன்றாம் வகையினர் வரலாற்று கோட்பாட்டாளர்கள். வரலாற்றை தீர்மானிக்கும் கொள்கைகளை வகுப்பவர்கள். நாகசாமி முதல்வகையானவர். நீலகண்ட சாஸ்திரி முதல் நொபுரு கரஷிமா வரையிலானவர்கள் இரண்டாம் வகையினர். கோஸாம்பி மூன்றாம் வகை.

 

முதல்வகையினர் வரலாற்றை முழுமைநோக்கில் பார்க்க இயலாதவர்களாக, நவீன வரலாற்றுக்கொள்கைகளுடன் அறிமுகம் அற்றவர்களாக இருப்பது வழக்கம். அவர்களின் பார்வைகள் போதாமைகொண்டிருப்பதும் இயல்பே. ஆனால் அவர்களை விமர்சிக்கையில் அவர்களின் வரலாற்று ஆய்வுப்பங்களிப்பைப் பற்றிய மதிப்புடன், அந்த மதிப்பை அறிவித்த பின்னரே செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். ஒருபோதும் ஒட்டுமொத்த மறுப்போ, மேட்டிமைநோக்கோ, ஏளனமோ நம் மொழியில் வந்துவிடலாகாது. அது அவர்களின் பங்களிப்பை இழிவுசெய்வது. அதற்கு வரலாற்றாய்வு வெளிக்கு வெளியே நின்று வாசிப்பவர்களான நமக்கு தகுதி இல்லை.

 

அத்தகைய மேட்டிமைநோக்கோ இளக்காரமோ இழிவுசெய்யலோ கலந்த விவாதம் இன்றைய முகநூல் சண்டைகள் போல வெறும் ஆணவப்பூசலாக ஆகிவிடும். அது வரலாற்றுவிவாதமே நிகழாத சூழலை உருவாக்கிவிடும். உதாரணமாக, உங்கள் சோழர் குறித்த கட்டுரையுடன் எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் உங்கள் கட்டுரையில் நான் காணும் மதிப்பு என்ன என்பதைச் சொல்லாமல் அந்த மறுப்பை எழுதமாட்டேன். இன்றைய காழ்ப்பும் ஏகத்தாளமும் ஒலிக்கும் சூழலில் நாம் வரலாற்றை இழுத்துவிடக்கூடாது. அது அறிவியக்கத்திற்குச் செய்யும் பெரும் பழியாக அமையும். இது உலகமெங்கும் அறிவுச்சூழலில் கடைப்பிடிக்கப்படும் மரபு. கருத்துப்பூசலின் [ பாலிமிக்ஸ்] மொழி அறிவியக்கத்தில் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமே சற்றேனும் பொருந்துவது.

 

நான் நாகசாமி அவர்களின் வரலாற்றுப்ப்புரிதலை, அவருடைய வரலாற்று அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வரலாற்றுக்கு அவருடைய கொடை மிக முக்கியமானது என நினைக்கிறேன்.

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

கடலூர் சீனுவின் கடிதத்தில் டான் பிரவுனின் இன்பெர்னோ நாவல் இத்தாலியில் நிகழ்கிறது என எழுதியிருக்கிறார். இது பிழையான தகவல். திருத்திக்கொள்ளவும்

 

எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன்

 

அன்புள்ள ராம்,

 

 

இந்தத் தளம் வெளிவரத்தொடங்கியபின் எனக்கு வரும் கடிதங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை. ஒன்று மெய்யான சிறு பிழைகளை ஒருவகை தோரணையுடன் சுட்டிக்காட்டுபவை. ஒட்டுமொத்த விவாதங்களை விட்டுவிடுபவை.  இவை பத்து விழுக்காடு. இவர்களுக்கு எந்த விவாதத்தையும் பின்தொடர முடியாது. ஆனால் தானும் ஒரு ஆள்தான் எனக் காட்டியாகவேண்டும். இது குமுதம் விகடனுக்குக்கூட இப்படித்தான் என்பார்கள் . அவர்களுக்குக் வரும் கடிதங்களில் பெரும்பாலானவை எழுத்துப்பிழைகளைப் பற்றியே இருக்கும்.

 

மேலே சொன்ன பத்துவிழுக்காடு அல்லாத தொண்ணூறு விழுக்காடு கடிதங்களும் மேலோட்டமாக வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு சுட்டிக்காட்டப்படும் அபத்தமான பிழைகாணல்களே. பெரும்பாலும் சொற்றொடர்களை அந்தக் கூற்றின் ஒட்டுமொத்த தொனியையோ நோக்கையோ கருத்தில்கொள்ளாமல் தன் பார்வையில் பொருள்கொண்டு அடையப்படும் புரிதல்கள். புனைவுகளை நேரடித்தகவல்களாகக் கொள்வது, எளிய கூகிள்செய்திகளை அப்படியே சுட்டுவது என இத்தகைய அறிவின்மைகள் பலவகை. உண்மையில் இவற்றை கருத்தில்கொண்டு தேடிக் கண்டறிந்து, அந்த நேர இழப்புக்காகவும் அதைச் சுட்டியவர்களின் அசட்டுத்தனத்திற்காகவும் எரிச்சல்கொண்டு மீள்வது ஒரு பெரிய ஆற்றலிழப்பு. ஆகவே ஒட்டுமொத்தமாகவே பிழைசுட்டல்களை தவிர்ப்பதே நன்று என முடிவு செய்தேன். அல்லது சொல்பவர் தன் தகுதியை நிரூபித்தாகவேண்டும்.

 

கடலூர் சீனுவின் கடிதத்தில் இப்படி வருகிறது.  “பதிமூன்றாம் நூற்றாண்டு இத்தாலியில் சுழலும் விஞ்ஞானப் புனைகதை. மறுமலர்ச்சி கால கலைகள் இலக்கியம் இவற்றை புதிர்க்களங்களாக கண்டு அவற்றில் லாங்டன் விடைகளை கண்டு சதியை முறியடிக்கும் கதை”. நீங்கள் சொல்வதுபோல பதிமூன்றாம்நூற்றண்டு இத்தாலியில்  ‘நிகழும்’ கதை என அவர் சொல்லவில்லை. தெளிவாகவே லாங்க்டன் என்னும் ஹார்வார்ட் பேராசிரியர் பதிமூன்றாம்நூற்றாண்டு மர்மங்களை கண்டுபிடிக்கும் கதை என்கிறார். அந்நாவல் பதிமூன்றாம்நூற்றண்டு இத்தாலியைச் சுற்றித்தான் சுழல்கிறது. தாந்தே அலிகேரியின் டிவைன் காமெடி எழுதப்பட்ட காலகட்டத்தை, அக்கால ஓவியங்களைச் சுற்றி புனையப்பட்டுள்ளது.

 

அறிதல் என்பது இப்படி நிமிண்டிக்கொண்டிருப்பது அல்ல. இது எதையும் அறியும் ஆற்றலில்லாத ஒருவகை மொண்ணைத்தனம். கடலூர் சீனு சொல்வதைப்பற்றி கொஞ்சம், ஒரு ஐந்து நிமிடம், கஷ்டப்பட்டாவது சிந்தித்துப்பாருங்கள். வணிக எழுத்து தேவைதான் ஆனால் அது டான் பிரவுன் எழுதுவதுபோல ஒரு கலாச்சார உரையாடலாக அமையவேண்டும் என்கிறார். நாம் ஒரு வணிகக்கேளிக்கை எழுத்தை எழுதினால் அதன் வழியாக நம் பண்பாட்டின் சில விஷயங்களாவது பேசப்படுமென்றால் நன்று என்கிறார். இல்லாவிட்டால்  வெறுமே அனைவருக்கும் தெரிந்த தளத்தில் ஒருவகை சூதுவிளையாட்டாக எழுத்து மாறிவிடும் என்கிறார்.இதைப்பற்றி உங்களுக்கு ஒருவரியேனும் சொல்ல இருக்கிறதா என்று பாருங்கள். ஏற்றோ மறுத்தோ. அதன்பெயர்தான் சிந்தனை. அதற்காகவே வாசிக்கிறோம்.  இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமையால்தான் இக்கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள்.

 

இனிமேல் எனக்கு எழுதினால் எதையேனும் உங்களால் புரிந்துகொள்ளமுடியும் , அதற்கான குறைந்தபட்ச அறிவுத்திறன் உங்களுக்கு உண்டு என்பதற்கான அடிப்படைச் சான்று ஒன்றை நிகழ்த்திவிட்டு எழுதுங்கள்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைவாசகசாலை- கடிதம்
அடுத்த கட்டுரை‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’