இந்தியப் பெருமிதம்
சுயபண்புமுன்னேற்றம்
ஆசிரியருக்கு,
குடிமை ஒழுக்கத்தில் நாம் பல படிகள் தாழ்ந்திருந்தாலும், நாம் வளர்த்துக் காட்டிய பண்பாட்டு விழுமியம் குறித்து நாம் பெருமைக்கொள்ள இடமிருக்கிறது. இந்தியாவெங்கிலும் நாம் பயணித்ததிலும் உங்களுடன் நான் கண்ட இரண்டு கும்பமேளாவிலும் இந்தியன் என்பதில் நான் நிச்சயம் பெருமிதம் கொள்கிறேன். எங்கும் காணப்படும் இந்திய பண்பாட்டு ஒருமை உணர்வும் மக்களிடையே இயல்பில் வெளிப்படும் கலாச்சார தோழமையும் ஒருவனை உள்ளபடியே நெகிழ்ச்சியூட்டுவது. எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை எனினும் அடுத்த பிறவி என ஒன்று உண்டு என்றால் ஒரு இந்தியனாக பிறக்க விரும்புகிறேன். (இதை எழுதும் போது ஒரு தலித்தாக என்றால் யோசித்து சொல்கிறேன் என அடி மனம் சொல்கிறது)
அதேசமயம் நமது அறிவு நேர்மை அவ்வளவு ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, சிந்தனைகளை திருடுதல் (plagiarism), வெட்கமின்றி நகலாக்கம் செய்தல் போன்றவை நமது குடிமை இழிவல்ல அது பண்பாட்டு இழிவு. இது குறித்து ஒருவன் கூனி குறுக்கித்தான் தீரவேண்டும் . ஆனாலும் நாம் இன்னும் மேற்கை போல பெரிய அளவில் ஆயுத வியாபாரத்தில் குற்ற உணர்வின்றி இறங்கி ரத்தம் குடிக்கத் துவங்கவில்லை, ஆனால் விரைவில் அங்கு சென்று சேர்வோம். இவைகளை ஒப்புநோக்கும் போது நமது பண்பாட்டு தரம் குறித்து ஐயம் எழுகிறது. கடந்த பத்தாண்டுகளாகவே சீரான இடைவெளியில் அனைத்து திசை நாடுகளுக்கும் சென்று பல வாரங்கள் தங்கி குறுக்கும் நெடுக்கும் சுற்றி திரும்புவதால் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளர் நீங்கள்.
இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வரலாறுள்ள நமக்கு நிச்சயம் மேற்கிற்கு கற்பிக்கும் பண்பாட்டு கூறுகள் இருக்கும் அவை என்ன? மேற்கின் திருத்திக்கொள்ள வேண்டிய பண்பாட்டு இழிவு என சிலது இருந்தே தீரும் அவை என்ன ? மேற்கு நாடுகள் தவிர்த்து மற்ற தூர கிழக்கு, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் பண்பாட்டு குறை என்ன ? உங்களுக்கு மறு பிறவியில் இப்போது நம்பிக்கை இருப்பதால் அடுத்த பிறவியில் இந்தியனாக, இந்திய தலித்தாக பிறக்க விரும்புகிறீர்களா ?
கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்,
இந்த வினாவுக்கான விடையை ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு வரும்போது நான் எண்ணுவதுண்டு. இந்தியா குறித்தோ தமிழகம் குறித்தோ கடுமையான விமர்சனங்களை சொல்லும்போது கூட உள்ளத்தில் எங்கோ ஒரு பகுதி நமது ஆற்றல் என்ன, நாம் மரபாகக் கொண்டவை என்ன என்று தேடிக்கொண்டேதான் இருக்கிறது .இது ஒருவகையான தற்காத்துக்கொள்ளல் என்று சில தருணங்களில் தோன்றும். அவ்வாறல்ல, தன்னைத் தேடி கண்டடைதல்தான் என்று மீண்டும் சொல்லிக்கொள்வேன்.
நீண்ட மரபுள்ள ஒரு நாடு நம்முடையது. நமது குடி நமது நாட்டை விடவும் தொன்மையானது. அங்கிருந்து நாம் கைமாற்றிக்கொண்டு வந்தது என்னவாக இருக்கும்? இன்று நம் கையில் என்ன இருக்கிறது என்பதைக்கொண்டு மட்டும் இதற்கு விடைகாண இயலாது. நாம் முயன்றால் நம் மரபிலிருந்து எதையெல்லாம் கைக்கொள்ளலாம் என்றும் அறியாமையினால் எவற்றையெல்லாம் அடையாமல் தவிர்த்துவிட்டிருக்கிறோம் என்றும் கணக்கிட்டபின்னரே இதற்கு மறுமொழி சொல்ல முடியும்.
நம்மை இன்று ஒரு தொடக்க முதலாளித்துவச் சமூகம் என்று வரையறை செய்யலாம். முதலாளித்துவம் இந்தியாவில் அதன் அடிப்படைகளை நிறுவிக்கொண்டு எழத்தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகிறது.அதற்கு முன்னால் நாம் நிலவுடைமைச் சமுதாயமாக இருந்தோம். அதற்கு முன்னால் பழங்குடிச் சமூகம். [இப்பிரிவினைகள் மார்க்சியச் சமூகவியல் சார்ந்தவை.மார்க்சியர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அதே அளவுக்கு கறாராக இவற்றை நான் பயன்படுத்தவில்லை. இச்சொற்கள் சில குறிப்பிட்ட வாழ்நிலைகளை சுட்டுகின்றன. அவ்வரையறை வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்க உதவுகிறது. அந்த அளவில் மட்டுமே இவற்றை பயன்படுத்துகிறேன் என்று முதலில் வகுத்துக் கொள்கிறேன்.]
ஒரு நிலவுடைமைச் சமூகம் என்ற வகையில் நாம் நம்மை திரட்டி வடிவமைத்துக்கொண்டு ஈராயிரம் ஆண்டுகளாகின்றன. ஆனால் நம்மில் ஒரு பகுதி நிலவுடைமைப் பண்பாட்டின் உச்சத்தில் அமைந்திருக்கையில் நமது பண்பாட்டின் ஒருபகுதி பழங்குடியாக இன்னும் நீடிக்கிறது. சொல்லப்போனால் ஆடையணியவும் அனல்மூட்டவும்கூட தெரியாத தொல்குடியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அடங்கியதே இந்தியா. ஆகவே பொதுவாக எதையும் சொல்வது இன்று மிக்க்கடினம். அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இன்று இயல்பான பழங்குடிகள் அனேகமாக இல்லை. பழங்குடிவாழ்க்கையின் எச்சங்கள் இல்லை. நிலவுடைமைச் சமூகத்தின் தொடர்ச்சியேகூட குறியீட்டளவில்தான். ஆகவே நமக்கும் அவர்களுக்கும் ஒப்புமையே இல்லை
மிகத்தொல்காலத்திலேயே நிலவுடைமை அமைப்புக்குள் வந்துவிட்ட காரணத்தால் நமது நிலவுடைமைம் அழுத்தமாக வேரூன்றி விட்டிருக்கிறது. மதநம்பிக்கைகள், ஆசாரங்கள், வாழ்க்கைநடைமுறைகள் நம் வாழ்க்கையை முழுமையாக வரையறை செய்துவிட்டிருக்கின்றன. அவை அவ்வாறு ஆழவேரூன்றியிருப்பதனால்தான் நாம் எளிதில் அவற்றைக் கடக்க முடியவில்லை. அவற்றில் எவை இன்றைய காலகட்டத்திற்கு உகந்தவை, எவை கைவிடப்படவேண்டியவை என முடிவெடுக்க முடியவில்லை. அனைத்தையும் தழுவிக்கொள்ளும் மரபுவாதிகள் அனைத்தையும் தூக்கிவீசும் முதிராமுற்போக்கினர் நடுவே சிக்கி தவிக்கிறோம். பதினெட்டு வயதுமுதல் முற்போக்காகவும் நாற்பதுக்குப்பின் மரபுவாதியகாவும் மாறி திரிபடைகிறோம்.
நாம் அடைந்துள்ள அனைத்து பண்பாட்டுநலன்களையும் நிலவுடைமைச் சமுதாயத்தின் வெற்றிகள் என்று சொல்லலாம். ஒரு சிறந்த நிலவுடைமைச் சமுதாயத்துக்கு உரிய சமூகப் பண்புநலன்கள், கலையிலக்கிய வெற்றிகள், அறிவுத்துறை சாதனைகள் நமக்குள்ளன. கூடவே நாம் பழங்குடி பண்பாட்டிலிருந்து பெற்று நிலவுடைமை வாழ்க்கைக்குள்ளும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஆழ்படிமங்கள், அவற்றின் நடைமுறைகளான ஆசாரங்கள், அவற்றை வெளிப்படுத்தும் நாட்டார் இலக்கிய செல்வம் ஆகியவையும் நமக்கு உள்ளன.இவற்றை குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
கம்பராமாயணம் ஐயமின்றி தமிழ் பண்பாட்டின் வெற்றி. குறள் நம்மிடமிருந்து உலகிற்கான கொடை. சங்க இலக்கியங்கள் நமது செல்வங்கள். மதுரைப் பேராலயம், கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், தஞ்சைப் பெரியகோயில் இவையனைத்தும் நமது சாதனைகளே.நமது குடித்தெய்வங்கள் ,அவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள தொன்மங்கள் ,அவை வெளிப்படும் பாடல்கள் நம்து நாட்டார் மரபாக அமைந்து நம்மைச் செறிவுற்றவர்களாக்குகின்றன.
இந்த நிலவுடைமைப் பண்பாட்டிலிருந்து எழுந்து முதலாளித்துவச் சமூகமாக ஆகிவிட்டபின்னரும்கூட முதலாளித்துவப் பண்பாடு உலகமெங்கும் உருவாக்கி நிலைநிறுத்தியிருக்கும் குடிமை பண்புகளை நாம் அடையவில்லை என்பதை மட்டுமே குறையாக சுட்டிக்காட்டுகிறேன்.
முதலாளித்துவப் பண்பாடு உலகமெங்கும் உருவாக்கியிருக்கும் குடிமைப்பண்பு என்பது சில அடிப்படைகளின்மேல் கட்டப்பட்டது. அதன் முதல் கருதுகோள் ‘தனிநபர்’ [individual]. தனிநபர் என்பதை தத்துவார்த்தமாக வரையறை செய்து, அத்தனிநபரின் உரிமைகளையும் எல்லைகளையும் வகுத்து அது நவீன யுகத்தை தொடங்கிவைத்தது. இன்னமும் கூடநமக்கு புரியாதது இந்த தனிநபர் என்னும் கருதுகோள்தான். தனிநபர்கள் இணைந்த்தே சமூகம். தனிநபரின் பண்புகளின் தொகை அது. அதேசமயம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் மகிழ்ச்சி மற்றும் ஆன்மிக விடுதலைக்கான தேடலை மேற்கொள்ள உரிமை கொண்டவர். இந்த முரணியக்கம் நமக்குப் புரியவில்லை
ஆகவேதான் நாம் குடிமைப் பண்பற்றவர்களாக இருக்கிறோம் .இதை நமது நிலவுடைமைப் பின்புலத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டும். நமது நிலவுடைமை வாழ்க்கை முறையில் தனிமனிதன் என்ற கருதுகோளுக்கு இடமில்லை .ஆன்மிக தளத்தில் ஆத்மா என்றும் அதன் வீடுபேறு என்றும் நாம் விரிவாக சிந்தனை செய்திருந்தாலும் கூட சமுதாயத்தளத்தில் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும் குலத்திற்கும் சமுதாயத்திற்கும் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவே வாழ்ந்திருக்கிறோம். நம் எண்ணங்கள் இன்று சற்றே மாறியிருந்தாலும் உணர்வுகள் மாறவில்லை. நம் குடும்பமும் சமூகமும் தனிமனிதனுக்கு எந்த இடத்திலும் முற்றான சுதந்திரத்தை அளிப்பதில்லை.
ஆகவே இன்று கூட நமது ஆழுளம நமது மைந்தர்களுக்கோ ,உடன் பிறந்தவர்களுக்கோ, தந்தையருக்கோகூட தங்களுக்கென தனி வாழ்வும் உள்ளமும் உண்டென்பதை மறுக்கிறது. அதெப்படி, சொந்த தம்பியை கேக்க கூடாதா ?என் புள்ளயின் வாழ்க்கையில் எனக்கு உரிமையில்லையா? நான் வேறு என் மனைவிவேறா? – என்ற வகையான குரல்களைத்தான் நாம் நம் சூழல் முழுக்க கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இத்தகைய சூழலில் நமது செயல்கள் இன்னொருவருடைய உரிமையை பறிக்கின்றனவா, இன்னொருவருடைய தனிவாழ்க்கைக்குள் நுழைகின்றனவா என்பதைப் பார்க்கும் கண்ணே நமக்கு அமையவில்லை. பொதுவெளியில் நாம் நடந்துகொள்ளும் முறையால் மற்றவர்களுக்கு என்னவகையான பாதிப்பு என நாம் எண்ணுவதே இல்லை.இன்னொருவரை சுரண்ட நாம் தயங்குவதே இல்லை. பிறர் நம்பொருட்டு துன்புறுவது நமக்கு அளிக்கப்படும் மதிப்பாக தெரிகிறது. இது நம்முடைய நிலவுடைமைக் கால வாழ்க்கையில் நமக்கு கிடைத்த பயிற்சி அதை உதறி இந்த முதலாளித்துவ உளவியலுக்குள் நாம் செல்லவில்லை. நம் உரிமைகள் நமக்குத்தெரியாது, ஆகவேதான் பிறருடைய உரிமைகளையும் வசதிகளையும் மதிக்க தெரியாதவர்களாக இருக்கிறோம்.
ரயிலில் செல்பேசியில் உச்சகட்டத்தில் பாட்டை ஒலிக்க விட்டு கேட்டபடி அமர்ந்திருக்கும் மனிதர் நமக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறார். அவருக்கு குடிமைப் பண்பு இல்லையென்று நாம் நினைக்கிறோம். அவர் நவீன முதலாளித்துவ குடிமைப்பண்பை அறியவில்லையேல் முதலாளித்துவ உளவியலுக்குள் அவர் வந்து சேரவில்லை என்று தான் பொருள். மற்றபடி ஒரு அவசியத்திற்கு உதவக்கூடியவராக அவர் இருக்கலாம். நாம் நம்பி பேசக்கூடியவராக அவர் இருக்கலாம். நேர்மையானவராக இருக்கலாம். நமது குடும்ப அமைப்பிற்குள் மிகப்பொறுப்பான தந்தையாகவும் வழிகாட்டும் பெரியவராகவும் அவர் இருக்கலாம்.அவர் நிலவுடைமைக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவுதான்
அவர் வாழும் நிலவுடைமைக்கால உளச்சூழலில் இன்னொருவர் என்பவர் தன்னில் ஒரு பகுதிதான். இன்னொருவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை. இன்னொருவர் பொருட்டே அல்ல. அனைவரும் சேர்ந்து ஒற்றை திரளாக அங்கு வாழ்கிறார்கள். நாம் அங்கிருந்து முற்றாக இங்கு வந்து சேரவில்லை என்பதே நமது சிக்கல்.
ஆனால் அது மட்டுமல்ல. உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் நெடுங்காலத்துக்கு முன் நாம் ராசிபுரம் அருகே ஒரு பழங்குடிச் சிற்றூருக்கு சென்றோம். அந்த மொத்த சிற்றூரும் மிகமிகத் தூய்மையாக இருந்தது. அன்று அதை நான் பதிவு செய்திருக்கிறேன் அதைப்பற்றி அன்று பேசிக்கொண்டோம். ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்தையும் சுற்றுப்பகுதியையும் கூட்டிபெருக்கி, ஒவ்வொரு வாரமும் சுவரில் படமெழுதி, தரையை மெழுகி வைத்திருந்தார்கள்.
இன்னொரு உதாரணம். எல்லிஸ் டங்கன் எடுத்த ஒரு கருப்பு வெள்ளை ஆவணப்படத்தில் 1920-ல் தமிழகத்தின் ஒரு சிற்றூரின் முதன்மையான செயல்பாடென்பது தன் சூழலை சுத்தப்படுத்திக்கொள்வது என்பதை பதிவு செய்திருக்கிறார். மொத்த ஊரே ஊரை தூய்மைப்படுத்தும் செயலில்தான் காலையில் ஈடுபடுகிறது. “இந்த ஊர் எல்லா தமிழக ஊர்களையும்போல மிகமிகத் தூய்மையானது” என்று அவர் பின்னணிக்குரலில் சொல்கிறார். இன்றைய நமது ஊர்கள் அப்படி இல்லை .நாம் நிலவுடைமைக் காலத்திலிருந்த அந்த கூட்டு ஒழுங்கை இழந்திருக்கிறோம். இன்று நமது கிராமங்களில் எவரும் இன்னொருவரிடம் சென்று “நம் சூழலை தூய்மையாக வைத்திருக்க ஒருங்கிணைவோம்” என்று சொல்லமுடியாது. ஒருவர் சூழலை மாசுபடுத்தினால் அவரைக் கட்டுப்படுத்தும் எந்த குடிமை அதிகாரமும் இன்று இல்லை. அவை நிலவுடைமைக் கால மரபுகள் என்று சொல்லி கைவிடப்பட்டுவிட்டன. நவீன முதலாளித்துவப் பண்பு நலன்கள் கற்றுக்கொள்ளப்படவும் இல்லை .பொதுத் தூய்மை பற்றிய எந்த தன்னுணர்வும் இல்லை. ஆகவே இல்லத்துச் சாக்கடையை திறந்து வீட்டுக்கு முன்னாலேயே விட்டுவிடுகிறோம். வீட்டுக்குப்பைகளை சாலையில் போட்டுவைக்கிறோம். ஏரிகளையும் ஆறுகளையும் சாக்கடையாக்குகிறோம் .அரசு நம்மை பேண வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அந்த அரசை தெரிவு செய்வதில் அது நம்மை உண்மையிலே பேணுகிறதா என்பதை கருத்தில் கொள்ள தவறுகிறோம். மொத்தத்தில் எந்த குடிமைப்பண்பும் இல்லாத வெற்று திரளாக மாறியிருக்கிறோம்.
அதாவது நாம் நிலவுடைமை கால பண்பு நலன்களை இழந்து முதலாளித்துவ பண்பு நலன்களை கற்றுக்கொள்ளவில்லை. இன்று நாம் பெருமிதம் கொள்ளும் எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறோம் என்றால் பெருமிதம் கொள்ளவேண்டிய நிலவுடைமை பண்புகளையும் இழந்திருக்கிறோம் என்றுதான் பொருள். ஆசாரக்கோவையை படிக்கும்போது அது அன்றிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் விதிக்கும் நெறிகளை காணுகிறோம். நீரை எப்படி பேணுவது, ஊரை எப்படி பேணுவது, எப்படி அமர்ந்து உண்பது, எப்படி கைகழுவுவது, உணவை எப்படி பேணுவது, பெரியோரிடம் எப்படி நடந்துகொள்வது, அவையில் எப்படி நடந்துகொள்வது என மிக நீண்ட நெறிகளை அது வகுத்துரைக்கிறது அந்நெறிகளின் பொருட்டு நாம் பெருமிதம் கொள்ளலாம் .இன்று அவற்றை கொண்டிருக்கிறோம் என்பதனால் அல்ல, நேற்று அவற்றை கொண்டிருந்தோம் என்பதனால்.
ஆக, இன்று எதன்பொருட்டேனும் நாம் பெருமிதம் கொள்ள முடியுமா? ஒன்றைமட்டும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.பழங்குடிச் சமூகங்களிலிருந்து நிலவுடைமைச் சமூகம் உருவாகிவந்த வரலாறென்பது உலகம் முழுக்க வன்முறை நிறைந்தது, குருதியால் ஆனது. வென்றவர்கள் பழங்குடிகளை முற்றழித்தே மேலெழுந்து நாகரீங்களை உருவாக்கியிருக்கின்றனர். உலகவரலாற்றை எடுத்துப் பார்த்தால் வன்முறை அற்ற அல்லது வன்முறை மிகக்குறைவான ஓர் சமூகப் பரிமாணம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது. உரையாடுதல் உள்ளிழுத்துக்கொள்ளுதல் ஒருங்கிணைதல் என்பதே சமூக உருவாக்கமுறையாக இருந்திருக்கிறது. அறமென்பது ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் இங்கு நிகழ்ந்திருக்கிறது. தத்துவம் என்பது ஒரு பொது உரையாடலின் விளைவாக திரட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. தொடக்க கால வேதப்பண்பாடும் சரி .அதன் பிறகு எழுந்த சமண- பௌத்தப் பண்பாடும் சரி பிறர்மேல் கருத்தியல் ஆதிக்கம் செலுத்துவதையும், சிந்தனைகளை வென்றெடுப்பதையுமே இலக்காக கொண்டிருந்தன. இந்தியப்பெருநிலத்தையே மோதல்களின் வர்க்கமுரண்களின் பெருங்களமாகக்கண்ட மார்க்சியர்களான டி.டி. கோசாம்பி போன்றவர்கள் கூட இதை பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வன்முறையற்ற சமூகம் உருவாக்கிய அடிப்படை விழுமியங்கள் நம் சமுதாயத்தில் ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன. இதிலும் வென்றவர்கள் உண்டு தோற்றவர்கள் உண்டு. சுரண்டுபவர்கள் உண்டு சுரண்டப்படுபவர்கள் உண்டு. அது அன்றி வரலாறு அமைய இயலாது .ஆனால் அமெரிக்காவை நாம் பார்க்கும்போது அவர்கள் கழுவிக் கழுவி தீராத பெருங்கறையை கைகளில் கொண்டிருக்கிறார்கள். நாம் அவ்வாறல்ல. பெரும்பாலும் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து உருவாக்கப்படும் சமுதாய உருவாக்கமே இங்கே நடந்திருக்கிறது. அதன் விழுமியங்கள் இன்றும் நம்மிடம் உள்ளன. அதுவே இன்றும் இந்தியாவை ஜனநாயக நாடாக வைத்திருக்கிறது.
நம்மைச் சூழ்ந்திருக்கும் எந்த நாட்டிலும் இல்லாத ஜனநாயகம் நம்மிடம் ஏன் இன்றும் நீடிக்கிறது என்றால் இந்தியாவின் உருவாக்கத்திலேயே தொன்மையான அந்த ஜனநாயகப் பண்பு இருந்தது என்பதனால்தான். கருத்தொற்றுமை சார்ந்த ஒரு செயல்பாட்டின்மேல் ஏன் நமக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் நமது எல்லா கிராமங்களும் அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதனால் தான். ஒரு தொன்மையான மக்களாட்சி இங்கு இருந்தது. அது குலங்களின் கூட்டமைப்பாக இருந்திருக்கலாம். ஆயினும் அது ஒன்றையொன்று வெறுக்கும் இனங்களின்குலங்களின் மோதல்களமாக இருக்கவில்லை. ஆகவே தான் நிலவுடைமை முறையில் இருந்து வெறும் ஒரு தலைமுறைக்குள் நவீனஜனநாயகத்திற்குள் நாம் வரமுடிந்தது. மிக எளிதாக ஜனநாயக விழுமியங்கள் பலவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஒரே தலைமுறைக்குள் நம்மால் மாறமுடிந்தது. அரசர்கள் ஆண்ட நிலமாக இருந்த நாம் ஓரிரு ஆண்டுகளில் காந்தியை தலைவராக ஏற்றுக்கொண்டது அதனால்தான்.
ஐரோப்பா நவீன ஜனநாயகத்தின் தொட்டில். ஆனால் அங்கே அரசாட்சி, கட்டுப்படுத்தப்பட்ட அரசாட்சி, இணைமக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி என பல சோதனைகள் வழியாக, பல படிகள் வழியாக, பல குருதிப்பெருக்குகள் மற்றும் பேரழிவுகள் வழியாகவே அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை நாம் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். அவர்கள் முந்நூறாண்டுகளில் அடைந்தவற்றை நாம் முப்பதாண்டுகளில் அடைந்தோம்.
இன்று அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் மானுட உரிமைக்கான அருங்காட்சியகத்தில் கருப்பர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக நிகழ்த்திய பெரும்போர்களின் வரலாற்றை படித்துக்கொண்டிருக்கிறேன் .1968-லும் 1970 களிலும் நிகழ்ந்தவை. அதற்கும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அவர்கள் கோரும் அந்த உரிமைகள் சடபூர்வ நடைமுறையாகிவிட்டன. தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டபோது இந்தியாவில் பெரும்பான்மையிடமிருந்து எந்த வன்முறை சார்ந்த எதிர்ப்பும் உருவாகவில்லை. மிகச்சிறுபான்மையினர் அதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் அதிலிருந்த அடிப்படை அறத்தை இந்தியா மிக எளிதில் ஏற்றுக்கொண்டது. பொதுவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்க்குரல்கூட எழவில்லை. எந்தப் போராட்டமும் இன்றி தீண்டாமை சட்டவிரோதமாக்கப்பட்டது. இடஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை அம்பேத்கர் எழுதும்போது இந்தியாவின் உயர்சாதிப் பெரும்பான்மை இயல்பாக அதை ஏற்றுக்கொண்டது. இந்த வரலாற்று உண்மையை எந்த இந்திய வெறுப்பாளரும் மழுப்பிவிட முடியாது.
நம்முடைய நீண்ட சமன்வயம் சார்ந்த வரலாறு நம்மை ஜனநாயகம் நோக்கி கொண்டுவந்தது .அதன் பொருட்டு நாம் பெருமை கொள்ளலாம். இன்று ஐரோப்பா ஜனநாயகத்தின் விதைநிலமாக கருதப்பட்டாலும் கூட, அமெரிக்கா ஜனநாயகத்தின் விளைநிலமாக கருதப்பட்டாலும் கூட அவர்களிடம் சென்று இயல்பாகவே ஜனநாயக பண்பு கொண்ட ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்று நம்மால் சொல்ல முடியும். அதன்பொருட்டு நாம் பெருமிதம் கொள்ளவும் முடியும்.
உண்மை, ஜனநாயகத்தின் குடிமைப்பண்புகளை நாம் இன்னும் அடையவில்லை. பழங்குடிவாழ்க்கையில் இருந்து பல்வேறு வாழ்க்கைநிலைகளில் இருக்கும் நமது மாபெரும் மக்கள்திரள், இன்னும் நீங்காதிருக்கும் வறுமை, நமது அரசியலின் நிலையின்மைபோன்ற பல காரணங்கள் நம்மை அதிலிருந்து தடுத்து நிறுத்துகின்றன. ஆனால் இருநூறு ஆண்டுகள் ஐரோப்பியர்கள் மெல்ல மெல்ல உருவாக்கி எடுத்த குடிமைப்பண்புகளை நோக்கி நாம் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் சென்று சேருவோம் என்று நான் நம்புகிறேன்.
மற்றபடி மேற்கு நாடுகளின் இழிவுகள் என எதையும் சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. நம்மை நாமே நோக்கிக்கொள்வதே உகந்தது என நான் நினைக்கிறேன். அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளின் முதன்மைப்பிரச்சினை அவை இனவெறியிலிருந்து வெளிவரவில்லை, இனவெறியை நாகரீகமாக்க மட்டுமே பெரும்பாலும் கற்றுக்கொண்டிருக்கின்றன என்பது. நுகர்வு வெறி அவற்றை ஆள்கிறது. நுகர்வின் பொருட்டு ஆக்ரமிப்பு வெறி. அவை இனவெறியுடன் இணையும்போது உலகமே தனக்கானது என எண்ணும் உளநிலை. ஆனால் இவை அனைத்தையும் நாம் சுடச்சுடக் கற்றுக்கொள்கிறோமே
மறுபிறப்பில் எனக்கு வெறுமே ‘நம்பிக்கை’ இல்லை. அது உண்டு என நான் ‘அறிவேன்’. ஆகவே இப்படிப்பிறக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படமாட்டேன்.
ஜெ
இந்தியப்பெருமிதம் – கடிதங்கள்