அஞ்சலி : மகரிஷி

 

மூத்த எழுத்தாளர் மகரிஷி நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கிருஷ்ணசாமி சர்மா மற்றும் மீனாட்சியம்மாளின் மகனாக பிறந்தவர் டி.கே.பாலசுப்பிரமணியம். சேலம் பெரும்பாலும் இலக்கியச்செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி ஆன்மிக ஈடுபாடுகொண்டு வாழ்ந்தார். மனைவி பத்மாவதி.

 

தி.ஜானகிராமன் அவருடைய புகழ்பெற்ற சிலநாவல்களை ஆனந்தவிகடன் முதலிய பொதுவாசக இதழ்களில் எழுதினார். அவை  அன்று பொதுவாசிப்பு எழுத்துக்குள் நுழைந்த பலரை ஆழமாக பாதித்தன. அவர்களை விமர்சன நோக்கில் ஒரு பட்டியலாகத் தொகுக்கலாம். முக்கியமானவர் ஆர்வி. [ஆர்.வெங்கட்ராமன்] அவருடைய ‘அணையாவிளக்கு’ குறிப்பிடத்தக்க ஆக்கம். இன்னொருவர் மாயாவி. அவருடைய ‘கண்கள் உறங்காவோ?’ ஒரு நல்ல படைப்பு. பி.எம்.கண்ணன் இன்னொருவர். அவருடைய ‘இன்பப்புதையல்’ குறிப்பிடத்தக்க ஆக்கம்

 

அடுத்த தலைமுறையில் இம்மரபின் தொடர்ச்சியாக எழுதவந்தவர் பி.வி.ஆர். [பி.வி.ராமகிருஷ்ணன்] அவருடைய ’கூந்தலிலே ஒரு மலர்’ ஒரு முக்கியமான படைப்பு. ‘மிலாட்’  ’கிண்டிஹோல்டான்’ ‘ஜி.ஹெச்’ போன்று குறிப்பிட்ட நிலைக்களன்களைக் கொண்ட கதைகளையும் பி.வி.ஆர் எழுதியிருக்கிறார். பி.வி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தின் நட்சத்திரமாகவே திகழ்ந்தார். பின்னாளில் பாலகுமாரன் எழுதவந்தபோது அவரிடம் பி.வி.ஆரின் செல்வாக்கு நிறைய இருந்தது. குறிப்பாக லாரிப்போக்குவரத்து உலகம் போன்ற வெவ்வேறு கதைக்களன்களைக்கொண்டு நாவல்களை எழுதுவதில்.

 

பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.

 

மகரிஷி பாலகுமாரனுக்கு உடனடி  முன்னோடி. சொல்லப்போனால் பாலகுமாரனை எழுத்துமுறையில் மகரிஷியின் அடுத்த கண்ணி என்றே சொல்லிவிடலாம். மகரிஷியிடம்தான் பாலகுமாரனில் நாம் காணும்  ‘நிதானமாக வாழ்க்கையைப்பற்றிப் பேசும் பெண்’ என்னும் கதாபாத்திரத்தை நாம் காண்கிறோம். ஆனால் பாலகுமாரனிடமில்லாத தெளிவான ஒழுக்கநோக்கு மகரிஷியிடம் உண்டு. பாலகுமாரனை அடுத்தகட்டத்தவர் ஆக்கியது அவருடைய மீறல்தான்.

 

சொல்லப்போனால் ஜானகிராமன் உட்பட இவர்கள் அனைவருமே அவர்களின் காலகட்டத்தைச் சேர்ந்த ஒழுக்கவியல் நம்பிக்கைகளைச் சற்றே சீண்டுவதன் மூலமே வாசகனிடம் நிலைகுலைவை உருவாக்கி கவனம்பெற்றனர். அந்தச் சீண்டல் இயல்பு முற்றிலும் இல்லாதவர் என்பதே இவர்களில் மகரிஷியை விலக்கி நிறுத்துகிறது. மகரிஷி மரபான நடுத்தரவர்க்க ஒழுக்க, அறநோக்கையே வெளிப்படுத்துகிறார். அதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் இருந்தது. ஆனால் ஒழுக்க நோக்கின் அடிப்படையில் தன் கதைமாந்தரை எப்போதுமே அவர் கீழிறக்குவதில்லை.

 

உதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பு ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’. இது காபரே ஆடும் ஒரு பெண்ணுக்கும் அவளால் ஆதரிக்கப்படும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பைப் பற்றிய கதை. அதை இரு உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டடையும் எதிர்பார்பே அற்ற தூய நட்பு என மகரிஷி வரையறை செய்கிறார். அந்நட்பின் வழியாகவே கதைநாயகி மேலானவள் ஆகிறாள். அதை இயல்பான நிகழ்வுகள், உரையாடல்கள் வழியாக உணர்த்திச் செல்கிறார்

 

இறுதியில் கால்களை இழந்து சக்கரநாற்காலியில் இருக்கும் நடனமங்கையான கதைநாயகியை உதறிவிட்டு வந்துவிடும்படி அவளால் படிக்கவைக்கப்பட்டு வாழ்க்கையில் வெற்றிபெற்ற தோழியிடம் அவள் காதலன் சொல்கிறான். அவள் அவனை துறந்துவிடுகிறாள். ‘வெறுமே காத்திருப்பதை விட ஒரு இலட்சியத்துடன் காத்திருக்க எனக்கு வாய்ப்பு கொடு’ என அவள் நடனமங்கையிடம் சொல்லுமிடத்தில் முடியும் அக்கதை தமிழின் இலக்கியப்படைப்புகளின் பட்டியலிலும் சேர்க்கத்தக்கதே. இன்றைய பெண்ணிய நோக்கு மென்மையான முறையில் வெளிப்பட்ட கதை அது.

 

வெறும் உடலாகவே பார்க்கப்பட்ட சுரண்டப்படும் பெண்ணுக்குள் இருக்கும் தன்னியல்பான விடுதலையை, ஆளுமைப்பண்பை கூறிய படைப்பு என அதை இன்று கருதுகிறேன். அவர்கள் இருவரும் ஆண்களின் உலகிலிருந்து தங்களை விலக்கிக்கொள்கிறார்கள். தங்கள் உலகைப் படைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கசப்பில்லாமல், எதிர்மறைநோக்கு இல்லாமல் இயல்பாக அதைச் செய்கிறார்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் ஒழுக்கம்சார்ந்த அளவீடுகள் இல்லாமல் பெண்ணை நோக்கி அவள் ஆளுமையைச் சித்தரித்த குறிப்பிடத்த படைப்புக்களில் ஒன்று இது.

 

ஜானகிராமனிடமிருந்து இந்த மரபினர் பெற்றுக்கொண்டது சரளமான தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாகக் கதையைக் கொண்டுசெல்வது. புறச்சூழலை இவர்களில் பி.வி.ஆர் மட்டுமே ஓரளவேனும் நன்றாகச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் நிகழ்ச்சிகளின் ஒழுக்காக அமைபவை இவர்களின் கதைகள். நடுத்தரவாழ்க்கையின் ஒழுக்கச்சிக்கல்களைச் சார்ந்தவை பெரும்பாலான கதைக்கருக்கள். உறவுகளின் உணர்ச்சிமிக்க தருணங்கள்தான் கதைகளின் உச்சங்களாக அமைந்துள்ளன. மகரிஷியும் உரையாடல்களை சிறப்பாக எழுதுபவர்.

 

பொதுவாசிப்புக்கான எழுத்தில் மகரிஷி போன்றவர்களை எப்படி வரையறை செய்யலாம்? பொதுவாசகர்களுக்கான எழுத்திலேயே பல நிலைகள் உண்டு. பொதுவாக இத்தகைய எழுத்துக்கள் வாசகர்களின் உணர்வுநிலைகளை பொதுமைப்படுத்தி அவற்றில் சிலவற்றை மாற்றிமாற்றி இணைத்து அவர்களுடன் ஓர் உணர்வுவிளையாட்டை நிகழ்த்துவனவாகவே அமையும். செண்டிமெண்ட், மெலோடிராமா என்றெல்லாம் இவற்றையே சொல்கிறோம். உயரிய உணர்ச்சிகளோ, ஆழ்ந்த உணர்ச்சிகளோ இவற்றில் இருக்காது. உணர்வுநிலைகள் ஊகிக்கக்கூடியனவாகவும் அமையும்.

 

ஆனால் இவ்வகை எழுத்துக்களிலேயே ஒரு பகுதி சற்றே கூர்மைகொண்டு மேலெழுந்து புதிய திசைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும், பன்முகவாசிப்புக்குரியதாகவும், அறிவார்ந்ததாகவும் அமையும். ஏனென்றால் அத்தகைய வாசகர்வட்டமும் பொது வாசிப்பில் உண்டு. இலக்கியத்திற்கு மிக அருகே வந்துகொண்டிருக்கும் எழுத்து இது. இவற்றில் அவ்வப்போது பல படைப்புக்கள் ஆழமான இலக்கியப்படைப்புக்களாகவும் ஆகக்கூடும். மகரிஷி இவ்வரிசையைச் சேர்ந்தவர். நதியைத் தேடிவந்த கடல், வட்டத்திற்குள் ஒரு சதுரம் என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவையே

 

ஆனால் இவை வணிக இதழ்களில் வெளிவந்தமையாலேயே  இலக்கியவாசகர்களால் கவனிக்கப்படவில்லை, இலக்கிய விமர்சனத்தால் அடையாளம் காட்டப்படவுமில்லை. ஆகவே அந்தத் தலைமுறைக்குப்பின் வாசிக்கப்படவும் இல்லை. இதை நான் முன்னரே சுட்டிக்காட்டியிருக்கிறேன். நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் உட்பட அனைத்து நூல்களிலும் இத்தகைய ஆக்கங்களைச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.

 

இதற்கு மறுபக்கம் சிற்றிதழ்ச்சூழலில் வெளிவந்தமையாலேயே, ஒரு மெல்லிய அரசியல்சாயல் கொண்டிருப்பதனாலேயே சாரமற்ற தேர்ச்சியற்ற எழுத்துக்களும் இலக்கியமாகக் கருதப்படுவது. தமிழ் நவீன இலக்கியச்சூழலில் இலக்கியப்பட்டியல்களில் இடம்பெறும் நூல்களில் கால்வாசி படைப்புக்கள் வட்டத்திற்குள் ஒரு சதுரம் அளவுக்கு தரமானவை அல்ல என்பது ஓர் உண்மை. சிற்றிதழ்ச்சூழல் என்னும் அந்த உருவக வட்டம் இன்று இல்லாமலாகிவிட்டது. இன்று நாம் அழகியல்சார்ந்த  விமர்சன அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியிருக்கிறது

 

மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. மகரிஷிக்கு அஞ்சலி

 

காடும் நகரமும்

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

ஆர்வி

இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைசுப்பு ரெட்டியார்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16