பகுதி மூன்று : பலிநீர் – 4
புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து ஒழுகியபடி எழுப்புவதாக உணர்ந்தார். பிறிதொரு இடத்தில் அவரே அவர்களை முகமில்லாத பெருந்திரள் மக்களாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஒரு மலைச்சரிவிலென ஒழுகி இறங்கினர். அம்மலைச்சரிவு ஒருகணத்தில் செங்குத்தாக வெட்டப்பட்ட பாறை விளிம்பென மாறி அவர்களை கீழே உதிர்த்தது. அப்பால் இருண்டு திரண்டு அமைந்திருந்த இருள் அவர்களை வாங்கிக்கொண்டது. கூச்சலிட்டு அலறியபடி கைகளை வீசியபடி அவர்கள் அவ்விருளில் பொழிந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தனர். மானுட உடல்களாலான அருவி. மானுட உடல்கள் சென்றிறங்கும் சுழி.
விழிகளின் வெறிப்பும், திறந்த வாய்களில் பற்களின் வெண்மையும், துடித்து உதறிக்கொள்ளும் கைகால்களின் குழம்பிய அசைவுக்கொப்பளிப்பும், அவற்றுடன் ஒட்டாமல் ஒலிப்பதென இருளை அனைத்து திசைகளிலிருந்தும் அறைந்து அதிரவைத்த அலறல்களின் முழக்கமும் அவரை நடுக்குறச் செய்தன. பல்லாயிரம் பேர் அவ்விருளுக்குள் சென்று மறைந்த பின்னரும் மேலும் வந்துகொண்டிருந்தனர். முன்னர் விழுந்தவர்கள் தொடர்ந்து வந்தவர்களை இழுத்து வந்து தாங்கள் இட்ட வெற்றிடத்தை நிரப்பினர். அலையலையென உடல்களின் கொப்பளிப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்… அவ்வீழ்ச்சிக்கென்றே நெடுந்தொலைவிலிருந்து அவர்கள் அவ்வாறு கிளம்பி வந்திருந்தார்கள்.
கனகரின் தலை புரவியின் கழுத்தில் சென்று முட்டிக்கொண்டபோது அவர் விழித்துக்கொண்டார். புரவியிலிருந்து விழுந்துவிடுவதுபோல் அவர் உடல் ஒரு பக்கமாக சரிந்திருந்தது. கையிலிருந்த கடிவாளத்தை மணிக்கட்டில் நன்றாகச் சுழற்றிக் கட்டியிருந்தமையால் புரவி நிற்கவில்லை, அவருடைய பழகிய உடல் புரவியிலிருந்து சரியவும் இல்லை. நிமிர்ந்தமர்ந்து சூழ நோக்கியபோது சற்று முன் அவர் கண்டுகொண்டிருந்த கனவே அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தார். அவரைச் சூழ்ந்திருந்த மக்கள்திரள் கூச்சலிட்டபடி முட்டி மோதி ததும்பி தேங்கிச் சுழித்து வழிகண்டு பெருகிப் பீறிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. அந்த முழக்கம் இருளெனச் சூழ்ந்திருந்த காட்டுக்குள் எதிரொலித்து திரும்பி வந்தது.
அவர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த ஏவலனிடம் “யார்? என்ன?” என்றார். அவனும் சூழ நோக்கியபின் வாயைத் துடைத்தபடி அணுகிவந்து “அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே!” என்றான். கனகர் எரிச்சலுடன் “ஆம், அதை என் கண்களாலேயே பார்க்கிறேன். அறிவிலி, அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்?” என்றார். அதற்குள் பின்புறம் அவரை அணுகிய ஒற்றன் “கங்கை வந்துவிட்டது, அமைச்சரே” என்றான். அவர் அச்சொல்லை வாங்கிக்கொள்ளவில்லை. “இவர்கள் எங்கு ஓடுகிறார்கள்?” என்றார். “கங்கை நோக்கி ஓடுகிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “கங்கை நோக்கி எதற்கு?” என்று உளம் பதியாமல் மீண்டும் கனகர் கேட்டார். “அதை அவர்களே அறியார். முதலில் கங்கையைப் பார்த்தவர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்நீர்ப்பரப்பை நோக்கி ஓடினார்கள். அவ்வொலியே ஆணை என்றாக எஞ்சியவர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன்.
கனகர் ஓடிக்கொண்டிருப்பவர்களின் குரல்களை அதன் பின்னரே ஒவ்வொரு தனிச்சொற்களாக பிரித்து பொருள்கொள்ளத் தொடங்கினார். அவர்கள் “அன்னையே! அன்னையே!” என்று கூவினர். “மூதன்னையே! குடித்தெய்வமே! விண்ணின் விழுப்பொருளே! உணவூட்டுபவளே!” என்று கதறினர். அருகில் செல்லும் ஒவ்வொரு முகத்தையாக அவர் மாறி மாறி பார்த்தார். பதறும் கைகளை விரித்து கதறும் பெண்கள். அன்னையரை கால் தழுவிக் கூவியழும் குழந்தைகள். நடுக்குற்று, உடல் துடிக்க, விம்மிக் குமுறியபடி செல்லும் முதியவர்கள். “அன்னையே! அன்னையே! அமுதானவளே!” என்று அவரைச் சூழ்ந்து பல்லாயிரம் மானுடக்குரல்கள் கூவிக்கொண்டிருந்தன. அவை ஒருங்கிணைந்து விண்ணில் அறையும் ஒற்றைக்குரலென்றாயின.
முன்னால் சென்ற காந்தாரியின் தேர் தயங்கி நின்றது. கனகர் புரவியை முன் செலுத்தி அருகணைந்தார். அவருக்கு முன் மரக்கிளைகளின் இடைவெளியினூடாக கங்கையின் இருள்நீரின் ஒளிர்வு தெரிந்தது. சிற்றலைகளில் இலைகள் நிழலுருக்கள் என நெளிந்தாடின. வானிலிருந்து ஒளிபெற்று கங்கை அந்த துலக்கத்தை அடைகிறது என்பார்கள். ஆனால் அப்போது வானில் ஒளியிருக்கவில்லை. வேறெங்கிருந்தோ அது ஒளிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே அவள் தோன்றும் இமையமலை உச்சியில் வெண்பனி நிறைந்திருக்கும் என்பார்கள். அது விண்ணிலிருக்கும் ஒளி பனித்து உதிர்ந்து செறிந்து பருவடிவு கொண்டது. கங்கைக்குள் எப்பொழுதும் அவ்வெண்பனியின் ஒளி உண்டு என்பர். இரவில் உள்ளிருந்து எழும் புன்னகையென அது அவளை மிளிரச்செய்கிறது என்று அன்னை சொல்லி அவர் கேட்டிருந்தார்.
மேலும் நெருங்க இப்போது கங்கையின் விரிந்த நீர்ப்பரப்பு கண்களை நிறைத்தது. அதிலிருந்து நோக்கை விலக்க இயலாமல் அவர் புரவியின் மீது அமர்ந்திருந்தார். கருமை ஒளிகொண்டுள்ளது. கரிய வைரங்கள் இவ்வாறு ஒளி கொள்ளுமா? கரிய வைரங்களா? அவை காப்பிரி நாட்டிலிருந்து வருவதுண்டு. காளிக்குரியவை என்பதனால் அவற்றை அரண்மனைக் கருவூலத்தில் வைப்பதில்லை. அஸ்தினபுரியின் தென்மேற்கு மூலையிலுள்ள பாய்கலைப்பாவையின் ஆலயத்தில் கருவறைச் சிலையின் கண்கள் கருவைரங்கள். எருமைவிழிகளே கரிய வைரங்கள்தான். ஆனால் வெறும் மணி இவ்வாறு ஒளிகொண்டிருக்காது. அதை ஒளிரச்செய்ய வானம் தேவை. எங்கிருந்தாலும் வைரம் வானை வாங்கிக்கொள்ளும். வானம் மூடிய பின்னரும் தான் பெற்ற ஒளியை உள்ளே வைத்துக்கொள்ளும். மண்ணுக்கு அடியில்கூட அது ஒளிகொண்டிருக்கும். அது ஒரு விழி.
பாரதவர்ஷத்தின் நீள்விழி கங்கை. எக்கவிஞர் இதை பாடினார்கள்? எவரோ எங்கோ. பின்னர் உள்ளில் சொற்களும் ஒழிய வெற்று நோக்கு மட்டுமாக நின்று அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். நெடும்பொழுதுக்குப் பின் தன்னுணர்வு கொண்டபோது விழியினூடாக தன்னுடலெங்கும் குளிர்ந்த நீலஒளி நிறைந்திருப்பதைப்போல் உணர்ந்தார். சிற்றலைகளாக குருதி நெளிந்துகொண்டிருந்தது. விழிகளுக்குள் ஒளியலை. சித்தத்திற்குள் ஓடும் சொல்லும் ஒளியலை. தன் உடலே சிற்றலைகளாக ததும்பிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். அதுவரை உணர்ந்த அனைத்து தனிமையும் சோர்வும் சலிப்பும் அகன்று உள்ளம் அமைதிகொண்டிருந்தது. நெருப்பு பட்டு எரிந்த தோற்பரப்பின் மீது குளிர்ந்த எண்ணெய் பட்டதுபோல். ஓயா வலி நின்றுவிட்டதுபோல. துயின்று விழித்தெழுந்ததுபோல் தெளிந்து அலையழிந்து தண்ணென்று தன்னை உணர்த்தியது அகம்.
அவரை அணுகிய ஒற்றன் “கங்கைக்கரை முழுக்க செறிந்து அடர்ந்துவிட்டனர். சாலை நிறைந்து அசைவிழந்துவிட்டது. பின்னிருந்து மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நமது அரசியின் தேர்கள் இனி முன்னால் செல்ல இயலாது” என்றான். கனகர் “நாம் செல்ல வேண்டியது எங்கு?’’ என்றார். அப்போது அனைத்து ஆர்வங்களும் வடிந்து அவர் உள்ளம் சலிப்புற்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி எங்கேனும் சென்று தனிமையில் அமர்ந்துவிடவேண்டும் என அகம் ஏங்கியது. ஒற்றன் “கங்கைப்படித்துறையில் இறங்கி படகுகளில் முக்தவனம் வரை செல்வதாகத்தான் திட்டம். ஆனால் இப்போது தேர்கள் கங்கைக்கரையை அணுகவே இயலாது எனப்படுகிறது” என்றான். கனகர் தன் புரவியை முன்னால் செலுத்தி மேலும் அணுகி கங்கைக்கரையை பார்த்தார். ஒளிவழிவாக ஓடிய கங்கையின் விளிம்பிலிருந்து நாணல்கரை வரை இடைவெளியில்லாமல் மானுடத்திரள்கள் செறிந்திருப்பதை கண்டார். மேலும் மேலும் சாலையிலிருந்து மக்கள் பொழிந்து அப்பெருக்கை அடர்வுறச் செய்துகொண்டிருந்தனர். கங்கையின் படகுப்படித்துறையை அவர்கள் முற்றாகவே மூடி மறைத்திருந்தார்கள்.
“ஆம். நாம் இப்போது எவரையும் விலக்கவோ வழி அமைக்கவோ இயலாது. இவர்கள் எவரும் நமது ஆணையை இப்போது செவிகொள்ள மாட்டார்கள்” என்று கனகர் சொன்னார். “ஆணையுடன் அவர்கள் நடுவே சென்றால் அவர்கள் நம்மை தாக்கவும்கூடும்” என்றான் ஒற்றன். “பக்கவாட்டுக் காடுகளுக்குள் தேர்நிரையை செலுத்துங்கள். பாதை இருக்கும் வரைக்கும் தேர்கள் செல்லட்டும். அதன்பின் சற்று நடந்து எங்கேனும் நீள்பாறை ஆற்றுக்குள் துருத்தியிருக்கும் இடத்தை சென்றணைவோம். படகுகள் அங்கு வரட்டும், அங்கிருந்து ஏறிக்கொள்வோம்” என்றார் கனகர். ஒற்றன் “இங்கிருந்து சற்று அப்பால் உதகம் என்னும் இடம் உள்ளது. அங்கு இரண்டு பேராலமரங்கள் ஆற்றுக்குள் சரிந்து என நின்றிருக்கின்றன. ஆலமர வேர்களினூடாகவே படகு வரைக்கும் செல்ல இயலும். படகுகளை அங்கு அணையச்செய்யலாம்” என்றான். “ஆம், இங்கிருந்து ஒளிச்செய்தி அனுப்புக!” என்றபின் கனகர் முன்னால் சென்றார்.
தேர்கள் பக்கவாட்டில் காட்டுக்குள் திரும்பும்படி ஆணை எழுந்தது. அது பலமுறை காற்றில் சுழன்றது. தேர்களில் சகடம் உரசும் ஒலியாக அது மாறியது. வண்டியோட்டிகளும் வீரர்களும் சொல்லிணைந்த முழக்கமாக இணைந்துகொண்டார்கள். கருக்கிருட்டில் ஒளிச்சுழற்சிகளினூடாக எழுந்த ஆணைகள் முன்னும் பின்னும் பரவி அங்கே வழிகாட்டும்தெய்வங்கள் தோன்றிவிட்டன எனத் தோன்றச் செய்தன. முகப்பில் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் தேர்கள் திரும்பி பக்கவாட்டில் காட்டிற்குள் சென்ற மண்பாதைக்குள் நுழைந்தன. அவ்வாறு ஒரு கிளை பிரிந்து காட்டுக்குள் நுழைந்ததை பெருகிச்சென்ற மைய ஒழுக்கினர் அறியவில்லை. அவர்களிடமிருந்து முறியாத முழக்கம் எழுந்துகொண்டிருந்தது. கங்கையின் ஒளி அனைத்து விழிமணிகளிலும் துளித்து நின்றது. அவர்கள் பிற எதையும் நோக்கவில்லை.
காட்டுக்குள்ளிருந்து மலைப்பொருட்களையும் விறகையும் மையச்சாலைக்குள் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பாதை நெடுநாட்களாக கைவிடப்பட்டு, மழையில் பெருகி வந்து படிந்த மணலும் சேறும் நிறைந்து கிடந்தது. சகடங்கள் புதைந்து, அச்சுகள் கூக்குரலிட்டன. வண்டிகள் அலைகளிலென ஊசலாடி குடம் முட்டும் ஓசையுடன் சென்றன. ஆங்காங்கே புரவிகளும் காளைகளும் சேற்றில் கால் புதைந்து நிற்க அவற்றுக்கு முன் பலகைகளைப்போட்டு உந்தி மேலழுப்பினர். பல இடங்களில் சகடங்கள் ஆழப் புதைந்து வண்டிகள் நின்றன. அவற்றிலிருந்த அரசியரும் ஏவற்பெண்டுகளும் இறங்கிக்கொள்ள காவலர் நீண்ட கழிகளை சகடங்களுக்கு அடியில் கொடுத்து நெம்பி அவற்றை எழுப்பி மீண்டும் செலுத்தினர். அவை முனகிக் கூச்சலிட்டு எழுந்து உருள மீண்டும் ஏறிக்கொண்டனர். சற்றுநேரத்திலேயே நின்றுவிட நேர்ந்தது. மீண்டும் ஏவலர் நெம்புகோல்களுடன் வந்தனர்.
கனகர் “இவ்வாறு நெடுந்தொலைவு செல்ல இயலாதென்று தோன்றுகிறது” என்றார். ஒற்றன் “இன்னும் சற்று தொலைவுதான். அதன் பின்னர் படகுத்துறை வரை நடந்தே சென்றுவிடலாம்” என்றான். கனகர் புரவியில் அமர்ந்தபடியே இடப்பக்கம் கங்கைக்கரை தெரிவதை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு அப்போதும் மக்கள்திரள் நெருங்கி பெருகிக்கொண்டே இருந்தது. “மேலும் மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நெரிசல் இவ்வண்ணமே தொடர்ந்தால் இவர்களில் பலநூறு பேர் இன்று கங்கையில் மூழ்கி உயிர்துறக்கக் கூடும்” என்றார். ஒற்றன் மறுமொழி சொல்லாமல் வந்தான். “எந்தப்பெருக்கும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அழிவே” என்று கனகர் மீண்டும் சொன்னார். “இவர்களை எவரும் கட்டுப்படுத்த இயலாது” என அவரே தொடர்ந்தார். “அவர்களின் உள்ளங்கள் மேலும் மேலுமென பெருகிக்கொண்டிருக்கின்றன.”
“இம்மக்கள்நிரையின் பின்னால் இருந்து வருபவர்களின் அழுத்தத்தால் முன்னால் நிற்பவர்கள் நீருக்குள் தள்ளிவிடப்படுவார்கள். கங்கையில் மழைநீர் பெருகிவருவதால் ஓரத்துநீரின் எதிர்சுழலும் விசையும் மிகுந்திருக்கும்” என்று கனகர் சொன்னார். ஒற்றன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. கனகர் அவனை நோக்கி திரும்பி “எவ்வகையிலேனும் பின்னால் வருபவர்களை தடுத்து நிறுத்தி இப்பெருக்கை மறுபக்கமாக மடைமாற்றிச் செலுத்தி காட்டிற்குள் அனுப்பிவிட முடியுமா? சற்று அப்பால் கங்கைமணலுக்கு இவர்களில் ஒருசாராரை கொண்டு செல்ல இயன்றால் போதும்” என்றார். ஒற்றன் தொண்டையை கனைத்தபின் “அமைச்சரே, அவர்களில் பெரும்பாலோர் உயிர்துறக்கவே வருகிறார்கள்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று சினத்துடன் கேட்டபடி கனகர் திரும்பினார்.
“அவர்களில் பலர் அழுதபடி செல்வதை நீங்கள் பார்க்கலாம். உயிர்விடுவதற்கு உகந்த வழி கங்கையில் ஒழுகிச்செல்வதே என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நெறிகள் கூறி வந்துள்ளன. இங்கு அவர்கள் இருந்து என்ன செய்யப்போகிறார்கள்? முதியவர்கள் மைந்தரை இழந்த துயருடன் இங்கு வாழ்வதில் பொருளில்லை என்றே உணர்வார்கள். கணவரை இழந்த பெண்டிருக்கு இளங்குழவியரும் இல்லை என்றால் அவர்களுக்கு இனி வாழ்வில் இன்பம் இல்லை. இங்கு சென்றுகொண்டிருப்பவர்களில் மிகச் சிலரே திரும்பிச்செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புள்ளவர்கள். பிறர் மீளப்போவதில்லை” என்றான் ஒற்றன். கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபடி திகைப்புடன் திரும்பி அக்கூட்டத்தை பார்த்தார் கனகர். அக்கணமே அச்சொற்கள் உண்மை என உணர்ந்தார்.
மணற்கரை விண்டு சரிவதுபோல் கங்கைக்கரையை நெருங்கியிருந்த திரள்முகப்பிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நீருக்குள் விழுந்துகொண்டிருப்பதை பார்த்தார். அவர்கள் விழுந்த இடங்களில் நீர் கொந்தளித்தது. அரையிருளில் நிழல்தோற்றங்களாக தெரிந்தபோதும் கூட அது அவரை நடுக்குறச் செய்தது. “அவர்கள் நீர்ப்பலி கொடுக்க வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டேன்” என்றார். ஒற்றன் “இதுவும் ஒரு பலிக்கொடையே. கங்கையில் தன்னை அளித்தல் முதன்மை பலிக்கொடை என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. அன்னங்களில் தூய அன்னம் என்பது உடலே.” கனகர் உடல் குளிரிலென நடுங்கிக்கொண்டிருக்க வெறித்து நோக்கியபடி புரவி மேல் அமர்ந்திருந்தார். நோக்கு நன்கு தெளிந்த அவருடைய கண் எதிரில் கங்கையில் கரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் நீருக்குள் விழுந்து சுழித்து புரட்டி கொப்பளித்து அலையெழுந்து சென்றுகொண்டிருந்த நீரில் மறைந்துகொண்டிருந்தனர்.
முன்னால் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் வண்டியிலிருந்து ஒளிச்செய்தி வந்தது. “மேலே செல்ல பாதை இல்லை என்கிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். கனகர் தேர்நிரையை ஒட்டி தன் புரவியைச் செலுத்தி ஏவற்பெண்டுகளையும் அத்திரிகளையும் கடந்து முகப்பை அடைந்தார். அங்கிருந்து வந்த ஏவலன் “மரங்கள் விழுந்து முற்றாகவே பாதை மூடியிருக்கிறது, அமைச்சரே. மேலே செல்ல வழி இல்லை” என்றான். இருளைக் கூர்ந்து ஒருமுறை பாதையை பார்த்துவிட்டு “நான் அரசியிடம் சொல்கிறேன்” என்று கனகர் காந்தாரியின் தேரருகே சென்றார். கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி “பேரரசி, வணங்குகிறேன்!” என்று உரத்த குரலில் அழைத்தார்.
உள்ளிருந்து சத்யசேனை திரையை இழுத்துத் திறந்து “என்ன?” என்றாள். அவள் தேரின் அசைவால் அலுப்புகொண்டு சினம் அடைந்திருந்தாள். “அரசி, நாம் கங்கைக்குள் இறங்க முடியவில்லை. அங்கு அஸ்தினபுரியின் மக்கள் செறிந்து வழி இல்லாதாகிவிட்டிருக்கிறது. ஆகவே படகுகளை சற்று தள்ளி இங்கு கொண்டுவர ஆணையிட்டிருந்தோம். இங்கிருக்கும் இரண்டு ஆலமரங்கள் படகுத்துறைகளென அமைய உகந்தவை. அங்கு செல்லும் பொருட்டே இங்கு காட்டுக்குள் நுழைந்தோம். வழியை மரம் விழுந்து மூடியிருக்கிறது. சற்று தொலைவு நடந்தே ஆகவேண்டும்…” என்றார். சத்யசேனை ஏதோ சொல்வதற்கு முன் காந்தாரி “செல்வோம். இங்கு அமர்ந்து செல்வதைவிட அது எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றபின் தன்னை தூக்கும்படி இரு கைகளையும் நீட்டினாள். “வழி எவ்வண்ணம் உள்ளது?” என்று சத்யவிரதை கேட்டாள். “காட்டுப்பாதை” என்றார் கனகர். “காடு எனத் தெரிகிறதே” என்றாள் காந்தாரி.
சத்யசேனையும் சத்யவிரதையும் அவள் இரு கைகளையும் பற்றி தூக்கினர். அவள் எழுந்தபோது தேர் அசைந்து முனகியது. மெல்ல தேரிலிருந்து வெளியே வந்து காலை முதற்படியில் வைத்தாள். அந்த இருளிலும் வெண்மலர்போல் அவளுடைய சிறிய பாதம் துலங்குவதை பார்த்தபின் கனகர் விழிகளை விலக்கிக்கொண்டார். நீர்க்கடனுக்குச் செல்கையில் கால்குறடுகள் அணியலாகாது என்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவள் பாதங்கள் மண்பட்டு எத்தனை காலமாகியிருக்கும்! அவள் கால்கள் படிகள்மேல் அமைந்து இறங்குவதை அகக்கண்ணால் கண்டார். அப்படிகள் மெல்ல அழுந்தி அவளை ஏற்றுக்கொள்வதைப்போல ஒலித்தன. அவள் பாதம் மண்ணில் படிவதை தன் உள்ளத்தில் ஓர் அதிர்வாக அறிந்தார். அன்னையே அன்னையே என்னும் சொல்லாக அவர் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.
அத்தனை விழிநீர் பெருகும் அளவுக்கு துயரமென எதுவும் அவரில் இருக்கவில்லை. ஏன் அழுகிறோம் என்று அவர் அகம் வியந்துகொண்டிருந்தது. ஆனால் அவரை மீறி நெஞ்சிலும் தோள்களிலும்கூட இளவெம்மையுடன் நீர்த்துளிகள் சொட்டின. மேலாடையைக் கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்தார். விம்மலோ விசும்பலோ இன்றி அத்தனை விழிநீர் பெருகக்கூடுமென்பதை அப்போதுதான் அவர் அறிந்தார். அவ்விருளில் அதை எவரும் காணப்போவதில்லை. எவரும் காணாத விழிநீருக்கு ஒரு தூய்மை உள்ளது. அவர் பந்தங்களின் ஒளி தன் முகத்தில் விழாதபடி சற்றே விலகி புதர் ஓரமாக நின்றுகொண்டார். பெருமூச்சுகள் எழுந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவர் எளிதாகிக்கொண்டே சென்றார். உள்ளிருந்த அனைத்து அழுத்தங்களும் காற்றாக வெளியே சென்றுகொண்டிருந்தன.
காந்தாரி சத்யசேனையின் தோளைப் பற்றியபடி மெல்ல காலடி வைத்து நடந்தாள். அவள் உடன்பிறந்த அரசியர் இருபுறமும் சூழ்ந்து சென்றனர். நான்கு ஏவல்பெண்டுகள் நீண்ட வாள்களுடன் முன்னால் சென்று நீட்டி நின்றிருந்த கிளைகளையும் சரிந்திருந்த நாணல்களையும் வெட்டி அவளுக்கு வழி ஒருக்கினர். அவளும் இணையரசியரும் அரசமகள்களும் செல்ல பின்னர் அப்பாதையில் கனகர் நடந்தார். அவள் காலடிகள் பட்ட மண் என நினைத்துக்கொண்டார். ஒருவேளை அவள் காலடித்தடத்தில் தன் காலடி படக்கூடும் என்று எண்ணி பாதையை கூர்ந்து நோக்க முயன்றார். பின்னர் மிக விலகி நாணல்களை மிதித்துக்கொண்டு நடந்தார். பானுமதியும் அசலையும் ஒருவர் தோளை ஒருவர் பற்றியபடி, ஒருவரால் ஒருவர் தாங்கப்படுவதுபோல் நடந்துசென்றார்கள். அவர்கள் இருவரும் ஒரே முகம் கொண்டுவிட்டிருந்தனர். ஒன்றேபோல் உடல்கள் அசைந்தன. அவர்கள் இருவரும் மாளிகையிலிருந்து கிளம்பியபின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. இல்லையென்றே ஆகிவிட்டிருந்தனர்.
காட்டின் இருளினூடாக அவர்கள் சென்றபோது கிளைகளிலிருந்து பறவைகள் எழுந்து ஓசையிட்டன. காற்று இலைகளை உலுக்கியபடி கடந்து சென்றது. கங்கையின் ஒளி இலைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் அலைகளாக தெரிந்துகொண்டிருந்தது. அவர்களின் காலடியோசைகள் பல்லாயிரம் நாக்குகள் மண்ணை நக்கி உண்ணும் ஒலி என கேட்டுக்கொண்டிருந்தன. கனகர் முடிவிலாது சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். இப்பயணம் இவ்வண்ணம் பல்லாண்டுகள் செல்லக்கூடும். இது ஒரு இருண்ட சுரங்கப்பாதை. மறுமுனை என ஒன்றில்லாதது.
தேர்களும் அத்திரிகளும் பின்னால் விலகி அகன்றன. மக்களின் திரளொலி ஊமைமுழக்கமென மாறி மேலும் விலகி மறைந்தது. காடே அவ்வொலி கேட்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் சதுப்புச் சரிவில் மெல்ல இறங்கத்தொடங்கினார்கள். கனகர் ஆணையிட அவரது சொற்கள் ஒளியாக மின்னி இருளில் முன்சென்றன. அரசியர் ஒருவரை ஒருவர் பற்றியபடி மெல்ல இறங்கி அந்த படர்ந்த ஆலமரத்தை அடைந்து மூச்சுவாங்க நின்றனர். “இங்குதான், அரசி” என்றான் ஏவலன். காந்தாரி “ஆம்” என்றாள். ஆலமரத்தொகையின் வேர்முனம்புகளுக்கு மேல் மரத்தடிகளை இழுத்துப் போட்டு நீர்ப்பரப்புக்குள் செல்லும்படி நடைபாதை அமைத்திருந்தார்கள். படகுகள் வந்து பெருநாகங்கள்போல் நீரிலிருந்து எழுந்து தெரிந்த வேர்முகப்பில் நின்றிருந்தன. மேலும் படகுகள் கங்கைக்குள் விளக்குஒளிகளாக நிரைகொண்டு நெளிந்தாடின.
முதற்படகில் காந்தாரி ஏறி அமர்ந்தாள். அவள் மரப்பாலத்தினூடாக மெல்ல காலடி வைத்துச் செல்வதை கனகர் நோக்கி நின்றார். அவள் படகிலேறி அமர்ந்ததும் அது மெல்ல அசைந்து ததும்பி அவளை அமைத்துக்கொண்டது. இணையரசியர் ஏறி அவள் அருகே அமர்ந்தனர். காந்தாரி காட்டை ஒருமுறை கைகூப்பி தொழுதாள். துடுப்பை உந்தி படகை அகற்றி கங்கையின் ஒழுக்குக்குச் சென்று சுழன்று பாய்விரித்து நீரலைகளின் மீது ஏற்றிக்கொண்டான் படகோட்டி. படகு ஒளிப்புள்ளிகளாக மாறி கங்கைமேல் இருந்த அரையிருளில் புதைந்தது. பானுமதியும் அசலையும் இணையாக நடந்துசென்று படகில் ஏறிக்கொண்டனர். தொடர்ந்து அரசியரும் இளவரசியரும் படகுகளில் ஏறத்தொடங்கினார்கள். ஒவ்வொரு படகாக சிறகு விரித்து நீர்வெளிமேல் எழுவதை கனகர் நோக்கிநின்றார். பறவைகள் கலைவதுபோல பதற்றமான ஒலிகள் கேட்டன. “என்ன? என்ன?” என்றார். “மச்சநாட்டு இளவரசியரில் ஒருவர் கங்கையில் பாய்ந்துவிட்டார்…” என்றான் ஏவலன். கனகர் பெருமூச்சுவிட்டார்.
அதற்குள் இன்னொரு ஒலிச்சுழி எழுந்தது. “சௌரநாட்டின் இளவரசியர் இருவர் கைகோத்தபடி நீரில் பாய்ந்துவிட்டார்கள்!” என்று ஒற்றன் முன்னாலிருந்து கூவினான். “அவர்களை தடுக்கவேண்டாம்” என்று கனகர் சொன்னார். மேலும் மேலும் இளவரசியர் கங்கைநீரில் பாய்ந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தார்கள். சற்றுநேரத்திலேயே அதிர்ச்சி மறைந்து அது ஒரு முறைமை என ஆயிற்று. ஒவ்வொருவர் நீரில் பாய்கையிலும் சீரான வாழ்த்தொலிகள் எழுந்தன. “அன்னையே! கங்கையே! ஏற்றருள்க, அரிய பலியை! ஏற்றருள்க, இவளை! உன் ஆழம் இவளுக்கு விண்ணுலக வழியென்றாகுக! அன்னையே! வாழ்க, அன்னையே!” பாய்பவர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக பாய்பவர்கள் தயக்கம் அழிந்து இயல்பாக நீர்புகுந்தனர். அருகிருந்த இளவரசியர் நீரில் விழுவதைக் கண்டு பிறரும் பாய்ந்தனர்.
அவர்கள் எண்ணி முடிவெடுத்துப் பாயவில்லை என கனகர் எண்ணினார். அவர்களின் அறியா அகம் உடலை அதுவே இயக்குகிறது போலும். அல்லது அவர்களைச் சூழ்ந்து அகமும் நிறைத்திருக்கும் இருளால் அவர்கள் இழுத்து எடுக்கப்படுகிறார்கள். படகுகளிலிருந்து அவர்கள் உதிர்ந்துகொண்டே இருந்தனர். கங்கையின் ஒளிரும் நீரில் கொப்புளங்களாக எழுந்து அலைவளையங்கள் என ஆகி மறைந்தனர். அகலே நின்று நோக்குகையில் சிறுசிறு குமிழிகளாக மட்டுமே தெரிந்தனர்.