வாசகசாலை கூட்டங்கள் குறித்து…
அன்பின் ஜெ,
வாசகசாலை குறித்த விவாதங்களை கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் மற்றும் வாசகசாலை இரண்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளேன். இரண்டு தரப்புடனும் உரையாடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், நான் பேச வேண்டியது உங்களுடனே என்று எண்ணுகிறேன்.
முதலில் உங்களுக்கு வரும் கடிதங்கள். உங்களை வாசித்து, உங்களுடன் உரையாடும் நிலையில் உள்ள ஒருவர் ஏன் வாசகசாலையின் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும். சென்றாலும் ஏன் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என புரியவில்லை. எஸ் ரா போன்ற இலக்கியவாதிகள் முன்வைக்கும் கூட்டங்கள் அல்லது குறைந்தது புதுவை அல்லது சென்னை வெண்முரசு விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு இவற்றை முன்வைத்தாலாவது அர்த்தம் உள்ளது. கேளிக்கை பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் இருப்பவர்களிடம் ஒலிம்பிக்கில் நீச்சல் வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா என பேசுவதற்கு ஒப்பான அபத்தம் இவர்கள் செய்வது. உங்களிடமும் அது ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளம் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
கூடவே, அந்த நிகழ்வுகளினால் பயன் ஏதும் இல்லை என எப்படி முடிவுக்கு வருகிறார்கள் என்பதும் புரியவில்லை. சமகால பிரக்ஞை உள்ள அனைவருக்குமே வாசகசாலை அமைப்பின் அவசியம் புரிந்திருக்கும். செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையை விதந்தோதிவிட்டு வாசிப்பை எவ்வகையிலோ பரவலாக்க முனையும் ஒரு அமைப்பை பழிக்கிறார்கள் என்றால் இவர்கள் இலக்கியம் வாசித்து என்ன பயன்?
மற்றொரு பக்கம், வாசகசாலையின் எதிர்வினை. உங்கள் கருத்துக்களை புரிந்துக்கொள்ள பிரயத்தனமே செய்யாமல் உங்களை பழிப்பது, நீங்கள் ஏதோ நெருக்கடியை உருவாக்குவதாய் பிம்பத்தை உருவாக்குவது, இல்லாத கருத்தியல் முரண்பாடுகளை முன்வைப்பது, கருத்தை விடுத்து வார்த்தைகளுக்கு பதிலளிப்பது என ஒருவரிடமிருந்தும் ஒரு தெளிவான எதிர்வினை வரவில்லை. அவர்களின் தளத்தில் வெளியான எதிர்வினையும் அழுத்தமாக இல்லை. முதலில் அது ஒரு எதிர்வினையே இல்லை. உங்கள் கருத்துக்கள் எதற்கும் அதில் பதில் இல்லை. நாங்கள் இதுதான் என ஒரு தன்னிலை விளக்கம். அவ்வளவே. இந்நிலையில், நான் சில விளக்கங்களை கூறலாம் என எண்ணுகிறேன்.
உங்கள் பதிவின் முதல் இரண்டு பத்திகளின் சாரம்:
– பங்கேற்பாளர்களின் ஊக்கம் இல்லாமல் அவை சடங்காக நிற்கக்கூடிய சாத்தியம்
ஆனால் வாசகசாலை தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்கேற்பாளர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் நிகழ்வுகளில் பேசுபவர்களில் குறைந்தது 90% பேர் புதியவர்கள். அவர்களின் முதல் உரை, முதல் இலக்கிய அறிமுகம் இதுவாக தான் இருக்கும்.
இதுபோல் புதியவர்களை முன்வைப்பதால் இவை சடங்காக மாறுவதில்லை. கூடவே உங்கள் மூன்றாவது கருத்தில் உள்ள அபாயமும் இல்லை.
– அமைப்பாளர்களின் குரலை திணித்தல்
ஏனென்றால் அங்கு அமைப்பாளர்கள் அதிகம் பேசுவது கூட இல்லை. புதியவர்கள் என்ன பேச வேண்டும் என்பதையும் அவர்கள் தனிக்கை செய்வதில்லை.
ஆகவே, வழமையான “so called” இலக்கிய கூட்டமாக இவை நடப்பதில்லை.
உங்கள் இரண்டாம் கருத்து:
– “அவருக்கு அங்கே ஏதாவது கிடைக்கவேண்டும். அவர் அங்கே சிலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்தனையில் ஒரு சீண்டல், ஒரு திறப்பு, ஒரு முன்னகர்வு நடைபெறவேண்டும்… அங்கே பேசப்படுவனவற்றில் இருந்து புதியவற்றை அறியமுடியும் என்றால் அது உளக்கொப்பளிப்பை ஊட்டும் அனுபவமே. அதற்குத்தான் வாசகர்கள் வருவார்கள்”
பள்ளி தாண்டி வாசித்தே இல்லாத ஒருவருக்கு, அல்லது வார இதழ்களில் மட்டுமே கதைகளை வாசித்த ஒருவருக்கு இது ஒரு முன்னகர்வு தானே?
உபயோகமே இல்லாத சினிமா பற்றி, அலுவலகத்தில், அலுவலகம் செல்லும் வழியில், இணையத்தில் என பேச ஆயிரம் வழிகள் உள்ள பொழுது, தான் வாசித்த ஒரு கதை குறித்து பேச ஒரு தளம் என்பதே ஒரு திறப்பு தானே? தன்னை விட அதிகம் வாசித்த சிலர் உள்ளனர் என்பது ஒரு வகை சீண்டல் தானே? வாசகசாலை எத்தனிக்கும் பங்கேற்பாளர்களுக்கு அது ஒரு புதிய அனுபவம் தான். தீவிர இலக்கிய வாசகனுக்கு புதிதாக ஒன்றும் இல்லை என்றால் விலகிவிடலாம். எவருக்கும் அதில் புதிதாக எதுவுமே இல்லை என கூறுவது எப்படி சரியாகும்?
அடுத்து, //“பிறரிடம் சொல்வதற்கு புதியதாக ஏதேனும் இல்லாதவர்களை பேசவிடாமல் தடுப்பதே இன்று தமிழகத்தின் இலக்கிய அரங்குகளின் முதல் கடமையாக இருக்கிறது”//
இவை இலக்கிய அரங்கு இல்லை. வாசக கலந்துரையாடல். ஏன் இங்கு புதிதாக பேச வேண்டும்? வருடா வருடம் ஒன்றாம் வகுப்பில் அதே பாடம் தான் இருக்கும். வாசகர் அங்கிருந்து அடுத்த வகுப்பிற்கு மேல்நோக்கி செல்ல வேண்டும். உங்களிடம் வந்த பின்பு, மீண்டும் திரும்பி ஒன்றாம் வகுப்பில் அமர்ந்துக்கொண்டு எனக்கு எதுவும் கிடைப்பதில்லை என கூறக்கூடாது.
இங்கு பேச வருபவர்கள் இப்பொழுது தான் முதன்முறை ஒரு அரங்கில் பேசுகிறார்கள். தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். ஆம், அவை பழையதாக தான் இருக்கும். முதல் பேச்சிலேயே ஞானம் பொங்க எவரும் ஞானப்பால் குடித்துவிட்டு வரவில்லை. நாம் தொடர்ந்து விமர்சிக்கும் கல்விச் சூழலிலிருந்து வந்தவர்கள் தான். கேட்பவர்களும் இப்பொழுது தான் முதன் முறை இவற்றை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இவை புதிது தான். இங்கு தொடர்ந்து வரும் வாசகர்கள் சலிப்புற்றால் விலகலாம். தேடல் இருந்தால் முன்னகர்ந்து இலக்கியத்தை அடையலாம். ஆனால், ஆரம்ப நிலையில் அதி உச்ச இலக்கிய தரத்தை எதிர்பார்ப்பதே தவறு. அதை விமர்சனமாக உங்களிடம் முன்வைப்பது மேலும் தவறானது.
அடுத்த கருத்து: //ஆனால் முழுக்கமுழுக்க திறனற்ற பேச்சாளர்களே பேசி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்றால் அதனால் என்ன பயன்//
அவர்கள் பேச்சாளர்கள் அல்ல. சக வாசகர்கள் மட்டுமே.
திறனற்ற ஒரு வாசகன் , வாழ்வில் ஒரே ஒரு கதை மட்டுமே வாசித்தவனாகவே இருந்தாலும், அவன் அவனது கருத்தை முன்வைக்க ஒரு அரங்கை அமைப்பதில் என்ன தவறு? அங்கு அவனது கருத்தை தொடக்கமாக கொண்டு, ஒரு கதையை ஆரம்பநிலை வாசகர்கள் விவாதிப்பதில் என்ன தவறு? இலக்கிய அறிமுகமே இல்லாத இருவர் ஒன்றாக வெண்முரசு வாசித்து விவாதித்தால், தரம் அதள பாதாளத்தில் தான் இருக்கும். ஆனால், அங்கு தானே அவர்கள் தொடங்க முடியும்?
இங்கு, திறனற்ற பேச்சாளர்களால் அடுத்த நிகழ்விற்கு வாசகர்கள் வரமாட்டார்கள் எந்ற உங்கள் எண்ணம் செல்லுபடியாகாது. காரணம், அந்த பேச்சாளர் தருவது ஒரு தொடக்கம் மட்டுமே. ஊட்டி முகாமின் அமைப்பு தான். ஒருவர் ஒரு கதையை அறிமுகம் செய்து சிறிது பேசுவார். பிறகு அரங்கு முழுவதும் பங்குபெறும் கலந்துரையாடல் நடைபெறும். அங்கு, வாசகர்கள் தங்கள் பார்வையை முன்வைக்கலாம், விவாதிக்கலாம்.
[அங்கு தரம் இல்லை என கூறும் நம் நண்பர்கள், தங்களது கருத்தை அங்கு முன்வைத்து அரங்கின் விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கலாமே?].
அந்த விவாதத்தில் கலந்துகொண்ட ஒருவர், அல்லது பார்த்த ஒருவர் கட்டாயம் அடுத்த விவாதத்தில் பங்கு பெற விரும்புவார். கதையை படித்துவிட்டு வருவார். ஏதாவது ஒரு கருத்தை முன்வைப்பார். End Result: வாசிப்பார்.
இவ்வகை விவாதம் தனது அறிவு நிலைக்கு கீழாக உள்ளது என எண்ணுபவர்கள் அங்கு போக வேண்டாம். அதே நேரம், அவர்களை கீழ்மையாக சித்தரிக்கவும் வேண்டாமே. அசோகமித்திரனின் ஒரே கதையை வாசித்து ஒருவன் பொருத்தமே இல்லாத கருத்தை முன்வைத்தால், வைக்கட்டும். அந்த கருத்து விவாதிக்கப்படுகிறது. ஆம், அவனது அதே அளவு வாசிப்பு உள்ள நண்பர்களுக்குள், அந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட கூடும். ஆனால் அது அவனை மேலும் வாசிக்க ஊக்கப்படுத்தும் தானே? தொடர்ந்து அசோகமித்திரனை வாசிப்பான். இலக்கிய வாசகனுக்கான நுண் உணர்வு இருந்தால், வாசிக்க வாசிக்க அவனது கருத்து நிலை மேன்படும். ஆரம்ப நிலை வாசகனின் பேச்சு என தெரிந்த பின், நமக்கும் அதில் எதுவும் இல்லை என்றால் செல்ல வேண்டாம். அல்லது, சென்று அவனது பார்வையை அவன் விரிவாக்கிக்கொள்ள உதவலாம். இரண்டும் இல்லாமல், உன் பேச்சினால் எனக்கு ஆதாயம் எதுவும் இல்லை. ஆகவே பேசாதே என கூறுவது ஒரு வகை வன்முறை இல்லையா?
இந்த நிகழ்வுகள் இலக்கிய வாசகர்களுக்கானது அல்ல. நண்பர்களின் கடிதங்களுக்கும் நீங்கள் வாசகசாலை நிகழ்வுகளை பரிந்துரைப்பதில்லை. தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அரங்கிற்கு சென்றுவிட்டு, அதை உங்களிடம் வசைப்பாடும் கூட்டம் நாடுவது என்ன என புரியவில்லை.
உண்மையில், மாதம் தோறும், ஏன் வாரம் தோறும் தமிழில், சிறுகதை அல்லது கவிதைகளை வாசித்து, அவை குறித்து சிந்தித்து சில வார்த்தைகளேனும் பேசும் குறைந்தது ஒரிரு புதியவர்களையேனும் வாசகசாலை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. முதல் முறையாக இல்லாத பட்சத்தில் நிகழ்வில் பேசுபவர்கள் ஆரம்ப நிலை வாசகர்களாக இருப்பார்கள். ஏதேனும் சில அமர்வுகளில் முன்பு பேசியவர்களாக.
இப்படி, தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பை பரவலாக்கி, வாசிப்பு குறித்த ஒரு உரையாடலை தொடங்கி, எவருமே இலக்கியம் வாசிப்பதில்லை என நாம் விமர்சிக்கும் சமூகத்தில் சிலரையேனும் இலக்கியம் வாசிக்க வைக்கும் அவர்களது தொண்டு முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. பாராட்டவில்லை என்றாலும், தூற்றாமல் இருக்கலாம்.
தமிழில் சில வார்த்தைகள் தொடர்ந்து பேச இயலாத தலைமுறையில், சிற்றிதழில் வந்த கதையை வாசித்து, அதனை குறித்து சிந்தனை தெளிவுடன் பத்து / பதினைந்து நிமிடம் பேச கூடிய ஒரு முதலாமாண்டு கல்லூரி மாணவிக்கு தமிழகத்தில் உள்ள மேடை என்ன?? அந்த மேடையாக வாசகசாலை இருப்பதில் என்ன தவறு? அங்கு அவள் தவறாக அல்லது முதிர்வின்மையுடன் பேசுவதா பிரச்சனை?? அவள் பேசுகிறாள் என்பதே போதாதா, நமக்கு நம்பிக்கை தர? அதை சாத்தியமாக்கும் ஒரு அமைப்பை நாம் கொண்டாட வேண்டாமா?
ஆம் அவர்கள் அங்கிருந்து முன்னேறி வர வேண்டிய பாதை நீளமானது. தேடல் உள்ளவர்கள் வருவார்கள். ஆனால், ஆரம்பநிலையில் யாருமே இருக்கக்கூடாது என்ற எண்ணம் வன்முறை அல்லவா?
வாசகசாலையில் குறைகள் இல்லாமல் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட //பெரும்பாலும் கதைகளை தாங்கள் புரிந்துகொண்டபடி சுருக்கிச் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.அல்லது எளிமையான ஒரு கருத்தை அதிலிருந்து பெற்று முன்வைக்கிறார்கள். அந்தப்பேச்சு விமர்சிக்கப்படுவதில்லை. அதன் போதாமை சுட்டிக்காட்டப்படுவதில்லை. ஆகவே மீண்டும் மீண்டும் இதேபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எவ்வகையிலும் முன்னகர்வு நிகழ்வதில்லை. பேசுபவர் கேட்பவர் எவருக்கும் எப்பயனும் இல்லை//
ஆம், அந்த கருத்துக்கள் விமர்சிக்கப்படுவதில்லை. விமர்சிக்க அவர்களை விட அதிகம் வாசித்தவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அனைவரும் வாசகசாலையை வெளியே இருந்து விமர்சிப்பதில் தான் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், அவர்களின் பேச்சின் பின்பு நடக்கும் கலந்துரையாடல் ஒரு வகையில் அந்த பேச்சிற்கும் விமர்சனமாகவே அமைகிறது. வாசிப்பு அறிமுகம் உள்ள ஒரு சிலரேனும் அங்கு உள்ளனர். அவர்களின் கருத்து, மற்றவர்களுக்கு உதவுகிறது.
இரண்டு, பல சமயங்களில் பேச்சு கதையைத் தாண்டி, கதையின் கருத்தை குறித்து செல்கிறது. பெண்ணியம் பேசும் கதை சார்ந்த விவாதம் கதையின் அமைப்பு போன்றவற்றைத் தாண்டி, பெண்ணியம் குறித்த விவாதமாக மாறுகிறது. அது ஒரு நல்ல மட்டறுத்துனர் இருக்கும் நிகழ்வுகளில் நடப்பதில்லை. ஆனால், உண்மையில், கதையை விமர்சிக்கும் வாசிப்பு அவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.
ஆனால், இந்த குறைகளை தாண்டி, தொடர்ந்து புதியவர்களை வாசிக்க வைத்து, இலக்கியம் சார்ந்த பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்க உதவும் ஒரு அமைப்பை, அதுவும் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் அறிமுகமே இல்லை என நாம் விசனம் கொள்ளும் கல்வி,சமூக சூழலில், வாசகசாலையின் இடம் மற்றும் முக்கியத்துவத்தை உணராமல் வெறும் ஒரு இலக்கிய அமைப்பாக அவர்களை விமர்சிப்பது மிகவும் ஒற்றைப்படையான சிந்தனை.
அன்புடன்,
சந்தோஷ் (லாஓசி)